காந்தியடிகளும் குழந்தைகளும் என்ற புத்தகத்தை காந்தியின் 150 வது ஆண்டையொட்டி காந்திய இலக்கியச் சங்கம் வெளியீடாக வந்துள்ளது இப்புத்தகம். காந்திக்கும்- குழந்தைகளுக்கு உள்ள உறவை பற்றி பேசக் கூடிய காந்தியின் மற்றொரு பரிணாமத்தை காட்ட கூடியது. குழந்தைகள் என்றால் இந்த இடத்தில் காந்தியின் சொந்த பிள்ளைகளை பற்றி பேசக் கூடியது அல்ல. ஒட்டு மொத்தமாக குழந்தைகளை எவ்வாறு நேசித்தார் என்பதற்கான ஆவணம்.
பீனிக்ஸ் வாழ்க்கை முறையில் குழந்தைகளுக்கும் அவருக்குமான உறவு. கூட்டுப்பண்ணை வாழ்வியல் முறையால் குழந்தையின் ஆளுமை எவ்வாறு வளர்ச்சியடைகிறது என்பதனை பற்றிய பதிவு ஆகட்டும் , அக்குழந்தையுடன் நேரத்தை செலவிட்டு பாடம், கதைகள் கூறி அவர்களது ஆளுமையை பார்த்து தனது உதவியாளரிடம் நாம் அனைவரும் குழந்தைகளிடம் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என்றும், அவர்களுக்கு தேவை கண்டிப்பும், நெறிமுறைகளும் அல்ல சுதந்திரமான சூழல் மட்டுமே என்றார். சரியான கணிப்புதான்.
மாண்டிசோரி அம்மையாருடன் காந்திக்குமான சந்திப்பு அவ்வளவு வரலாற்று முக்கியத்துவம் உடையது. இச்சந்திப்புதான் குழந்தை மைய கல்வியை, செயல்வழி கல்வியை காந்திக்கு உணர்த்தியது. அது மட்டுமல்ல மாண்டிசோரி கல்வியின் அடிப்படையே தாய்மொழிக் கல்வி என்பதனை புரிந்து தாய் மொழி கல்விக்கான முதல் குரலாக ஒலித்ததும் காந்தியின் குரல்தான்.
காந்தியின் மொழி அவ்வளவு எளிமையானது. அது குழந்தைகளின் மனதை நேரடியாக தைக்க கூடியது. அதனால் தான் கையேந்தும் சுற்றுப் பயணத்தின் போது பெண் குழந்தைகளிடம் இருந்து எளிதாக அவர்களது நகைகளை பெற முடிந்தது.
குழந்தைகளுக்கு காந்தி எழுதிய கடிதங்கள் குறிப்பிடத்தக்க ஆதாரம். அதில் பிறருக்குத் தெரியாததை நீங்கள் கற்றுக் கொடுக்க வேண்டும். நீங்களும் புதியதாக கற்றுக் கொள்ள வேண்டும். உங்களுடைய வாக்குறுதிகளைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.
மற்றொரு கடிதத்தில் ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் பரஸ்பர புரிதல் அவசியம். கல்வியையும் கேளிக்கையையும் ஏன் இணைக்க கூடாது என்கிறார். கேளிக்கை நிரந்த வகுப்பறை வேண்டும் என்கிறார். இது உண்மையில் அந்த காலத்தில் புரட்சிகரமான முடிவு தான்.
ஏரவாடா மாளிகையில் இருந்து எழுதிய கடிதத்தில் மதத்தை தாண்டி உங்களது நட்புறவை வளர்த்துக் கொள்ளுங்கள்.உங்களுக்கு தேவை மதம் அல்ல, அதன் நல்ல நெறிகள் மட்டுமே.
சிறையில் இருந்து பல நூறு கடிதங்களையும், பதில் கடிதங்களையும் எழுதினார். பெண் குழந்தைக்கு எழுதிய கடித்தில் உனது மன உறுதியை மட்டும் இழந்து விடாதே அது தான் போராட்ட வாழ்க்கைக்கு தேவை .
இறுதியாக நமது பிள்ளைகளுக்கு இன்று காந்தி எப்படி அறிமுகமாகியுள்ளார். பள்ளி விழாக்களில் மாறுவேட போட்டிக்கான மாடலாக மட்டும் தான். பாட புத்தக வழி என்றால் தண்டியாத்திரை , ஒத்துழையாமை, வெள்ளையனே வெளியேறு இயக்கம் என வெறும் தகவல்களால் ஆனாது. இப்படியல்ல காந்தி என்ற ஆளுமையை அறிமுகப்படுத்துவது.
அவரது எளிமை, போராட்ட குணம், அனைவரையும் ஒருங்கிணைந்த முறையை. காந்தி தன்னுடைய சொந்த பிள்ளைகளை அதிகார அரசியல்வாதியாக, அதிகாரியாக, பெரும் வணிகராக வளர்க்கவேயில்லை. தன்னை போன்று வளரவே விரும்பினார். ஆக காந்தியை குழந்தைகளிடம் கொண்டு சேர்க்க இதுவும் உகந்த காலம்.