எண்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு இனக்குழு உலாம். நெருப்பின் பயனைக் கண்டுபிடித்திருந்த அவர்களுக்கு அதை உருவாக்கத் தெரியாது. காட்டில் எங்கேயாவது இயற்கையாய்த் தீப்பற்றிக்கொள்ளும்போது எடுத்து வந்து அணையாமல் பார்த்துக்கொள்வார்கள். ஒருநாள் எப்படியோ நெருப்பு அணைந்துவிடுகிறது. எங்கிருந்தாவது நெருப்பைக் கொண்டுவரும் பொறுப்பு நோவா, காவ், அமூக்கர் என்ற மூன்று பேருக்குத் தரப்படுகிறது.
பல சவால்களை எதிர்கொள்ளும் அவர்கள் க்ஜாம் என்ற இனக்குழுவினர் நெருப்பைப் பாதுகாத்துவைத்திருப்பதைக் காண்கிறார்கள். அதைத் திருடிப்போக முயல்கிறபோது சண்டை ஏற்படுகிறது. அங்கே பிடித்துவைக்கப்பட்டுள்ள இகாவா என்ற இனக்குழுவைச் சேர்ந்த ஈகா மூவரும் தப்பிக்க உதவுகிறாள். அவர்களோடு திரும்பும் வழியில் தனது மக்கள் இருக்கும் இடத்திற்கு வருமாறு அழைக்கிறாள். அவர்கள் மறுத்துவிட்டுத் தங்கள் இடத்துக்கு நடக்கிறார்கள். சிறிது நேரம் கழித்து நோவா மட்டும், ஈகாவை மறக்க முடியாதவனாக அவள் போன வழியில் செல்கிறான்.
அப்போது ஒரு புதைமணல் குழியில் மாட்டிக்கொள்கிறான். இகாவா ஆட்கள் அவனை மீட்டுக் கைதியாகக் கொண்டுசெல்கிறார்கள். அந்தக் குழுவின் மேல்தட்டுப் பெண்கள் சிலருடன் உறவுகொள்ள அவன் கட்டாயப்படுத்தப்படுகிறான், அவனிடமிருந்து ஈகா விலக்கி வைக்கப்படுகிறாள். அங்கே அவனுக்கொரு வியப்பு காத்திருக்கிறது – அவர்களுக்கு மரத்தண்டைக் கடைந்து நெருப்பை உண்டாக்கத் தெரிந்திருக்கிறது! பற்றிக்கொண்டு காதல் நெருப்பு அணையாமல் ஈகாவோடும் நெருப்புக் குச்சிகளோடும் வருகிறபோது, உலாம் இனக்குழு ஆட்களே நெருப்பைக் கைப்பற்றத் தாக்குகிறார்கள். “காட்டுமிராண்டித்தனமான” அந்தச் சண்டை கடுமையான இழப்புகளை ஏற்படுத்துகிறது. நெருப்பு அணைந்துவிடுகிறது. இகாவாவினர் செய்தது போலத் தானும் மரத்தண்டைக் கடைந்து நெருப்பை உண்டாக்க முயல்கிறான் நோவா. தோல்விதான் ஏற்படுகிறது. எல்லோரும் உற்சாகமிழக்க ஈகா வெற்றிகரமாகத் தீ மூட்டுகிறாள், கொண்டாட்டமும் மூள்கிறது.
1981ல் வந்த ‘குயெஸ்ட் ஃபார் ஃபயர்’ (நெருப்பைத் தேடி) என்ற பிரெஞ்சுப் படத்தின் கதை இது. பிரான்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு என்பதால் பிரெஞ்சுப் படம். உண்மையில் படத்தில் பேசப்படுவது ஒரு தொல்குடி மொழியின் சில சொற்கள்தான். மற்றபடி சைகை மொழியிலேயே படம் ஓடும்.
படத்தின் இறுதிக் காட்சியில் ஒரு பாட்டி தன் பேரக்குழந்தைகளுக்கு நெருப்புக்காகச் சண்டை நடந்த கதையை சைகையாகவே சொல்வார். குழந்தைகள் விழிகள் விரியக் கேட்பார்கள்.
கதைசொல்லிகளும் கதைகேட்பிகளும்
இப்படிக் கதை சொல்கிறவர்களாலும் கதை கேட்கிறவர்களாலும்தான் உலகம் வாழ்ந்து வந்திருக்கிறது. அந்தப் பாட்டி நெருப்புக்காகக் காட்டில் நடந்த சண்டையின் கதையைச் சொன்னார் என்றால், மொழிகள் பரிணமித்த பின் இலக்கியமாய் உருப்பெற்ற கதைகள் மனிதகுலத்தின் போராட்டங்களையும், இயற்கையின் பாடங்களையும் சொல்லிவந்திருக்கின்றன. பிளேக், காலரா, பெரியம்மை, நச்சுக்காய்ச்சல் போன்ற பேரழிவுத் தொற்றுகளோடு நடந்த போராட்டப் படிப்பினைகளையும் இலக்கியப் பதிவுகள் சேமித்து வைத்திருக்கின்றன.
மத நூல்கள் மனிதர்களின் பாவத்திற்குக் கடவுள் அளித்த தண்டனைதான் பிளேக் என்று கற்பித்தன. ஹோமர் எழுதிய ‘இலியாத்’, சோபோக்கிள்ஸ் எழுதிய ‘ஓடிபஸ் தி கிங்’ என்ற இரு கிரேக்கக் காப்பியங்களும் மனிதப் பாவங்களுக்கான தெய்வத் தண்டனையே பிளேக் என்றன. மனிதர்களைத் திருத்தாமல் கொடூரமான தண்டனைகளை அளிப்பது எப்படி தெய்வச் செயலாகும் என்று கேட்கிற நாத்திகப் பாவத்தை அப்போதே சிலர் செய்திருக்கக்கூடும், அவர்களுக்கு மன்னனோ மதபீடமோ தெய்வத்தின் பெயரால் தண்டனையளித்திருக்கக்கூடும்.
‘அடர் சிவப்பு பிளேக்’ ஆய்வறிக்கை
இத்தாலி பல்கலைக்கழக இலக்கிய ஆய்வாளர் மைக்கேல் அகஸ்டோ ரைவா, அவருக்குத் துணையாக மார்ட்டா பெனிடிட்டி, ஜியான்கார்லோ செசானா ஆகியோர் 2014ல் எழுதிய “பேண்டமிக் ஃபியர் அன் லிட்டரேச்சர்: அப்சர்வேசன்ஸ் ஃபிரம் ஜேக் லண்டன்’ஸ் தி ஸ்கார்லெட் பிளேக்” (பெருந்தொற்றுப் பீதியும் இலக்கியமும்: ஜேக் லண்டனின் தி ஸ்கார்லெட் பிளேக் அவதானிப்புகள்) என்ற ஆய்வுக் கட்டுரை இவ்வகைப் படைப்புகளை சுட்டிக்காட்டுகிறது.
இன்றைக்கு 2,050 ஆண்டுகளுக்கு முன் லத்தின் மொழியில் லுக்ரேசியஸ் எழுதிய காப்பியம் ‘தி ரீரம் நேச்சுரா’ (இயற்கையாய் உள்ளபடி). அதில் அவர், பிளேக் தெய்வத் தண்டனையல்ல, மக்களின் அறியாமையாலும் சுயநல வேட்கையாலும் வருவதே என்று மதபீடக் கற்பிதங்களுக்கு மறுப்புத் தெரிவித்தார். புனிதர்களா பாவிகளா என்று பார்த்து பிளேக் தாக்குவதில்லை என்றார்.
1300ம் ஆண்டுகளில் இத்தாலிய எழுத்தாளர் ஜியோவானி பொக்காசியா எழுதிய ‘தி டீகேமரூன்’ (பத்து நாட்கள்) என்ற சிறுகதைத் தொகுப்பு பிளேக் பீடித்த பிளாரன்ஸ் நகரிலிருந்து தப்பித்து ஓடும் 10 பேர் தங்களுக்கிடையே சொல்லிக்கொள்ளும் கதைகளைக் கூறுகிறது. ஜியோஃபிரே சாசர் எழுதிய ‘தி கேன்டர்பரி டேல்ஸ்’ (கேன்டர்பரி கதைகள்) என்ற தொகுப்பு, பிளேக் தாக்குதலின்போது இங்கிலாந்தின் கேன்டர்பரி நகரத்திற்கு ஆன்மீகப் பயணம் மேற்கொள்கிற பல்வேறு பிரிவினரின் கதைகளைச் சொல்கிறது, இரண்டு தொகுப்புகளும் மக்களிடையே சுயநலமும் பேராசையும் முறைகேடுகளும் பெருகியதன் விளைவுதான் பிளேக் என்றும், அது மனிதர்களுக்கு அறச் சாவு, உடல் சாவு ஆகிய இரண்டு சாவுகளையும் ஏற்படுத்துகிறது என்றும் சித்தரித்ததை எடுத்துக்காட்டுகிறார்கள் ஆய்வாளர்கள்.
ஆங்கில இலக்கிய உலகில் 1826ல் மேரி ஷெல்லி எழுதிய ‘தி லாஸ்ட் மேன்’ (கடைசி மனிதன்) மிகச் சிலர்தான் பிளேக் பிடியிலிருந்து தப்பித்து வாழ்கிற எதிர்காலக் கற்பனை சார்ந்த நாவலாகும். நோய்த் தடுப்பு வழிமுறைகள் பற்றி விரிவாகவும் விளக்கமாகவும் எடுத்துரைப்பது அதன் தனித்தன்மை.
1842ல் அமெரிக்காவின் எட்கர் ஆலன் போ எழுதியது ‘தி மாஸ்க் ஆஃப் ரெட் டெத்’ (சிவப்பு மரணத்தின் முகமூடி). “பிரச்சினை என்னவென்றால் பிளேக்கால் சாவு வருவதில்லை, சாவு பயம்தான் பிளேக்காக மக்களைக் கவ்வியிருக்கிறது,” என்று அந்தச் சிறுகதையில் வரும் வாசகம் புகழ்பெற்றது. கொரோனாவால் இறந்துபோன மருத்துவர் உடலை அடக்கம் செய்ய விடாமல் தடுத்தவர்களைக் கவ்வியிருப்பது இந்தப் பயம்தானே?
நூற்றாண்டுக்குப் பிந்தைய கதை
சரி, இப்போது அந்த ‘தி ஸ்கார்லெட் பிளேக்’ நாவலை எடுப்போம். அமெரிக்க எழுத்தாளர் ஜேக் லண்டன் எழுதி 1912ல் ‘லண்டன் மேகசின்’ பத்திரிகையில் தொடர்கதையாக வந்தது, 1915ல் புத்தகமாக வெளியானது. பல பதிப்புகள் கண்ட அந்தப் புதினம், இன்று கொரோனா தாக்குதல் பின்னணியில் உலகம் முழுவதும் புரட்டப்படுகிறது. ஸ்கார்லெட் என்றால் அடர்சிவப்பு. பிளேக் தொற்றுகிறவர்களின் முகம் முழுவதும் அடர்சிவப்பாக மாறும். அங்கங்களின் அசைவுகள் முடங்கும். உடலெல்லாம் பரவும் வலி சிறிது நேரத்தில் வந்துசேரும் மரணத்தால்தான் முடிவுக்கு வரும்.
எழுத்தாளர் வாழ்ந்த காலத்திலோ அதற்கு முன்னதாகவோ நடந்ததாகச் சித்தரிக்கும் கதையல்ல இது. கதை நிகழும் ஆண்டு 2073 – ஆம் இன்றிலிருந்து 53 ஆண்டுகளுக்குப் பிறகு! சரியாகச் சொல்வதென்றால், 2013ம் ஆண்டில் ஒரு பிளேக் தாக்குதல் நடக்கிறது, அதிலே தப்பிப் பிழைத்தவர்களில் ஒருவரான ஜேம்ஸ் ஹோவர்ட் ஸ்மித் 60 ஆண்டுகளுக்குப் பிறகு தனது பேரன்கள் கேட்டுக்கொள்வதால் அந்தக் கொடூர அனுபவங்களைச் சொல்கிறார். பேரன்கள் மூவரும் அவரை “கிரான்சர்” என்று அழைக்கிறார்கள். உலகமே சந்தித்த பேரழிவுக்குப் பின் எஞ்சிய மிகமிகக் குறைவான மனிதர்களே நடமாடும் இடத்தில் அவர்கள் ஆதி மனிதர்கள் போல வேட்டையாடிச் சாப்பிடுகிற நிலையில் இருக்கிறார்கள்.
சான் பிரான்சிஸ்கோ நகரில் பேராசிரியராக இருந்தவரான ஸ்மித், வகுப்பறையிலேயே ஒரு இளம் பெண் முமெல்லாம் திடீரெனச் சிவந்து துடிப்பதைக் காண்கிறார். அவளைக் காப்பாற்றும் முயற்சிகள் பலனளிக்கவில்லை. ஊருக்குள் பலரும் இதே போல் செத்து விழுகிறார்கள். வீடு திரும்பும் பேராசிரியரைக் குடும்பத்தினரே, அவருக்கும் தொற்று இருக்கும் என்று கருதி, உள்ளே விட மறுக்கிறார்கள். பெரிதும் நம்பியிருந்த அறிவியல் ஆராய்ச்சியாளர்களிடமிருந்து நம்பிக்கையளிக்கும் செய்தி வராததாலும், மரணம் துரத்தியதாலும் மக்கள் ஊர்களிலிருந்து வெளியேறுகிறார்கள். ஆனால் எங்கே போனாலும் இதே நிலைமை. சீர்குலைவுகளால் தீப்பற்றிக்கொள்ள புகை மூட்டத்தால் சூரிய ஒளி மறைக்கப்பட்டு எங்கும் அரைகுறை வெளிச்சம். உலகம் இத்தோடு முடியப்போகிறது என்ற எண்ணம்.
ஒரு தனிமையான இடத்தில் சில ஆண்டுகளைக் கழிக்கிறார் ஸ்மித். ஒரு குதிரைக்குட்டியும் இரண்டு நாய்களுமே அவரது துணை. சமூக உறவு தேவை என்று கருதுகிற அவர் சான் பிரான்சிஸ்கோவுக்குத் திரும்பி வருகிறார். ஒரு நவீன நகரத்தின் அடையாளங்கள் அனைத்தும் அழிந்துபோயிருப்பதைப் பார்க்கிறார். ஆங்காங்கே சிலர் தொல்குடி இனங்கள் போலக் குழுக்குழுவாக வாழ்கிறார்கள். “முந்தைய” சமூகம் போல வாழாததால் அவர்களுக்கு மொழி கூட சிக்கலானதாக இருக்கிறது.
தனக்குப் பிறகு பிளேக் அனுபவத்தையும், தனது காலத்தில் வாழ்க்கைச் சூழல்களும் தொழில்நுட்ப வசதிகளும் எப்படியெல்லாம் இருந்தன என்பதையும் நினைவுபடுத்திச் சொல்வதற்கே ஆளிருக்காது என்று நினைக்கும் ஸ்மித், அந்த அறிவையெல்லாம் எதிர்காலத் தலைமுறையினருக்குக் கடத்துவது கடமை என்ற உணர்வோடு பேரன்களிடம் சொல்கிறார். ஆனால், இப்படியெல்லாம் மனிதர்கள் வாழ்ந்தார்கள் என்று பேரன்கள் நம்ப மறுக்கிறார்கள், கிரான்சர் கதையளக்கிறார் என்று கேலி செய்கிறார்கள். மனிதர்கள் மறுபடியும் தவறுகள் செய்வார்கள் என்று புரிந்திருந்தும், மறுபடியும் நாகரிகம் தழைக்கும் என்ற நம்பிக்கையோடு அறிவைக் கடத்தும் கடமையைத் தொடர்கிறார் ஸ்மித்.
குற்றவாளி யாரெனில்…
பிளேக் பற்றிய பாரம்பரியக் கருத்துகளைக் கேள்விக்கு உள்ளாக்குகிற இந்த நாவல், பகுத்தறிவின்மையே பாதிப்புக்குக் காரணம் என்கிறது. கதையோடு இணைந்து, எழுத்தாளரின் சமகால அறிவியலாளர்களான லூயிஸ் பாஸ்டர், ராபர்ட் கோச் போன்றோரின் தொற்று ஆராய்ச்சிகள் பற்றிய விளக்கங்கள் வருகின்றன. இருபதாம் நூற்றாண்டில் பெருந்தொற்றுப் பேரிடர்கள் பற்றிய கண்ணோட்டங்கள் வெகுவாக மாறியதில் இந்த நாவலுக்கும் பங்குண்டு என்கிறார்கள் இலக்கியத் திறனாய்வாளர்கள்.
இருவகை மனிதர்கள் பிளேக் தாண்டவக் காலத்தில் உருவானதை ஸ்மித்தின் வார்த்தைகளில் சொல்கிறார் லண்டன். ஒரு வகையினர் பீதியால் தனிமையில் சுருண்டு போனவர்கள். இன்னொரு பிரிவினர் குடிபோதையில் மூழ்கித் தப்பிக்க நினைத்தவர்கள். பிளேக் பற்றிய தகவல்களை மக்களுக்குக் கொண்டுசெல்வதில் ஊடகங்கள் சிறப்பான பணியாற்றியதை நாவல் பாராட்டுகிறது. இன்று கொரோனா செய்திகளில் பல ஊடக நிறுவனங்களில் செயல்பாடு விமர்சனத்திற்கும் உள்ளாகியிருப்பது கவனத்திற்குரியது.
எழுத்தாளர் பற்றி ஒரு முக்கியத் தகவல் – அமெரிக்க சோசலிஸ்ட் கட்சியின் உறுப்பினராகச் செயல்பட்டவர் ஜேக் லண்டன். நிலைமையைக் கையாள்வதில் ஏற்பட்ட தோல்விக்கு முதலாளித்துவ அமைப்பு ஒரு காரணம் என்று அவருடைய நாவல் விமர்சிக்கிறது. “மக்கள்தொகை பெருக்கத்திற்கும் பெருங்கூட்டமாகக் குவிந்து வாழும் நிலைமைக்கும் காரணம் முதலாளித்துவம்தான். அதுதான் பிளேக்குக்கு வழிசெய்து கொடுத்தது,” என்கிறார் லண்டன்.
1910ல் அவர் எழுதிய ‘தி அன்பேரலல்டு இன்வேசன்’ (இணையிலா ஊடுறுவல்) என்ற நாவல், சீனா பற்றிய அவதூறுகளைத் திட்டமிட்ட முறையில் அமெரிக்க அரசும், வேறு சில மேற்கத்திய அரசுகளும் பரப்பியதைச் சாடுகிறது. உயிர்க்கொல்லிக் கிருமி ஆயுதங்களை சீனர்கள் உருவாக்கியிருக்கிறார்கள் என்பது அப்படிப்பட்ட ஒரு அவதூறு – அப்போதே!
நெருப்பைத் தேடிச் சென்றவர்களின் கதையைச் சொன்ன பாட்டி முதல், பிளேக் நெருப்பிலிருந்து தப்பியவர்களின் கதையைச் கொன்ன தாத்தா வரையில் வெளிப்படுத்துவது அற்பத்தனங்களற்ற, அறிவார்ந்த, அன்புமயமான, அனைவருக்குமான உலகம் உதயமாக வேண்டும் என்ற விருப்பத்தைத்தான். இன்றைய கொரோனா போராட்டத்தின் தாக்கத்தில் நாளை உருவாகப்போகும் படைப்புகளும் அதே உலகத்தைத்தான் முன்மொழியும். அந்த உலகம்தான் உயிரிகளின் போராட்டத்தையும் புரிந்துகொண்டு பெருந்தொற்றுப் பேரிடர்கள் முறியடிக்கப்பட்ட வாழ்க்கையை வழங்கும்.
என் வலைப்பூ: அசாக்
http://asakmanju.blogspot.com
விரிவான கட்டுரை. அரசியல், இலக்கியம் என இரண்டிலுமாக எடுத்தாள்கைகள். இந்தத் தருணத்தில் மிகவும் தேவையான தகவல்கள். விழிப்புணர்வுக்கு வேண்டிய விவரங்கள். அ.கு வுக்கே உரிய அலசல்.