*பெண்கள் அதிகார பதவிகளில் அமர வேண்டும்*
மத்திய, மாநில அரசு தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இந்த நூல் படிக்கும் போது தன்னம்பிக்கையும் உத்வேகமும் ஏற்படும் என்பதில் ஐயமில்லை.
15 ஆட்சி தலைவிகளின் பள்ளி, கல்லூரி கால அனுபவங்கள் – குறிப்பாக ஐஏஎஸ் தேர்வுக்கு தயாரான அனுபவங்கள் குறித்து அலசுகிறது இந்த நூல்.
ஐஏஎஸ் தேர்வில் வென்று மாவட்ட ஆட்சித் தலைவிகளாகி ஆண்களை விட ஆட்சி அதிகாரத்தில் செழுமை மிக்க ஆளுமை கொண்டவர்களாக பணியாற்றிய அபூர்வ ஆளுமைகளின் வரலாற்று நூல் இது.
பெண் சமத்துவம், ஆண்களுக்கும், பெண்களுக்கும் சமநீதி என்று சட்டம் இயற்றி இருந்தாலும் உள்ளாட்சி தேர்தலில் 50% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டாலும் அது நிறைவேற்றப்படாமலே உள்ளது.
பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அவர்களின் கணவர்களே பல இடங்களில் நிர்வாகம் செய்வது இன்னும் தொடர்ந்து கொண்டே உள்ளது.
ஆனால் ஐஏஎஸ் தேர்வில் ஒரு பெண் வெற்றி பெற்று மாவட்ட ஆட்சியராக வந்து விட்டால் அந்த மாவட்டத்தின் முழு அதிகாரமும், நிர்வாகமும் அவர்கள் கையில் தான் இருக்கும். நிர்வாகத்தில் உறவினர்கள் யாரும் தலையிட முடியாது.
இப்படி பணிபுரிந்த பெண் அதிகாரிகள் பலரும் பல்வேறு சாதனை புரிந்து உள்ளார்கள் என்பதை விவரிக்கிறது இந்த நூல்.
சிறப்பாக பணியாற்றிய ஐஏஎஸ் அதிகாரிகளை இன்றளவும் இளைய தலைமுறை கொண்டாடி வருவது மகிழ்ச்சிக்குரியது.
பள்ளியில் படிக்கும் போது தன்னுடைய டைரியில் கலெக்டர் ஆவதே எனது லட்சியப் பயணம் என பதிவு செய்த ஆட்சியாளரின் வரலாறு…
கொரோனா காலத்தில் மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்து 100% தடுப்பூசி செலுத்தி சாதனை புரிந்த மாவட்ட ஆட்சியரின் பணிகள்…
டாக்டராக நினைத்தேன் முடியவில்லை. குடும்பத் தலைவியை வீட்டிற்குள் முடங்கக் கூடாது. ஒரு அதிகாரியாக வலம் வர வேண்டும் என நினைத்து கடும் உழைப்பை தந்து ஐஏஎஸ் வெற்றிக்கனியை பறித்தவரின் வரலாறு.

நடனம் என் வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே உள்ளது. அரசு பணி, நடனம் என இரண்டிலும் தனித்து விளங்கி மக்கள் பணியில் சிறப்பாக செயல்பட்டு வரும் பெண் அதிகாரியின் வரலாறு…
மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்தாலும் தனது குழந்தைகளை மாநகராட்சி பள்ளியில் படிக்க வைத்த ஆளுமைகளின் வரலாறு…
விவசாயம் சார்ந்த ஆராய்ச்சி படிப்பான பிஎச்டி படித்து, அதன்பின் மக்கள் சேவையில் ஆர்வம் ஏற்பட்டதன் காரணமாக ஐஏஎஸ் தேர்வு எழுதி வெற்றி பெற்ற ஆளுமையின் சாதனைகள் குறித்து..
இது போன்ற ஆளுமைகள் அனுபவ பூர்வமாக சந்தித்த வரலாற்று சிறப்பு கொண்டதே இந்த நூல்.
எங்கு இருக்கின்றிர்களோ அங்கிருந்து ஆரம்பிங்கள். எது இருக்கிறதோ அதனைப் பயன்படுத்துங்கள். உங்களால் முடிந்ததை நிகழ்த்துங்கள். எனக்கு எல்லாம் வந்து சேர்ந்த பின் தான் ஆரம்பிப்பேன் என்று இருக்கக் கூடாது. நம்மில் இருக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி, திட்டமிட்டு, நேரத்தை முழுமையாக பயன்படுத்தினால் ஐஏஎஸ் வெற்றி நிச்சயம்.
ஐஏஎஸ் பதவி பெண்களுக்கு மரியாதை கிடைக்கின்ற ஒரு துறை.
ஆண் பெண் வேறுபாடு இந்த பதிவில் இல்லை. மக்கள் சேவை என்ற ஒற்றைச் சிந்தனை உள்ளவர்கள் தான் இப்பொறுப்புக்கு வரவேண்டும்.
ஐஏஎஸ் அதிகாரியின் சேவை ஒரு துறை சார்ந்தது மட்டுமல்ல. அரசின் எல்லா பிரிவுகளிலும் பணியேற்கும் வாய்ப்பு கிடைக்கும். மக்கள் சேவை செய்ய முழுமையான வாய்ப்புகளை ஐஏஎஸ் பணி மட்டுமே உள்ளது.
நமது சமூகம் பெண்களைப் பேச விடாத சமூகம். இந்த சூழ்நிலையில் பெண்கள் ஆளுமை மிக்கவர்கள் என்பதை நிரூபிக்கும் இடம் தான் ஐஏஎஸ் பணி.
பெண்கள் மற்றவர்கள் சொல்வதை காது கொடுத்து கேட்பார்கள் என்பது அறிவியல் பூர்வமான உண்மை.
எனவே பெண்கள் உயர் பொறுப்புகளுக்கு வரவேண்டும் என தெளிவாக குறிப்பிடுகிறார் நூலாசிரியர்.
இந்த நூலை வாசிக்கும் மாணவர்கள் நிச்சயம் மத்திய மாநில அரசுகள் நடத்து போட்டி தேர்வுகளில் கலந்துகொண்டு வெற்றி பெறுவார்கள் என்பது நிச்சயம்.
நூலின் தகவல்:
நூல் : “ஆட்சித் தலைவிகள்” (பெண் கலெக்டர்கள் வெற்றிக்கனி வென்ற கதை)
ஆசிரியர் : ஜி. வி. ரமேஷ்குமார்
பதிப்பகம் : தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், மதுரை-625003
தொடர்பு எண் : 7550009565
விலை : ரூ. 160/-
நூலறிமுகம் எழுதியவர்:
MJ. பிரபாகர்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

