பேங்க் கேன்டீனில் காபி குடித்தேன்,

இருக்கைக்கு திரும்பினேன்,

வேலையைத் தொடங்க முனைந்தேன்.

நண்பனிடமிருந்து கைப்பேசிஅழைப்பு.

“இப்பத்தானே கேன்டீனில் சந்தித்தோம், அதற்குள் என்ன?”

“கேப்ரியலுக்கு ஏதோ ஆயிடுத்தாம்,, ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு போயிருக்காங்களாம்”, நண்பன் பதட்டமா சொன்னான் “கேப்ரியல் மனைவி ராணி போன் பண்ணாங்க. நீ லீவ் சொல்லிட்டு கீழே இறங்கி வா. நாம இப்பவே போகணும்”

கேப்ரியல் எங்கள் இருவரோடும் மெடிகல் காலேஜ் கேம்பஸ் கிளையில் வேலை செய்தவன். ஸ்போர்ட்ஸ்மேன். கால் பந்துதான் வாழ்க்கை என்று இருப்பவன். கால் பந்து ரசிகர்களுக்கு கேப்ரியல் பிரியமானவன்.தே…. என்னமா கோல் போட்டான் என்று புகழ்வார்கள். ஒரு அடி மட்ட குடும்பத்தில் பிறந்து கால் பந்தை பற்றிக்கொண்டு மேலுக்கு வந்தவன் கேப்ரியல். முதல் தோற்றத்துக்கு அவன் உயரமும் நிறமும் அத்தனை ரசிக்கும்படி இருக்காது.

நொடியில் பழகிடுவான். அவன் உருவமே மாறிவிடும். பிரியப்பட்டவனாக மனதில் அமர்ந்து கொள்வான். எப்பவுமே அவனைச் சுற்றி நண்பர்கள் பேசிக்கொண்டிருப்பார்கள். எல்லோருடைய சுபாவத்தையும் கூர்ந்து கவனித்து அப்படியே பிரதிபலிப்பான். சம்பந்தப்பட்டவர்களே ரசிப்பார்கள். ரொம்ப கூட்டம் கூடிவிட்டால், போங்கப்பா மேனேஜர் ஏதாவது சொல்லப்போறார் என்று அவனே கலைத்துவிடுவான். எப்படி கேப்ரியல் இப்படி அசத்துறேன்னு கேட்டா எல்லாம் கால் பந்து சொல்லிக் கொடுத்தது என்பான்.

அவன் கேம்பஸ் கிளைக்கு மாற்றலாகி வந்தபோது அவனை ஒவ்வொருவருக்கும் அறிமுகம் செய்து வைத்தார்கள். என்னிடம் வந்தபோது “அண்ணே உங்களை எனக்குத் தெரியும். நிறைய சொல்லியிருக்காங்க” என்றான். திகைப்பிலாழ்த்தியபடியே அடுத்த நபரிடம் சென்றுவிட்டான். அதற்கு அப்புறம் தேநீ்ர் இடைவேளையில் அவனைத் தேடினேன்.

எங்கள் கேம்பஸ் கிளை ஒரு ரம்யமானது. சுற்றி அடர்ந்த மரங்களுக்கிடையே அமைக்கப்பட்டிருக்கும் வீடுகளில் ஒன்றை பேங்குக்கு தந்திருந்தார்கள், இடைவேளைகளில் பக்கவாட்டு நுழைவாயிலுக்கு எதிரில் உள்ள மரத்தடியில் நின்று காத்து வாங்கியவாறே பேசுவது இந்த கிளையின் ருசிகரமான நடவடிக்கை. இங்கே நின்றவாறே எல்லா ஊர் கதைகளையும் பேசுவோம். அன்று நான் போவதற்குள் எல்லோரும் தேநீ்ர் அருந்திவிட்டு இருக்கைக்கு திரும்பிவிட்டார்கள். கேப்ரியல் மட்டும் மரத்தில் சாய்ந்தபடி நின்றிருந்தான்.

“கேப்ரியல் என்ன யோசிச்சுகிட்டு இருக்கீங்க?”

“தெற்கு ஆசியாவில் புத்த மதம் எப்படி பரவியது? அதற்கு முன் அங்கு என்ன மதம் இருந்ததுன்னு யோசிச்சுகிட்டிருக்கேன்,” கேப்ரியல் சொன்னான்,

நான் பதில் ஏதும் சொல்லாமல் நின்றேன்.

“அண்ணே அதெல்லாம் ஒண்ணுமில்ல. சும்மாதான்” என்று திகைப்பிலிருந்து மீட்டான்.

“சரி, என்னைப் பத்தி என்ன கேள்விப் பட்டீங்க? நல்லபடியாவா, அவதூறாவா?’

“ஐயோ அண்ணே, யார் என்ன சொன்னாலும் எனக்குத் தெரியாதா? ரெயில்வே புட்பால் டீம்ல நிறைய பேர் திருச்சிகாரங்க. கம்யூனிஸ்ட் தலைவங்களைப் பத்தி ரொம்பவே சொல்லியிருக்காங்க. நான் சங்கத் திடலுக்கே போயிருக்கேன். யார் தப்பா சொன்னாலும் நம்பமாட்டேன்” என்றான்.

வாங்க போகலாம்.” நினைவுக் கோர்வையைத் தடுத்து நண்பர் அழைத்தார். இருவரும் மவுனமாகவே பஸ் நிறுத்தம் வந்து சேர்ந்தோம்.

“என்ன ஆச்சு கேபரியலுக்கு? யாருக்காவது போன் பண்ணீங்களா?”

“யாருக்கும் தெரியல. நாம நேரா போகலாம்” என்றார் நண்பர். பஸ் வந்ததும் யந்திர கதியாக ஏறி அமர்ந்தோம். நினைவுகள் கேப்ரியலைச் சுற்றி சென்றது.

கேப்ரியல் குடும்பம் சிறியது. மனைவி ராணி, இரு குழந்தைகள். மகள் பெரியவள். ராணிக்கு மெடிகல் காலேஜில் தூய்மைப் பணியாளர் வேலை. கேம்பஸிலேயே குவார்டர்ஸ். ஞாயிற்று கிழமைதோறும் ராணியும் குழந்தைகளும் கேம்பஸிலேயே இருக்கும் சர்ச்சுக்கு போவார்கள். பைபிளை அணைத்தபடியே ராணி முன்னே நடக்க குழந்தைகள் பின்னாலேயே செல்வார்கள். கேப்ரியல் போகமாட்டான்.

“கடவுள் இருக்காரா இல்லையா என்று நான் யோசிக்கமாட்டேன். எனக்கு தெரிந்ததெல்லாம் புட்பால்தான். அதைப்பத்தி மட்டும்தான் யோசிப்பேன். சின்னப் பையனா இருந்தபோது எங்க வீட்டுக்கு அருகே ஒரு புட்பால் ப்ளேயர் இருந்தார். டேய் கேப்ரியல் ஏதாவது ஒரு விளையாட்டை அர்ப்பணிப்போடு கத்துக்க. விளையாடு. அது உனக்கு மீதியையெல்லாம் கத்துக்கொடுக்கும்னாரு. அதை மெய்யா நம்பி இன்னைக்கு வரைக்கும் புட்பால் மட்டும்தான் என் கவனமெல்லாம். விளையாட்டில் கத்துகிட்ட ஒழுங்கு எனக்கு வாழ்க்கைக்கும் உதவுது” என்பான்.

எல்லோருக்கும் தெரிந்த விஷயத்தைக் கூட கேப்ரியல் எப்படிச் சொல்றான்னு கேட்க எல்லோருக்கும் ஆவல்.

Image

ஓவியம் எஸ்.குமார்

“ஈராக்குல ஆயுதம் இல்லைன்னு தெரிந்துதான் அமெரிக்காகாரன் தாக்கினான். வட கொரியாவைத் தாக்கச் சொல்லுங்க பாப்பம்”

“எப்படி கேப்ரியல், இவ்வளவு அனாயாசமா பேசற?”

“நீங்க வேற அண்ணே. அப்பப்ப தலைப்பு செய்தி மட்டும் படிப்பேன், சில செய்திகளின் அறிமுக பாரா படிப்பேன். யாராவது பேசும்போது அதைப்பத்தி மனசுல தோன்றதைப் பேசுவேன். அவ்வளவுதான்.”

இதெல்லாம் வக்கணையா பேசறவனுக்கு பேங்க் வேலை மட்டும் கை வரவேயில்லை. ”கையெழுத்து மோசமா இருக்கு. கிறுக்கறான்”னு டெஸ்பேச் ஹெட்கிளார்க் எப்பவும் புகார் சொல்லிகிட்டே இருப்பார்.

பேங்க் என் காலைப் பார்த்துதான் வேலை கொடுத்தது. கையைப்பார்த்து இல்லைன்னு கேப்ரியல் சொன்னதைக் கேட்டு ஆபீஸே குலுங்கி குலுங்கி சிரித்தது. அதுக்கப்புறத்திலிருந்து கேப்ரியலுக்கு நிரந்திரமாபாஸ் புக் பிரிண்டிங் வேலைதான்.

ஸ் கேம்பஸ் நிறுத்தத்தில் நின்றது. இறங்கி கேம்பஸுக்குள் இரண்டு கிலோ மீட்டர் நடக்கணும். கேம்பஸ் முழுதுமே அடர்ந்த மரம். உள்ளே நுழைந்ததுமே வெப்பம் இரண்டு டிகிரி குறைவதை நல்லா உணரமுடியும்.சற்று வேகமாகவே நடக்கத் தொடங்கினோம்.

கேப்ரியலோடுப் பேசிப்பேசி என்னை அவனுடைய மனசாட்சியாவே ஆக்கிட்டான். அவன் சிகரெட் பிடிப்பதைப்பத்தியும், அவ்வப்போது குடிப்பதைப் பத்தியும் கேட்டுவிட்டேன். “ஏன் கேப்ரியல் புகையிலையும் மதுவும் ஆரோக்கிய கேடு இல்லையா? ஒரு ஸ்போர்ட்ஸ் மேனா இவை ரெண்டையும் விட்டுவிடேன்.”

“சரிண்ணே சரிண்ணே” தலையை ஆட்டி கேட்டுகிட்டான். பிறகு போகவிட்டு கூப்பிட்டு “அண்ணே, பாத்துண்ணே ரோட்டுல லாரி பஸ் தாறு மாறா போகுது. இன்னும் நிறைய குடும்பங்களுக்கு உங்க சேவை தேவை அண்ணே”

இவன் பழி வாங்குறானா, சேவை செய்ய உற்சாகப்படுத்துறானா?

இதை சரி கட்டுறமாதிரி மறு நாள் பேசினான். “அண்ணே சம்பள பணத்தை அப்படியே ராணிகிட்ட கொடுத்துடுவேண்ணே. அவளா பாத்து புகையிலைக்கும் சோம பானத்துக்கும் கொஞ்சம் தருவா.. அவ்வளவுதாண்ணே”

மீண்டும் அவனுடைய மனசாட்சியாகும் தைரியம் வந்துவிட்டது. “அந்த மெயின் பிராஞ்ச் யமுனாவை உன்னோடு சேத்து பேசறாங்களே….”

“அண்ணே பாவம்ணே. ஆறு பொண்ணுங்க. இவ நாலாவது. ரொம்ப நாளு யோசனை பண்ணிட்டுத்தான் எங்கிட்டே கேட்டா.. நானும் பதிலே சொல்லாமதான் இருந்தேன். பக்கத்து சீட். தினம் அவ மவுனமாவே என்னை பாக்குற போதெல்லாம் ரொம்ப சங்கடமாவே இருந்துச்சு. அவ என் கிட்டே வேறே எதுவும் எதிர்பாக்கல. நானும் எதுவும் எதிர் பாக்கமாட்டேன்னு தெரிஞ்சுதாண்ணே எங்கிட்டே கேட்டா…

கல்யாணம் ஆனவன் பேசற பேச்சான்னு கேக்குறது புரியுது. உதவின்னு செய்யறதை ராணியும் புரிஞ்சுக்குவா.. என்னைப் பத்தி ராணிக்கு நல்லா தெரியும். எந்த நிலையிலும் ராணிக்கும் புள்ளைங்களுக்கும் எந்த குறையும் வைக்க மாட்டேன். புட் பால், பேங்க், ராணி, புள்ளைங்க யாருக்கும் நன்றி மறக்கமாட்டேன் அண்ணே. அப்படி மறந்தா அன்னைக்கு கேப்ரியல் செத்துட்டான்னு நினைச்சுக்க அண்ணே”

அதுக்கப்புறம் நான் மாற்றலாகி மெயின் கிளைக்கு வந்துவிட்டேன். கேப்ரியலைப் பற்றி கேட்கும்போது கிரிக்கட் பெட்டிங்லாம் செய்யறான்னு கேள்விப் பட்டேன்.

கேப்ரியல் வீட்டருகில் வந்துவிட்டோம். பேங்க் ஸ்டாபுங்க ரெண்டு மூணு பேர் வேகமா எங்களை நோக்கி வந்தாங்க. “கேப்ரியல் தூக்கு போட்டு செத்துட்டார்.. “ ஒருத்தரை மாத்தி ஒருத்தர்சொன்னாங்க “இன்னிக்கு காலை 9 மணிக்கே கேப்ரியல் பிராஞ்சுக்கு வந்து வெளியவே நின்னுகிட்டு, ஸ்வீப்பரை கூப்பிட்டு கிளியரிங் செக் பண்டிலை எடுத்து கொண்டு வான்னு சொல்லியிருக்கார்.

ஸ்வீப்பர் எடுக்கப் போகும்போது மேனேஜர் பாத்துட்டார். கேப்ரியல்தான் எடுத்துட்டு வரச்சொன்னாருன்னு ஸ்வீப்பர் சொல்ல, மேனேஜர் வெளியே வந்து எட்டிப் பார்த்ததும் கேப்ரியல் சைக்கிளில் வேகமா வீட்டுக்கு வந்திருக்காரு. வீட்டிலே யாரும் இல்ல, தூக்கு மாட்டிகிட்டு தொங்கிட்டாரு..”  ”பின்னாலெயே பாங்க் ஸ்டாபுங்க வீட்டாண்ட வந்தாங்க. அதுக்குள்ளயும் இறந்துட்டாரு…”  “கணக்கு முடிச்சு கஸ்டமர் சரண்டர் பண்ண செக்கில இவரு கையெழுத்துப் போட்டு லோன் பார்ட்டிக்கு கொடுத்திருக்காரு.”

பாவி இப்படி பண்ணிட்டானே.. கேப்ரியல் வீட்டை நோக்கிப் போனோம். “பாடி போஸ்மார்ட்டத்துக்கு போயிடுச்சு, வர்ரதுக்கு சாய்ங்காலம் ஆயிடும்” வெளியிலேயே சிறிது நேரம் நின்று கொண்டிருந்தோம். ராணி உள்ளே அழுது கொண்டிருந்தாள். அருகே குழந்தைகள் என்னவென்றே தெரியாமல் அமர்ந்திருந்தனர். யமுனா சற்று தள்ளி நின்று புடவை தலைப்பால வாயைப் பொத்தி அழுது கொண்டிருந்தாள். உள்ளே சென்று ஆறுதல் சொல்லிவிட்டு திரும்பினோம்.

புட்பால் கற்றுக் கொடுத்த திறமையை கிரிக்கெட் பெட்டிங்கில் காட்டியிருக்கான். பெட்டிங் என்பது பெட்டிங், விளையாட்டில்லை என்பது ஏன் அவனுக்கு தெரியாமல் போனது?

“ராணிக்கு வேலை கிடைக்குமா?” நண்பர் கேட்டார்.

“இப்பல்லாம் கொடுக்கிறதில்லையே” என்றேன்.

யமுனா பாத்துக்குவாள் என்று கேப்ரியலின் மன சாட்சி சொன்னது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *