நூல் அறிமுகம்: காந்திக் காட்சிகள் – ச.சுப்பாராவ்

நூல் அறிமுகம்: காந்திக் காட்சிகள் – ச.சுப்பாராவ்



இந்த ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி வாசிக்க ஆரம்பித்த முதல் புத்தகம் டாக்டர். தி. சே. சேள. ராஜன் எழுதிய நினைவு அலைகள்.  தொடர்ந்து  அவர் எழுதிய தமிழ்நாட்டில் காந்தி என்ற புத்தகத்தைப்  படித்தேன். அதிலிருந்து காந்தியைப் பற்றிப் படிக்க ஆசை அதிகமாகி விட்டது.  அந்த வகையில் படிக்க எடுத்து வைத்திருந்த  காகா காலேல்கரின் காந்திக் காட்சிகளை நேற்றும், இன்றும் படித்தேன். படித்தேன் என்பதை விட பாராயணம் செய்தேன் என்றே சொல்ல வேண்டும்.  கல்கியின் மாந்தருக்குள் ஒரு தெய்வம் என்னிடம் இருக்கிறது என்றாலும், அதை இன்னும் படிக்கவில்லை. ஆனால், இந்தப் புத்தகத்தைப் படித்த போது கல்கி ஏன் இப்படி தலைப்பு வைத்தார் என்று புரிந்தது.  மஹாத்மா மாந்தருக்குள் ஒரு தெய்வம்தான்.

காந்தியுடன் கூடவே வாழ்ந்த பெரியவர் காகா காலேல்கர் காந்தியுடனான தனது அனுபவங்களை, சின்னச் சின்னதாக எழுதியிருக்கிறார்.  எல்லாம் ஒரு பக்கக் கட்டுரைதான். மொத்தம் 100 சின்னச் சின்னக் கட்டுரைகள். கட்டுரைகள் சிறியன என்றாலும், அவற்றின் விஷயங்கள் பிரும்மாண்டமானவை. நமது தலைமுறைக்கு ஓரிரு தலைமுறைகள் முன்பாக இப்படியொரு மாமனிதர் வாழ்ந்தாரா என்று வியக்க வைக்கும் குட்டிக் குட்டித் தகவல்கள்.

100 கட்டுரைகளையும் கூட சுருக்கமாகச் சொல்லிவிடலாம்தான். ஆனால் எனக்கு மிகவும் பிடித்த, நான் வியந்த சில விஷயங்களை மட்டும் பகிர்கிறேன்.

ஆண்ட்ரூஸ் என்று ஒரு வெள்ளைக்காரப் பாதிரியார். மதம் பரப்ப இந்தியா வந்தவர் காந்தியடிகளின் சீடராகி, அவருடனேயே தங்கிவிட்டார். அவர் காந்தியை மோகன் என்று அழைப்பாராம்.  காந்தியை பெயர் சொல்லி அழைக்கவும் ஒருவர் இருந்திருக்கிறார் ! காந்தி அவரை சார்லி என்று கூப்பிடுவாராம்.

காந்திக் காட்சிகள் - காகா காலேல்கர் | காந்தி - இன்று

காந்தி பெரிய எழுத்தாளர் என்று நாம் அறிவோம். கை வலித்தால் என் போன்ற எழுத்தாளன்கள் எழுதுவதை மூடி வைத்து விட்டு மொபைலை நோண்டப் போய்விடுவோம். மஹாத்மாவால் அப்படி இருக்க முடியுமா? அவர் வலது கைக்கு ஓய்வு கொடுத்து விட்டு இடது கையால் எழுத ஆரம்பித்து விடுவார் !  அவர் இடது, வலது கைகளில் மாறி மாறி எழுதியது அவரது கையெழுத்திலேயே அப்படியே அச்சாகி இருக்கிறது.  வலது, இடது கை எழுத்துகள் இரண்டிற்கும் வித்தியாசமே தெரியாதாம்.  உண்மையில் இடது கையில் எழுதியது இன்னும் திருத்தமாக அழகாக இருக்குமாம்.

காந்தி ஒரு சிறுவன் கொடுத்த புழுக்கை பென்சிலைத் தேடிய கதை என் சிறுவயதில் நான் படித்த ஆரம்பக் கதைகளில் ஒன்று. இன்றுதான் அந்தப் பொடியன் யார் என்று தெரிந்து கொண்டேன். சென்னையின்  நடேசன் அண்ட் கோ நிறுவனர், இந்தியன் ரிவ்யூ பத்திரிகையின் நிறுவனர், ஆசிரியர் ஜி.ஏ. நடேசன் அவர்களுடைய பையன்.

மற்றொரு சுவையான சம்பவம், ஒரு நாள் நன்கு நாகரீகமான உடை அணிந்த ஒரு புதுமணத் தம்பதி காந்தியடிகளின் ஆசி கோரி வருகிறார்கள். காந்தி, தான் அரிஜனங்களுக்காக நிதி திரட்டுவதால், தான் ஆசி வழங்க தட்சணை தரவேண்டும் என்கிறார். அவர்களை அழைத்து வந்தவர்  மாப்பிள்ளை எம்.சி.ராஜாவின் புதல்வர் என்கிறார். காந்திக்கு ஒரே சந்தோஷம். அப்படியா? சரி, நீங்கள் தட்சணை தரவேண்டாம், என்று மகிழ்ச்சியாக ஆசீர்வதிக்கிறார்.

இப்படி எத்தனை எத்தனையோ நிகழ்ச்சிகள். காந்திக் குல்லாய் உருவான கதை, சிறையில் தனக்கு சமைத்துப் போடும் கைதிக்கு ஆங்கிலம் கற்றுத் தருவது, சிறை அதிகாரிக்கு ஆட்டோகிராஃபில் it doesn’t cost to be kind என்று எழுதி கையெழுத்திட்டுத் தர, அன்றிருலிருந்து அந்த அதிகாரி கைதிகளை கொடூரமாக அடிப்பதை நிறுத்திக் கொண்டது என்று  நிறைய.. நிறைய… உண்மையாகவே மஹாத்மாதான்…

ramachandranwrites: காகா காலேல்கர் பிறந்தநாள் - டிசம்பர் 1
காகா காலேல்கர்

வெறும் தகவல்களாக, சுவாரஸ்யமான டிட்பிட்டுகளாக இல்லாமல்,  சின்னச் சின்ன கட்டுரைகள் என்றாலும் நம்மை ஆழமாக யோசிக்கச் செய்கின்றன. ஒரு கட்டுரையில் காந்தியடிகள் ஒரு வெளிநாட்டுப் பத்திரிகையாளருக்கு நேர்காணல் அளித்த கதை வருகிறது. அதில் பேட்டியாளர், “உங்களை அல்லும் பகலும், சிந்தனையில் ஆழ்த்தவதும், கவலைக்குக் காரணமாயிருப்பது விஷயம் என்ன? “ என்று கேட்கிறார்.

சிறிது நேரம் தாமதித்த மஹாத்மா, “படித்த மக்களிடையே கருணையுணர்ச்சி வறண்டு போயிருப்பது குறித்து நான் எப்பொழுதும் கவலை கொண்டிருக்கிறேன்,“ என்கிறார்.

படித்து முடித்துப் பல மணி நேரம் ஆனபின்பும், நான் இதைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறேன். காந்தியைப் படித்தால் ஒரு வேளை அந்த வறட்சி நீங்கலாம்.



காந்திக் காட்சிகள்

காகா காலேல்கர்

தமிழ்நாடு காந்தி நினைவு நிதி வெளியீடு

பக்கம் 212

மின்புத்தகமாகப் படித்ததால் விலை தெரியவில்லை. மன்னிக்கவும்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *