ஜி.நாகராஜன் சொன்ன மனிதன்
– ச.சுப்பாராவ்
நடை பயிற்சியின் முதல் சுற்றை முடித்து விட்டு தாம் வழக்கமாக உட்காரும் இடத்தில் அவர்கள் இருவரும் உட்கார்ந்தார்கள். சுப்பராமன் இப்போதுதான் பணி ஓய்வு பெற்ற புதிய மூத்த குடிமகன்.
வெங்கடசாமி பல்லாண்டுகளாகவே மூத்த குடிமகன்தான் என்றாலும், பணி ஓய்வு இல்லாத வழக்கறிஞர். காலை நேரத்து குளிர்ந்த காற்று அவர்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும் ஏரியின் குளிர்ச்சியை வாங்கி வந்து இவர்கள் மேல் படரவிட்டது.
சுப்பராமன், ” நேற்று அடிபட்ட முகத்திற்கு இந்த காற்று இதமாக இருக்கிறது,“ என்றார் தன் முகத்தை வலிக்காமல் கைக்குட்டையால் துடைத்தவாறு. வெங்கடசாமி, “என்ன ஆயிற்று? எங்கே அடிபட்டுக் கொண்டு வந்தீர்கள்?“ என்றார். அவரது குரல் முகத்தைப் பார்த்தால் அப்படி ஒன்றும் தெரியவில்லையே என்பதைச் சேர்த்துச் சொன்னது.
சுப்பராமன், “நேற்றிரவு என் கவனக்குறைவால் நன்றாக அடிபட்டுக் கொண்டேன்,“ என்று அந்தக் கதையை ஆரம்பித்தார். அவரது மனைவிக்கு பல்வலி. பல்மருத்துவருக்கு தொலைபேசியில் பேசினார்.
மருத்துவர் ஊரில் இல்லை. மறுநாள் தான் வருகிறாராம். அவர் அன்றிரவிற்கும், மறுநாள் காலைக்குமாக சில மாத்திரைகளை வாட்ஸ்அப்பில் போட்டுவிட்டார். மறுநாள் மாலை தன்னை வந்து பார்க்கச் சொல்லிவிட்டார்.
அவர்களது புற நகர்ப் பகுதியில் இப்போது மிக வேகமாக எல்லா விதமான கடைகளும் வர ஆரம்பித்து விட்டன. வீடு இருக்கும் தெருவிலிருந்து பிரதான சாலைக்கு வந்தால், அந்த சாலை முழுவதுமே கடைகள்தான்.
அவர்கள் ஊரின் சிறப்பம்சங்களான வடைக்கடைகள், புரோட்டாக் கடைகள் போக, மற்ற எல்லா கட்டிடங்களிலும் வேறு வேறு கடைகள். அந்தப் பகுதியின் மக்கள் நெருக்கத்திற்கு சற்றும் தொடர்பில்லாத வகையில் ஏழெட்டு மகளிர் அழகு நிலையங்கள்.
ஒரு காலத்தில் பிழைக்க வழியற்ற பெண்கள் பராசக்தியில் கலைஞர் சொன்னது போல இட்லிக் கடை வைப்பார்கள்.
இப்போது அதற்கு பதிலாக அழகுநிலையங்கள் போலும் என்று நினைத்துக் கொள்வார் சுப்பராமன். இருபாலருக்கான முடிதிருத்தகங்கள். இவை போக, ஒரு பெரிய கார்ப்பரேட் மருத்துவமனை தெருவிற்கு ஒன்று என மருந்தகங்களைத் திறந்திருந்தது. குளிரூட்டப்பட்டு, வெளிப்புறம் முழுவதும் கண்ணாடிச் சுவர்.
முழுநீள கண்ணாடிக் கதவு. மாலை மயங்கும் நேரத்தில் சரியாகக் கண் தெரியாத மூத்த குடிமகனான சுப்பராமன் தனது கைபேசியில் மருத்துவர் அனுப்பிய செய்தியைத் தேடியபடி, கண்ணாடிக் கதவு இருப்பது தெரியாமல், உள்ளே நுழைகிறார்.
கதவு சிறிதும் அசையாது முகத்தில் மோதுகிறது. முகம் முழுக்க அப்படியொரு வலி. மூக்கு நொறுங்கி விட்டது என்று நினைக்கிறார். என்ன நடந்தது என்றே ஒரு கணம் தெரியவில்லை.
இரண்டு நிமிடங்களில் சுதாரித்துக் கொள்கிறார். முகத்தில் ரத்த காயம் எதுவுமில்லை. கதவை தள்ளிக் கொண்டு உள்ளே செல்கிறார். நேர் எதிரே கல்லா கணினியில் உட்கார்ந்திருக்கும் இளைஞனும், அவனது உதவியாளினியும், கண்ணாடில இடிச்சுக்கிட்டீங்களா? என்கிறார்கள். முகமும், மூக்கும் விண்விண்ணென்று தெறிக்க, மூச்சு வாங்க ஆம் என்கிறார் சுப்பராமன்.
இரத்தக் கொதிப்பு அதிகரித்து விட்டது போலும். வியர்த்துக் கொட்டுகிறது. கடை ஊழியர்கள் என்ன வேண்டும்? என்கிறார்கள். இவர் மருத்துவரின் வாட்ஸ்அப் செய்தியை காட்டுகிறார். மூன்று மாத்திரைகள். எத்தனை வேளைக்கு? என்கிறார்கள். இவர் இரண்டு விரல்களைக் காட்டுகிறார். எடுத்துத் தருகிறார்கள். ஜி பேயா? என்கிறார்கள்.
ஜி என்ற வார்த்தையே பிடிக்காத சுப்பராமன் 100 ரூபாய் தாளை நீட்டுகிறார். மாத்திரைகளையும், பாக்கி பணத்தையும் வாங்கிக் கொண்டு வீடு திரும்புகிறார். இரவு தூங்கும் வரை வலி இருந்தது. காலையில் குறைந்துவிட்டது. மனைவியின் பல்வலியும்தான்.
வெங்கடசாமி சுப்பராமனின் முகத்தை கூர்ந்து பார்த்தார். “நீங்கள் சொன்ன பிறகு, நெற்றிப்பக்கமும், மூக்கும் சிவந்து இருப்பது தெரிகிறது. இப்போது வலி குறைந்து விட்டதா?“ என்றார் அக்கறையாக.
“வலி இன்னும் லேசாக இருக்கிறது. ஆனால், அந்த கடைக்கார இளைஞர்கள் நடந்துகொண்ட விதத்தை நினைத்தால் தான் வேதனையாக இருக்கிறது. நான் பலமாக இடித்துக் கொண்டதை, அப்படியே செய்வதறியாது நின்றதை நன்றாகப் பார்த்தார்கள்.
இதே ஒரு பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு என்றால், நம் போன்ற பெரியவர்கள் இப்படி அடிபட்டு நின்றால், பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டார்கள். உட்காரச் சொல்வார்கள். தண்ணீர் குடிக்கிறீர்களா? என்பார்கள். வீட்டுக்குக் கொண்டு விடவா? என்பார்கள்.
இந்த இளைஞா்கள் சத்தம் குறைக்கப்பட்ட தொலைக்காட்சியில், ரீல்சில் விபத்தைப் பார்ப்பது போல் பார்த்துவிட்டு, என்ன மாத்திரை வேண்டும் என்று கேட்டதை நினைத்தால்தான் வேதனையாக இருக்கிறது. மனிதர்கள் முன்பு போல் இல்லை,“ என்றார் சுப்பராமன்.

“மனிதர்கள் முன்பு போல் இல்லாமல் மாறிப் போய் விடவில்லை. அவர்கள் எப்போதும் போல்தான் இருக்கிறார்கள். எப்போதுமே தன் வேலை, தன் கவலை என்றுதான் மனிதன் இருக்கிறான். மனிதன் மகத்தான சல்லிப்பயல் என்று ஜி.நாகராஜன் (G. Nagarajan) சொன்னதைப் படித்திருப்பீர்களே?“ என்றார் வெங்கடசாமி.
நடைப்பயிற்சியில் இப்படித்தான் ஒன்றைத் தொட்டு ஒன்று என்று பேச்சு வளரும். உடல்பயிற்சியோடு, மனப்பயிற்சிக்கும் சேர்த்துதானே தினமும் சுப்பாராமன் அந்த ஏரிக்கரைக்கு வருகிறார் !
”வாசிப்பதை எல்லாம் ஏற்றுக் கொள்ளவா செய்கிறோம்? நம் அனுபவத்தில் உரசிப் பார்த்து தானே ஏற்றுக் கொள்ள முடியும். மனிதன் சல்லிப்பயல் என்று ஒட்டுமொத்தமாக அப்படிச் சொல்லிவிட முடியுமா?“
“நான் இந்த வக்கீல் தொழிலுக்கு வந்து ஐம்பது வருடம் ஆகப் போகிறது. நீங்கள் சொல்வது போல் என் அனுபவத்தில் உரசிப் பார்த்தே சொல்கிறேன். ஏனென்றால், தினமும் நீதிமன்றத்தில், பத்து சல்லிப் பயல்கள் என்னோடு உரசிக் கொண்டே இருக்கிறார்கள்,“ என்றார் வெங்கடசாமி சிரித்துக் கொண்டே.
அவர்களது நடைபயிற்சியில் சுப்பராமன் கரடகன்.
வெங்கடசாமி தமனகன். வெங்கடசாமியிடமிருந்து புதுப்புது கதைகளைத் தெரிந்து கொள்வார். தனது கரடகன் பாத்திரத்திற்கு ஏற்ப, சுப்பராமன் , “அப்படிப்பட்ட ஒருவரின் கதையைச் சொல்லுங்களேன். ஜி.நாகராஜன் (G. Nagarajan) சொன்னது சரிதானா? என்று பார்ப்போம்,“ என்றார்.
இருவரும் தம் சிறுவயதில் ஒரே பகுதியில் குடியிருந்தவர்கள். புறநகர் பகுதியில் முதலில் குடியேறிய வெங்கடசாமி ஆற்றுப்படுத்தியதனால் தான் சுப்பராமன் அவருடைய வீட்டுக்குப் பக்கமாக வீடு கட்டி குடியேறியிருந்தார். வெங்கடசாமி சொல்லும் கதைகள் பெரும்பாலும் அவர்களது பழைய ஏரியா மனிதர்கள் பற்றிதாகத்தான் இருக்கும்.
“நம் பழைய தெருவில் அமுதா சைக்கிள் கம்பெனி ஞாபகம் இருக்கிறதா?“ என்றார் வெங்கடசாமி. ”ஆமாம். லாண்ட்ரி கடைக்கு பக்கத்து வீட்டில் இருந்தது,“ என்றார் சுப்பராமன். “நான் சொல்வது இருபது வருடக் கதை. அப்போது நீங்கள் வேலை கிடைத்து டில்லி போய் விட்டீர்கள். அந்த அமுதா சைக்கிள் கடை மாடியில் ஒருவர் குடியிருந்தார். மிகக் குறைந்த வாடகை.
வீட்டு சொந்தக் காரரான அமுதா சைக்கிள் கடைக்காரர் அவரை காலி செய்யச் சொல்லி பல முறை கேட்டும், குடியிருந்தவர் காலி செய்யவில்லை. அமுதா சைக்கிள்காரர் சார்பாக நான் தான் வழக்கு போட்டேன்.“
வாக்கிங் சென்று கொண்டிருந்த அரை டிரவுசர் ஒன்று, ” என்ன உட்கார்ந்து கதை பேசிக் கொண்டிருக்கிறீர்கள்? வந்த வேலையைப் பாருங்கள்,“ என்று அறிவுறுத்திச் சென்றது. “முதல் ரவுண்ட் முடிந்தது. கொஞ்சம் ரெஸ்ட்.
திரும்பவும் ஒரு ரவுண்ட் போகணும்,“ என்றார் சுப்பராமன்.
“சரி, நடந்து கொண்டே பேசுவோம்,“ என்றவாறு எழுந்தார் வெங்கடசாமி.
“வழக்கு போடும் போது, குடியிருந்தவரின் மகன் சிறு குழந்தை. வழக்கு விசாரணைக்கு வரும் போது, அந்தப் பையன் பத்தாவது வந்துவிட்டான். அவர் என்னிடம் வந்து, “சார், பையன் பத்தாவது. பிளஸ் டூ வரைக்கும் ஒரு ரெண்டு வருஷம் டைம் வாங்கித் தாருங்கள்.
இந்த ஏரியாவில் மணி பாபா சாரிடம் தான் டியூஷன் போகிறான்,“ என்றார். நானும் அமுதா சைக்கிள் சண்முகத்திடம் சொன்னேன். அவரும் சரி என்றார்.“
“பிளஸ் டூ முடித்ததும், காலி செய்தார்களா? “
“இல்லை. பையன் இஞ்சினீயரிங் சேர்ந்து விட்டான். வெளியூர் காலேஜில். பணம் கொடுத்து தான் சேர்த்திருந்தார். படிப்பு செலவு அதிகம். பையன் ஒரு வேலைக்குப் போகும் வரை சற்று டைம் வாங்கித் தந்தால் நல்லது என்று கெஞ்ச ஆரம்பித்தார்.“
“அப்படித்தான் செய்திருப்பீர்கள் இல்லையா?“
“ஆமாம். சண்முகம் நல்ல மனிதர். பையன் படிப்பு என்று கேட்கும் போது என்ன சொல்வது? சரி இருக்கட்டும் என்று சொல்லி விட்டார்.“
ஏரிக்கரைப் பூங்காவின் குழந்தைகள் பகுதியில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய ஊழியர்கள் பலர் கூடியிருந்தார்கள். சாலை பாதுகாப்பு வாரமாம். இந்த ஏரியும், பூங்காவும் அவர்களது பராமரிப்பில் இருந்ததால், இங்கு கொண்டாடிக் கொண்டிருந்தார்கள்.
அவர்களது உயரதிகாரி ஒருவர் சாலை பாதுகாப்பை வலியுறுத்தும் ஒரு துண்டுப் பிரசுரத்தை இருவருக்கும் தந்தார். அவர் தருவதை ஊழியர்கள் பலரும் புகைப்படம் எடுத்தனர்.
நோட்டீஸை மடித்து சட்டைப் பையில் வைத்துக் கொண்டு கதையைத் தொடர்ந்தார் வெங்கடசாமி.
“பையன் படிப்பை முடித்துவிட்டான். வேலை கிடைக்கவில்லை. சண்முகத்திற்கு பொறுமை குறைந்து கொண்டிருந்தது. குடியிருந்தவரின் பையன் பல நிறுவனங்களுக்கு வேலைக்கு மனு செய்திருக்கிறான்.
எல்லாவற்றிற்கும் இந்த வீட்டு முகவரி தான் தந்திருக்கிறான். இந்த நேரத்தில் எப்படி காலி செய்வது? சீக்கிரம் ஒரு வேலை கிடைத்துவிடும். கிடைத்த மறுநாள் காலி செய்து சாவியை ஒப்படைக்கிறேன் என்றார் குடியிருந்தவர். சண்முகம் வேண்டா வெறுப்பாக அதற்கும் ஒப்புக் கொண்டார்.“
“சண்முகத்தின் பொறுமைக்காகவாவது அந்தப் பையனுக்கு வேலை கிடைத்திருக்க வேண்டும்,“ என்றார் சுப்பராமன்.
“ஆமாம். நல்ல வேலை கிடைத்து விட்டது.“
“உடனே காலி செய்து விட்டார்களா?“
“அப்படிக் காலி செய்து விட்டால் நான் ஏன் இந்தக் கதையைச் சொல்லப் போகிறேன்? வேலை கிடைத்து அவன் வேலையில் சேர்ந்ததற்கு மறுவாரம் வழக்கிற்கு வாய்தா வந்தது. இனி மேல் எந்த சாக்குபோக்கையும் ஏற்கக் கூடாது சார் என்றார் சண்முகம் கோபமாக. அவரும் கிட்டத்தட்ட 15 வருடம் பொறுமையாக இருந்து விட்டார்.“
“கிளைமாக்ஸ் நெருங்குகிறதே ! அந்த வாய்தாவில் என்ன ஆயிற்று?“
“வாய்தாவிற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு குடியிருந்தவர் உடன் ஒரு பெரியவரை அழைத்துக் கொண்டு என்னைப் பார்க்க வந்தார். அவரது சித்தப்பாவாம். நீதிமன்றத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவராம்.
‘சார், நாங்களும் பதினைந்து வருஷங்கள் இருந்து விட்டோம். பதினான்கு வருடம் ஒரு இடத்தில் குடியிருந்தால், அந்த இடம் நமக்கே சொந்தமாகிவிடும் என்று சித்தப்பா சொல்கிறார்.
அப்படி ஏதும் இருந்தால், ஓனரிடம் பேசிக் கொள்ளலாமே என்றுதான் சாரைப் பார்க்க வந்தோம்,“ என்றார். நான் முதன்முறையாக அவரிடம் கோபமாகப் பேசி அனுப்பினேன்,“ என்றார் வெங்கடசாமி.
சுப்பராமன் சருக்குமரத்தில் சருக்க பயந்து கொண்டிருந்த ஒரு சிறு குழந்தையை, அதை சருக்குவதற்கு தைரியமூட்டிக் கொண்டிருந்த ஒரு இளம் தாயைப் பார்த்தபடி மெதுவாக நடந்து கொண்டிருந்தார். இதற்கு என்ன சொல்வது? என்பது போல் இருந்தது அவரது முகம்.
“என்ன, ஜி.நாகராஜன் (G. Nagarajan) சொன்னது சரிதானே? மனிதன் மகத்தான சல்லிப்பயல் தானே?“ என்றார் வெங்கடசாமி சற்று இடைவெளி விட்டு.
“இருக்கலாம். ஆனால் அந்த ஹவுஸ்ஓனர் சண்முகம்?“ என்றார் சுப்பராமன்.
“ஒருவேளை அவர் உங்களைப் போன்றவர் போலும்,“ என்றார் வெங்கடசாமி.
அவர் சொன்னதில் சுப்பராமனுக்கு வலி முற்றிலும் போய்விட்டது.
சிறுகதை ஆசிரியர்:
– ச.சுப்பாராவ்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

