காந்தி அம்பேத்கர் மோதலும் சமரசமும் – நூல் அறிமுகம்
நூலின் தகவல்கள் :
நூல் : காந்தி அம்பேத்கர் மோதலும் சமரசமும்
ஆசிரியர் : அருணன்
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
முதல் பதிப்பு : ஆகஸ்ட் 2003
ஏழாம் பதிப்பு : மே 2024
பக்கம் : 48
விலை : ரூ.45
நூலைப் பெற : thamizhbook.com
ஆங்கில ஏகாதிபத்தியத்தில் கீழ் அடிமைப்பட்டுக் கிடந்த இந்திய மக்களை ஒன்றுபடுத்தி விடுதலைக்காக போராடிய வரலாற்றின் ஒரு நிகழ்வாக அமைந்துள்ள பூனா ஒப்பந்தம் பற்றிய கட்டுரைத் தொகுப்பு இது.
200 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியா இங்கிலாந்து நாட்டிற்கான உற்பத்தி மையமாகவும் அடிமை வணிகத்தை ஊக்குவிக்கும் தளமாகவும் அமைந்திருந்த வேளையில் எவ்விதமான கேள்விகளுக்குள்ளும் சிக்கிக் கொள்ளாமல் மக்கள் விழிப்புணர்வை மறந்திருந்து வாழ்ந்து கொண்டிருந்தனர். அத்தகைய சூழலில் அவர்களை ஒன்றுபடுத்தி விடுதலைக்காகப் போராடுவதற்கான வழிமுறையை ஏற்படுத்திக் கொடுத்து எல்லா மக்களிடமும் சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தியவர் காந்தியடிகள்.
இந்தியா முழுமைக்கும் ஒரே தலைவராக பார்க்கப்பட்டவர் காந்தியடிகள். இந்திய மக்களுக்குள் இனம் ஜாதி வர்க்க பேதம் என்ற அடிப்படையில் பல விதமான வேற்றுமைகள் இருந்தபோதிலும் அனைவராலும் தலைவராக மதிக்கப்பட்ட மாண்புடையவர் காந்தியடிகள்.
காலம் காலமாக ஆண்டான் அடிமைக்குள் அகப்பட்டு முதலாளிகளுக்கு சேவகம் செய்யும் அடிமைகளாகவும் விலங்குகளை விட கீழ்த்தரமாக நடத்தப்படும் மனிதர்களாகவும் சாதிவெறிக்குள் ஊறிப்போன மனங்களின் அடிமைத்தனத்தில் மாட்டிக் கொண்ட ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டவர் அம்பேத்கார். அத்தகு சமுதாயத்தில் இருந்து பலவித இடையூறுகளைத் தாண்டி கல்வி ஒன்றே எல்லா அடிமைத்தனத்திலிருந்தும் மக்களை விடுவிக்கும் மிகப்பெரிய ஆயுதம் என்பதை உணர்ந்து தன்னை கல்வியின் வழியே உயர்ந்த நிலைக்கு எடுத்துச் சென்றவர் அம்பேத்கர்.
ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பாக அவர்களின் துயர் துடைப்பதற்காக பல்வேறு விதமான திட்டங்களை வகுத்தவர். ஒரு கட்டத்தில் காந்தியின் நோக்கும் அம்பேத்கரின் நோக்கும் எதிர் நிலைக்கு செல்ல இருவரின் பிடிவாதமும் மக்களின் மீதான கவனத்தின் வழியே தேசத்தை திரும்பி பார்க்க வைத்தன.
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு என தனித் தொகுதியும் இரட்டை வாக்குரிமையும் கிடைத்தால் மட்டுமே அவர்கள் சமுதாயத்தோடு ஒன்றிணைந்து சரிசமமாக வாழ முடியும் என்ற நிலைப்பாட்டிற்கு அம்பேத்கர் முடிவெடுத்திருந்தார். ஆனால் இந்து சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்கள் தனியாக பிரிக்கப்படும் போது அவர்கள் காலம் காலமாக கொடுக்கப்பட்டவர்களாகவே தொடர்வார்கள் என்ற அச்சத்தின் காரணமாக காந்தியடிகள் இரட்டை வாக்குரிமையையும் தனித் தொகுதியையும் வேண்டாம் என மறுக்கிறார்
இத்தகு சூழலில் ஆங்கில அரசாங்கம் இருவரின் கருத்துகளுக்கும் மதிப்பளிக்காமல் காங்கிரஸ் அம்பேத்கர் இடையிலான சிறு சச்சரவுகளை மிகப்பெரிய மோதலாக மாற்றி குளிர் காய்கிறது. ஒரு பக்கம் வட்டமேசை மாநாடு என்ற பெயரில் மக்களுக்கு நீதி வழங்குவதற்காக திட்டமளிக்கும் ஆங்கில அரசு மற்றொரு புறம் காந்தி அம்பேத்கர் இடையிலான மோதலை பெரிதுபடுத்தி காந்தியை சிறையில் அடைக்கிறது.
இச்சூழலில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நீதி கேட்கும் பொருட்டு அம்பேத்கர் இரட்டை வாக்குரிமையை வற்புறுத்துகிறார். அதே சமயம் காந்தியடிகள் உண்ணாவிரதத்தின் அடிப்படையில் சமரசத்தை விரும்பாமல் ஒடுக்கப்பட்ட மக்கள் இந்து சமூகத்தில் இருந்து தனித்துச் செல்வது ஆபத்தானது என்ற காரணத்தைக் கூறி அறப்போராட்டத்தில் ஈடுபடுகிறார்.
காந்தி அம்பேத்கர் இடையிலான சந்திப்பு இச்சூழலில் முக்கியத்துவம் பெறுகிறது. அச்சந்திப்பில் நிகழ்ந்தது என்ன?அதில் இடம்பெற்ற சரத்துக்களும் சமரசங்களும் எப்படி இந்திய மக்களுக்கு உதவின? ஒடுக்கப்பட்ட சமூகத்தின் முன்னேற்றத்திற்கு காந்தி அம்பேத்கர் சந்திப்பு எவ்வகையில் உதவி செய்வது? என்பது குறித்து விரிவான தகவல்களுடன் வெளிவந்திருக்கும் இந்த நூலின் வழியே அன்றைய சுதந்திரப் போராட்ட காலத்தை நாம் கண் முன்னே உணர முடிகிறது.
இந்திய மக்களின் மீது கொண்ட பாசமும் நேசமும் இந்திய விடுதலைக்கான போராட்டத்தை ஒருங்கிணைப்பதும் காந்தியடிகளின் தலையாயக் கடமையாக இருக்கும் பட்சத்தில் இந்து சமூகத்திற்குள் நிலவும் தீண்டாமையையும் அவர் எதிர்த்து பிரச்சாரம் செய்ய வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகிறார். இந்நிலையில் காந்தி அம்பேத்கர் இடையிலான சந்திப்பு இன்றைய காலகட்ட சரித்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.
ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கான உரிமைகளை ஓங்கி ஒலிக்கும் குரலாக எழுப்பிய அம்பேத்கர் தான் சட்ட அமைச்சரானதற்குப் பிறகு பொது நீரோட்டத்தில் அனைவருக்குமான தேர்தல் அமைப்பை அரசியலமைப்புச் சட்டத்தில் இயற்றுகிறார். இது போன்ற வரலாற்றுப் பின்னணியை சரித்திரத்தின் முக்கிய நிகழ்வுகளை இந்நூல் விரிவாக அலசி ஆராய்கிறது. இந்திய விடுதலைக்கான காங்கிரஸ் போராட்டத்தை மட்டுமல்லாமல் அம்பேத்கரின் போராட்டத்தையும் நமக்கு விரிவாக எடுத்துக் கூறுகிறது இந்த புத்தகம்.
நூல் அறிமுகம் எழுதியவர் :
இளையவன் சிவா
கி சிவஞானம் என்ற இயற்பெயர் உடைய இவர் அரசுப் பள்ளி ஆசிரியர்.பயணங்கள் வழியே இயற்கையை ரசிப்பதில் பெரு விருப்பம் உடைய இவரது கவிதைகள் ஆனந்த விகடன் கணையாழி கொலுசு புன்னகை ஏழைதாசன் தினத்தந்தி போன்ற இதழ்களிலும் நிறைய மின்னிதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. சாகித்திய அகாதமி நிறுவனம் வெளியிட்ட ஆயிரம் ஹைக்கூ தொகுப்பு நூலில் இவரது கவிதைகள் இடம் பெற்றுள்ளன. மின்மினிகள்(1999) தூரிகையில் விரியும் காடு((நூலேணி பதிப்பகம் கன்னிமாரா நூலக வாசகர் வட்டம் இணைந்து நடத்திய போட்டியில் முதல் பரிசு )(2022) தீராக் கனவை இசைக்கும் கடல் (2023)(தமிழ்நாடு கலை இலக்கிய மேடை வழங்கிய அசோகமித்ரன் படைப்பூக்க விருது) என மூன்று கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.