Book cover of "இது எங்கள் பூமி" by Ko. Suresh Kumar featuring Earth, nature, farmers, wildlife, renewable energy, and environmental conservation.

கோ. சுரேஷ் குமாரின் “இது எங்கள் பூமி” சிறுகதை தொகுப்பு – நூல் அறிமுகம்

“இது எங்கள் பூமி” சிறுகதை தொகுப்பு – நூல் அறிமுகம்

” இந்த பூமி நமக்குப் பாரம்பரியமாகக் கிடைத்த சொத்து. வெறும் மண்ணல்ல. அது நம் பாட்டனார் உழுத புன்செய், நம் பாட்டியின் மடியில் ஒதுங்கிய பொற்காலம், நம் குலதெய்வத்தின் கோயில் வாசல். இந்த மண்ணில்தான் முதன் முதலில் நாம் நடக்க கற்றுக் கொண்டோம். இங்குதான் மழையில் நனைந்தோம். வெயிலில்

கருத்தோம். இன்றோ கான்கிரீட் காடுகளுக்குள் சிறைப்பட்டுப் போன நமக்கு இந்த பூமியின் ஞாபகங்கள் மெல்ல மெல்ல மங்கத் தொடங்கிவிட்டன. இந்த புத்தகம் அந்த ஞாபகங்களை மீட்டெடுக்கும் ஒரு சிறிய முயற்சி. இதில் உள்ள ஒவ்வொரு கதையும் விவசாயியின் வியர்வைத் துளியின் சாட்சியம்.

ஒவ்வொரு வரியும் இயற்கை தாயின் அன்புக்குக் கிடைத்த அஞ்சலி. ஒவ்வொரு பக்கமும் இன்றைய இளைஞர்களுக்கு நான் தரும் கடிதம். என் தலைமுறை ஓரளவு விவசாயத்தைப் பார்த்தது. ஆனால் இன்றைய தலைமுறை விவசாயத்தைப் பார்க்க விரும்புகிறதா? அதன் மதிப்பை உணர்கிறதா? என்னுள் இந்தக் கேள்வி நெடுநாட்களாக எழுந்து கொண்டே இருந்தது. விடை

தேடி என் சொந்த கிராமத்தின் விவசாய அனுபவம் அங்கு சந்தித்த விவசாயிகள், உழவர்கள், குழந்தைகள், பாட்டிகள், மீண்டும் விவசாயத்திற்கு வந்த ஐ.டி. வல்லுநர்கள் என பலரது வாழ்க்கையில் பாதி உண்மையும் பாதி கற்பனையும் கலந்து உருவானவையே இந்தக் கதைகள் ” என்னும் என்னுரையுடன் வந்திருக்கும் சிறுகதைத் தொகுப்பு இது எங்கள் பூமி. ஆசிரியர் கோ. சுரேஷ் குமார்.

பரிசு தொகுப்பின் முதல் சிறுகதை. பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெறுகிறது. மாணவர்கள் அறிவியல் கண்டுபிடிப்புகளை காட்சிக்காக வைக்கின்றனர். குமார் என்னும் மாணவன் மட்டும் மைக்ரோ கிரீன் முறையில் வைட்டமின்கள் கொண்ட மருத்துவ குணம் மிகுந்த கீரையை காட்சிக்கு வைக்கிறான். ஆசிரியர் உள்பட அனைவரும் கேவலமாக பார்க்கின்றனர். மாவட்ட ஆட்சியர் வந்து மாணவர்களை கேட்டறிந்து பின் மாணவர்களுக்கு பரிசு அறிவிக்கப்படுகிறது. குமாருக்கு எப்பரிசும் அறிவிக்கப்படவில்லை. மாவட்ட ஆட்சியர் உரையாற்றும் போது அறிவியல் படைப்புகளை விட இன்று விவசாயமே தேவை என்பதை உணர்ந்து கீரையைக் கொண்டு வந்த மாணவருக்கு தன் பையிலிருந்து ரொக்கப்பரிசாக ரூபாயை வழங்கி பாராட்டுகிறார். இது மற்றவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியதுடன் விவசாயத்தின் அருமையையும் அனைவருக்கும் உணர்த்தியது.

பாட்டி சுட்ட வடை பழைய கதையானாலும் ஆசிரியர் புதுமையாக ஒரு கதை எழுதியுள்ளார். பாட்டி பழைய எண்ணெயில் வடை சுடுகிறார், சுகாதார கேடு உண்டாக்குகிறார் என்று புகார் வர பாட்டியை எச்சரித்து இனி வடை சுடக்கூடாது என உத்தரவிட்டு அனுப்ப பாட்டி வயல் வேலைக்குச் சென்று விடுகிறார். ஆனால் ஓர் உணவு விடுதியில் சாப்பிட்டவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்படுகிறது. அப்போதும் காவல் துறைக்கு பாட்டி மீதே சந்தேகம். விசாரிக்க வந்து உண்மையறிந்து காவல் துறை வணங்கிச் செல்கிறது. ஏழை பாட்டியை விசாரிக்கும் காவல் துறை பெரிய விடுதியை விசாரிப்பதில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார். மேலும் வயல் வேலையே சிறந்தது என்றும் தெரிவித்துள்ளார்.

மனிதர்களின் வாழ்க்கை முறையும் மாறி விட்டது. உணவு முறையும் மாறி விட்டது. லேப்டாப், சீரியல், செல் என பொழுது போகிறது. பீசா, பர்கர், சிப்ஸ் என்று வயிறு கொள்கிறது. இதனால் உடல்நிலையிலும் மாற்றம். கண்ணாடியில்லாமல் கண் பார்வை தெரிவதில்லை. ஊசிமுனை காதுக்குள்ளே என்னும் கதை மூலம் இயற்கை உணவே ஏற்றது என்றும் லேப்டாப், சீரியல், செல் பார்ப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும் பாட்டி வாயிலாக அறிவுறுத்தியுள்ளார் ஆசிரியர். பாட்டி கண்ணாடி இல்லாமல் ஊசியில் நூல் கோர்ப்பதற்கு காரணம் இயற்கை உணவே என்கிறார்.

விவசாய பூமியை விற்கக் கூடாது என்கிறது இது எங்க பூமி. விவசாயம் செய்து மகனை படிக்க வைத்து ஒரு பெரிய அதிகாரியாக்கியுள்ளார் ஒரு விவசாயி. அதிகாரியான மகன் அப்பா விவசாயியிடம் விவசாயியை விற்று விட்டு தன்னுடன் இருக்க அழைக்கிறார். அப்பா விவசாயியோ சுத்தமான காற்று, சுத்தமான குடிநீர், சுகாதாரமான உணவு, ஆரோக்கியமான வாழ்வு தரும் பூமியை விற்க மறுக்கிறார். மகன் அதிகாரி ஓய்வு பெற்றவுடன் பட்டணத்தில் இருக்க முடியாமல் அப்பா வீட்டிற்கே வந்து நிரந்தரமாக தங்கி விடுகிறார். தற்போது அதிகாரியின் மகன் வெளிநாட்டில் இருந்து கொண்டு விவசாய நிலத்தை விற்கச் சொல்கிறார். அவரும் மறுக்கிறார். விவசாய பூமியை விவரம் அறிந்தவர்கள் விற்க மாட்டார்கள் என்கிறது கதை.

ஓர் ஊரில் ஒரு செல்வந்தர். சேறு படாமலே வாழ்பவர். காரில் சேறுபட்டதற்காக கார் ஓட்டுநரைத் திட்டுகிறார். ஒரு முறை அவர் மகன் சைக்கிள் ஓட்டிய போது தவறி சேற்றில் விழுந்துவிடுகிறான். விவசாயிகள் காப்பாற்றுகிறார்கள். மகனைக் காப்பாற்றிய விவசாயிகளுக்கு நன்றி கூறுகிறார். வாழ்வில் சேறு படாமல் வாழ முடியாது.

விவசாயி விவசாயம் செய்கிறான். மழை வெள்ளத்தால் பாதிக்கப்படுகிறது. மீண்டும் விவசாயம் செய்யத் தொடங்குகிறான். இதைக் கண்ட நீண்ட காலமாக சிலையைச் செதுக்கும் ஒரு சிற்பி விவசாயியைப் பார்த்து நஷ்டமடைந்தால் விவசாயத்தை விட்டு வேறு தொழிலுக்கு செல்ல வேண்டியதுதானே என்கிறார். அப்போது விவசாயம் எனக்காகவோ லாபத்திற்காகவோ செய்வது அல்ல மக்களுக்காக, மக்களின் பசிக்காக செய்வது என்று பதிலளித்து மகிழ்ச்சியுடன் நிமிர்ந்து நிற்கிறார். சிற்பியும் விவசாயியைச் சிறப்பிக்கும் விதமாக விவசாயி போலவே ஒரு சிலையை வடித்து தருகிறான். மற்றவர்களுக்காக விவசாயம் செய்யும் விவசாயியைப் பெருமைப்படுத்தியுள்ளார். இக்கதையின் தலைப்பு கல்லிலே கலை வண்ணம் கண்டான்.

உன்னால் முடியும் தம்பி என்றொரு கதை. ஏழை விவசாயி மகன் கனேஷ். பள்ளிக்கு கிழிந்த உடையிலேயே செல்வதாலும் பழைய சோறையே கொண்டு செல்வதாலும் மாணவர்கள் கேலி செய்கின்றனர். கேலி செய்வதால் பள்ளிக்கு வராமல் நின்று விடுகிறான். வீட்டுக்கு வந்து விசாரித்த ஆசிரியர் கூடு கட்ட முயற்சிக்கும் ஒரு காக்கைக் கதையைக் கூறி தன்னம்பிக்கையை ஏற்படுத்தி பள்ளிக்கு வரச் செய்கிறார். மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை என்றால் மீண்டும் வரவழைக்க வேண்டியது ஆசிரியர் பொறுப்பு என்றும் ஏழை விவசாயி மகன் என்றால் ஏளனம் செய்யக்கூடாது என்றும் அறிவுறுத்துகிறது.

டராக்டரால் நிலத்தை உழுவதை விட ஏர் கலப்பையால் நிலத்தை உழுவதுதான் நிலத்திற்கும் நல்லது, விவசாயமும் பெருகும் என்கிறது அன்னமிட்ட கை. தாத்தா பாட்டி இருவரும் கிராமத்தில் விவசாயம் செய்து பழைய சாதம் சாப்பிட்டு வாழும் போது பிள்ளைகளும் பேரபிள்ளைகளும் பட்டணத்தில் வாழ்வதை விமர்சித்துள்ளார்.

பாச மலர்கள் விவசாய குடும்பம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்கிறது. மூன்று மகன்களில் மூன்றாம் மகன் படித்தவன். அவன் தினசரி வங்கிக்குச் சென்று விவசாயத்தில் வரும் வருமானத்தை அண்ணன் குழந்தைகளின் பெயரில் இட்டு வைப்பு செய்து வருகிறான். தன் பெயரில் விவசாய கடன் வாங்கி விவசாயத்தை முன்னேற்ற நினைக்கிறான். ஆனால் அண்ணன்களுக்கு தம்பி மேல் சந்தேகம். உண்மையைப் புரிந்த பிறகு ஒற்றுமையாய் இருப்போம் என்கிறார்கள். இக்கதையில் கல்யாணம் கூட செய்து கொள்ளாமல் விவசாயத்திற்காக வாழ்வை அர்ப்பணித்த ஒருவரை எடுத்துக் காட்டாக காட்டியுள்ளது.

கிராமத்தில் ரசாயணத் தொழிற்சாலை வேண்டாம் என்கிறார் தலைவர். கொண்டு வரவேண்டும் என்பவருடன் சேர்ந்து கொண்டு மக்கள் தேவை என்கின்றனர். தொழிற்சாலை வருகிறது. தொல்லைகளும் வருகின்றன. தண்ணீரிலும் பாதிப்பு. நோய்களும் பரவுகின்றன. இறுதியில் மக்கள் தலைவர் உள்ள இடத்தைத் தேடி செல்கின்றனர். அது ஒரு அழகிய கிராமம் என்னும் கதை விவசாய பூமியில் தொழிற்சாலை வேண்டாம் என்கிறது.

காக்கைக் குருவி எங்கள் ஜாதி என்னும் பாரதியின் வரிகளை வைத்து எழுதப்பட்ட கதை காக்கைக் குருவி எங்கள் ஜாதி. சாப்பாட்டை வைத்து காக்கையை அழைக்கும் விவசாயி அடுத்த நாள் அது வடையைத் தூக்கிச் சென்ற போது திருட்டு காக்கை என விரட்டுகிறார். சாப்பாட்டை போல வடையையும் வைத்திருந்தால் என்று மகன் கேள்வி எழுப்பிய போதே அப்பன் விவசாயிக்கு உரைக்கிறது. காக்கைக்கு வைக்க வேண்டியதை வைத்து விட்டால் ஏன் திருடப்போகிறது என்று உணர்த்தியுள்ளார். திருட்டுக்கு நாமே வழிவகுக்கிறோம் என்கிறது கதை.

கீரை கீரை கீரை என்றொரு கதையில் புதினா கீரையின் மகத்துவம் பற்றி பேசியுள்ளார். ஒரு பாட்டியிடம் புதினாக் கீரை வாங்கி சாப்பிட்டவர் அந்த பாட்டி வராததால் புதினா கீரை சாப்பிட வேண்டும் என்னும் ஆசையில் பாட்டியைத் தேடி செல்கிறார். பாட்டி இறந்த சேதி அறிந்தும் அவர் புதினா கீரையே வேண்டுமென்று அடம்பிடிக்கிறார். புதினா கீரை உடம்புக்கு நல்லது என்கிறது கதை.

புலி வருகுது புலி வருகுது என்றொரு கதை. மாந்தோப்பில் மாங்காய் திருடி தின்பதற்காக ஒருவன் மாந்தோப்பில் புலி இருப்பதாக ஒரு கரடி விடுகிறான். வனத்துறை வந்து பார்த்தும் புலியின் நடமாட்டமில்லை என்று தெரிவிக்கிறது. ஆனால் உண்மையிலேயே ஒரு புலி வந்து அவனை அடித்து கடித்து காயப்படுத்தி விடுகிறது. மாங்காய் திருடுவதற்காக புலி இருக்கிறது என்று பொய் சொன்னவனை உண்மையிலேயே ஒரு புலி அடித்து விடுகிறது. எனவே பொய் சொல்லாமல் திருடாமல் நேர்மையாக வாழவேண்டும் என்கிறார் ஆசிரியர்.

கோள் சொல்லுதலும் வதந்தி பரப்புதலும் கூடாது என்று அறிவுறுத்துகிறது சொல்லாதே யாரும் கேட்டால் கதை. சந்துரு என்பவன் ஆனந்த் சொன்னதாக வதந்தியை ஊருக்குள் பரப்புகிறான். விசாரணையில் சந்துரு இதே வேலையாக இருப்பதாக கைது செய்யப்படுகிறான். தவறு செய்தால் தண்டனை உண்டு என்கிறது கதை.

விவசாய நிலத்தை விற்று ஒரு குடும்பம் பைக் வாங்குகிறது. ஒரு குடும்பம் கார் வாங்குகிறது. விற்ற நிலத்தில் ஒரு புதிய நகர் பழைய வாய்க்காலை மறைத்து கட்டுகிறார்கள். மழை பெய்த போது நீர் செல்ல வழியில்லாததால் ஊருக்குள் வெள்ளம் வந்து கார், பைக் உள்ளிட்ட அனைத்தையும் அடித்து செல்கிறது. உயிர் தப்பித்தால் போதுமென்றாகி விடுகிறது. விவசாய நிலங்களில் வீடு கட்டுவதால் வரும் விபத்தைப் பற்றி பேசுகிறது பணம் என்னடா பணம் பணம் கதை.

உள்ளத்தைக் காட்டும் கண்ணாடி கதையில் ஒரு விவசாயியின் உள்ளத்தைக் காட்டியுள்ளார். உண்மையான தியாகியாக இருந்தால் மாயக்கண்ணாடி முன் நின்றால் ஆயுள் கூடும் என்கின்றனர். எவருமே நிற்க தயங்குகின்றனர். ஒரு விவசாயி மட்டும் மாயக்கண்ணாடி முன் நின்று பரிசை வெல்கிறார். காரணம் ஒரு விவசாயி என்பவன் உண்மையிலேயே ஒரு தியாகிதான் என்கிறது கதை.

விவசாயி மகன் படித்து வேலைக்கு போனவுடன் மாறிவிடுகிறான். கஞ்சி குடிக்க மாட்டேன் என்கிறான். அப்பா விவசாயம் செய்வதை வேண்டாம் என்கிறான். முதல் வகுப்பு ஆசிரியருக்கு நன்றி சொல்ல மறுக்கிறான். ஒரு வேப்ப மரத்திற்கு அப்பா நன்றி சொல்லி மகனிடமும் நன்றி ஏன் சொல்ல வேண்டும் என்று கூறுகிறார். அதன் பிறகே மகன் ஆசிரியருக்கு நன்றி கூற செல்கிறான். இக்கதையின் தலைப்பு நன்றி மறந்த கதை. நன்றி கூற அறிவுறுத்திய நல்ல கதை.

விவசாய நிலத்தில் விளையும் கடலைச் செடிகளை பன்றிகள் புகுந்து நாசம் செய்யும். நாசம் செய்யும் பன்றிகளைக் கொல்ல வயலைச் சுற்றிலும் மின்வேலி அமைப்பர். ஆனால் வேலய்யா என்னும் விவசாயி செடிகளை அழித்தாலும் பன்றிகளை கொல்ல மின்வேலி அமைக்கவில்லை. அவன் மனைவியும் மின்வேலி அமைப்பதை விரும்பவில்லை. உயிர்களைக் கொல்லக் கூடாது என்பது உயிரே உன் விலை என்ன கதையின் கருத்து.

வாழைத் தார் ஒரு விவசாயி எடுத்து வரும்போது கறை பட்டு விடும் என கோபப் படுகிறான் கதிரேசன். ஆனால் கதிரேசன் வாழைப்பழம் உரித்து சாப்பிட முயலும் போது கதிரேசனின் தந்தை ஒரு வாழைப்பழம் உன் கைக்கு சாப்பிட கிடைத்துள்ளது அது கிடைக்கும் வரை, மக்களிடம் சென்று சேர்ப்பிக்கும் வரை வாழைத் தோட்ட தொழிலாளர்கள் எவ்வளவு சிரமப்படுகிறார்கள் தெரியுமா என்று கதிரேசனுக்கு புரியச் செய்துள்ளார். வாழைத் தோட்டப் பணியாளர்களை கேவலப்படுத்தக் கூடாது என்கிறது கதை.

மக்கள் மாற்றம் வேண்டி கிராமங்களை விட்டு நகரத்தில் சென்று குடியேறுகின்றனர். எதிரி நாட்டு இராணுவம் நகரத்தின் மீது குண்டுகள் போடுவதால் மக்களை வெளியேறச் சொல்லி அறிவிக்கப்படுகிறது. மக்கள் தங்கள் தவறை உணர்ந்து உயிரைக் காத்துக் கொள்ள புறப்பட்டு வந்த கிராமத்திற்கே திரும்ப சென்று விடுகின்றனர். உயிர் பிழைத்து வாழ்கின்றனர். கிராமங்களே எப்போதும் சிறந்தது என்கிறது மண்வாசனை என்னும் சிறுகதை.

மீன்களில் ஆற்று மீனுக்கு ஒரு ருசி இருக்கும். கடல் மீனுக்கு ஒரு ருசி இருக்கும். கடல் மீனை ருசித்து சாப்பிடுபவர்களும் உண்டு. கடல் மீனிலும் தற்போது ருசியில்லை என்கின்றனர். காரணம் நகரத்தில் உள்ள தொழிற்சாலைகளின் கழிவுகள் கடலில் கலப்பதேயாகும். கடல் மீன்கள் என்னும் இக்கதையில் கடலிலும் கலப்படம் குறித்து பேசியுள்ளார்.

குழந்தைகளுக்கு ஞாபக சக்தி வர, வளர வல்லாரை கீரை சாப்பிட வேண்டும் என்பர். பிள்ளைக்கு ஞாபக சக்திக்கு வழங்க வேண்டிய வல்லாரை கீரையின் பெயரே அப்பா அம்மாவிற்கு ஞாபகம் வரவில்லை. பாட்டியைக் கேட்ட கேட்டே ஞாபகப்படுத்திக் கொள்கிறார்கள். ஞாபக சக்திக்கு வல்லாரை கீரை சாப்பிட வேண்டும் என்கிறது ஞாபகம் வருதே ஞாபகம் வருதே கதை.

வீட்டு சாப்பாட்டில் உப்பு, காரம் இல்லையென்று மனைவியிடம் கோபித்துக் கொண்டு ஹோட்டலுக்குச் சென்று உப்பு, காரத்துடன் ருசியாக சாப்பிட்டு விட்டு வீட்டிற்கு வருகிறான். மனைவி கேட்கிறாள். அவனால் பதில் சொல்ல முடியாத அளவிற்கு வயிற்று போக்கு. மயங்கியும் விடுகிறான். சண்டே ஸ்பெஷல் என்னும் இச்சிறு கதை வீட்டு சாப்பாடே சிறந்தது என்கிறது.

அப்பா ஒரு விவசாயி. அப்பா சொன்னதற்காக இந்திய ஆட்சிப் பணியாளராகி ஓய்வு பெற்ற பிறகு அப்பா செய்த விவசாயத்தை செய்கிறார். அவரை பாராட்ட தற்போதுள்ள மாவட்ட ஆட்சியரான இந்திய ஆட்சிப் பணியாளர் ஒருவர் வருகிறார். எந்த பணிக்கு சென்றாலும் எந்த பதவிக்கு சென்றாலும் விவசாயத்தை மறக்கக் கூடாது என்கிற கதை அரிக்கன் விளக்கு.

சோறு ஒரு முக்கியமான கதை. வயலில் வேலை செய்யும் விவசாய தொழிலாளிகளுக்கும் வயல் உரிமையாளர் பண்ணையாருக்கும் நடக்கும் போராட்டம். கூலி உயர்வு கேட்கிறார்கள். தர மறுக்கிறார். தான் வேலை தந்தாலே தங்களுக்கு சோறு என்கிறார். விவசாய தொழிலாளிகள் வேலை செய்தாலே பண்ணையாருக்கும் சோறு என்பதை மறந்து விடுகிறார்கள். ஒரு சூழலில் நடுவழியில் போக்குவரத்தில் மாட்டிக்கொண்ட போது பண்ணையார் குடும்பத்திற்கு சோறில்லை. பக்கத்து ஊரில் ஒரு விவசாயி சோறு போடுவதாக அறிந்து செல்கிறார். சோறு போடும் விவசாயியோ பணம் வேண்டாம் வயலில் இறங்கி வேலை செய்ய வேண்டும் என்கிறார். எனவே வயலில் இறங்கி வேலை செய்பவருக்கே சோறு கிடைக்கும், அவர்களுக்கே உரிமை என்பதை சோறு கதை மூலம் கூறியுள்ளார் கோ. சுரேஷ் குமார்.

சொர்க்கமே என்றாலும் நம்மூரு போலாகுமா என்று ஒரு பாடல் வரியுண்டு. சொர்க்கமே என்றாலும் என்று ஒரு கதையை எழுதியுள்ளார். அமெரிக்காவில் பொறியாளராக பணி புரியும் ஒரு விவசாயி மகன் இந்தியா விவசாயத்தை நவீனப்படுத்துகிறான். விவசாயிகளையும் மேம்படுத்துகிறான். இவனைப் பார்த்து பொறாமைப்பட்ட மற்ற விவசாயிகளும் விவசாயத்தை முன்னேற்ற நினைக்கின்றனர். இக்கதை ஓர் எடுத்துக்காட்டாக உள்ளது.

தொகுப்பின் இறுதிக் கதை வந்தாள் மகாலட்சுமி. ஒரு விவசாயிக்கு பெண் குழந்தை பிறக்கிறது. பெண் குழந்தையா என ஏளனம் செய்கின்றனர். ஆனால் அந்த பெண் படித்து விவசாயத்தில் பட்டம் பெற்று விவசாயம் சம்பந்தமான அத்தனை கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் பதிலளிக்கிறார். விவசாய மருத்துவர் என்று பெயர் எடுக்கிறார். பெண் பிள்ளையா என்றவர்கள் தற்போது பொறாமைப்படுகிறார்கள். பெண்ணியம் பேசியதுடன் விவசாயத்தையும் பேசியுள்ளது கதை.

இது எங்கள் பூமி என்னும் இத்தொகுப்பில் இருபத்தேழு சிறுகதைகள் உள்ளன. இருபத்தேழு சிறுகதைகளிலும் விவசாயம் ஒரு மையப்பொருளாக உள்ளது. விவசாயம் மற்றும் விவசாயி சார்ந்தும் எழுதியுள்ளார். விவசாயம் இன்று பலவகைகளில் நசிந்தும் அழிந்தும் வருகிறது. விவசாயமே முதன்மையான, முக்கியமான தொழில். விவசாயத்தை விட்டு, விவசாய நிலத்தை விற்று வேறு தொழிலுக்கு செல்வது மனித குலத்திற்கு, மனித வளர்ச்சிக்கு எதிரானதாகும். எழுத்தாளர் கோ. சுரேஷ் குமார் ஒவ்வொரு கதையிலும் விவசாயம் குறித்து எழுதி வாசிப்பவர்களை விவசாயத்தின் பக்கம் இழுக்க முயற்சித்துள்ளார். விவசாயி போலவே சிறுகதைகளும் எளிமையாகவே உள்ளன. இது எங்கள் பூமியிலுள்ள சிறுகதைகள் அனைத்தும் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் அனைவரும் வாசிக்க வேண்டியதாக உள்ளன. எழுத்தாளர் சோ. சுரேஷ் குமார் இது எங்கள் பூமி என்று எழுதி விவசாயத்தைக் காக்க அழைப்பு விடுத்துள்ளார்.

📚 நூலின் விவரங்கள்:

தலைப்புவிவரம்
நூலின் பெயர்:“இது எங்கள் பூமி” சிறுகதை தொகுப்பு
ஆசிரியர்:கோ. சுரேஷ் குமார்
வெளியீடு:

நண்பர்கள் பதிப்பகம், வேலூர், 8925335858

விலை:
அறிமுகம் எழுதியவர்:  

✍🏻 பொன். குமார்

புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *