பனி மலர்கள் (Frost Flowers)
– ஏற்காடு இளங்கோ
துருவப் பகுதிகளில் உள்ள பனிப் படலங்களின் மீது வெண்மை நிறத்தில் பிரகாசமாக ஜொலிக்கும் பனி மலர்கள் தோன்றுகின்றன. ஆனால் அவை தாவரங்களிலிருந்து பூக்கும் உண்மையான மலர்கள் அல்ல. அவை பனிப் படிகங்களால் (Ice Crystals) தோன்றிய மலர்கள். இவற்றைப் பனி மலர்கள் (Ice Flowers) அல்லது உறைபனி பூக்கள் (Frost Flowers) என அழைக்கப்படுகின்றன. இது நார்வே உள்பட உலகின் துருவப் பகுதிகளில் நிகழும் ஒரு இயற்கை நிகழ்வு.
இந்த மலர்கள் இளம் கடல் பனி மற்றும் ஏரியின் மெல்லிய பனிக்கட்டியின் மீது மட்டுமே தோன்றும். மேலும் குளிர்ந்த மற்றும் அசைவற்ற மென்மையான பனிக்கட்டிகள் தான் மலர்களாக உருவாகும். இந்தப் பனிக்கட்டிகள் உறைபனி போலவே இருக்கும். புதிய உறைபனி 0 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் உருவாகும். அவை மைனஸ் 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கொண்ட குளிர்ந்த காற்றின் கீழ் இருக்கும் போது பூக்கள் பிறக்கும்.

இந்தச் சூழ்நிலையில் சூடான பனிக்கட்டியின் மேற்பரப்பில் உள்ள விரிசலிருந்து நீராவி வெளிப்படுகிறது. அப்போது நீராவி காற்றுடன் தொடர்பு கொண்டு படிகமாக மாறுகிறது. இந்தப் படிகங்கள் மலர் போன்ற அமைப்பைப் பெறுகின்றது. அவை பொதுவாக 3 முதல் 4 சென்டிமீட்டர் விட்டம் கொண்ட திட்டுகளில் இருந்து வளரும். பூக்களுக்கு அருகாமையில் உள்ள வெப்ப நிலை அதன் தடிமன் மீது நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது படிக நுனிகளை மாற்றுவதன் மூலம் பனி பூக்களின் வடிவம் மாறுகிறது.
பனி மலர்கள் மிகவும் அழகானவை மற்றும் உடையக்கூடியவை. அவை பல சென்டிமீட்டர் நீளம் வரை இருக்கும். இந்த மலர்கள் பல்வேறு அளவு மற்றும் வடிவத்தில் காணப்படும். இவை பனிப்படலத்தின் மீது தனித்தனியாக மலர்ந்து காட்சி தரும். ஒரே இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மலர்கள் பூத்திருக்கும். பனி பூக்கள் சில நாட்களுக்கு மட்டுமே வாழும். பொதுவாக அதன் ஆயுள் ஒரு வாரம் தான். அவை பனியால் மூடப்பட்டிருக்கும். இதனால் அதன் மென்மையான அமைப்பு சரிந்து விடும்.
![]()
கடல் பனியில் உருவான பூக்கள் மிகவும் உப்பு தன்மைக் கொண்டது. இதில் கடல் நீரை விட சுமார் மூன்று மடங்கு உப்பு அதிகம். இதில் இரசாயன செறிவுகளும் உள்ளது. வேதியியலில் பனி மலர்கள் மிக சிக்கலான நுண் கட்டமைப்பைக் கொண்டுள்ளது. இதில் குளோரைடு, சோடியம் மற்றும் சல்பேட் உள்ளது. பனி மலர்கள் நன்னீரிலும் பிறக்கும். இது நன்னீர் உறைபனி மலர் (Fresh Water Frost Flower) என அழைக்கப்படுகிறது. ஆனால் இது மிகவும் அரிதானது. இயற்கையில் தோன்றும் பனி மலர்களை ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிக் கடல்களில் காணலாம்.
கட்டுரையார் :

– ஏற்காடு இளங்கோ
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

