குடியரசிலிருந்து சமமற்றவர்களின் குடியரசிற்கு
– வெங்கடநாராயணன் சேதுராமன் | தமிழில்: ஆதிரன் ஜீவா
அரசியலமைப்பு தினமான நவம்பர் 26,2024 அன்று, சுதந்திர இந்தியா அரசியலமைப்பு சட்டமும் அதன் அடிப்படையிலான ஆட்சியும் ஏற்கப்பட்டு 75 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. வலதுசாரி, இடதுசாரி என பல்வேறுபட்ட கருத்தியலுடைய தலைவர்கள், பன்மைத்துவ பண்பாடுள்ள மக்களின் விருப்பங்களுக்கும் உரிமைகளுக்கும் பொருந்தக் கூடிய ஓர் அரசியல் அடையாளத்தைக் கட்டமைப்பதில் தங்கள் அறிவாற்றலை எவ்வாறு செலவிட்டனர் என்பதை அரசியல் நிர்ணய சபையில் நடைபெற்ற விவாதங்கள் காட்டுகின்றன.
அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியவர்கள் தாராளவாத சட்டகத்தை ஏற்றுக் கொண்டனர். ஆனால் நாடு விடுதலை அடைந்த காலகட்டத்தில் நிலவிய மோசமான சமூகக் குறியீடுகள் காரணமாக ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதிலும் தலையீடு செய்வதிலும் அரசு நேர்மறையான பாத்திரம் வகிக்க வேண்டும் என அவர்கள் விரும்பினர். தாராளமயம் என்கிற அரசியல் கருத்தியல், அரசின் தலையீடு ஏதுமில்லாமல் குடிமக்கள் செயல்படுவதற்கு சுதந்திரம் இருக்க வேண்டும் என்கிறது. சுதந்திரமான சூழலில் தான் மனிதனின் (அறிவுசார், அறநெறி சார், உடலியல் சார்) ஆற்றல் அறியப்படும் என்கிற நம்பிக்கை அப்போதிருந்தது. அதனால் தாராளவாதத்தின் சாரமான பொருளாக தனியுரிமை ஆனது.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியவர்கள் இந்தியாவில் ஒரு தாராளவாத அரசை உருவாக்குவதற்கு ஒப்புக்கொண்டனர். ஆனால் நிலவிய சமூக,பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் கருத்தில் கொண்டு, ’அரசு முழுவதுமாக விலகி நிற்பதென்பது நிலவுகின்ற அசமத்துவ நிலைமைகளை நீடிக்கச் செய்திடும்; மேலும் மோசமானதாக ஆக்கிவிடும்’ என்று கருதினர். எனவே முன்னேற்றத்திற்கான நடைமுறைகளில், அனைவரும் பங்கேற்பதற்கான சமமான சூழலை உருவாக்கிட, அரசு நேர்மறையான வடிவில் தலையீடு செய்ய வேண்டும் என வரையறுக்கப்பட்டது. எனவே சமமற்றவர்களை சமமற்ற வகையில் நடத்துவதன் மூலம் அரசியலமைப்பின் பார்வையிலான சமத்துவத்தை அடைவதற்கான, ’உறுதியான நடவடிக்கைகள் மற்றும் இட ஒதுக்கீடு கொள்கைகள்’ இந்திய அரசியலமைப்பின் முக்கியமான அம்சமாக ஆகிவிட்டது.
சமத்துவக் கண்ணோட்டம்:
சமத்துவம் குறித்து இந்திய அரசியலமைப்பின் பார்வை என்பது மக்களிடையே ஏற்றத்தாழ்வுகளைக் குறைத்து சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டதாகும். ஜான் ரால்ஸின் ’சமத்துவ தாராளமயத்தை’ எதிரொளிக்கும் விதமாகவும் சமத்துவத்தின் மூன்று முக்கியமான கோட்பாடுகளான அடிப்படை சுதந்திரம், சமமான வாய்ப்புகள், வேறுபடுவதற்கான உரிமை ஆகிய கோட்பாடுகளை உள்ளடக்கியும் அரசியல் சாசனம் சமத்துவ சமூகத்தை படைப்பதை இலக்காகக் கொண்டுள்ளது. அரசியல் சாசனத்தின் தொகுதி 3 ல் வரையறுக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மற்றும் தொகுதி 4 இல் வரையறுக்கப்பட்டுள்ள அரசின் கொள்கைகளுக்கான வழிகாட்டும் நெறிமுறைகள் சமத்துவ தாராளமயத்தின் மேற்கண்ட மூன்று கோட்பாடுகளையும் பிரதிபலிக்கின்றன. எனவே சமத்துவ தாராளமயத்தின் இலக்கு ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதே தவிர, முழுமையான சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவது அல்ல. அரசின் கொள்கைகளுக்கான வழிகாட்டும் நெறிமுறைகள் பிரிவு 38(2) வருமானத்தில் அசமத்துவத்தைக் குறைப்பதற்கும் வாழ்நிலை,வசதிகள் மற்றும் வாய்ப்புகளில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை ஒழிப்பதற்கும் அரசு பாடுபட வேண்டும் என வலியுறுத்துகிறது. மேலும் பிரிவு 39(c) இல், நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பு, செல்வக் குவிப்பும், உற்பத்தி நிலைமைகளும் பொதுவாக கேடு விளைவிக்காதவாறு அமைய வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றம், 1990 களின் இறுதி வரையிலான பல தீர்ப்புகளில் இந்தக் கோட்பாடுகளை உறுதி செய்துள்ளது. டி.எஸ்.நாகரா vs ஒன்றிய அரசு (1982) வழக்கின் தீர்ப்பில் அரசியல் சாசனம் குறிப்பிடும் சோசலிசத்தின் அடிப்படை சட்டகம் என்பது, உழைக்கும் மக்களுக்கு தங்கள் பிறப்பு முதல் இறப்பு வரை சமூகப்பாதுகாப்பையும் நல்ல வாழ்க்கை நிலையையும் வழங்குவதாகும் என இந்தியாவில் மக்கள் நல அரசின் பாத்திரத்தை வலியுறுத்தி அது கூறியுள்ளது. ஏர் இந்தியா vs ஐக்கிய தொழிலாளர் சங்கம்(1996) வழக்கில் சமமான வாழ்க்கைநிலை மற்றும் வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் சமூக மற்றும் பொருளாதார நீதியையும் தனிநபரின் கண்ணியத்தையும் பாதுகாக்கின்ற சமத்துவ சமூக நிலைமைகளை உருவாக்குவது தான் சாசனத்தின் முகப்புரை, அடிப்படை உரிமைகள் மற்றும் அரசின் கொள்கைகளுக்கான வழிகாட்டும் நெறிமுறைகள் ஆகியவற்றில் காணப்பட்டுள்ள இந்திய அரசியல் சாசனத்தின் கோட்பாட்டு அம்சமாகும் என்று நீதிமன்றம் கூறியது.
சமத்தா vs ஆந்திர மாநில அரசு (1997) வழக்கில், அரசியல் சாசனத்தில் உள்ள ’சோசலிசம்’ என்ற சொல்லின் பொருள் ’ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதும் சமமான வாய்ப்புகளையும் வசதிகளையும் உருவாக்கி சமத்துவ சமூக நிலைமைகளை உருவாக்குவதும் தான்’ என நீதிமன்றம் விளக்கியுள்ளது. கர்னாடக மாநில அரசு vs ஸ்ரீ ரங்கநாத ரெட்டி வழக்கில் நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யரின் அரசின் கொள்கைகளுக்கான வழிகாட்டும் நெறிமுறைகள் பிரிவு 39(b)க்கான விளக்கம் பொது வளங்களும் தனியார் செல்வங்களும் சமூகத்தின் சொத்தாக மாறுவது, பொது நலன்களுக்காக வளங்களை மறுபங்கீடு செய்யும் அரசின் அதிகாரத்தை வலுப்படுத்தி ஏற்றத்தாழ்வுகளைக் களைவதன் வழியாக சமத்துவ சமுதாயத்தை படைக்கும் அரசியல் சாசனத்தின் கோட்பாட்டோடு இணைந்துள்ளது.
ஆனால் சமீபத்தில், உச்சநீதிமன்றம் இந்த விளக்கத்தை தலைகீழாக மாற்றியுள்ளது. ஒரு சிலரின் கைகளில் செல்வங்கள் குவிவதைத் தடுத்திட பொருளாதார அமைப்புகளை ஒழுங்குபடுத்தவும் தலையீடு செய்யவும் அரசிற்கு அதிகாரம் வழங்கியுள்ள பிரிவு 39(c) ஐ அது பொருட்படுத்தவில்லை.
பொருளாதார சீர்திருத்தங்களும் சமத்துவமின்மையும்
நவீன தாராளமய பொருளாதார சீர்திருத்தங்களை இந்தியா ஏற்றுக்கொண்ட பின்னர் அரசியல் சாசனக் கோட்பாடு பின் இருக்கைக்கு சென்றது. மேலும் அரசியல் சாசனத்தில் எடுத்தாளப்பட்டுள்ள மக்கள் நல அரசு என்னும் கருத்தாக்கம் சமத்துவ சமுதாயத்தை படைக்கும் தனது பணியிலிருந்து விலகிவிட்டது. பிரெஞ்சு பொருளாதாரப் பள்ளியின் லுகாஸ் சான்சல் மற்றும் தாமஸ் பிக்கெட்டி ஆகியோர் இந்தியாவில் அதிகரித்து வரும் ஏற்றத்தாழ்வுகள் குறித்து “இந்திய பொருளாதார அசமத்துவம்,1922-2015: பிரிட்டிஷ் ஆட்சி முதல் கோடீஸ்வரர்களின் ஆட்சி வரை” எனும் தங்களது கட்டுரையில் ஆவணப்படுத்தியுள்ளனர்.
1930களில் டாப் 1% பணக்காரர்கள் நாட்டின் ஒட்டுமொத்த வருமானத்தில் 21% பங்கை வைத்திருந்தனர். ஆனால் சுதந்திரத்திற்குப் பின்னர் அரசியல் சாசனத்தின் கோட்பாட்டின் அடிப்படையில் மக்கள் நல அரசின் தலையீட்டிற்குப் பின்னர் இந்த வருமான இடைவெளி குறைந்தது. 1980 களில் டாப் 1% பணக்காரர்கள் ஒட்டுமொத்த வருமானத்தில் 6% பங்கை மட்டுமே வைத்திருந்தனர்.
1990களின் நவீன தாராளமய பொருளாதார சீர்திருத்தங்கள் அமலக்கப்பட்ட பின்னர், இந்திய பொருளாதாரக் கட்டமைப்புகளில் முக்கியமான மாற்றங்கள் நடந்தன.அது தனியார் நிதி முதலீடுகளுக்கும் மக்கள் நல அரசின் தலையீட்டை மெல்ல விலக்குவதற்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்தது. அரசு இந்திய அரசியல் சாசனத்தில் சொல்லப்பட்டது போல சமத்துவ சமுதாயத்தை படைப்பதற்கு பதிலாக சந்தைகளை உருவாக்குவதிலும் வலுப்படுத்துவதிலும் நேர்மறையான பங்கு வகித்தது. இதன் விளைவாக தற்போது டாப் 1% பணக்காரர்கள் நாட்டின் மொத்த வருமானத்தில் 22% ஐ வைத்துள்ளனர். இது சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தை விட மோசமான அசமத்துவ நிலைக்கு நாட்டை எட்டித் தள்ளியுள்ளது. லூகாஸ் சான்சல் மற்றும் தாமஸ் பிக்கெட்டி இந்த அசமத்துவ நிலையை 2024 இல் தாங்கள் வெளியிட்ட சமீபத்திய ஆய்விலும் உறுதிபடுத்தியுள்ளனர். 2022-23 இல் டாப் 1% பணக்காரர்களின் வருமானம் மற்றும் சொத்து பங்கீடு முறையே 22.6% மற்றும் 40.1% ஆகும்.
காலமுறை தொழிலாளர் படை கணக்கெடுப்பு 2019-20 இல் டாப் 10% தொழிலாளர்கள் மாத ஊதியமாக ரூபாய் 25000 பெறுகிறார்கள் எனவும் மீதமுள்ள 90% தொழிலாளர்கள் 25000 ரூபாய்க்கும் குறைவாக வருமானம் ஈட்டுவதாகவும் பதிவு செய்திருப்பதை Institute for Compettiveness (பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவால் அமைக்கப்பட்ட நிறுவனம்) தயாரித்த “இந்தியாவில் அசமத்துவத்தின் நிலை” என்னும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சமூக சமத்துவமின்மையும் பொருளாதார சமத்துவமின்மையும்
மேலும் பிரெஞ்சு பொருளாதாரப் பள்ளியில் அமைந்திருக்கும் உலக சமத்துவமின்மை ஆய்வகம் இந்தியாவில் சமூக ஏற்றத்தாழ்வும் பொருளாதார ஏற்றத்தாழ்வும் எவ்வாறு ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளன என்பதற்கு ஆதாரங்களைக் கொண்டு வந்துள்ளது. 2022-23 ஆம் ஆண்டில் பில்லினியர்களின் சொத்துமதிப்பில் 90 % சொத்து உயர் ஜாதியினர் வசமுள்ளது. பில்லினியர்களின் பட்டியலில் பழங்குடியினர் இடம்பெறவில்லை. இதர பிற்படுத்தப்பட்டோர் 10 விழுக்காடும் பட்டியல் வகுப்பினர் 2.6 விழுக்காடும் பிரதிநிதித்துவம் பெற்றுள்ளனர். 2014-22 காலக்கட்டத்தில் இதர பிற்படுத்தப்பட்டோரின் பங்கு 20% லிருந்து 10% ஆக குறைந்துள்ள அதே வேளையில் பில்லினியர்களின் பட்டியலில் உயர் ஜாதியினரின் பங்கு 80 %லிருந்து 90% ஆக உயர்ந்துள்ளது. உயர் ஜாதியினர் தான் தங்கள் மக்கள் தொகையை விட அதிக அளவிலான இடத்தைப் பெற்றுள்ள ஒரே பிரிவினர் என்பது சமூக மூலதனமும் பொருளாதார அனுகூலமும் எவ்வாறு ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளது என்பதை உறுதி செய்துள்ளது. மேலும் 2009இல் 9 ஆக இருந்த பில்லினியர்களின் எண்ணிக்கை 2023 இல் 119 ஆக உயர்ந்துள்ளதை ஆக்ஸ்ஃபாம் இண்டர்நேஷனல் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் அது வருமான ஏற்றத்தாழ்வை ஒப்பிட்டு நாட்டின் குறைந்தபட்ச வருமானம் ஈட்டும் நபர் வருமானத்தில் உச்சத்தில் இருக்கும் ஒரு கார்ப்பரேட் முதலாளியின் இன்றைய ஆண்டு வருமானத்தை எட்ட இன்னும் 941 ஆண்டுகள் தேவைப்படும் எனக் காட்டியுள்ளது.
வருமான அசமத்துவத்தை களைந்து , சமூக ஏற்றத்தாழ்வுகளை ஒழிப்பதன் மூலம் சமத்துவ சமுதாயத்தைப் படைத்திடும் அரசியல் சாசனத்தின் நோக்கம் நவீன பொருளாதார நடைமுறைகளால் பெரும் அச்சுருத்தலுக்கு ஆளாகியுள்ளது. அரசியல் சாசனத்தின் கோட்பாட்டை மீறி ஏற்றத்தாழ்வுகள் விரிவடைகின்றன; ஒரு சிலரிடம் செல்வம் குவிக்கப்படுவது தீவிரமடைகிறது. மேலும் சமூக ஏற்றத்தாழ்வு பொருளாதார ஏற்றத்தாழ்வுடன் பிணைந்து இன்றைய இந்தியாவில் உயர் ஜாதியினருக்கு பெரிய அளவில் அனுகூலத்தைத் தருகிறது. அரசியலமைப்பு தினம் கடந்து விட்டது, ஆனால் நமது அரசியல் மற்றும் பொருளாதார செயல்பாடுகள் அரசியலமைப்பு சட்டகத்திற்குள் இருக்கிறதா என்பதை பகுப்பாய்வு செய்வதற்கு நமக்கு வாய்ப்புள்ளது. இது நமது சாதனைகளையும் தோல்விகளையும் மதிப்பிடுவதற்கும் பயன்படும். ”சமூக மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அரசியல் ஜனநாகத்தை பேராபத்தில் தள்ளிவிடும் “ என்கிற பாபாசாகேப் அம்பேத்கரின் வார்த்தைகள் இதைத்தான் வலியுறுத்துகின்றன.
கட்டுரையாளர்:
வெங்கடநாராயணன் சேதுராமன்,
உதவிப் பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்,
சர்வதேச படிப்புகள், அரசியல் அறிவியல், வரலாறு,
கிறிஸ்ட் பல்கலைக்கழகம், பெங்களூர்
தமிழில்: ஆதிரன் ஜீவா
நன்றி: (தி இந்து ஆங்கிலம் – 27.11.2024) – https://www.thehindu.com/opinion/lead/from-a-republic-to-a-republic-of-unequals/article68913929.ece
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
அருமை. மோசமான சுரண்டலை ஊக்குவிப்பவதாக நமது குடியரசு சட்டங்கள் உள்ளது. அருமை