காந்தி கிராம பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்: அரசுப் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு உந்து சக்தி  – பேரா. நா. மணி

டாக்டர் எஸ். மாதேஸ்வரன்இந்தியப் பல்கலைக்கழகங்களில் ஒருவர் துணைவேந்தராக வரவேண்டும் எனில், அவர் ஒரு புகழ்வாய்ந்த வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்று இருக்க வேண்டும் என்றொரு எழுதப்படாத விதி இருக்கிறது. தேர்வாளர்கள், அந்த நியமனதை கண்ணுறுவோர் என, எல்லோருக்கும் அதில் ஒரு மையல் அல்லது மயக்கம் இருக்கிறது. இது ஒரு இந்தியப் பல்கலைக் கழக பாரம்பரியமாக மாறிவிட்டது என்று கூட கூறலாம். ஆனால், இப்படிப் பட்டம் பெற்று, பதவிக்கு வந்தவர்கள் உண்மையிலேயே சிறந்த கல்வியாளர்களா? சிறந்த விஞ்ஞானிகளா? சிறந்த நிர்வாகிகளா? சிறந்த முறையில் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் ஆசிரியர்கள் நல்லுறவை கல்வி நலனைப் பேணிக் காத்தார்களா? என்ற கேள்வியும் உள்ளது.

அரசுப் பள்ளிகளில் பிடித்து, பின்னர் சிறந்த, புகழ்வாய்ந்த அரசுப் கல்லூரிகள்/ பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்று மிகப் பெரும் ஆளுமைகளாக வந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் நாமறிந்த அப்துல் கலாம் மயில்சாமி அண்ணாதுரை எனப் பலரை வரிசைப் படுத்தலாம். அறிவியல் தொழில்நுட்ப பாடங்களைக் காட்டிலும், சமூக அறிவியல் பாடங்களில் அரசுப் பள்ளிகளில் கல்லூரிகளில் படித்து மாபெரும் மேதைகளாக வருவது அரிதினும் அரிதே.

அத்தகைய அரிதினும் அரிதான மனிதர்களில் ஒருவர் ஈரோட்டில் பிறந்தவர். கோபிசெட்டிபாளையம் அருகில் உள்ள கூகலூரில் உள்ள காந்தி கல்வி நிலையத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்தவர். ஈரோட்டில் உள்ள வாசவிக் கல்லூரியிலும் பொருளாதாரமும் சிக்கைய நாயக்கர் கல்லூரியிலும் மேறையே பி.ஏ மற்றும் எம். ஏ பொருளாதார பட்டம் பெற்றவர். முனைவர் பட்டம் மட்டும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் புகழ் பெற்று விளங்கிய பேராசிரியர் நல்லாக் கவுண்டரிடம் படித்தார்.

இதன் பின்னர், பதினைந்து ஆண்டுகள் பூனாவில் உள்ள கோகலே அரசியல் அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றிவிட்டு, பெங்களூர் நகரில் உள்ள புகழ்வாய்ந்த ISEC என்று அழைக்கப்படும் பல்துறை சமூக அறிவியல் ஆராய்ச்சி மையத்திற்கு பேராசிரியராக வருகிறார். இந்த நிறுவனம், 1936 ஆம் ஆண்டு கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்று, டெல்லிக்கு வந்து, லண்டன் பொருளாதாரப் பள்ளிக்கு இணையாக ஒரு பொருளாதார பள்ளி வேண்டும் என்ற கனவோடு டெல்லி பொருளாதாரப் பள்ளியைத் தொடங்கியவர் வி.கே.ஆர்.வி ராவ். இவரே, மீண்டும் டெல்லியில் ஒரு பொருளாதார வளர்ச்சி ஆய்வு மையத்தை தொடங்கினார். (Institute for Economic Growth) தொடங்கினார். அதே சூட்டோடு பெங்களூர் நகருக்கு வந்து, மாற்றத்திற்கான சமூக பொருளாதார ஆராய்ச்சி மையத்தை (Institute for Social and Economic Change) தொடங்குகிறார். இந்த மூன்று நிறுவனங்களுமே இன்றும் உலக அளவில் பேசப்படும் ஆராய்ச்சி மையங்களாக திகழ்கிறது. பெங்களூரில் உள்ள இந்த ஆராய்ச்சி மையத்தில், கடந்த 25 ஆண்டுகளாக பேராசிரியர் மற்றும் ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டு வந்தார் பேராசிரியர் மாதேஸ்வரன். கடந்த பதினைந்து மாதங்களாக அதன் அதன் இயக்குநராகவும் பணியாற்றினார். இந்தப் பதினைந்து மாதங்களில் ஒரு செங்குத்தான வளர்ச்சியை அந்த நிறுவனத்தில் ஏற்படுத்தினார்.
இவரது ஒட்டு மொத்த பணிக்காலத்தில், இவர் ஆற்றிய பணிகள், செய்த ஆய்வுகள், ஆற்றிய சொற்பொழிவுகள், அரசின் கொள்கை உருவாக்கத்திற்கு செய்த பங்களிப்புகள்,மலைக்க வைக்கிறது. கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்ட கேம்பிரிட்ஜ், ஆக்ஸ்போர்டு, ஹார்வோர்டு என எந்தப் பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்று தலைசிறந்து விளங்கிய பேராசிரியர்கள் ஆராய்ச்சியாளர்களைக் காட்டிலும் பல சாதனைகளை பேராசிரியர் மாதேஸ்வரன் படைத்துள்ளார்.

இவர் 7/4/21 அன்று திண்டுக்கல் காந்தி கிராம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக, மத்திய அரசின் உயர் கல்வி அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில், அந்தப் பல்கலைக்கழகத்தின் வேந்தரால், துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நம் நாட்டில் உள்ள, உலக அளவில் குறிப்பிடத்தக்க Econometrics என்று ஆங்கிலத்தில் கூறப்படும் அளவீட்டு பொருளாதார நிபுணர்களில் ஒருவர். இதுதவிர வளர்ச்சி பொருளாதாரம், சூழலியல் பொருளாதாரம், கல்வியில் பொருளாதாரம் ஆகியவற்றில் வல்லுநர். இந்தியப் புள்ளியியல் பணி, இந்திய பொருளாதார பணி (Indian statistical service & Indian Economic Service) என்று அழைக்கப்படும் IAS, IPSக்கு இணையான இந்தியக் குடிமைப் பணி பயிற்சி மாணவர்களுக்கு இவர் ஓர் மனம் கவர்ந்த ஆசிரியர். அவரது சுருக்கமான பங்களிப்பு வரிசைக்கிரமான பங்களிப்புகள்.

துணைவேந்தராக பொறுப்பேற்கும் வகித்த பதவிகள்/ பொறுப்புகள்:

பெங்களூர் நகரில் உள்ள உலகப் புகழ்பெற்ற, சமூக பொருளாதார ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர். இதுதவிர கர்நாடக மாநில அரசின் திட்டக் குழு உறுப்பினர், அங்குள்ள அம்பேத்கர் ஆய்வு மையத்தின் உறுப்பினர், இந்திய சமூக அறிவியல் கழகத்தின் (ICSSR) தென்மண்டல ஆலோசகர், கர்நாடக அரசின் அறிவியல் தொழில்நுட்ப குழுமத்தின் செயற்குழு உறுப்பினர், தொழிற்கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுக் கழகத்தின் செயற்குழு உறுப்பினர், மாநில பேரிடர் மேலாண்மை கண்காணிப்புக் குழு உறுப்பினர், கர்நாடக மாநில அரசின் மதிப்பீட்டு முனையத்தின் உறுப்பினர் என்று மாநில அரசிலும் அங்கு உள்ள ஆராய்ச்சி நிறுவனங்களிலும் பல பொறுப்புகளை வகித்து வருகிறார். மத்திய அரசின் தேசிய கல்வி திட்டமிடல் மற்றும் நிர்வாக அமைப்பு என்று கூறப்படும் தேசிய கல்வி பல்கலைக்கழகத்தின் உறுப்பினர், உத்திரப்பிரதேசத்தில் உள்ள கிரி வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் உறுப்பினர் என்ற பல பொறுப்புகளை வகித்துள்ளார்.

சமீபத்திய பொறுப்புகளுக்கு முந்தைய பணிகள்:

மாநில அரசில் செயலர் பதவிக்கு நிகரான, திட்டம், கண்காணிப்பு மற்றும் புள்ளியியல் துறையின் அரசு ஆலோசகராகவும் பொறுப்பு வகித்தார். 2010 ஆம் ஆண்டு ” மதிப்பீடு மற்றும் கண்காணிப்பு கொள்கை உருவாக்கத்தின் அச்சாணியாக இருந்தவர். கர்நாடக அரசு ” மதிப்பீட்டு முனையம்” என்ற ஒன்றை உருவாக்க டாக்டர். மாதேஸ்வரன் அவர்களே அடித்தளம் இட்டார். கர்நாடக மாநில அரசின் 2010-2014 வரையான ஐந்தாண்டு பொருளாதார ஆய்வறிக்கை உருவாக்கம் செய்வதிலும் அதனை மறு வடிவாக்கம் செய்வதிலும் முக்கிய பங்கு வகித்தார். அதேபோல் 12 வது ஐந்தாண்டு திட்டம் மற்றும் மனிதவள மேம்பாட்டு அறிக்கை ஆகியவற்றை தயாரிப்பதிலும் முக்கியப் பங்கு வகித்தார். கர்நாடக அரசின் குறைந்த பட்ச கூலி குழு, சமூகப் பாதுகாப்பு வாரியம், கர்நாடக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை உறுப்பினர், குழந்தை தொழிலாளர் ஒழிப்புத் துறை ஆலோசகர், மத்திய அரசின் குறைந்த பட்ச கூலி நிர்ணயக் குழு ஆலோசகர், பிராந்திய ஏற்றத் தாழ்வினை குறைக்க கர்நாடக அரசு ஏற்பாடு செய்த உயர் மட்டக் குழு உறுப்பினர், மத்திய அரசின் சமூக அறிவியல் கழகத்தின் திட்ட அறிக்கை மதிப்பீட்டு குழு உறுப்பினர், வறுமை ஒழிப்புக்கான உயர் மட்டக் குழுவின் உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ளார்.

கல்விசார் விருதுகள் & கௌரவங்கள்:

1) நோபல் பரிசு பெற்ற ஜான் கென்னத் ஏரோ அவர்களால் தெற்காசிய வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் பொருளியல் மையத்தால் வழங்கப்பட்ட விருது.
2)2014 ஆம் ஆண்டு பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் ஆற்றல் வழியாக மாநில அரசின் கொள்கை வடிவமைப்புக்கு வழங்கப்பட்ட மிக உயரிய விருதான கெம்பே கவுடா விருது. இத்தகைய உயரிய விருதுக்கான அடிப்படைத் தகுதியே அவர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். அதற்கு மாநில அரசு விதி விலக்கு அளித்து, இவ்விருதால் கௌரவிக்கப்பட்ட ஒரே மனிதர் பேராசிரியர் எஸ். மாதேஸ்வரன் மட்டுமே.
3)2007 ஆம் ஆண்டு மார்ச்சில், இந்திய அரசின் சமூக அறிவியல் கழகத்தின் மூலம் இந்திய- பிரான்ஸ் நாடுகளின் அறிஞராக தேர்வு செய்யப்பட்டு பிரான்ஸ் நாட்டின் போர்ஜியோஜென் பல்கலைக்கழகத்தில் ஒரு மாத காலம் கௌரவ விரிவுரையாளர்கள்.
4)2008, 2009 ஆம் ஆண்டுகளில் பிரான்சு நாட்டின் போர்ஜியோஜென் பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராக கௌரவிக்கப்பட்டார்.
5)2019 வரை ஜெர்மனி நாட்டில் உள்ள பான் பல்கலைக்கழகத்தில் fellow எனப்படும் மதிப்புறு கல்வியாளராக கௌரவிக்கப்பட்டார்.
6) அமெரிக்காவில் உள்ள ஹார்டுவேர்டு பல்கலைக்கழகம் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் வருகை தரு பேராசிரியர்.மாநாடுகள்/ கருத்தரங்குகள்/ பயிலரங்குகள் ஒருங்கிணைப்பு:

மத்திய மாநில அரசுகள் மற்றும் உலகத் தொழிலாளர் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு சர்வதேச ஆராய்ச்சி நிறுவனங்களுக்காக 27 முறை பயன்பாடு சார்ந்த அளவீட்டு பொருளியலில் ( Applied Econometrics) மற்றும் பல்வகை ஆராய்ச்சி பயிற்சிகளை நடத்திக் கொடுத்துள்ளார்.

திட்ட அறிக்கைகள் தயாரிப்பு மற்றும் சமர்ப்பணம்:

மத்திய மாநில அரசுகள், தன்னாட்சி நிறுவனங்கள் மற்றும் சர்வதேச நிகழ்வுகளில் இருந்து நிதி உதவி பெற்று 21 ஆய்வுத் திட்ட அறிக்கைகளை தயார்செய்து சமர்பித்து உள்ளார். இவற்றில் பல அரசின் கொள்கை வடிவமைப்பு மற்றும் ஏற்கனவே உருவாக்கி நடைமுறையில் இருந்த கொள்கைகளை செழுமைப் படுத்த பயன் பட்டுள்ளது.

சர்வதேச/ தேசிய தரம் வாய்ந்த ஆராய்ச்சி இதழ்களில் வெளிவந்துள்ள கட்டுரைகள்:

இதுவரை 106 ஆய்வுக் கட்டுரைகள் சர்வதேச/ தேசிய தரம் வாய்ந்த இதழ்களில் வெளிவந்துள்ளன. இவையும் மத்திய மாநில அரசுகளின் கொள்கை செழுமையாக்கத்திற்கு பயன்பட்டுள்ளது.

புத்தகங்கள்:

தேசிய சர்வதேசிய அளவில் சமகால பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்வுகளை முன் வைக்கும் நூல்களை எழுதியுள்ளார். இவை புகழ் மிக்க ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி பிரஸ் ரௌட்லெட்ஜ் போன்ற சர்வதேச பதிப்பகங்கள் வழியாக வெளிப்பட்டுள்ளது. வெளிவர உள்ளது.

சொற்பொழிவுகள்:

உள்நாட்டிலும் வெளி நாடுகளிலும், பல்கலைக்கழகங்கள், கருத்தரங்குகள், மாநாடுகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், மத்திய மாநில அரசுகளின் சிறப்பு அழைப்புகள் ஆகியவற்றின் பேரில் நூற்றுக்கணக்கான சொற்பொழிவுகள்.

சொற்பொழிவுகள் ஆராய்ச்சி/ கருத்துரைகள் நல்க சென்று வந்த நாடுகள்:

அமெரிக்கா, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து, பெல்ஜியம், ஹாலந்து, சீனா, சியோல், ஹாங்காங், சிங்கப்பூர், பங்களாதேஷ் சிறீலங்கா நேபாளம், தாய்லாந்து மற்றும் தென்கொரியா. மிகச் சிறிய கிராமத்தில் பள்ளிக் கல்வி. மிக மிகச் சிறிய அரசு உதவி பெறும் கல்லூரிகளில் படித்து முயற்சி இருந்தால் உலக அளவில் சாதனைகளை படைக்கலாம். மிகச் சிறந்த அறிவும் ஆற்றலும் எல்லாத் தடைகளையும் தாண்டி பரிணமிக்கும். கௌரவிக்கப்படும் என்பதற்கு மாதேஸ்வரன் ஒரு மிகச் சிறந்த முன்னுதாரணம். அரசுப் பள்ளிகள் அரசு/ அரசு உதவி பெறும் கல்லூரிகளில் படித்து வரும் மாணவர்கள் முன் மாதிரியாக விரித்துக் கொள்ளத் தக்க மனிதர். அரசுப் பள்ளிகள் அரசு கல்லூரிகளுக்கு மிகச் சிறந்த கௌரவம் இந்த நியமனம்.

கட்டுரையாளர்:

பேராசிரியர் மற்றும் தலைவர் பொருளாதாரத் துறை தலைவர் ஈரோடு கலை அறிவியல் கல்லூரி ஈரோடு.
தொடர்புக்கு: [email protected]