“One Hundred Years of Solitude” (தனிமையின் நூறு ஆண்டுகள்) — கடையநல்லூர் பென்ஸிஉலக இலக்கியத்தின் மிகமுக்கியமான படைப்பாகக் கருதப்படும் நாவல். புனித பைபிளோடும், ஷேக்ஸ்பியரின் படைப்புகளோடும் வைத்துப் போற்றப்படும் நூல். சார்ல்ஸ் டிக்கன்ஸ், லியோ டால்ஸ்டாய் போன்ற காலத்தை வென்று நிற்கும் எழுத்தாளர்கள் வரிசையில் இதன் ஆசிரியரையும் உட்கார வைத்த நாவல். ஒரே நேரத்தில் விமர்ச்சகர்களாலும் பெரும் அளவிலான வாசகர்களாலும் போற்றப்பட்ட நாவல்.

புனித பைபிளுக்குப் பிறகு அதிக அளவில் மொழியாக்கம் செய்யப்பட்ட நூல் என எடுத்துக் கொண்டால் அது செர்வான்டீஸின் “டான்கிஹோடே” (“Don Quixote”) நாவல்தான். அதன் பிறகு உலகம் முழுவதும் தமிழ் உட்பட 46 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு, 5 கோடிப் பிரதிக்குமேல் விற்பனையாகிச் சாதனை படைத்துக் கொண்டிருக்கும் நாவல் காப்ரியல் கார்சியா மார்கஸின் “தனிமையின் நூறு ஆண்டுகள்”, ( “One Hundred Years of Solitude” ) சிறந்த படைப்பிற்காப் பல இலக்கிய விருதுகளைப் பெற்ற இந்தச் செவ்விலக்கிய நாவல் 1982 ஆம் ஆண்டு மார்கஸிற்கு நொபேல் பரிசையும் பெற்றுக்கொடுத்தது. 1967 ஆம் ஆண்டு ஸ்பேனிஷ் மொழியிலும் 1970 ஆம் ஆண்டு ஆங்கில மொழியிலும் வெளியிடப்பட்டன. அற்புதங்களும் யதார்த்தமும் ஒன்றுக்கொன்று ஊடாடும் மாய யதார்த்தம் என்னும் இலக்கிய வகைமையைச் சார்ந்தது இந்த நாவல்.

நாவலுக்குள் செல்வதற்கு முன்பு ‘மாய யதார்த்தம்’ பற்றிப் பார்ப்போம். 1925 ஆம் ஆண்டு ஜெர்மன் வரலாற்றாய்வாளர், கலைவிமர்ச்சகர் ஃபிரான்ஸ் ரோ ( Franz Roh) தான் ‘மாய யதார்த்தம்’ என்ற பதத்தை உருவாக்கினார். அதற்குப் புதிய பரிமாணம் கொடுத்தவர் மார்கஸ். இலக்கியத்திற்காக நொபேல் பரிசைப் பெற்றுக்கொண்ட மார்கஸ் தனது ஏற்புரையில், ‘‘லத்தீன் அமெரிக்காவின் யதார்த்தம் நீங்கள் கற்பனையில் கூடக் காணவியலாத கொடூரங்களையும் விநோதங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. அந்த யதார்த்தங்களை விவரிக்க பாரம்பரியமான உத்திகள் எதுவும் எங்களிடம் இல்லை என்பதே அந்தத் தனிமையின் சாரம்” எனக் கூறித் தனது நாவலுக்கு ஒரு முன்னுரையை முன்வைக்கிறார்.

“டான்கிஹோடே” நாவலுக்குப் பிறகு ஸ்பானிஷ் மொழியில் நிகழ்ந்த மாபெரும் நிகழ்வு” என்று பாப்லோ நெருடாவாலும், “ஆதியாகமத்துக்குப் ( Genesis) பிந்தைய படைப்புகளில் ஒட்டுமொத்த மனித குலமும் படிக்க வேண்டிய முதல் படைப்பு” என்று வில்லியம் கென்னடியாலும் புகழப்பட்ட நாவல் ”தனிமையின் நூறு ஆண்டுகள்” பின்னாளில் மாய யதார்த்தத்தைச் சிக்கெனப் பிடித்துக்கொண்ட படைப்பாளுமைகளுள் குறிப்பிடத் தக்கவர்களாக இசபெல் அயன்டே (Isabel Allende),
டோனி மேரிசன், சல்மான் ருஷ்டி ஆகியோரைச் சொல்லலாம். மாய யதார்த்தம் இவ்வாளுமைகளுக்கு அற்புதமான யதார்த்தமாக அமைந்ததில் வியப்பில்லை. அது நவீன உலகத்தை உண்மையான பார்வையுடன் கூர்மைப்படுத்திக் கொடுத்தது. அத்துடன் அமானுஷ்யக் கூறுகளோடு் வடித்துக்கொடுக்கும் புனைவு இலக்கியத்தின் ஒரு வகைமையாகவும் ஆகிப்போனது. மார்கஸின் அறிவுத்தேடல் நம்மை வியப்பிலாழ்த்தும்.

வளரிளம் பருவத்திலிருந்து நூல்களைத் தேடித்தேடிப் படிக்கத் தொடங்கினார், இயந்திரத்தனமாகப் படித்தார். ஹெமிங்வே, தாமஸ் மேன் (Mann), அலிக்ஸான்டர் ட்யூமா (Dumas), ஜேம்ஸ் ஜாய்ஸ், ஃபாக்னர், ஸோஃபகிலீஸ், நெதானியல் ஹாதார்ன், மெல்வில், டி.எச். லாரன்ஸ், காஃப்கா, வெர்ஜீனியா ஊல்ஃப் என நீளும் வரிசை.
“நமக்கும் முன்னால் இருக்கும் பத்தாயிரம் ஆண்டு கால இலக்கியங்களைப் பற்றிய ஞானம் சிறு அளவில்கூட இல்லாமல் ஒரு நாவல் எழுத யாராவது உத்தேசிக்க முடியுமா என்று என்னால் கற்பனை செய்துபார்க்க முடியவில்லை” என்று குறிப்பிடுகிறார். அதே நேரத்தில், “நான் வியந்து போற்றிய படைப்பாளிகளைப் போலவே எழுத நான் ஒருபோதும் முயன்றதில்லை. மாறாக, அவர்களை என் எழுத்தில் பிரதிபலிக்காமல் இருக்க என்னால் முடிந்ததையெல்லாம் செய்திருக்கிறேன்” என்று முடிக்கிறார் மார்கஸ்.

Netflix to adapt Gabriel Garcia Marquez's One Hundred Years of Solitude - Television News

1965 ஆம் ஆண்டு மெக்ஸிகோவின் அகாபூல்கா நகரத்திற்கு காரில் சென்றுகொண்டிருக்கும்போது, திடீரென, “தனிமையின் நூறு ஆண்டுகள்” நாவலை எழுதுவதற்கான உள்ளுணர்வு வெளிப்பட்டதாகக் குறிப்பிடுகிறார். பயணத்தைப் பாதியிலேயே முடித்துக்கொண்டு இல்லம் திரும்புகிறார். 18 மாதங்களாக இந்த நாவலை எழுதுகிறார். “நான் நாவலை முடித்ததும் என் மனைவி என்னிடம் சொன்னார் – ‘உண்மையிலேயே நாவலை முடித்துவிட்டீர்களா ? நமக்கு 12,000 டாலர்கள் கடன் சேர்ந்திருக்கிறது” என்பதை நினைவுகூறுகிறார் ஏழை எழுத்தாளர் மார்கஸ். கதைக்களம் – 19ம் நூற்றாண்டின் தொடக்கம். பூவன்டீயா குடும்பத்தின் ஏழு தலைமுறை வாழ்க்கையைச் சொல்லி முடிகிறது நாவல்.

ஜொஸி ஆர்கேடியா பூவன்டீயா தன் மனைவி உர்சுலா இகுவாரா உடன் தன்னிருப்பிடத்தை விட்டு வெளியேறுகிறார். இந்தப் பயணத்தோடு நாவல் தொடங்குகிறது. பயணத்தின் காரணம் தன்னை ஆண்மையற்றவன் எனத் திட்டியவனைக் கொலைசெய்ததுதான். பயணத்தின் இடையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த ஒருநாள் தன் கனவில் தெரிந்த மகோன்டோ எனும் கண்ணாடிகளின் நகரத்தை அந்த ஆற்றங்கரையிலேயே கட்டமைக்கிறார். சதுப்பு நிலப் பகுதியில் உருவாகும் மகோன்டோ நகரம் நூற்றாண்டுகளின் ஊடாக வளர்ந்து பெருநகரமாக மாறுகிறது. புவன்டீயா வம்சத்தைச் சேர்ந்த ஏழு தலைமுறைகள் அந்த நகரத்தின் வளர்ச்சிக்கும், இருப்பிற்கும், அழிவுக்கும் மையமாகவும் அமைகின்றன. உறக்கமின்மை, கொள்ளை நோய், உள்நாட்டுப் போர், பழிவாங்கல்கள் என அனைத்தும் அந்த நகரத்தின் வரலாற்றை உருவாக்குகின்றன. ஒரு ஒப்பீட்டிற்காக, கொஞ்சம் உடோபியன் நகரத்தைப் பார்த்துவிட்டு மீண்டும் மார்கஸின் மகோன்டா நகருக்குத் திரும்புவோம்.

“உடோபியா”: மதத்தின் பெயரிலான நயவஞ்சகம் ஐரோப்பிய அரசியலின் ஊழல் ஆகியவற்றை மறைமுகமாகச் சாடும் நையாண்டிச் சித்தரம்தான் சர் தாமஸ் மோரின் “Utopia”. லத்தீன் மொழியில் 1516 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட நூல். இந்த நுாலில் சர் தாமஸ் மோர், ஒரு தீவைப் படைத்து, அங்குச் சிறப்பான சமூக ஒழுங்குகளை, வாழ்க்கைமுறைமையை, பண்பாட்டைப் பாதுகாக்கக்கூடிய ஒரு சமூகத்தைக் கட்டமைக்கிறார். உடோபியன் மக்கள் மதநம்பிக்கை யுடையவர்கள், மதசகிப்புத்தன்மை யுடையவர்கள். அங்கு யாரும் எந்த மதத்தையும் பின்பற்றலாம். நாத்திகம், சூது, வன்முறை, பழிக்குப்பழி ஆகியவை முழுமையாகத் தடைசெய்யப்படுகின்றன. இந்த நூல் வெளிவந்த பிறகு, “Utopia” என்ற பதம் “அனைத்தும் முழுநிறைவாக உள்ள, கற்பனையில் மட்டுமே காணக்கூடிய ஓரிடம் அல்லது ஒரு நிலை” எனும் பொருளோடு ஆங்கில அகராதிக்குள் நுழைந்துவிட்டது.

ஆனால் மார்கஸ் படைத்த மகோன்டா நகரம் உடோபியன் நகரமல்ல. கொலம்பியா நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நகரமாகப் பரிணமிக்கிறது. மகோன்டா நகர மக்களின் உரிமைக்கான போராட்ட எண்ணங்கள், போராட்டங்கள், கொலம்பியா நாட்டின் வரலாற்றுப் பின்னணியை நினைவூட்டுவனவாக இருக்கின்றன. தொடர்ந்து லிபரல் கட்சியின் சீர்திருத்தத்திற்கான போராட்டங்கள், ரயில்வேக்களின் வருகை, ஆயிரம்நாள் யுத்தம், குறிப்பாக கார்பரேட் கம்பெனியான ஐக்கிய பழக் கம்பெனியின் மேலாதிக்கம் கதையில் அமெரிக்கப் பழக்கம்பெனியாக மார்கஸ் படைத்திருப்பார். தொடர்ந்து சினிமாக்கள், தானியங்கி் வாகனத் தொழிற்சாலை, வேலைநிறுத்தம் செய்யும் தோழிலாளர்களைப் படுகொலை செய்யும் நிகழ்வு என ஒரு உண்மையான கொலம்பியா நாட்டின் வரலாற்றைத்தான் மகோன்டா நகரின் வரலாறாக விரித்துக்கொண்டு போகிறார் மார்கஸ்.

நாவலில் வரும் தொன்மையான கதைகள் தங்களின் தோற்றத்தையும் அடித்தளத்தையும் குறிக்கின்றன. கதைமாந்தர்கள் புராணக் கதாநாயர்களை ஒத்திருக்கிறார்கள். ஆங்காங்கே தெளிக்கப்படும் அமானுஷ்யக் கூறுகள் என இந்த மூன்று முக்கியப் புள்ளிகளில் நாவல் பயணிக்கிறது. கர்பத்திலிருந்து தொடங்கும் தனிமை தொடர்ந்து வருகிறது. ஒரே குழுவாக வசித்தாலும், குடும்பத்தில் யாரும் தங்களுக்குள் பேசிக்கொள்வதில்லை. இந்த நாவலில் எல்லா பௌதிக விதிகளையும் உடைக்கிறார் மார்கஸ். அதிகமான கதைமாந்தர்கள் துன்பங்களைச் சுமப்பதை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறார்கள். தமக்கு அளிக்கப்பட்டுள்ள விதியை நம்பி ஏற்றுக்கொள்வதில் அவர்களுக்கு அமைதி கிடைப்பதாக உணர்கிறார்கள்.

One Hundred Years of Solitude - Book Cover Design on Behance

ஜொஸி ஆர்கேடியா குடும்பம் தங்களுக்குப் பிறகு ஆறு தலைமுறைகளோடு் வாழ்க்கையை நகர்த்துகிறார்கள். ஆறு தலைமுறைகளிலும் ஆண்களுக்கு ‘ஜொஸி ஆர்கேடியோ அல்லது அவ்ரேலியானோ’ என்ற பெயர்களும் பெண்களுக்கு ‘உர்சுலா, அமரேன்டா, ரெமேடியோஸ்’ என்ற பெயர்களும் வைக்கப்படுகின்றன. ‘ஜொஸி ஆர்கேடியோ’ நான்கு முறைகளும், ‘அவ்ரேலியானோ’ 22 முறைகளும், ‘ரெமேடியோஸ்’ மூன்றுமுறைகளும், ‘அமரான்டா’, ‘உர்சுலா’ இரண்டு முறைகளும் வருகின்றன. எனவே படிக்கும்போது இந்தப் பெயர்கள் ஒரு குழப்பத்தை உண்டுபண்ணும்.

மகோன்டா நகரம் காலப்போக்கில் வளரத் தொடங்குகிறது. வருடக்கணக்காகத் தனித்திருந்த நகரத்திற்கு வெளியிலிருந்து ஆண்டுக்கொருமுறை ஜிப்ஸிகள் சுற்றுலா வரத்தொடங்குகிறார்கள். அவர்களுடன் தொழில்நுட்பமும், மின் கருவிகளும் வருகின்றன. புதிய, தனித்த கொலம்பியா நாட்டிற்கு மகோன்டா நகரத்தின் வெளிச்சம் தெரிகிறது. மகோன்டாவில் புதிய கட்சிகள் தொடங்கப்படத் தேர்தலும் வருகிறது. கன்சர்வேடிவ் கட்சி ஆட்சியைப் பிடிக்கிறது. எதிர்க்கட்சியாக லிபரல் கட்சி. அவ்ரேலியானோ பூவன்டீயா மக்களுக்கான உரிமைப்போரில் களத்தில் இறங்க, தலைமைப் பொறுப்பு அவரைத் தேடி வந்து தலைவனாக்குகிறது. பல வருடங்கள் யுத்தம் நீடிக்க, ஏமாற்றங்கள் உந்தித் தள்ள அமைதி்வேண்டித் தன் இல்லம் திரும்புகிறார் தலைவன். தனது பணிமனையில் தங்க மீனைச் செய்யும் பணியில் முழுவதுமாக ஈடுபடுகிறார், நிற்க.

மகோன்டா நகரம் பெருநகரமாகித் தனித்த நாடாகிறது. சிறு நகரங்களை இணைக்க ரயில்வே நுழைகிறது. கூடவே வெளிநாட்டினர் கால் பதிக்கின்றனர். அப்புறமென்ன அமெரிக்காவிற்கு மூக்கில் வேர்க்க, மகோன்டா நகருக்கு வெளியே ஆற்றின் குறுக்கேத் தனது மிகப்பெரிய பழத்தோட்டத்தை நிர்மாணிக்கிறது அமெரிக்கப் பழக்கம்பெனி. ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுடன் கம்பெனி்செழிக்க, மகோன்டா நகரம் செழிக்கத் தொழலாளர்கள் கேள்விகள் கேட்கத் தொடங்குகின்றனர். வேலைநிறுத்தம் தொடர, பக்கத்து நாடான கொலம்பியா உதவியுடன் வேலைநிறுத்தம் நசுக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். 1928 ஆம் ஆண்டு கொலம்பியா நாட்டில் நடைபெற்ற “பனானாப் படுகொலைகள்” ளைக் கண்டிக்கும் வகையில் ஆவணப்படுத்துகிறார் மார்கஸ். அத்துடன் சரித்திரத்தில் வளமிக்க நாடுகளின் சுதந்திரங்கள் பாழ்படுத்தப்படும் வரலாறுகளையும், நாட்டின் வளங்கள் சூரையாடப்பட்டுக் கொள்ளையடிக்கப்படும் வரலாறுகளையும் குறியீடுகளாக மார்கஸ் படம்பிடிக்கிறார்.

இது இப்படி இருக்க நாவல் ஒரு பரிதாப சோகமுடிவை நோக்கிப் பயணிக்கிறது. மகோன்டா நகரம் கைவிடப்பட்ட நகரமாக வீழ்கிறது. பூவன்டீயா குடும்பத்தின் அவ்ரேலியானோவும் அமரேன்டா உர்சுலாவும் மிஞ்சுகின்றனர். அவர்களுடைய பிறப்பு அவர்கள் தாத்தாவினால் மறைக்கப்பட்டிருக்கிறது. சகோதர, சகோதரியான அவர்கள் தங்களின் உறவு முறைகள் தெரியாமலே தங்களுக்குள் மணமுடிக்க, பன்றி வாலுடன் ஒரு குழந்தையைப் பெறறெடுக்கிறாள் அமரேன்டா உர்சுலா. எது நடக்கக்கூடாது என்ற பயத்தில் பூவன்டீயா குடும்பம் ஆறு தலைமுறைகளாக, வருடங்களைத் தள்ளினார்களோ அது, ‘பன்றி வாலுடன் குழந்தை’ – நடந்துவிட, அந்தக் கணத்திலேயே மரணிக்கிறாள் இளம் தாய் உர்சுலா. கடைசி பூவன்டீயா குடும்ப உறுப்பினர் அவ்ரேலியானோ இப்பொது, பழைய கையெழுத்தேட்டை வாசிக்கிறான். ‘பன்றி வாலுடன் குழந்தை பிறப்போடு மகோன்டா நகரம் துடைத் தெடுக்கப்படும்’ என்ற வரியைப் படிக்கும்போதே பெரும் புயல் புறப்பட்டு் வரத்தொடங்குகிறது.

– சுபம்.

2021, பிப்ரவரி 16 ஆம்நாள் மார்கஸின் 95 ஆம் பிறந்தநாளை ( மார்ச் 6) முன்னிட்டு எழுதப்பட்ட கட்டுரை.
Gabriel Garcia Marquez.
( 6 March 1927 – 17 April 2014 )
பென்ஸி.
16 பிப்ரவரி, 2021

“காக்கைச் சிறகினிலே” மே 2021 இதழில் எனது கட்டுரை “தனிமையின் நூறு ஆண்டுகள்” —
இதழ் ஆசிரியர் தோழர் வி. முத்தையா உள்ளிட்ட ஆசிரியர் குழுவிற்கும், ஆசிரியர் குழு
இரா. எட்வின், இரா எட்வின், தோழருக்கும் நன்றி.