நாம் அறிய வேண்டிய காந்தி - எஸ் வி வேணுகோபாலன் - Mahatma Gandhi -Gandhi we need to know - bookday article - S. V.Venugopalan - https://bookday.in/

நாம் அறிய வேண்டிய காந்தி – எஸ் வி வேணுகோபாலன்

நாம் அறிய வேண்டிய காந்தி – எஸ் வி வேணுகோபாலன்

 

வாழ்விக்க வந்த காந்தி
மகாத்மா நீ வாழ்க வாழ்க

என்பது காந்தியைப் பற்றிய வாழ்த்துப்பாவில் மகாகவி பாரதி எழுதிச்சென்றுள்ள முக்கிய வரி…. அடிமைப்பட்டுக் கிடைக்கும் இந்த தேசத்தை வாழ்விக்க வந்த காந்தி என்று முடித்திருப்பார். அதன் முந்தைய வரிகளைப் போய்ப் பார்த்தால், அதில் ‘மிடிமை மிஞ்சி’ என்ற சொற்கள் தட்டுப்படும். அடிமைத்தனம் மிகுந்து என்கிற வலியைத் தெரிவிக்கும் அந்த இடம் முக்கியமானது. ‘என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்’ என்கிற வரியை வேறொரு கவிதையில் கொண்டு வந்திருப்பார் மகாகவி. அடிமைத்தனத்தை ஏற்றுக் கொள்வது, சகித்துக் கொள்வது, கண்டும் காணாமல் இருப்பது என்றெல்லாம் சொல்லாமல், அடிமைத்தனத்தை நேசித்துக் கிடக்கின்றனர் மக்கள் என்கிற அவரது சாடல் கருத்தூன்றிக் கவனிக்க வேண்டியது. இந்த அடிமைத்தனத்தைக் கட்டிக்கொண்டு வாழ்ந்து மடியும் போக்கைத் தான், ‘தேடித் சோறு நிதம் தின்று’ எனத் தொடங்கும் மற்றொரு கவிதையில் அடுக்கிக் கொண்டுபோய் அப்படியான வேடிக்கை மனிதரைப் போல் நான் வீழ்வேன் என நினைத்தாயோ என்ற ஆவேசக் குரலையும் எழுப்பி இருப்பார்.

அடிமைத்தனத்திற்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டாமா என்பது தான் பாரதியின் கோபம். அடிமைத்தனத்தை வெறுக்கவும், விடுதலை உணர்ச்சியைத் தூண்டவும், எந்த இன்னல்கள் வந்தாலும் போராட வீதிக்கு வந்து திரண்டு நிற்கவும் முன்வருமாறு மக்களது உள்ளங்களோடு உரையாடல் நடத்திய முக்கியமான தலைவர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்று பார்க்க வேண்டும். அவரது மொழியை அறிந்திராத மக்கள் கூட லட்சக்கணக்கில் அவர் பயணம் செய்யும் ரயில் வழித் தடத்தின் நெடுக ராப்பகலாகக் காத்திருந்து தரிசித்து முழக்கம் எழுப்பி எழுச்சி பெற்றுத் திரும்பியது உலக அரசியலில் அசாதாரண நிகழ்வுகளின் வரிசையில் இருப்பது.

நாம் அறிய வேண்டிய காந்தி - எஸ் வி வேணுகோபாலன் - Mahatma Gandhi -Gandhi we need to know - bookday article - S. V.Venugopalan - https://bookday.in/

சாதி மத இன பேதங்களைக் கடந்து சக மனிதர்களை அன்போடு மதிக்க ஓயாது கற்பித்துக் கொண்டே இருந்தார் காந்தி. அவரது வாழ்க்கையே அவர் மற்றவர்களுக்குப் பாடம் நடத்திக் கொண்டிருந்த வகுப்பறை. ஒடுக்கப்பட்ட மக்கள் பால் அவரது இதயம் இருந்தது. அடுத்த பிறவியில் தாழ்த்தப்பட்ட பெற்றோருக்கு ஒரு பெண் குழந்தையாக நான் பிறக்க விரும்புவேன், அவர்கள் எதிர்கொள்ளும் அவமதிப்பு, அவமானம், கொடுமைகளை நான் அனுபவிக்க வேண்டும் என்று சொன்னார் அவர். மேட்டுக்குடியில் பிறந்தவர்கள் தங்களது முன்னோர்கள் செய்துள்ள சமூகக் கொடுமைகளை நேர் செய்யத் தாங்கள் இழிவானது என்று கருதும் வேலைகளை எல்லாம் இனி தாங்கள் செய்யவேண்டும் என்றார் மகாத்மா.

டாக்டர் அம்பேத்கர் அவர்களுக்கும் காந்திக்கும் இடையே நிறைய முரண்பாடுகளும், மாற்றுக்கருத்துகளும் நிலவின. ஆனால், அம்பேத்கரைப் பெரிதும் மதித்த காந்தி, சுதந்திர இந்தியாவின் முதல் அமைச்சரவையில் அவர் இடம்பெற வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தார். சமூக சீர்திருத்தங்களுக்கு முன்னுரிமை கொடுத்துக் கொண்டே இருந்தார். விடுதலைப் போராட்ட காலத்தில் ஏராளமான தலைவர்களை, அறிஞர்களை, கவிஞர்களை சந்திக்கக் கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் இன்னும் ஆரோக்கியமான சமூகத்தை அமைப்பதற்கான சிந்தனைகளை வளர்த்துக் கொள்வதற்குப் பயன்படுத்திக் கொண்டே இருந்தார்.

நாடு முழுவதும் பயணம் செய்தது மட்டுமல்ல, வெவ்வேறு வகை மனித மனங்களுக்குள்ளும் பயணம் செய்து பெற்ற அனுபவங்களில் இருந்து தனது பாதையை மேலும் செம்மையாக்கிக் கொண்டே செல்ல முயன்றவர் காந்தி. தனது பார்வையைத் திரும்பத் திரும்ப சரி செய்து கொண்டே செல்லவும், தனது கருத்துகளைத் திரும்பத் திரும்பச் செதுக்கிக் கொண்டே செல்லவும் அவர் வாழ்க்கை முழுக்கத் தன்னை முன்னிறுத்தியே பரிசோதனை செய்து கொண்டு இருந்தார்.எந்த ஒரு குறிப்பிட்ட விஷயத்திலும் தான் தொடர்ந்து பேசி வந்திருந்தாலும், எழுதி வந்திருந்தாலும் கடைசியாகக் கூறிய கருத்துகளே கணக்கில் கொள்ளவேண்டும், தனது முந்தைய மொழியை வைத்துத் தன்னை எடைபோட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார் அவர்.

நாம் அறிய வேண்டிய காந்தி - எஸ் வி வேணுகோபாலன் - Mahatma Gandhi -Gandhi we need to know - bookday article - S. V.Venugopalan - https://bookday.in/

தனக்கு வரும் கடிதங்களுக்குச் சளைக்காது பதில் எழுதிப் போட்டு வந்தவர். தனக்கு மாற்றுக்கருத்து உள்ளவர்களை மதித்தபடியே அவர்களோடு விவாதித்தவர் அவர். வெறுப்பற்ற உள்ளம் வாய்த்திருந்தது அவருக்கு. அதனால் தான், சுதந்திரம் கிடைத்த அந்த நொடியில் தில்லியில் இருந்து கொண்டாடிக் கொண்டிராமல், நவகாளியில் இந்து இஸ்லாமிய மக்களுக்கு இடையே கலவரம் தடுத்து நிறுத்தப்பட வேண்டுமென்ற உயரிய நோக்கில் தன்னை வருத்திக் கொண்டும், தாக்குதலைகளைப் புன்னகையோடு ஏற்றுக் கொண்டும் கண்ணாடிச் சில்லுகள், கழிவுகள் மீது நடந்துபோய் மன்றாடிக் கேட்டு மோதலை நிறுத்துவதில் மும்முரமாக இருந்தார் மகாத்மா. அவர் இறை நம்பிக்கையில் ஆழ்ந்திருந்தவர். ஆனால் தனது கடவுள் எல்லோருக்குமான கடவுள், தனக்குப் பிடித்த வடிவத்தில், தனக்குப் பிடித்திருந்த பெயரில் இருக்கிறது என்று கூறிக் கொண்டார்.

தனது உள்ளத்திற்கும், உலகிற்கும் நேர்மையாக இருந்தார். திறந்த புத்தகமாக இருந்தது அவரது வாழ்க்கை. கடையனுக்கும் கடைத்தேற்றம் என்ற ரஸ்கின் புத்தகம் அவரது இதயத்திற்கு நெருக்கமாக இருந்தது. அவரது உன்னத நோக்கம் அதை நோக்கிய நடையாக இருந்தது. அவரது கருத்துகளோடு யாரும் முரண்படலாம். ஆனால், அவரிடம் வஞ்சக நெஞ்சம் இருந்ததாக யாராலும் சொல்ல இயலாது. இப்படியான மனிதர் ஒருவர் இரத்தமும் சதையுமாக இவ்வுலகில் வாழ்ந்தார் என்று எதிர்கால உலகில் யாரும் நம்பக்கூட முடியாது என்று அதனால் தான் உலகப் புகழ் பெற்ற அறிவியலாளர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் குறிப்பிட்டார்.

(இந்தக் கட்டுரையை அக்டோபர் 2 அன்று மிகச் சிறப்பான குரலில் வாசித்து நேர்த்தியான காணொளியாக வழங்கிய BEYOND HEADLINES தோழர்களுக்கு சிறப்பு நன்றியும் பாராட்டுதலும்)

   நாம் அறிய வேண்டிய காந்தி – எஸ் வி வேணுகோபாலன் 

கட்டுரையாளர் :
நாம் அறிய வேண்டிய காந்தி - எஸ் வி வேணுகோபாலன் - Mahatma Gandhi -Gandhi we need to know - bookday article - S. V.Venugopalan - https://bookday.in/
எஸ் வி வேணுகோபாலன்



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



 

Show 2 Comments

2 Comments

  1. K N.Ravindran

    அடுத்த பிறவியில் ஒரு தாழ்த்த பட்ட பெற்றோருக்கு ஒரு பெண் குழந்தை யாக பிறக்க வேண்டும் என்ற காந்தியின் எண்ணம் இருந்தது என்ற செய்தி மிக முக்கியமான விஷயம்.வெளி கொணர்ந்த தோழர் வேனு வுக்கு வாழ்த்துக்கள்

  2. இந்தியாவை வாழ்விக்க வந்த காந்தியின் அர்பணிப்பு மிகுந்த பணிகள் என்றும் போற்றுதற்குரியது இன்னாளில் நினைக்க செய்த தங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *