இலக்கிய உலகில் யாரும் தொடாத களங்களை கையாண்டு வெற்றிபெற்றவர். டுடோரியல் கல்லூரி கணித ஆசிரியர். ஐம்பத்திரண்டு ஆண்டுகள் மட்டுமே ஜீவித்தவர்.
“தன்னுடைய கலைப்படைப்புகள் மூலம் சமுதாய மாற்றங்களை நிகழ்த்துவதாக நினைக்கும் கலைஞனுக்கு, பனம்பழத்தை வீழ்த்திய காக்கையின் கதையைச் சொல்லுங்கள் ” என்று யதார்த்தத்தைக் கூறியவர். சிம்மாசனம் போட்டு உட்கார்ந்திருக்கும் எழுத்தாளர்களுக்கு இந்த வாக்கியங்கள் உதவும்.
“மனிதர்களைப்பற்றிப் பொதுவாக எதுவும் சொல்லச்சொன்னால் ‘மனிதன் மகத்தான சல்லிப்பயல் ‘என்றுதான் சொல்வேன் “என்று உண்மையைக்கூறியவர்.
“மனிதர்களிடம் நிலவ வேண்டியது பரஸ்பர மதிப்பேத்தவிர, பரஸ்பர அன்பு அல்ல. அப்போதுதான் ஏமாற்றுக் குறையும் “என்று சொன்னவர்.
தீராக்குறை
அப்பா சாவுபடுக்கையில் உள்ளார். அவரை பார்ப்பதற்காக வெளியூரிலிருந்து பிள்ளைகள் அனைவரும் வந்து சேர்ந்தனர். அம்மா எல்லோருக்கும் உணவு தயாரித்து பரிமாறுகிறாள். அப்போது அவரவர்கள் தங்களது குறைகளை கூறுகின்றனர். தங்களது குறைகளைக் கூறுவதோடு மட்டுமல்லாமல் மற்றவர்கள் இந்தக் குடும்பத்தினால் அடைந்த நன்மைகளையும் பட்டியிலிடுகின்றனர். அனைவருக்கும் படுக்கை வசதி செய்துகொடுத்த அம்மா, அடுப்படி வேலைகளை முடித்துக்கொண்டு கணவனிடம் சென்று அங்கிருந்த சின்னமகனை இடம்பெயர்ந்து அனுப்புகிறாள். அப்போது கிழவனிடம் இருமலுடன் சேர்ந்து பேச்சு மெல்ல வருகிறது. பார்வதி, நீ இல்லாட்டி நான் இத்தனைநாள் வாழ்ந்திருக்கவே முடியாது, ஒனக்கு நான் ஒண்ணுமே செய்யல “என்று அவரும் தன் மனக்குறையை ஒருவாறு கூறி முடிக்கிறார். இந்த உலகில் வாழும் எல்லாருக்கும் மனக்குறை என்பது தீராமல்தான் இருக்கும்போல.
பூர்வாசிரமம்

பங்கஜம் ஒரு ஆசிரியை, தன் பதின்ம வயது மகள் தங்கத்தையும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துகிறாள். வடிக்கையாளன் ஒரு நாள் சென்று தங்கத்திடம் இருந்துவிட்டு வெளியே வந்தவுடன் பங்கஜம் அவனிடம் அன்பாக பேசி, உபசரித்து அனுப்புகிறாள். ஓராண்டு கழித்து அவர்களைத்தேடி செல்கிறான் புதிதாக கட்டியுள்ள வீட்டில் பங்கஜம் மட்டும் இருக்கிறாள். தங்கத்திற்கு தரமான குடும்பத்தில் வாக்கப்பட்டு போய்விட்டாள் என்று அறிகிறான். அவன் வீட்டை விட்டு வெளியேறப்போனான். அப்போது பங்கஜம் அவன் கைபிடித்து படுக்கையறைக்கு அழைத்துச்செல்கிறாள். சந்தோஷப்படுத்தி அவனை வழியனுப்புகிறாள், அப்போது அவன் வாடிக்கையாகத்தரும் பத்துரூபாயை எடுத்துத்தருகிறான். புன்னகையுடன் அதை மறுத்த பங்கஜம், இனிமேல் இங்கு வராமல், திருமணம் செய்து நல்லபடியாக வாழப்பருங்கள் என்று அனுப்பி வைக்கிறாள்.
நிமிசக்கதைகள்
. ஒரு பக்கக்கதைகள், ஒரு நிமிடக்கதைகள் என்ற கதைவடிவங்கள் இப்போது ஏறக்குறைய இருபத்தைந்து ஆண்டுகளுக்குள்ளாகத்தான் தோன்றியுள்ளது, ஆனால், நாகராஜன் ஐம்பது வருடங்களுக்கு முன்பே அதை அறிமுகப்படுத்தியுள்ளர். மடத்திற்கு முன்னால் பெருங்கூட்டம். என்னவென்று விசாரிக்கும் போது சாமியார் சமாதியாகிவிட்டார் என்று கூறுகிறார்கள். அங்கிருந்த சிறுவர்களும் “டேய், சாமியார் சமாதியாகிவிட்டாராம்” என்று அவர்களுக்குள் பேசிக்கொண்டனர். சற்று நேரத்தில் சமாதியடைந்த சாமியாரை வெளியேதூக்கி வருகின்றனர், அப்போது ஒரு சிறுவன் அதைப்பார்த்ததும் “டேய் சாமியார் செத்துபோனாரு “என்று கத்துகிறான். சிறுவர்கள் அனைவரும் சாமியார் செத்துப்போனார் என்று கூறக்கேட்ட பெரியவர்கள் அந்தச்சிறுவர்களை அங்கிருந்து அடித்து விரட்டினர்.
ஒரு விபச்சாரியிடம் சென்ற எழுத்தாளன், “உங்களைப்பற்றி நான் கதையெழுத வேண்டும் “என்கிறான். முதல் கேள்வியாக, பெண்ணே இவ்வளவு கெட்ட நிலைக்கு நீ வரக்காரணம் என்ன? என்று கேட்கிறான். அதற்கு அவள், “என்னது கெட்ட நிலையா !எனக்கு எந்த சீக்கும் இல்லை ஒங்கிட்ட இல்லாம இருந்தாபோதும் “என்று பதிலளிக்கிறாள். அடுத்து, “இல்ல ஒனக்கு சமுதாயம் எவ்வளவு கொடுமையை இழைத்துவிட்டது !!”என்று கேட்க, அவள், “கொடுமை என்ன கொடுமை, பசிக்கொடுமைதான், இந்த போலீஸ்காரங்க தொந்தரவு மட்டும் இல்லாம இருந்தாபோதும் “என்கிறாள். மூன்றாவது கேள்வியாக, “கண்ட கண்டவங்க கிட்ட போகிறது ஒனக்கு கஷ்டமில்லையா !!என்று அவன் கேட்க, “யாரும் கண்டவங்ககிட்டயெல்லாம் போகல, எனக்கும் புருஷன் இருக்காரு “என்று பதிலளிக்கிறாள்.
ஒழுக்கமா இருக்க முடியாதா? என்று அவன் கேட்க, சட்டென அவள், “இப்ப நீங்க மட்டும் இங்க எதுக்கு வந்தீங்க, சரி நேரமாகுது என்கிறாள். எழுத்தாளன் அவர்களைப்பற்றி எழுத நினைத்தக் கதையை எழுதவேயில்லை.
கிழவனின் வருகை
இக்கதை முழுமையும் படிமம். இக்கதையில் ஒரு உரையாடலை மட்டும் பதிவிடுகிறேன்.
“கிழட்டு பைத்தியமே !நான் சொல்வதை கேள், நான் இன்று பேசுவது நீ கற்று தந்த மொழியல்ல. உன்னுடைய அர்த்தமற்ற சொற்களின் வெறுமையிலிருந்து என்னை நான் என்றோ மீட்டுக்கொண்டுவிட்டேன். உன் கற்பனை உருவாக்கிய உன் மைந்தன் மறைந்துவிட்டன், உன் முன்பு நிற்பவன் உன் நினைவுகளை சம்ஹரித்து விட்டவன்.
மைந்தா, நீ சொல்லும் ஒவ்வொரு சொல்லும் நீ இன்னும் உன் நினைவுகளிலிருந்து மீளவில்லை என்பதை உணர்த்தவில்லையா? வாழ்வு போதைக்கு ஆளாகாமல் வாழ்வின் இனிமையாய் அறி என்றேனே நினைவில்லையா? மலைபோன்ற லட்சியங்களால் மருண்டுவிடாது, வயிற்று வலியால் துன்புறும் குழந்தைகளுக்கு நிவாரணம் தரசொன்னேனே நினைவில்லையா? கிழிந்த செருப்பை செப்பனிட முடியாதவன் வீட்டைக்கட்ட முடியாது என்றேனே நினைவில்லையா? எனது கீரைப்பாத்திகளை எள்ளி நகையாடினாய், இன்று உனது மலர் தோட்டங்கள் சருகாகி விட்டனவே !தெரிந்த பொருளை உதாசீனப்படுத்தி விட்டு தெரியாத பொருளுக்காகக் குழம்பி நிற்கிறாயே, அடுத்த அடி என்று முடிவு செய்ய இயலாத நிலையில் நீண்ட நெடுஞ்சாலையின் முடிவை கற்பனை செய்து பார்க்க முயலுகிறாய். அச்சங்களும் விபரீத ஆசைகளும் உன் வாழ்வை சூறையாட, உன் வாழ்வின் வெறுமையை அந்த வாளும் ஈட்டியும் போக்க முடியுமா? ”
அந்தக்கிழவனுக்கு ஆரம்பம் முதல் இறுதிவரை கசப்பான அனுபவங்களே ஏற்படுகிறது. குழப்பமான நிலையில்தான் மேற்க்கண்ட உரையாடல் நடக்கிறது.
இத்தொகுப்பில் மொத்தம் 17கதைகள் உள்ளது. எல்லாக் கீழ்மைகளும் நிரம்பிய ஒரு உலகம். படிக்கும்போது நாகராஜனின் கதை மாந்தர்கள் மீது ஒரு பரிதாபமே ஏற்படுகிறது. வாசிக்கும்போது புது அனுபவம் கிடைக்கும், வாசியுங்கள்.
நூல் =டெர்லின் சர்ட்டும் எட்டுமுழ வேட்டியும் அணிந்த மனிதர்.
ஆசிரியர் =G. நாகராஜன்
பதிப்பு =காலச்சுவடு
விலை =ரூ. 135/
அன்புடன் =பெ. அந்தோணிராஜ்
தேனி.