அதே மாலை
அதே மாலை
அதே மயக்கம்
அதே தனிமை
அன்றைய நினைவு
என்றும் இனிமை!
அன்றைய தனிமை
கசந்தது ;
மனதைப் பிசைந்தது.
அருகில் நீ
இல்லை என்றால்
பொன் மாலையும்
பூ வாசமும்
எந்நேரமும்
நரகம்தான்!
இன்றும் நீ
இல்லை தான்!
ஆனால்
அந்த நரகத்தின்
நெருடல்கள்
இன்று இல்லை!
ஒப்புக் கொள்ளும்
மனம் இருந்தால்
தவிக்க வைக்கும்
தனிமை இல்லை;
ஏற்றுக் கொள்ளும்
மனம் இருந்தால்
என்றும் தனிமை
கசப்பதில்லை !
இரு கை நீட்டி
வரவேற்றால்
வருவது எல்லாம்
வசந்தம் தான்!
மனதோடு வாழப்
பழகி விட்டால்
மனம் உன் வசம் ;
நீயோ அதன் வசம்!
நிற்காமல்
பெய்யும் மழையில்
நிர்மல மனதின்
ஓசைகள் ;
பேசாமல்
பேசும் மனதின்
பேச்சுக்கு இல்லை
அர்த்தங்கள் !
இயல்பாய் இருந்தால்
போதுமே !
இசையா மனமும்
இயங்குமே !
வீணை அருகே
இருந்து விட்டால்
விரல்கள் தானே
இசைக்குமே!
வீணை அருகே
இருந்து விட்டால்
விரல்கள் தானே
இசைக்குமே!
இன்னும் எழுதாக் கவிதை
பூவின் மணமும் தேனின் சுவையும்
புலரிக் கதிரில் ஒளிரும் ஒளியும்
பனியின் மென்மைத்தன்மை அதுவும்
பாலின் வெண்மை வெகுளிக் குணமும் ஆனைப் பிடியின் நடையின் அழகும்
மானின் கண்ணாய் மருளும் விழியும் பொன்னின் நிறமும் புவியின் திறமும்
போதவிழ் மலரின் பொன்றா அழகும்
ஒன்றாய்க் கொண்டே ஓர் உருவாகிக் கன்னிப்பெண்ணாய் கண் முன் நின்ற
கவினூ றிதழே காவியச் சுவையே,
கனவில் மலர்ந்த கார்த்திகை நிலவே
கனலும் கவிதை வரிகளின் எழிலே
கனியே கனியில் ஊரும் ரசமே
கலையே கலையின் பொருளே அருளே கண்ணதாசனின் கவிதைச் சுவையே
இன்னும் எழுதாக் கவியே இசையே
இனிக்கும் சுவையை ஈனும் அழகே
இறையின் அருளால் என்னிடம் வந்த
இயல்பே, இணையே இல்லாப் பொருளே,
ஈவாய் எனவே கேளா வரமாய்
என்னைச் சேர்ந்த இன்னிசை உயிரே!
இன்றும் என்றும் இதுபோல் பொன்றா
இதயத் தழகுடன் இணைவாய் வாழ்க
–கி. பாலாஜி

