காந்தியச் சுவடுகள் – கட்டுரைத் தொகுப்பு
ஆசிரியர்: டாக்டர் அ.பிச்சை
வெளியீடு: சந்தியா பதிப்பகம்
முதல் பதிப்பு: 2017
பக்கம்: 144
விலை: ரூ.135
காந்தியத்தின் மீது பற்றும் நம்பிக்கையும் கொண்டு அறவழியில் வாழ்ந்து வரும் முன்னாள் அரசு அதிகாரி அவர்கள் எழுதிய காந்தியம் தொடர்பான கட்டுரைத் தொகுப்பு இது.
பல்வேறு நாளிதழ்களில் வெளிவந்த கட்டுரைகளைத் தொகுத்து இந்த நூலில் காந்தியத்தின் பாதை எப்படி இந்தியாவை வழி நடத்திச் சென்றது என்பதையும் காந்தியின் கொள்கைகள் விடுதலைக்கு எவ்விதம் வழிகாட்டியாக விளங்கியது என்பதையும் காந்தியத்தைப் பின்பற்றி தமது வாழ்வை அமைத்துக் கொண்டு தேசத்தின் முன்னேற்றத்திற்காக தம் உடல் பொருள் ஆவி அனைத்தையும் வழங்கிய மாபெரும் தலைவர்கள் பற்றிய கருத்துக்களையும் உள்ளடக்கியுள்ளது இந்த நூல்.
இதில் உள்ள 20 கட்டுரைகளில் காந்தியத்தின் மீது நம்பிக்கை வைத்த பல்வேறு தலைவர்களின் வரலாறு இடம்பெற்றுள்ளன. நூற்றாண்டுகளுக்கு மேலாக ஆங்கிலேயர்களின் கீழ் அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியாவிற்கு விடுதலை பெற்றுத் தர கல்வியிலும் பண்பாட்டிலும் முன்னேற்றம் அடையாத இந்திய மக்களை ஒன்றிணைத்து வன்முறையைக் கையில் எடுக்காமல் அகிம்சை வழியிலும் போராடி வெற்றி தேடித் தந்த காந்தியின் கொள்கைகள் இன்று தேசத்தின் வளர்ச்சிக்கு உதவுகின்றனவா என்பதையும் இந்த நூல் நம்மிடையே வினாவாக எழுப்புகிறது.
விடுதலை தினம் கொண்டாட்டமாக தேசம் முழுவதும் அமைந்திட்ட பொழுதில் கல்கத்தாவில் ஹாலியாகட் என்ற பகுதியில் பாழடைந்த எவரும் வசிக்க இயலாத துர்நாற்றத்துடன் கூடிய உடைக்கப்பட்ட கதவுகளிலும் கண்ணாடிகளும் அடங்கியிருந்த ஹைத்ரி மாளிகையில் இந்து முஸ்லிம் கலவரத்திற்காக காந்தி தனித்து இருக்கிறார். உலகமே எதிர்பார்த்துக் கிடக்கும் விடுதலை தின வாழ்த்துச் செய்தியை அந்த விடுதலைக்காகத் தலைமையேற்றுப் போராடிய தேசத்தந்தை இறுதிவரை யாருக்கும் வழங்கவே இல்லை என்பது எவ்வளவு பெரிய முரண்பாடு. ஆனால் அதேசமயம் தனது வாழ்வையே தேசத்திற்காக அர்ப்பணித்த அவரின் பொதுநலத் தொண்டிலிருந்து மக்கள் வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையை கடைப்பிடிப்பதும் ஏழைகளுக்கு சேவை செய்வதற்காகவே பதவி என்பதை பதவியில் இருப்பவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டியது காலத்தின் அவசியம்.
காந்தியச் சித்தாந்தங்கள் மக்களிடம் இருந்து விலகிச் சென்றதற்கான முக்கியமான காரணம் என்று நூலாசிரியர் இந்திய அரசியலமைப்பில் காந்திய வழிமுறை இடம்பெறாததை சுட்டிக்காட்டும் அதே வேளையில் கல்வி முறையிலும் காந்திய நெறி உள்ளடக்கப்படவில்லை என்பதையும் கோடிட்டு காட்டுகிறார்.
காந்தி தமது வாழ்வில் மிகச் சிறப்பான ஆயுதமாக உண்ணாவிரதத்தை கைக்கொண்டு நிறைய பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டிருக்கிறார். ஆனால் உண்ணாவிரதம் பற்றி தனது பார்வையில் காந்தி கூறுவதை வாசிக்கையில் அது எவ்வளவு பெரிய தவம் என்பதை நம்மால் உணர முடிகிறது. விருப்பு வெறுப்பத்தின் அடிப்படையில் புனித விரதம் மேற்கொள்ளப்படக் கூடாது. மக்களை திருப்திப்படுத்தவும் அதை செயல்படுத்தக் கூடாது உங்கள் உள்ளத்தின் ஆழத்திலிருந்து எழுகின்ற உண்மையின் அழைப்பை ஏற்று அந்த தவத்தை தொடங்க வேண்டும் என்று காந்தியடிகள் உண்ணாவிரதத்தை விளக்குகிறார்.
எந்த ஒரு மனிதனும் இயற்கையாகவே ஏதேனும் ஒரு தருணத்தில் தம்மை துயரங்களால் பாதிப்பிற்கு ஆளாக்கிக் கொள்வார். ஆனால் தேசத்தின் நலனை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்ட காந்தியடிகள் தனிமனித இழப்புகளாலும் துயரங்களாலும் சிறிதளவும் பாதிக்கப்படாமல் பொதுநல வாழ்க்கையை முழுமையாக கடைப்பிடித்தவர் என்பதை நாம் எண்ணிப் பார்த்திடல் அவசியம்.
புகழ்பெற்ற தலைவர்களின் மனைவிகள் ஏன் புகழ்பெறவில்லை என்பதை நாம் எண்ணிப் பார்க்கும்போது அவர்கள் வீட்டிற்குள் அடங்கிக் கிடந்தார்களே தவிர வெளி உலகத்திற்கு வந்து பொது வாழ்க்கையில் நுழைந்து மக்கள் சேவையில் ஈடுபடவில்லை என்பது அடிப்படையாக கொள்ளலாம். ஆனால் தேசத்தந்தை என்று பெயர் வருவதற்கு காந்தியடிகளுக்கு பக்கபலமாக இருந்தது அவரது மனைவி கஸ்தூரிபா காந்தி என்றால் அது மறுப்பதற்கு இல்லை. இல்லற வாழ்க்கை ஆசிரம வாழ்க்கை சிறை வாழ்க்கை என வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் காந்தியிடம் இணைந்தே வாழ்ந்தார். காந்தியுடன் அனைத்து விதமான போராட்டங்களில் ஈடுபட்டு பொது வாழ்க்கையில் தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொண்டவர் கஸ்தூரி பா. இவை அனைத்திற்கும் மேலாக ஒரு முன்மாதிரி இந்தியப் பெண்ணுக்கு உரிய அன்பு அடக்கம் சகிப்புத்தன்மை பொறுமை தியாகம் கணவன் வழியே தன்வழி ஏற்பது என்ற அருங்குணங்களால் இந்திய மக்களிடையே பெரும் புகழைப் பெற்றவர் என்பதை காந்தியடிகளும் பல இடங்களில் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
அரசியல் பொருளாதாரம் சட்டம் ஆகிய மூன்று துறைகளிலும் மேதமையில் விளங்கியவர் பிறர் முன்னால் கைகட்டி வாய் புதைத்து அடிமைக்கும் அடிமையாக வாழ்ந்த ஓர் இனத்தின் பிரதிநிதி சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராக அமரும் தகுதியும் திறமையும் வாய்க்கப் பெற்றது அவரின் கல்வியின் மீதான பற்றும் தேசத்தின் மீதான ஈடுபாடும் என்பது அம்பேத்கர் அவர்களுக்கு சாலப் பொருந்தும். அவர் பெற்ற பதவிகளால் நாட்டு மக்களுக்கு ஏதேனும் நல்லது செய்ய முடியும் என்ற நம்பிக்கையிலேயே தனது வாழ்நாள் முழுவதும் உழைத்தவர் அம்பேத்கர்.
இந்த நூலில் மௌலானா அப்துல் கலாம் ஆசாத் முகமது அலி ஜின்னா காமராஜர் பண்டித ஜவஹர்லால் நேரு சர்தார் வல்லபாய் பட்டேல் சபாநாயகர் செல்லப்பாண்டியன் சுதந்திரப் போராட்ட வீரர் சோமயாஜுலு போன்றவர்களைப் பற்றியும் எழுதப்பட்டுள்ள கட்டுரைகள் அவர்களின் பொது வாழ்வில் தேசத்தின் மீதான முன்னேற்றத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு தங்களை கட்டமைத்துக் கொண்டனர் என்பதை உணர முடிகிறது.
தமிழகத்தின் முதலமைச்சராய் பதவி வைத்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அவர்கள் பற்றிய கட்டுரையில் அவர்களின் நியாயமான போக்கு பதவியை எந்த சூழ்நிலையிலும் தவறாக பயன்படுத்தாத முன்னுதாரணமும் எவ்விதத்திலும் தனக்கு தனிச் சலுகை பெற்று நடமாடாத உயரிய பண்பும் வெளிப்படுகிறது.
காந்தியச் சுவடுகள் நூலின் இறுதிக் கட்டுரையாக இடம் பெற்றிருக்கும் இறைவனின் அழைப்பை உணர்ந்த மகாத்மா கட்டுரையில் தனது மரணத்தை முன்கூட்டியே உணர்ந்து கொண்ட காந்தியடிகள் மரண தினத்தன்று நடந்து கொண்ட விதத்தை தெளிவாக விளக்குகிறது. வெறுமனே இயற்கையான மரணத்தால் எனது தவம் கெட்டுவிடும் என்றும் பிறரால் கொலை செய்யப்படுகையில் ஹேராம் சொல்லியபடி உயிரைவிடுதலே எனது பொதுநலத்திற்கான உண்மையான பயனை விளைவிக்கும் என்ற காந்தியின் இறுதி நாளன்றைய உரை அவரின் உள்ளத்து உணர்வுகளைத் தெளிவாக படம்பிடித்துக் காட்டுகிறது.
காந்தியச் சுவடுகள் இன்றும் தேசத்தின் வளர்ச்சிப் பாதையில் அடித்தளமாக நின்று ஒவ்வொரு மனிதர்களை முன்னேற்றிக் கொண்டிருக்கிறது என்பதை நாம் எண்ணிப் பார்த்திட இந்த நூல் வரலாற்றின் வழியையும் வரலாற்றில் சிறப்பிடம் பெற்ற புகழ்மிக்க மனிதர்களின் வாழ்க்கையின் வழியாகவும் அறியத் தருகிறது.
நூல் அறிமுகம் எழுதியவர்:
கி சிவஞானம் என்ற இயற்பெயர் உடைய இவர் அரசுப் பள்ளி ஆசிரியர்.பயணங்கள் வழியே இயற்கையை ரசிப்பதில் பெரு விருப்பம் உடைய இவரது கவிதைகள் ஆனந்த விகடன் கணையாழி கொலுசு புன்னகை ஏழைதாசன் தினத்தந்தி போன்ற இதழ்களிலும் நிறைய மின்னிதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. சாகித்திய அகாதமி நிறுவனம் வெளியிட்ட ஆயிரம் ஹைக்கூ தொகுப்பு நூலில் இவரது கவிதைகள் இடம் பெற்றுள்ளன. மின்மினிகள்(1999) தூரிகையில் விரியும் காடு((நூலேணி பதிப்பகம் கன்னிமாரா நூலக வாசகர் வட்டம் இணைந்து நடத்திய போட்டியில் முதல் பரிசு )(2022) தீராக் கனவை இசைக்கும் கடல் (2023)(தமிழ்நாடு கலை இலக்கிய மேடை வழங்கிய அசோகமித்ரன் படைப்பூக்க விருது) என மூன்று கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
இன்றைய அரசியல் பொருளாதார சமூக சூழலில் இந்திய வாக்காளர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்!
இன்றைய தமிழ்ச்சூழலில் காந்தியக்கொள்கைகளை முன்வைக்கும் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி வருபவர் பெரியவர் அ.பிச்சை. அவருடைய நூலில் அடங்கியிருக்கும் ஒவ்வொரு கட்டுரையிலும் உள்ள சிறப்பம்சத்தை ஒரு பொது வாசகனுக்குத் தேவையான அளவில் எடுத்துரைத்து புத்தகத்தின் மதிப்பை உணர வைத்திருக்கிறார் இளையவன் சிவா. அவருக்கு என் வாழ்த்துகள்.