ஆர். ராதாகிருஷணன் எழுதிய காந்தி படுகொலை - நூல் அறிமுகம் | Gandhi Padukolai - R.Radhakrishnan - book review - https://bookday.in/

காந்தி படுகொலை – நூல் அறிமுகம்

காந்தி படுகொலை – நூல் அறிமுகம்

நூலின் தகவல்கள் : 

நூல் : காந்தி படுகொலை

பின்னணியும் வழக்கும்

ஆசிரியர் : ஆர். ராதாகிருஷணன்

வெளியீடு: சுவாசம் பதிப்பகம்

முதல் பதிப்பு : டிசம்பர் 2022.

பக்கம் :  208

விலை : 230

மகாத்மா காந்தியின் படுகொலையைப் பற்றிய முக்கியமான நூல் இது. உலகமே போற்றும் உத்தமர், ஏழை மக்களின் ஆபத்பாந்தவர், சமய நல்லிணக்கத்திற்காக தனது இறுதி மூச்சு வரை பாடுபட்டவர், இந்திய விடுதலைக்காக அகிம்சை முறையைப் பின்பற்றிப் போராடியவர், எந்தச் சூழலிலும் பொதுமக்களுக்கு இடையூறும் ஆபத்தும் வந்துவிடக் கூடாது என்ற உயரிய நோக்கில் தனது வாழ்க்கைப் பாதையை கட்டமைத்துக் கொண்டவர், எல்லா மக்களுக்குமான ஒற்றை நம்பிக்கையாக உயர்ந்து நின்றவர் என பலவிதமான பாராட்டுகளுக்கும் உள்ளான மகாத்மா காந்தி அவர்கள் படுகொலை செய்யப்படுகிறார். அதற்கான காரணம் என்ன? இது திடீரென்று நடத்தப்பட்ட செயலா? அல்லது திட்டமிட்டு செய்யப்பட்ட கொலையா என்பது குறித்து பல மொழிகளிலும் நூல்கள் வெளிவந்துள்ளன. அந்த வகையில் இந்த நூல் தனி கவனம் பெறுகிறது.

பல்வேறு விதமான தகவல்களையும் தரவுகளையும் சேகரித்து ஒவ்வொன்றும் அன்றைய நாட்டு நடப்புடன் ஒப்பிடப்பட்டு எவ்விதமான அரசியல் சார்புமின்றி எந்த ஒரு இயக்கத்தின் மீதான சார்பும் கொள்ளாமல் அன்றைய நிகழ்வை, வரலாற்றை உள்ளது உள்ளபடி சொல்கிறது இந்த நூல்.

சுமார் 200 ஆண்டுகளுக்கும் மேலாக ஆங்கிலேய ஆதிக்கத்தின் கீழ் அடிமையாக இருந்த இந்திய நாட்டை மீட்டெடுப்பதில் எத்தனையோ வீரர்களின் பங்கு அளவிட முடியாதது. அடிமைத்தனத்திலிருந்து மீண்டு எழுவதற்கு தென்னகத்திலிருந்து கிளம்பிய சுதந்திரப் போராட்டம் நாடு முழுவதும் பரவி பல்வேறு விதமான முறைகளில் பரவ ஆரம்பித்தது. ஆனால் தேசத்தில் மக்களை ஒரு குடையின் கீழ் கொண்டு வருவதற்கும் ஒற்றை சிந்தனைக்குள் கட்டமைத்து அவர்களை நேர் வழியில் நடத்திச் செல்வதற்கும் அன்றைய சூழலில் சிறந்த தலைவர் என்று யாரும் இல்லாத காரணத்தால் சில ஆண்டுகள் சுதந்திரப் போராட்டம் எந்த விதமான வழிகளில் செல்வது என்ற இலக்கின்றி பயணிக்க ஆரம்பித்தது

அந்நிலையில் மகாத்மா காந்தியடிகள் இந்திய தேசிய காங்கிரஸில் சேர்ந்து இந்தியா முழுவதும் அறியப்படும் ஒரு தலைவராக தன்னை கட்டமைத்துக் கொள்கிறார். உயரிய தலைவர்களின் வரிசையிலும் மக்கள் காந்தியடிகளை வைத்து வணங்கத்தக்க அளவு அவருடைய அரசியல் செயல்பாடுகளும் தனிமனிதச் செயல்பாடுகளும் உருவாகின்றன.

அதேசமயம் வன்முறையின் மூலமும் ஆயுதத்தின் மூலமும் போராட ஆரம்பித்தால் அது முதலில் அப்பாவி மக்களையே அதிகமாக பலி கொடுக்கும் என்று தெளிவாக உணர்ந்த காந்தி தனது‌‌‌ போராட்ட வழிமுறையாக அகிம்சை என்ற முறையில் போராட ஆரம்பிக்கிறார். எத்தனையோ விடுதலைப் போராட்ட வீரர்களை அடக்கு முறையிலும் பீரங்கி குண்டுகளாலும் துளைத்தெடுத்த ஆங்கிலேயர்கள் காந்தியடிகளை ஏதும் செய்ய முடியாமல் தவித்தனர்.

தனது ஒவ்வொரு போராட்டத்தையும் அகிம்சையின் வழியில் போராட ஆரம்பித்த காந்தியடிகள் ஆங்கிலேயர்களின் தந்திரத்தை முறியடிக்க முக்கியமான மூன்று பிரச்சனைகளை கையில் எடுக்கிறார். இந்த முஸ்லிம் ஒற்றுமை தீண்டாமை ஒழிப்பு மற்றும் மக்களிடையே அரசியல் விழிப்புணர்வு. இந்த மூன்று அடிப்படை பிரச்சனைகளை தீர்த்துக் கொண்டால் ஒவ்வொரு இந்தியனும் தன்னை உணர ஆரம்பித்து விடுவான். அப்படியான சூழலில் ஒவ்வொரு மக்களும் விழிப்படையும்போது ஆங்கிலேயர்கள் நிச்சயமாக இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்ற ஒரு கட்டத்திற்கு தள்ளப்படுவார்கள் என்று காந்தியடிகள் நினைத்தார்.

அதன் காரணமாக ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றுத் தருவது மட்டுமே முக்கிய நோக்கம் அல்ல. இந்தியர்களிடையே அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே முதன்மையானதாகக் கருதி மத நல்லிணக்கத்தை தான் செல்லும் ஒவ்வொரு இடங்களிலும் வற்புறுத்தினார்.

ஆனால் 1942 ஆம் ஆண்டிற்கு பிறகு அரசியல் நகர்வுகள் அவரின் சிந்தனை ஓட்டத்திலிருந்து மாறுபடுகின்றன. விடுதலைப் போராட்டத்திற்காக துவங்கப்பட்ட பல்வேறு கட்சிகளில் ஒன்றான முஸ்லிம் லீக் ஜின்னா அவர்களின் தலைமையில் வருகையில் முஸ்லிம்களுக்கென தனிநாடு கோரிக்கை வலுப்பெறுகிறது. அத்தகு சூழலில் மத நல்லிணக்கத்தை அறிவுறுத்தி காந்தியடிகள் இந்தியா துண்டாடப்படக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். ஆனால் அவரின் அத்தனை முயற்சிகளும் முறியடிக்கப்பட்டு ஜின்னா அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றப்பட்டு இந்தியா துண்டாடப்பட்டு சுதந்திரம் வழங்கப்படுகிறது.

அச்சமயம் 1944 ஆம் ஆண்டில் இருந்து இந்திய பிரிவினை பேசு பொருளாக மாறுகிறது. அந்நிலையில் காந்தியடிகள் முஸ்லிம்களுக்கு ஆதரவாகவும் இந்து முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தியும் நாடு முழுவதும் பலவிதமான நிகழ்வுகளில் வலியுறுத்துகிறார். இது இந்தியாவைச் சேர்ந்த ஒரு சில இந்து அமைப்பினர் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்துகிறது. பாகிஸ்தானில் இந்தியர்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பும் இல்லாத போது அவர்கள் பிரிவினையின் போது அகதிகளாக துரத்தி அடிக்கப்படுகிறார்கள். இந்துப் பெண்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.. இந்துக்கள் பாகிஸ்தான் முழுவதும் வேட்டையாடப்படுகிறார்கள்.

அதேசமயம் . இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம்களின் பாதுகாப்பை காந்தியடிகள் அரசின் மூலம் உறுதி செய்ய முயற்சிக்கிறார். இப்போது சூழல்கள் காந்தியடிகளுக்கு எதிராக திசை மாறுகிறது. இப்படியான ஒரு கொந்தளிப்பைப் பயன்படுத்தி கோட்சே மற்றும் அவரது கூட்டாளிகள் அவரை கொலை செய்வதற்கு திட்டமிடுகிறார்கள்.

அது முதல் முறையே வெற்றி பெற்றதா அல்லது அதற்கு பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டனவா? ஆயுதங்கள் எப்படி பெறப்பட்டன? நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு காவல்துறையினரின் தீவிர கண்காணிப்பை மீறியும் ஒரு தலை சிறந்த மனிதர் எவ்விதம் கொல்லப்படுகிறார் என்பதை இந்த நூல் மிக சிறப்பாகவும் வரலாற்றின் அடிப்படையிலும் எழுதப்பட்டுள்ளது.

வாசிக்கும் தருணங்களில் நாமே அன்றைய விடுதலைப் போராட்ட காலகட்டங்களில் நேரில் சென்று பார்த்தது போன்ற எழுத்துநடை நம்மை தீவிரமாக வாசிக்க வைக்கிறது. கடவுளாக வணங்கப்படும் அல்லது கடவுளின் ஸ்தானத்தில் வைத்து மக்களால் உயர்ந்த இடத்தில் கருதப்படும் காந்தியடிகள் என்ற மனிதன் கொலை செய்யப்படுவான் என்று மக்களோ அரசோ நினைத்துக் கூட பார்க்கவில்லை. இப்படி ஒரு சம்பவம் நிகழும் என்று காவல்துறையும் எதிர்பார்த்து இருக்கவில்லை. அதே சமயம் தனது கடைசி கால கட்டங்களில் காந்தியடிகள் காவல்துறையின் வேண்டுகோளுக்கு ஒத்துழைக்க மறுக்கிறார்.

1944க்கு பிறகு காந்தியடிகளுக்கு கொலை மிரட்டல்களும் அவரைக் கொலை செய்யும் திட்டமும் காவல்துறைக்குத் தெரிய வருகிறது. அப்பொழுது காந்தியடிகளின் ஒவ்வொரு பொதுக்கூட்டமும் அவரது பிரார்த்தனைக் கூட்டமும் கண்காணிக்கப்பட்டு அவருக்கு காவலர் பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்யப்படுகிறது. ஆனால் இவை அனைத்தையும் காந்தியடிகள் மறுக்கிறார். காவல்துறை பாதுகாப்பு எனக்கு இருந்தால் நான் இந்த நாட்டை விட்டு வெளியேறி விடுவேன் என்று காவல்துறையினரை மிரட்டுகிறார்.

காந்தியடிகளின் பிடிவாதம் அறிந்து அரசு செய்வதறியாது நிற்கிறது.தான் கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்கும் காந்தியடிகள் அதே கொள்கையினால் மரணத்தை தழுவுகிறார்.

இந்த நூலில் காந்தியடிகளைக் கொலை செய்வதற்குக் கூடிய கோட்சே மற்றும் அவரது நண்பர்கள் செய்த திட்டங்கள் பதிவாகவும் அன்றைய காலகட்டத்தில் எவ்விதமான வசதி வாய்ப்புகளும் இல்லாத சூழலிலும் ஆயுதங்கள் பெறப்பட்டு எவ்விதம் திட்டமிடப்பட்டது என்பதை சிறப்பாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவை இந்துக்களின் தேசமாக மாற்றுவதற்காக பத்திரிகைகள் ஆரம்பித்தும் பிரச்சாரங்கள் மேற்கொண்டும் வீரசாவர்கர் தலைமையிலான ஒரு அமைப்பு செயல்பட்டு வந்தது. அதில் தன்னை உறுப்பினராக சேர்த்துக் கொண்ட கோட்சே இந்தியா இந்துக்களுக்கு என்பதை ஒவ்வொரு இந்தியனும் உணர வேண்டும் என்ற அடிப்படையில் பத்திரிகைகளின் வாயிலாக தலையங்கங்களையும் கட்டுரைகளையும் எழுதுகிறார். அதேசமயம் காந்தியடிகளோ இந்தியா இந்துக்களுக்கு மட்டுமல்ல இதில் பல மதத்தைச் சேர்ந்த மக்கள் சமய நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் என்று விருப்பத்தின் அடிப்படையில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி கட்டுரைகள் எழுதுகிறார். மேடைகளில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது நடைபெற்ற பயங்கரமான வன்முறைகள் மற்றும் அதன் தொடர்ச்சியாக இந்துக்களின் மீது ஏற்பட்ட தாக்குதல்களும் கோட்சேவிற்கு ஆத்திரத்தையும் வெறியையும் உண்டாக்குகின்றன.

காந்தியடிகள் உயிரோடு இருந்தால் முஸ்லிம்களுக்கு ஆதரவாக செயல்பட்டு இந்தியா மேலும் துண்டாடப்படும். இந்தியாவில் இந்துக்களுக்கு பாதுகாப்பு இருக்காது என்ற நோக்கத்தில் கோட்சே காந்தியடிகளை கொலை செய்வதற்கு திட்டமிடுகிறார். ஒரு முறை அல்ல இரு முறை திட்டம் செயல்படுத்தப்பட்டு இரண்டாவது முறையே வெற்றி அடைகிறார்.

காந்தியடிகள் கொலை செய்யப்பட்டதன் பின்னணியையும் நடைபெற்ற வழக்கு எவ்விதமான தாக்கத்தை மக்களிடையே ஏற்படுத்தியது என்பதைப் பற்றியும் கோட்சேவின் வாக்குமூலம் ஏன் 30 ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்டது என்பது குறித்தும் விரிவான விளக்கங்களுடன் இந்த நூல் முழுமையான வரலாற்றை நாம் அறிந்து கொள்வதற்கும் வரலாற்றின் வழியே காந்தியின் வாழ்க்கைப் பாதையையும் கோட்சேவின் இந்துக்கள் மீதான கொள்கையையும் அறிய முடிகிறது.

எழுதியவர் :

இளையவன் சிவா



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *