நூல் அறிமுகம்: தஸ்தாயெவ்ஸ்கியின் *மரண வீட்டின் குறிப்புகள்* – மந்திரி குமார்மரண வீட்டின் குறிப்புகள்
தஸ்தாயெவ்ஸ்கி
தமிழில் வி எஸ் வெங்கடேசன்
புதுமைப்பித்தன் பதிப்பகம் (2001 பாதிப்பு)
விலை 60, 174 பக்கங்கள்
புறஉலகு, சக மனிதன், குழுச்சமூகம், பிற நம்பிக்கைகள் இவையெல்லாமே ஒரு தனிப்பட்ட மனிதன் மீது அகத்தில் விளைவிக்கிற மாற்றங்களோ ஏராளம். அது நிலம், பொருளாதாரம், சமூகம், மதம் சார்ந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமானதாக மாறுபட்டிருக்கும். அப்படிப்பட்ட அகம் சார்ந்த பௌதீக வெளிப்பாடுகளோ சிறை சென்ற ஒருவருக்கு எப்படிப்பட்டதாகவெல்லாம் இருக்கும் என்பதை தஸ்தாயெவ்ஸ்கி இந்நாவல் வழியே காட்சிப்படுத்துகிறார்.
சிறைக்குச் செல்கிற முக்கிய கதாபாத்திரமானவன் முன்போ பிரபுவாக இருந்தவன். அவன் வழியே சிறைச்சாலையில் காண்கின்ற கைதிகள் ஒவ்வொருவரைப் பற்றியும் அவர்கள் விதவிதமாக நடந்து கொள்கிற அவ்வாறு நடந்து கொள்வதற்கு பின்னால் இயங்குகின்ற அவர்களின் அக உளவியல் பற்றிய விவரணைகளை கதாபாத்திரத்தின் கதை சொல்லல் வழியே நாவலை நகர்த்துகிறார் தஸ்தாயெவ்ஸ்கி.
முன்னதாக ஹிட்லர் வதைமுகாம்களில் அடைக்கப்பட்டு அந்த சிறைப்பட்ட காலத்தில் ஒவ்வொருவரின் மரணமும் அடுத்த கணம் நிகழ்ந்தேறலாம் என்கிற நிலையில் அவர்களின் மன உளவியலை ஒரு மனநல மருத்துவராக அங்கிருந்து எழுதிய விக்டர் பிரங்கிலின் அவர்களின் ‘வாழ்வின் அர்த்தங்கள்’ உண்மை புத்தகத்தை படித்த போது கிடைத்த அனுபவம் போன்று வேறொரு அக உலகத்தை இந்நாவல் நமக்கு காட்டுகிறது.
தந்தையைக் கொன்றவன், பிஞ்சுக் குழந்தையை கொன்றவன், காதலியை கொன்றவன், சிறை அதிகாரியை கொன்றவன் போன்ற கொலைக் குற்றவாளிகளிலிருந்து கள்ளக்கடத்தல், திருட்டுகள், வழிப்பறி செய்கிறவர்கள் வரை எத்தனையோ விதவிதமான குற்றங்களை செய்து மரண தண்டனை முதல் கசையடிகள் ஆயுள்தண்டனை வரை பெற்றவர்கள் சிறைக்குள்ளே வந்தவுடன் எப்படியெல்லாம் சிந்திக்கிறார்கள் எப்படியெல்லாம் நடந்து கொள்கிறார்கள் என்று இங்கே நிறையவே சொல்லப்படுகிறது.


விக்தோர் ஹியூகோவின் மரண தண்டனைக் கைதியின் இறுதி நாள் என்கிற நாவல் எழுத்தபட்ட விதமும் இதுவும் கிட்டத்தட்ட ஒரே சாயல் தான். சிறையிலிருந்த ஒருவனின் சிறைக்குறிப்புகளை கதையாசிரியர் கண்டு அதை உலகத்திற்கு தெரியப்படுத்துவது போலத்தான் இவ்விரண்டு நாவல்களுமே எழுதப்பட்டிருக்கும்.
ஆனால் கொடுங்கோல் ஆட்சியில் தொட்டதுக்கெல்லாம் அப்பாவி மக்கள் காரணமின்றி மரண தண்டனை நிறைவேற்றுவதற்கு எதிராக படைப்பின் வழியே புரட்சி செய்தவர் வித்தோர் ஹியூகோ. அவரின் நாவல் வழியே மரண தண்டனைக் கைதியின் சிறை வாழ்வும் அவனது எதிர்காலம் பற்றிய எதிர்பார்ப்பும் அக வாழ்வும் நேர்த்தியாக அதில் சொல்லப்பட்டிருக்கும். இந்த இரண்டு நாவல்களிலுமே கதாநாயகன் எதற்காக சிறை தண்டனை பெற்றான் அவனது குற்றம் என்ன என்று எதுவுமே சொல்லப்பட்டிருக்காது.
ஆனால் மரண வீட்டின் குறிப்புகளை பொறுத்தவரை அலெக்ஸாந்தர் பெட்ரோவிச்சின் பத்து ஆண்டு சிறை அனுபவ குறிப்புகளை கதையாசிரியர் கண்டெடுத்து எழுதுவது போல் துவங்கி அது முழுக்க முழுக்க சிறைக்குள்ளாக இருப்பவர்களின் உலகை நமக்கு அறிமுகப்படுத்துகிறது.
தஸ்தாயெவ்ஸ்கி அவனது மரணத்தை அதன் வாசலில் சென்றே முத்தமிட்டு மீள் பெற்றுத் திரும்பியவன். அதனாலே வாழ்தலின் மெய்மையைத் தேடியலைகிற ஒவ்வொருவருக்கும் தஸ்தாயெவ்ஸ்கியின் படைப்புலகம் ஒவ்வொன்றும் ஒரு தீர்க்க தரிசனமாகவே இருக்கும். இப்படைப்பும் அப்படியான ஒன்றுதான்.