புனே நகரில் ஓய்விற்கு ஓரிரு வருடங்களே பாக்கி இருந்த அளவில், 2001 பிப்ரவரியில் விருப்ப ஓய்வு பெற்றார் வங்கி அதிகாரி மங்கீகர்.
ஓய்வு பெற்றது எவ்வளவு தவறு என்பதை அவருடைய மனைவி அவ்வப்போது நிரூபித்துக் கொண்டே இருந்ததாக பரவலாகப் பேச்சு. ஆனாலும் மங்கீகர் அதை மறுத்தார். கடந்த ஐந்து வருடங்களில் தான் கிட்டத்தட்ட இருபது கிலோ இழந்தது மனைவியாலோ, மூப்பினாலோ அல்ல என்றும், தான் துரிதமாகக் கற்றுக் கொண்டு விற்பன்னராகவும் மாறிய யோகக்கலையே என்றும் சாதித்தார்.
அதை நிரூபிக்கும் முகமாக வங்கியின் கிளை கிளையாகச் சென்று யோகக் கலையை துஷ்பிரயோகம் செய்து வந்தார்.
என்ன காரணமோ எங்கள் வங்காளித் தலைவருக்கு இதெல்லாம் பிடிக்காது. அதனால், மண்டல அலுவலகத்தில் கணிசமாக இருக்கும் நபர்களை யோக சாஸ்திரத்தில் ஆழ்த்தும் மங்கீகரின் யுக்தி கனவாகவே தொடர்ந்தது.
காலமாற்றத்தின் விளைவாக அடுத்த வருடமே நாயக் என்பவர் எங்கள் தலைவராக வந்தார். அவர் மீ மராத்தி என்கிற இயக்கத்தை சார்ந்தவர். அவருக்கும் யோகாவில் பிடிப்பில்லை என்றாலும், அவர் வாரக் கடைசியில் பம்பாய் செல்கிற மதிய நேரத்தில், யோகக் கலையை எங்கள் விதானத்தில் திணிக்க உத்தரவாகி விட்டது.
அந்த சனிக்கிழமை கோலாகலமாகவே விடிந்தது. மங்கீகரின் பழைய சிநேகிதர்கள் அதை ஒரு வெற்றியாகவே கொண்டாடத் தலைப்பட்டனர். மற்றவர்கள் முகங்களில் ஈயாடவில்லை. அன்றாடம் பத்து மணி, பதினோரு மணி என்று வீடு திரும்பும் எங்களுக்கு யோகக்கலை எந்த விதத்தில் எங்கள் கடிகார முட்களைத் திருப்ப வல்லது என்று யூகிக்க முடியவில்லை.
மூன்று மணி சுமாருக்கு மங்கீகர் சொற்பொழிவைத் துவங்கி, நல்ல தூய மராத்தியில், யோகக்கலையில் இல்லாத விஷயங்களையும் கூட அலசினார்.
அவருக்கென்று பிரத்தியேக மேடை அமைக்க இடவசதி இல்லாததால், இரண்டு பழைய மேசைகளை இணைத்து, அதன்மேல் அனுமார் மாதிரி, ஆனால் சம்மணம் இட்டு சாதகம் செய்தார்.
அடுத்து ஓரிரு சுலபமான ஆசனங்களை செய்து காண்பித்தார். அந்த நேரம் பார்த்து “துஸே” என்கிற “மீ மராத்தி” தனக்கு நெடுநாளாக வயிற்று உபாதை இருப்பதால் அதற்கான ஆசனமொன்றைப் பயிற்றுவித்தல் நலம் என்றார். நாங்கள் எங்கள் கழிவறைகள் அடைத்துக் கொண்டிருக்கிறது என்று பிளம்பருக்கு அநாவசியமாக செலவழித்ததன் தவறு அப்போதுதான் தெரிந்தது.
மங்கீகருக்கு உற்சாகம் ஊற்றெடுத்தது. தற்காலிக மேடையில், உயரமாகவும், அதன் பரிமாணத்தை மொத்த அளவுக்கும் காண்கிற மாதிரியான ஆகிருதியில் இருந்த அவர் “உத்தித பாதாசனம்” என்று என்னத்தையோ, படுத்தவாறு இரு கால்களையும் ஆகாயத்திற்கு உசத்தினதுதான் தாமதம், இரண்டு மேசைகளில் ஒன்று அச்சு முறிந்து, மங்கீகர் என்ன நடக்கிறது என்று நிதானிப்பதற்குள், தபாளித்து, தொபுக்கடீர் என்று பின்பக்கமாக விழுந்தார். நறநறவென்று மனித எலும்புகள் முறியும் சப்தம் கேட்டது.
நாங்கள் நாலைந்து பேர், உடனே துரிதமாகச் செயல்பட்டு, மங்கீகரை இடிபாடுகளிடமிருந்து மீட்டு, அவர் மராத்தியில் ஐயோ ஐயோவென்று அலறியது புரியாமல், அவரது நீட்டிய கையை பலமாக இழுக்க, அது மட்டும் தான் சுமாராக இருந்தது போலும். அதுவும் மளுக்கென்று முறிந்து விட்டது.
வேறு வழியில்லாமல், சுக்கு சுக்காக உடைந்திருந்த மங்கீகரைக் கூடிய வரை திரட்டி, அவர் அலற அலற, தோள்களில் தூக்கிக் கொண்டு மூன்றாவது மாடியில் இருந்து இறக்கி, அருகாமையில் இருந்த சஞ்செட்டி ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தோம்.
மருத்துவர்களே அதிர்ந்து விட்டனர். சராசரி மனித உடலில் இருக்கக் கூடியதை விடவே அதிகமான எலும்புகள் உடைந்திருந்தன. அவரது எலும்புகளை ஒட்ட வேண்டி மாவுக்கட்டு போடலாமென்றால், போதுமான மாவு கையிருப்பில் இல்லை. அதனால், அருகாமையில் இருந்த உடுப்பி ஹோட்டல் ஒன்றை அணுகி, அவர்கள் ஊத்தப்பத்திற்காகப் பல நாட்களாகப் புளிக்க வைத்திருந்த மாவை அவசரத்திற்குப் பெற்றுக் கொண்டு வந்து மங்கீகர் ஒட்டப்பட்டார். அது வெங்காய ஊத்தப்பம் போலிருக்கிறது. மங்கீகர் உடம்பெல்லாம் நறுக்கிய வெங்காயம் பூத்திருக்க, அவரை மணக்க மணக்க வீட்டில் கொண்டு போய் விட்டோம்.
அதற்கப்புறம் அவர் தென்படவில்லை.
************

