தமிழின் முன்னோடி பதிப்பகங்களில் ஒன்றான ‘தமிழ்ப் புத்தகாலய’த்தின் நிறுவனர் கண.முத்தையா. இவர், 1913ல் சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி ஜமீனான கண்ணப்பனுக்கு மகனாகப் பிறந்தவர். தந்தையின் மறைவினால் மெட்ரிக் வரையே படித்தார். தனது 25ஆவது வயதில் வணிகம் செய்வதற்காக பர்மாவிற்குச் சென்றார். அங்கே, ரங்கூன் அருகேயுள்ள பரம்பை உயர்நிலைப் பள்ளியில் நிர்வாகப் பொறுப்பில் இருந்தார். அப்போது நேதாஜியின் ‘இந்திய தேசிய இராணுவ’த்தில் அதிகாரியாகப் பணியாற்றியார்.
பின்னர் சென்னைக்கு வந்து ‘தமிழ்ப் புத்தகாலயம்’ தொடங்கி பதிப்பகத் தொழிலில் கால் பதித்தார். தொடக்கத்தில், இடதுசாரி அரசியல் நூல்களை அதிகமாக வெளியிட்டார். பிறகு, இலக்கிய நூல்களை பெருமளவில் வெளியிடத் தொடங்கினார். பதிப்பகத் தொழிலில் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவராக தனிமுத்திரை பதித்தார்.
80ஆவது வயதில் உடல்நலக் குறைவின் காரணமாக, தனது மருமகனும் எழுத்தாளர் அகிலன் மகனுமான அகிலன் கண்ணனிடம் பதிப்பகத்தை ஒப்படைத்துவிட்டு, திருவல்லிக்கேணி, துளசிங்கப் பெருமாள் கோயில் தெருவில் உள்ள தனது இல்லத்தில் ஓய்வில் இருந்தார். அவ்வில்லத்தில் அவரைச் சந்தித்துச் சில நிமிடங்கள் பேசினேன். பெரும்பாலும் படுத்தபடியும், கொஞ்ச நேரம் சாய்வாக அமர்ந்தும் பேசிக்கொண்டிருந்தார்.
தமிழ்ப் புத்தகாலயத்தை எந்தச் சூழ்நிலையில் தொடங்கினீர்கள்?
நான், ‘தமிழ்ப் புத்தகாலயம்’ தொடங்கியதை ஒரு வகையில் விபத்து என்றே கூறவேண்டும். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் இயங்கிய ‘இந்திய தேசிய இராணுவம்’ பர்மாவில் 1945 மே மாதம் சரணடைந்தபோது, அதில் அதிகாரியாக பணியாற்றிய நானும் சரணடைய வேண்டியதாயிற்று. சரியாக ஒரு வருட சிறை வாசகத்துக்குப் பிறகு 1946 மே மாதம் நாங்கள் விடுதலையாகி கல்கத்தாவில் இறக்கிவிடப்பட்டோம்.
அப்போது என் கையில் ஒரு பைசாகூட கிடையாது. அந்த நிலையில் சில நண்பர்களின் உதவியால் சென்னைக்கு வந்து சேர்ந்தேன். ‘சக்தி’ வை.கோவிந்தன், ஏ.கே.செட்டியார், முல்லை முத்தையா ஆகியோர் யோசனையின்படி ‘தமிழ்ப் புத்தகாலயம்’ தொடங்கினேன். ஏற்கனவே, பர்மாவில் இருக்கும்போது, பெரும் நஷ்டத்தில் போய்க் கொண்டிருந்த ‘ஜோதி’ பத்திரிகையை நான் பொறுப்பேற்று லாபகரமாக கொண்டுவந்தேன். அந்த அனுபவமும் என் பதிப்பகத் தொழிலுக்கு கை கொடுத்தது.
‘ஜோதி’ பத்திரிகை அனுபவம் பற்றி சொல்லுங்கள்…
அது ஓர் அரசியல் மாத இதழ். வெ. சாமிநாத சர்மா அவர்களின் அரசியல் கருத்துகளைப் பரப்புவதை மட்டுமே கவனத்தில் கொண்டு வெளியாகியது. சுமார் 40 பேர் முதலீட்டில் 1939ல் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பத்திரிகை ஆயிரம் பிரதிகள் மட்டுமே அச்சடிக்கப்படும்.
அந்த ஆயிரத்திலும் அறுநூறுக்கு மேல் விற்காது. இதனால் ஒரு வருடத்துக்குள்ளாகவே நஷ்டம் ஏற்பட்டது. முழுக்க முழுக்க ஓர் அரசியல்வாதியின் கருத்துகளை மட்டுமே வெளியிடும் தமிழ்ப் பத்திரிகையை யார்தான் வாங்கிப் படிப்பார்கள்?
‘ஜோதி’ பத்திரிகையில் நானும் ஒரு முதலீட்டாளன். பத்திரிகையின் போக்கை என்னால் சகிக்க முடியவில்லை. “பத்திரிகையில் சீர்திருத்தம் செய்யவேண்டும். அரசியலுடன் இலக்கியத்தையும் சேர்த்து வெளியிட வேண்டும். மக்களின் விருப்பத்திற்கேற்ப ஜனரஞ்சகமான Light reading கொடுத்தால்தான் அதிக விற்பனையை எதிர்பார்க்க முடியும்’’ என்றெல்லாம் கருத்து தெரிவித்தேன்.
முதலீட்டாளர்கள் யாருக்கும் இலக்கியச் சிந்தனையோ, இலக்கியத்தின் மீது ஈடுபாடோ விருப்பமோ கிடையாது; வெறும் விற்பன்னர்கள் அவ்வளவுதான். நான் என் கருத்தைச் சொன்னதும், கோபமடைந்த எல்.நடேசன் தனது இயக்குநர் பொறுப்பை ராஜினாமா செய்தார். பத்திரிகையை என்னிடம் ஒப்படைத்து “லாபகரமாக நடத்திக்காட்டுங்கள் பார்க்கலாம்’’ என்று சவால் விட்டார்.
நான் ‘ஜோதி’ இதழ் இயக்குநரான பிறகு நிர்வாகத்திலும், இதழ் அமைப்பிலும், செய்திகளிலும் நிறைய மாற்றங்களைச் செய்தேன். பர்மாவில் தமிழ்ப் பத்திரிகைகளுக்கு விளம்பரம் கிடைக்காது. அதனால், முழுக்க முழுக்க விற்பனையை மட்டுமே நம்பி செயல்பட்டேன். ‘ஜோதி’ பத்திரிகைக்கென்று தனி அச்சகமே இருந்தது. அதில் மாதத்தில் ஆறு நாட்களுக்கு மட்டுமே பத்திரிகை வேலை நடக்கும். மீதமுள்ள 24 நாட்களும் பூட்டியேதான் இருக்கும். அந்த நாட்களில் வெளி வேலை செய்ய ஏற்பாடு செய்தேன். அதில்கூட தமிழ் வேலை அதிகம் கிடைக்காது. ஆங்கிலம்தான். இது போன்ற என்னுடைய சில சீர்திருத்தங்களால் ‘ஜோதி’ இதழ் நஷ்டத்திலிருந்து மீண்டு லாபகரமாக இயங்கத் தொடங்கியது.
1941 பிப்ரவரியில் நடந்த யுத்தக் குண்டுவெடிப்பில் அச்சகம், பத்திரிகை அலுவலகம் அனைத்தும் கருகிச் சாம்பலாகிவிட்டன.
‘தமிழ்ப் புத்தகாலயம்’ மூலமாக வெளியிட்ட முதல் புத்தகம் எது?
ராகுல் சாங்கிருத்யாயன் எழுதிய ‘சாம்ய வாத்ஹி ஹயும்’ என்ற நூலின் எனது தமிழாக்கமான ‘பொதுவுடைமைதான் என்ன?’ என்ற நூல்தான் எங்கள் முதல் வெளியீடு. 1946 டிசம்பரில் வெளியாயிற்று. அப்போது அலுவலகம் ‘லஸ்’ஸில் இருந்தது. (தனது ‘முடிவுகளே தொடக்கமாய்’ எனும் தன்வரலாறு நூலில் கண.முத்தையா நேதாஜியின் ‘புரட்சி’தான் தமிழ்ப் புத்தகாலயத்தின் முதல் வெளியீடு என்று குறிப்பிட்டிருக்கிறார். எனது இச்சந்திப்புக்குப் பிறகு, ஒரு நண்பர் தினந்தோறும் கண.முத்தையாவைச் சந்தித்து, அவர் சொல்லச் சொல்ல எழுதப்பட்ட நூல் அது).
‘பொதுவுடைமைதான் என்ன?’ நூலை எப்போது, எந்தச் சூழ்நிலையில் தமிழாக்கம் செய்தீர்கள்?
நான் சிறையில் இருந்த ஓராண்டு காலத்தில் ராகுல்ஜி எழுதிய ‘சாம்ய வாத்ஹி ஹயும்’ , ‘வோல்கா ஸே கங்கே’ ஆகிய இரண்டு நூல்களையும் படிக்க நேர்ந்தது. (அந்தச் சிறைவாச நாட்கள் அப்படி யொன்றும் கொடுமையானதாக இல்லை). அப்போது பொழுதுபோக்காக எந்தவித நோக்கமும் இல்லாமல் அந்த இரண்டு நூல்களையும் ‘பொதுவுடைமைதான் என்ன?’ , ‘வால்கா முதல் கங்கை வரை’ என தமிழில் மொழிபெயர்த்து கையெழுத்துப் பிரதிகளாக வைத்திருந்தேன்.
‘தமிழ்ப் புத்தகாலயம்’ தொடங்கப்பட்டபோது முதல் நூலாக, ராகுல்ஜியின் ‘பொதுவுடைமைதான் என்ன?’ என்ற எனது மொழிபெயர்ப்பு நூலையே வெளியிடலாம் எனக் கருதி, அதன் மூலநூல் வெளியீட்டாளரான ‘கித்தாப் மஹால்’ நிறுவனத்ததுக்கு கடிதம் எழுதினேன். முதலில் அவர்கள் ஒப்புதல் கொடுத்தாலும், பிறகு ஏனோ, ‘அந்த உரிமை எங்களுக்கு இல்லை. நூலாசிரியருக்கே உண்டு. அவரைத் தொடர்பு கொள்ளுங்கள்’ என்று கடிதம் எழுதி விட்டார்கள்.
அதன்படி நூலாசிரியர் ராகுல் சாங்கிருத்யாயனைத் தொடர்பு கொண்டேன். அவர் “தமிழாக்கத்தை எனக்கு அனுப்பி வையுங்கள்’’ என்று கூறினார். தமிழாக்கத்தை வாங்கி இவர் என்ன செய்யப் போகிறார்? என்ற சந்தேகத்தோடு அனுப்பி வைத்தேன். ஒரு வாரத்தில் அவரிடமிருந்து ஒப்புதல் கடிதம் வந்தது. அக்கடிதத்தின் கீழே “குறிப்பு: எனக்குத் தமிழ் தெரியும். திருமழிசையில் மூன்று ஆண்டுகள் தங்கி படித்திருக்கிறேன்’’ என்று எழுதி கையெழுத்திட்டிருந்தார். இதைப் படித்தபோது நான் எவ்வளவு மகிழ்ச்சியும் பெருமையும் அடைந்திருப்பேன் என்பதை நீங்களே உணர்ந்து கொள்ளலாம். அந்த நூல் தமிழ் வாசர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இன்னொரு நூலான ‘வால்கா முதல் கங்கை வரை’ நூலை வெளியிட ராகுல்ஜியிடம் ஒப்புதல் கேட்டபோது “உங்கள் மொழிபெயர்ப்பாக இருந்தால் தாராளமாக வெளியிடுங்கள்’’ என்று கூறி விட்டார். அந்நூலைப் போன்ற சிறந்த நூல் இதுவரை உலகத்தின் எந்த மொழியிலும் தோன்றவில்லை என்று பாராட்டப்படுகிறது.
(‘வால்காவிலிருந்து கங்கை வரை’ நூல் வெளிவந்த காலத்தில், பெரும்பாலான எழுத்தாளர்கள், இடதுசாரி சிந்தனையாளர்கள் கைகளில் அந்தப் புத்தகம் இருக்கும். அந்தப் புத்தகத்தை கைகளில் வைத்திருப்பதையே அவர்கள் பெருமையாகக் கருதினார்கள். தங்களுக்கான அடையாளமாகவும் நினைத்தார்கள் என்று எழுத்தாளர் வல்லிக்கண்ணன் ஒரு முறை என்னிடம் சொன்னார்)
அதன்பிறகு நேதாஜியின் ‘புரட்சி’, ஜூலியஸ் பூஷிக்கின் ‘தூக்குமேடைக் குறிப்பு’ ,
மாசேதுங்கின் ‘கலையும் இலக்கியமும்’ லெனின், ஸ்டாலின் நூல்கள், கார்க்கியின் கட்டுரைகள் – அதாவது கார்க்கியின் கதைகளை நிறையப் பதிப்பகங்கள் வெளியிட் டிருக்கிறார்கள்.
ஆனால், கார்க்கியின் அரசியல் கட்டுரை களைத் தமிழ்ப் புத்தகாலயம் மட்டும்தான் வெளியிட்டது. இப்படி 1048-49 ஆண்டுகளில் கம்யூனிஸ்ட் புத்தகங்கள் பலவற்றை வெளியிட்டோம்.
புதுமைப்பித்தன் நூல்களை வெளியிட்டிருக்கிறீர்கள். அவருடன் ஏற்பட்ட நட்பு…?
அப்போது நான் ‘லஸ்’ஸில் இருந்தேன். அவர் மயிலாப்பூரில் வசித்தார். ஆகவே, இருவரும் அடிக்கடி சந்தித்துப் பேசும் வாய்ப்பு அதிகம் கிடைத்தது. அவர் சிறுகதைத் தொகுப்பை அவர் வாழ்நாளிலேயே வெளியிட்டு சிறப்பித்திருக்கிறேன்.
அவரை மட்டுமல்ல, பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை போன்றவர்களின் தொகுப்புகளையும் வெளியிட்டு சிறப்பித்திருக்கிறேன்.
அப்போதுதான் கு.அழகிரிசாமி, தொ.மு.சி.ரகுநாதன், சாமி.சிதம்பரனார், நா.பார்த்தசாரதி, அகிலன், ஜெயகாந்தன் என ஒரு தரமான எழுத்தாளர் கூட்டமே தமிழ்ப் புத்தகாலயத்தில் இணைந்தது.
தமிழ் எழுத்தாளர்கள் தமிழ்ப் புத்தகாலயத்தை நாடி வந்ததற்கான காரணம் என்ன?
தமிழ்ப் புத்தகாலயத்தில் புத்தகம் வெளியிட்டால் நிச்சயமாக விருது கிடைக்கும் என்றொரு நம்பிக்கை நம் எழுத்தாளர்களிடம் உண்டு. ஏறத்தாழ எங்கள் எழுத்தாளர்கள் எல்லோருக்கும் அரசு விருதுகள் கிடைத்துள்ளன.
மேலும், நாங்கள், பதிப்பாளர் – எழுத்தாளர் என்கிற பாகுபாடு இல்லாமல் ஒரே குடும்பமாக வாழ்ந்து வருகிறோம். அதேசமயம் ‘ராயல்டி’யைப் பொறுத்தவரையில் மற்ற பதிப்பகத்தார் எப்படியோ, நாங்கள் இன்றுவரை உண்மையாக நடந்து கொண்டிருக்கிறோம்.
ஒருமுறை, சாலய் இளந்திரையன் டெல்லியில் இருக்கும்போது, “எனக்கு வருடந்தோறும் ஏப்ரல், அக்டோபர் மாதங்களை தமிழ்ப் புத்தகாலயம் அனுப்பும் ‘ராயல்டி’தான் ஞாபகப் படுத்தும்’’ என்று குறிப்பிட்டார்.
சமீபத்தில், சென்னை ‘கிறித்துவ இலக்கிய சங்க’ (சி.எல்.எஸ்-)த்தின் வருடாந்திரக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களிடம் “உங்கள் நூற்களை எங்களுக்குத் தாருங்கள். நாங்கள் வெளியிடுகிறோம்’’ என்று ஒரு பதிப்பக நிறுவனத்தினர் கேட்டுக்கொண்டபோது, “என் நூல்கள் தமிழ்ப் புத்தகாலயத்தில் வெளிவருவதையே நான் விரும்புகிறேன்’’ என்று அந்த மேடையிலேயே பகிரங்கமாக அறிவித்தார். இப்படியொரு தனிச்சிறப்பு தமிழ்ப் புத்தகாலயத்துக்கு உண்டு.
கண.முத்தையா, 1997 நவம்பர் 12ல் இயற்கை எய்தினார். அவரது பதிப்புப் பணியை அவரது குடும்ப வாரிசுகள் மேற்கொண்டு வருகின்றனர்.
சந்திப்பு : சூரியசந்திரன்