(ஜேம்ஸ் லவ்லாக் எழுதிய, சா. சுரேஷ் மொழிபெயர்ப்பில், பாரதி புத்தகாலயம் வெளியிட்ட கையா (GAIA) உலகே ஓர் உயிர்என்னும் நூல் குறித்த பதிவு.)

ஜேம்ஸ் லவ்லாக் (James Lovelock)  நாசாவிற்காக கண்டுபிடித்த ‘Electron Capture Detector’ ஓசோன் படலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகிற குளோரோ புளூரோ கார்பன் (CFC) பற்றிய ஆய்விற்கு உதவிகரமாக இருந்தது. இவர் நுண்ணுயிரியியலாளரான லின் மர்குலிஸ் உடன் இணைந்து ‘கையா’ கருதுகோளை வெளியிடுகிறார். இக்கருதுகோள் அறிவியல் உலகத்தால் ஏற்கப்படவில்லை. இருப்பினும் சூழலியலாளர்களின் ஒரு பிரிவினர் இதை ஏற்றுக் கொண்டாடுகின்றனர். Gaia: A New Look at Life on Earth (1979) என்ற நூலில் தமிழாக்கமே இந்நூல். மொழிபெயர்ப்பாளர் சா.சுரேஷ் (ஆம்பலாப்பட்டு, பட்டுக்கோட்டை).

  • அறிமுகம்
  • தொடக்கம்
  • கையா அங்கீகரிக்கப்படுதல்
  • தன்னாள்வியல் (Cybernetics)
  • சமகால வளிமண்டலம்
  • கடல்
  • கையா மற்றும் மனிதன் சூழல்மாசு பிரச்சினை
  • கையாவிற்குள் வாழ்தல்
  • முடிவுரை

என்பதாக இதன் அத்தியாயங்கள் இருக்கின்றன.

புவியிலுள்ள உயிருள்ள, உயிரற்றப் பொருள்களனைத்தும் ஒன்றோடொன்று ஊடாடி, தாக்கம் செலுத்தி ஒரு சிக்கலான அமைப்பாகவும் பூமியே ஒரு தனித்த உயிரியாகவும் இருக்கிறது என்பதே இக்கருதுகோளாகும். ‘கையா’ என்பது கிரேக்கத் தொன்மங்களில் வரும் பெண் கடவுள். உலகிலுள்ள அனைத்து உயிர்களுக்குமான தாய்க் கடவுளாகக் கருதப்படுகிறாள். கிரேக்கச் சொல்லான இதன் பொருள் ‘புவி’.

“ஒரு புவித்தேவதை இப்புவியைக் காப்பதாக இறையியல் வழியில் நின்று மதங்கள் நிரூபிக்க எத்தனிக்கிற வேளையில் அதனை அறிவியல் வழியில் நிரூபிக்கும் முயற்சிதான் இந்தப் புத்தகம். புவித்தேவதை என பொருள்படுகிற ‘கையா’ என்கிற அந்த கிரேக்க சொல்லைத்தவிர வேறெதுவும் கடவுளோடு தொடர்புடையதாக இந்தப் புத்தகத்தில் இல்லை. இயற்கையுடனான ஒத்திசைவை, புரிதலை, அறிவியல் பார்வையை, நேசத்தை, காதலை, மரியாதை கோருகிறது இந்தப் புத்தகம். கற்பனைக்கு அப்பாற்பட்ட  பரிமாணம் கொண்ட இந்தப் புவியில் காணப்படும் மண், மலை, காடு, கடல் எல்லாம் அவை ஆற்றுவதாக நமக்கு போதிக்கப்பட்ட பணிகளைத் தாண்டி உயிர்நிலையான பணிகளை ஆற்றிக்கொண்டிருக்கின்றன நமது புலனுணர்வுக்குத் தென்படாமலேயே! இந்த பணிகளையெல்லாம் இயற்பியல், வேதியியல், உயிரியல் மொழியில் விளக்குகிறார் ஜேம்ஸ் லவ்லாக். இந்த புத்தகத்தினை வாசிப்பதற்கு குறைந்தபட்ச அறிவியல் அறிவு தேவைப்படுவது முன்நிபந்தனையாக இருக்கிறது”. (பக்.07) என்று மொழிபெயர்ப்பாளர் பதிவு செய்கிறார்.

இக்கருதுகோளை ‘கையா’ என்ற பெயரிலழைக்க, பக்கத்து வீட்டுக்காரரும் நாவலாசிரியருமான வில்லியம் ஹோல்டிங் விரும்பியதாகக் குறிப்பிடுகிறார். சோவியத் – அமெரிக்க பனிப்போர் விண்வெளி அறிவியலைத் தாண்டி பலவற்றையும் உருக்குலைத்து போட்டது என்றும் அதன் பின்னர் அணு ஆயுதங்கள், தொழில்கள் எதிர்த்தே சூழலியர்கள் போராடினர் என்றும் பசுமை சிந்தனை இவ்வாறு அரசியல்மயப்படுத்தப்பட்டு, தவறாக வழிநடத்தப் பட்டதாகவும் கூறுகிறார். இடதுசாரிகளையும் அவர்களது சிந்தனைகளையும் இவ்வாறு விமர்சிக்கிறார் என்று எடுத்துக் கொள்ளலாமா?

Rachel Carson Wrote Silent Spring (Partly) Because of the Author …

இடதுசாரியாக அறியப்பட்ட சூழலியர் ரேய்ச்சல் கார்சனை பல இடங்களில் பல இடங்களில் கடும் விமர்சனத்திற்கு உட்படுத்துகிறார். அவர் விஞ்ஞானியைப் போலில்லாமல் வழக்கறிஞர் போல் வாதங்களை முன்வைப்பதாகக் கூறுகிறார். அறிவியலுக்கு ஜனநாயகம் அவசியமில்லை என்ற கருத்தை இதில் அவர் வலியுறுத்துகிறார். இதற்கு மாற்றாக சர்வாதிகார சிந்தனையே அறிவியல் என்றால் ‘கையா’ கருதுகோள் பற்றியும் நமக்கு அச்சம் எழுவது இயற்கையே.

“விஷத்தன்மை வாய்ந்த வேதிப்பொருட்களை பெருமளவில் பயன்படுத்துவதிலிருந்து உருவாகின்ற ஆபத்துக்களை ராச்சல் கார்சன் நம்மை உணரச்செய்தபோது, தனது வாதங்களை ஒரு விஞ்ஞானியைப் போல் முன்வைக்காமல் ஒரு வழக்கறிஞர் போலவே முன்வைக்கிறார் அவர். வேறு வார்த்தைகளில் சொன்னால், தந்து சார்பை நிரூபிக்க அவர் ஆதாரத்தை தேர்ந்தெடுத்தார். அவரது செயலினால் அச்சுறுத்தலுக்குள்ளாகிய வேதித்தொழிற்சாலைகள் தங்களுடைய வாழ்வாதாராத்தைக் கருத்தில்கொண்டு, பொறுக்கியெடுத்த வாதங்களாலேயே பதிலளித்தது. நீதியை நிலைநாட்டுகின்ற ஒரு சிறந்த வழியாக இது இருந்திருக்கலாம்; இந்த நிகழ்வைப் பொறுத்த வரையில் கூட, அது அறிவியல்பூர்வமாக விலக்களிக்கக்கூடியதாக இருந்தது.

ஆனால் இதுஒரு அமைப்பினை (Pattern) நிறுவியிருப்பதாகத் தோன்றுகிறது. அதன்பிறகு, சுற்றுச்சூழலைப் பொருத்த அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் மற்றும் வாதங்கள் ஒரு நீதிமன்ற அறை அல்லது ஒரு பொது விசாரணை முன்பாக வைக்கப்படுவதுபோல் முன்வைக்கப்பட்டன. ஜனநாயக நடைமுறைக்கு இது சிறந்ததாக இருந்தாலும், இது அறிவியலுக்குத் தீங்கானது என சொல்வேன். ‘போரில் பலியாகும் முதல் பலியாள் உண்மைதான்’ என சொல்லப்படுகிறது. சட்டத்தில் ஒரு வழக்கை நிரூபிக்க, உண்மையானது தேர்ந்தெடுக்கப்பட்ட வகையில் பயன்படுத்தப்படுவதால் அதுவும் உண்மையைப் பலவீனப்படுத்துகிறது”. (பக்.23)

மீண்டும் ரெய்ச்சல் கார்சன் மீதான தாக்குதல் தொடர்கிறது. ரேய்ச்சல் ஒரு சிறந்த வழக்கறிஞரோ இல்லையோ,  ஜேம்ஸ் லவ்லாக் ஒரு மிகச்சிறந்த வழக்கறிஞராக ‘கையா’ கருதுகோளுக்கு ஆதரவாக  வாதிடுகிறார் என்றே சொல்ல வேண்டும். மக்கள் பெருக்கமே சூழலுக்கு மாசு என்பதை வலியுறுத்துகிறார்.

 - தமிழ் விக்கிப்பீடியா
ஜேம்ஸ் லவ்லாக்

“நீண்ட காலமுடிவில், தவறான காரணத்திற்காக ரேச்சல் கார்சன் சரியாக இருந்தார் என்ற துயரார்ந்த சாத்தியம் நிகழாவண்ணம் நாம் பார்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. டி.டி.டி. மற்றும் பிற பூச்சிக்கொல்லிகளினால் பாதிப்பிற்குள்ளான பறவைகளோடு அவற்றின் பாடல் இல்லாத மௌன வசந்தம் வரலாம். அவ்வாறு நேர்ந்தால் அது பூச்சிக்கொல்லியின் நேரடி விளைவினால் ஏற்பட்ட ஒன்றாக இருக்காது.; மாறாக இந்த காரணிகளால் மனித உயிர் காக்கப்படுவதானது இப்பறவைகளுக்கு புவியில் எந்தவொரு இடத்தையோ, வாழிடத்தையோ விட்டு வைத்திருக்காது என்பதுதான் காரணமாக இருக்கும்; கேரட் ஹார்டின் (Garret Hardin) கூறியுள்ளது போல, உயிர்வாழ்வதற்கு உகந்த எண்ணிக்கையிலான மக்கள்தொகை என்பது புவி ஆதரிக்கக்கூடிய அளவிற்கான பெருமளவிலான மக்கள்தொகை அல்ல; அல்லது அது பின்வருமாறு சற்று தெளிவாகவே சொல்லப்பட்டிருக்கிறது, ‘உலகில் ஒரே ஒரு மாசுபாடுதான் உள்ளது… மக்கள்தான் அது;”, (பக்.169&170)

மேலும் பிளேக், காலரா போன்ற கொள்ளை நோய்கள் (தற்போது கொரோனா) எல்லாம் இயற்கைச் சமநிலைக்காக ‘கையா’ எடுத்த முடிவு என்று சொல்ல இயலுமா?

ரெய்ச்சல் கார்சன் பற்றிய மற்றொரு மதிப்பீடு ஒன்றைக் காண்போம்.

“கார்சன் சூழல் மண்டலச் சூழலியலை வளமாகக் கற்றவர். அவர் தம்முடைய ‘மௌன வசந்தம்’ நூலை மேற்குறிப்பிட்ட பொருண்முதலியப் புரிதலால், ஓர் அடிப்படை ஆற்றலாக உயர்த்தினார். இறக்கும் தறுவாயில் சூழலியலின் மெய்யியல் தேர்வுக்காக வேண்டி புத்தக உடன்பாடு (ஒப்பந்தம்) ஒன்றைச் செய்திருந்தார்; படிமலர்ச்சியைப் பற்றிய அறிவியல் வகையிலான ஆய்வுக்காக வேண்டி பொருள்களையும் தொகுத்திருந்தார். இவ்விரு ஆய்வுப் பொருட்களையும் தெளிவுற ஒருங்கிணைத்து அதனடிப்படையில் இன்றைய மாந்தனுக்கும் புவிக்கும் உள்ள உறவு குறித்த முற்றும் முழுத் திறனாய்வைக்கான அடிப்படையை ஐயத்திற்கிடமின்றி சிந்தையில் தேக்கியிருந்தார்”, (பக்.130&131, சூழலியல் புரட்சி – ஜான் பெல்லமி ஃபாஸ்டர், விடியல் வெளியீடு)

ரெய்ச்சல் கார்சன் சொற்களிலேயே சில வரிகளைப் பார்ப்போம்.

“நிலத்தில் விளையும் பயிர் ஒவ்வொன்றும் உயிர் வாழ்க்கையின் வலையில் ஓர் அங்கம். பயிர்களும் நிலமும், பயிர்கள் ஒன்றோடு ஒன்றும், பயிர்களும் விலங்குகளும் நெருங்கிய தேவையான உறவுகள் உடையவை. சில வேளைகளில் இந்த உறவுகளை நாம் கலைக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. தவிர்க்க முடியாத அந்த நிலையிலும் அதனைக் கவனத்தோடு செய்ய வேண்டும். நம்முடைய செயல் அப்போதைக்கும் நெடுங்காலத்திற்குப் பிறகும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவையா என்பதனைத் தெரிந்து செய்ய வேண்டும்”, (பக்.82, மௌன வசந்தம் –  ரெய்ச்சல் கார்சன், எதிர் வெளியீடு)

மௌன வசந்தம் | Buy Tamil & English Books Online | CommonFolks

இக்கருதுகோளின் எதிர்ப்பாளர்களுக்காக, “Gaia likes it cool”, போன்ற உருவகச் சொற்றொடர்கள் இன்றி கறாரான அறிவியல் மொழியில் பேச வேண்டியிருப்பதையும், புவி உடற்செயலியல் (Geophysiology) அறிவியல்பூர்வமாக சரியாக இருக்க வேண்டும் என்பதையும் கவனத்தில் கொண்டு (பக்.17), விஞ்ஞான ஒழுங்கிற்கு கீழ்படிந்து, அவருடைய இரண்டாவது நூலை (The Age of Gaia) சுத்தப்படுத்தி உருவாக்கியதாகக் குறிப்பிடுகிறார். (பக்.18) எனவே அறிவியல் பூர்வமற்ற கூறுகளைக் இக்கருதுகோள் கொண்டிருப்பதை அவரே ஏற்றுக்கொள்கிறார்.

இந்தப் பிரபஞ்சத்திலுள்ள ஹைட்ரஜனின் முக்கியத்துவம் மற்றும் பன்முகத்திறன் ஒப்புயர்வற்றது. சூரியனுக்கு ஆற்றலை வழங்கும் ஒரு எரிபொருளாகவும், கட்டற்ற சூரிய ஆற்றலின் பாய்ச்சலுக்கு மூலாதாரமாகவும் உள்ளது. நீரில்கூட இரண்டு பங்கு ஹைட்ரஜன் உள்ளது. ஒரு கோளில் அதிக ஹைட்ரஜன் கிடைப்பதை ஆக்சிஜனேற்ற – ஒடுக்கம் தீர்மானிக்கிறது (பக்.47&48) என்கிறார் ஜேம்ஸ் லவ்லாக்.

“ஆக்சிஜன் செறிவைக் கொண்ட வளிமண்டலத்தில் புல் அல்லது காட்டுத்தீக்கான சாத்தியக்கூறு மின்னல் அடித்தல் அல்லது தன்னிச்சையான எரியும் தன்மையால் இயற்கையான தீ ஏற்படுகிறது. இயற்கையான புதை படிம எரிபொருள்களில் உள்ள ஈரப்பதத்தின் அளவைப் பொருத்துதான் இவற்றின் சாத்தியக்கூறு உள்ளது”, (பக்.109)

“அமிலத்தன்மையைத் தாங்கிக்கொள்ளக்கூடியதாக உயிர் இருக்க முடியும். நமது இரைப்பைகளில் உள்ள செரிமான நொதிகள் அதற்கு சாட்சியாகும்”, (பக்.115)

“இந்த இயற்கையான உலகில் அம்மோனியா மற்றும் அமிலங்கள் சமநிலையில் இருப்பது மழையானது அமிலத்தன்மை மற்றும் காரத்தன்மை கொண்டதாக இல்லாமல் (நடுநிலைத்தன்மை) இருப்பது உண்மையில் நாம் பெற்ற பேறாகும். இந்த சமநிலை கையா தன்னாள்வியல் கட்டுப்பாடு முறையினால் பேணப்படுகிறது என கருதினால், அம்மோனியா உற்பத்திக்கான ஆற்றல் செலவு ஒட்டுமொத்த ஒளிச்சேர்க்கை கணக்கிலிருந்து எடுத்துக்கொள்ளப்படும்”, (பக்.116)

Gaia – Earth Goddess by Maja Miljkovic on Dribbble

ஓசோன் காலியாதல் மெதுவாக நிகழ்கிற ஒரு செயல்முறை. எனவே இதற்குப் போதுமான நேரம் இருக்கிறது; பீதியடைய வேண்டியதில்லை என்றும் சொல்கிறார். (பக்.162)

“கார்பன் டை ஆக்சைடு போலவே நீராவியும் பசுமை இல்ல வாயுக்கான பண்புகளைக் கொண்டிருக்கிறது”, (பக்.122)

“நாம் ஒரு விவேகமான மற்றும் சிக்கனமான தொழில்நுட்பத்தினை சாதித்து கையாவின் பிறபகுதியுடன்  ஒத்திசைவாக வாழலாம். பிற்போக்குத்தன்மை கொண்ட ‘இயற்கையை நோக்கி திரும்புதல்’ என்ற பிரச்சாரத்தைவிட தொழில்நுட்பத்தினை தக்கவைத்துக் கொண்டு அதனை மாற்றத்திற்குட்படுத்துவதன் மூலம் இந்த இலக்கினை சாதிக்க வாய்ப்பிருப்பதாக நான் கருதுகிறேன். உயர்மட்ட தொழில்நுட்பம் என்பது மொத்தத்தில் எப்போதும் ஆற்றல் சார்ந்ததாக இருக்குமென்பதில்லை”, (பக்.163)  என்று பல்வேறு கருத்தமைவுகளைக் பட்டியலிட்டு தனது கருதுகோளான ‘கையா’வை வலுவூட்டும் செயல்களில் ஈடுபடுகிறார்.

  • அனைத்து நிலம் சார்ந்த வாழ்க்கைக்கான மாறாத நிலைமைகளைப் பேணும் தன்மை,
  • மையத்தில் கையா உயிராதாரமான அங்கமாகவும் புறத்தே பயன்படுத்தத்தக்க அல்லது தேவையற்றவைகளும் காணப்படுகின்றன,
  • மோசமான நிலையை நோக்கிச் செல்கிற மாற்றங்களில் கையாவின் எதிர்வினை தன்னாள்வியல் விதிகளுக்கு உட்பட்டது,

ஆகிய மூன்றையும் கையாவின் முக்கிய அம்சங்களாக அடையாளம் காட்டுகிறார் லவ்லாக். (பக்.176)

“பெரியளவிலான அணு ஆயுதப் போரானது அடிக்கடி சித்தரிக்கப்படுவதுபோல உலகளாவிய சீரழிவாக இருக்காது என்றே தோன்றுகிறது. இது பெரியளவில் கையாவை பாதிக்காது”, (பக்.75)

தொழிற்துறையின் லாபத்தின் ஒருபகுதியை கழிவைச் சுத்திகரிக்கக் கோருவதன் மூலம் வளர்ச்சியில் இழப்பு ஏற்படுகிறது (பக்.178), பூச்சிக்கட்டுப்பாடு உயிர்க்கோளத்திற்கு எதிரான ஆயுதங்கள் என்ற குற்றச்சாடு சூழலியல் ஆதாரங்களின் அடிப்படையில் வைக்கப்படவில்லை, அமெரிக்காவின் அலாஸ்கா பைப்லைன் குறைபாடுடையது என்பதும் உணர்ச்சிவசப்பட்ட ஒன்று (பக்.179) என உதாரணங்களைப் பட்டியலிடுபோது இதன் சாய்வை நம்மால் எளிதாகப் புரிந்துகொள்ள முடிகிறது.

“மனிதனின் குறிப்பிடத்தக்க பண்பு என்பது அவனது மூளையின் அளவல்ல; (அது ஒன்றும் டால்பின் மூளையை விட பெரிதல்ல); ஒரு சமூக விலங்காக அவனது தளர்வான மற்றும் முழுமையற்ற வளர்ச்சியுமல்ல; அல்லது பேச்சுக்கலை அல்லது கருவிகளை பயன்படுத்தும் திறனுமல்ல. இந்த அனைத்து விஷயங்களின் இணைவில் அவன் ஒரு புதிய பொருளை உருவாக்கியிருக்கிறான் என்பதால்தான் குறிப்பிடத்தக்கவான இருக்கிறான்”, (பக்.183)

“நினைவக வங்கிகள். எல்லையற்ற உணர்வி வரிசைகள், இரண்டாம் நிலை உபகரணங்கள் மற்றும் பிற எந்திரங்களோடு நமது மூளைகளை ஒப்பிட முடியும். முரணிலையாக, புறஞ்சார்ந்த தகவல் தொடர்பற்ற, ஒன்றோடொன்று தளர்வாக, இணைக்கப்பட்ட பெரியளவிலான கணிப்பொறிகளைக் கொண்ட தொகுதிகளைப் போன்றது திமிங்கிலத்தின் மூளைகள்”, (பக்.205)

“ஒருவேளை, எதிர்காலத்தில் கையாவோடு கூட்டாக இருக்கப்போகிற குழந்தைகள், சமுத்திரத்தில் காணப்படும் மிகப்பெரிய பாலூட்டிகளுடன் ஒத்திசைவாக வாழ்ந்து ,ஒரு காலத்தில் குதிரை ஆற்றல் பயன்படுத்தப்பட்டதுபோல, மிக வேகமாகப் பயணிக்க திமிங்கிலத்தின் ஆற்றலை ஒரு நாள் பயன்படுத்துவார்கள்”, (பக். 205) என்று நூலை நிறைவு செய்கிறார் ஜேம்ஸ் லவ்லாக்.

“ஒவ்வொன்றுக்கும் தக்க காலம் இருக்கிறது; இந்த சொர்க்கத்திற்கு கீழான ஒவ்வொரு நோக்கத்திற்கும் ஒரு நேரம் இருக்கிறது பிறப்பதற்கும்; இறப்பதற்கும்; விதைப்பதற்கும்; என்ன விதைக்கப்பட்டதோ அதனைப் பறிப்பதற்கும்”, (பக்.193) என்ன, கீதா உபதேசம் போலிருக்கிறதா? இப்படித்தான் ‘கையா’ கருதுகோள் நம்மை வழிநடத்துகிறதா?

James Lovelock at 100: “My life has been one mass of visions”

“கையாவினுள் வாழ்வதற்கென பட்டியலிடப்பட்ட விஷயங்கள் என எதுவும் கிடையாது.; விதித்தொகுப்புகளும் கிடையாது. ஆனால் நாம் ஒவ்வொருவருடைய வெவ்வேறான செயல்களுக்கும் விளைவுகள் மட்டும் நிச்சயம் இருக்கின்றன”, (பக்.193)

வரைமுறைகள், விதிகள் கிடையாது; எப்படியும் இயங்கலாம். ஆனால் விளைவுகளும் மட்டும் உண்டு; அதற்கும் யாரும் பொறுப்பாக வேண்டியதில்லை என்பதாக இருக்கிறது இதன் புரிதல். வளர்ச்சிக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் இடையேயான போராட்டத்தில் பிறந்தவளான ‘கையா’ மனிதச் செயல்பாடுகளைப் புறந்தள்ளுவதன் மூலம் சூழல் பாதுகாப்பைக் கைவிட்டு வளர்ச்சியின் பக்கம் சாய்வதாகவே நினைக்கத் தோன்றுகிறது.

இவர் ‘கையா’ குறித்து  1979 – 2009 காலகட்டத்தில் பல நூல்களை எழுதியுள்ளார். 2009 இல் அவர் எழுதிய நூல் ‘The Vanishing Face of Gaia: A Final Warning: Enjoy It While You Can’ என்பதாகும்.  ‘கையாவின் அழியும் முகம்: இறுதி எச்சரிக்கை: இருக்கும் வரை மகிழ்ந்திரு’ என்ற தலைப்பே அவரிடம் நிகழ்ந்த மாற்றத்திற்கான அறிகுறியாகக் கொள்ளலாமா?

மொத்தத்தில் ‘கையா’ அறிவியலும் மெய்யியலும் கலந்த கலவையாக முன்வைக்கப்படுகிறாள். விதிப்படி நடக்கும் என்பதைப்போல சூழல் பற்றிய கவனமின்றியும் எச்சரிக்கை உணர்வுடனும் இருக்க வேண்டிய அவசியத்தை மறுப்பது ‘கையா’ வின் இறுதிக்காலத்திற்கு இட்டுச்செல்லும்தானே!  இதுவும் இயல்பாக தன்னாள்வியல் (Cybernetics) நிகழ்வாக எடுத்துக்கொள்ள வேண்டியதுதானா?

Gaia (Earth) – 101 Lessons on Greek and Roman Mythology

கடினமான அறிவியல் விளக்கங்களுடன் எழுதப்பட்ட இந்நூலைப் புரிந்துகொள்ள மொழிபெயர்ப்பு எளிமையாக இருத்தல் நல்லது. எழுத்துப்பிழைகளும் வல்லினம் மிகுமிடங்களும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

 

நூல் விவரங்கள்:

கையா (GAIA) உலகே ஓர் உயிர் (வளர்ச்சிக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் இடையேயான போராட்டத்தில் பிறந்தவள்)

ஜேம்ஸ் லவ்லாக்

(தமிழில்) சா. சுரேஷ்

வெளியீடு: பாரதி புத்தகாலயம்

முதல் பதிப்பு: டிசம்பர் 2016

பக்கங்கள்: 208

விலை: ரூ. 160

 தொடர்பு முகவரி: 

 பாரதி புத்தகாலயம்,

7, இளங்கோ சாலை,

தேனாம்பேட்டை,

சென்னை – 600018.

 தொலைபேசி: 044 24332424, 24332924, 24356935

மின்னஞ்சல்: [email protected]

இணையம்: www.thamizhbooks.com

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *