Gangaiyai Mariya Kinaru Poem By Adhith Sakthivel கங்கையாய் மாறிய கிணறு கவிதை - ஆதித் சக்திவேல்

(1940 களின் முற்பகுதியில் தமிழ் நாட்டின் சிற்றூர் ஒன்றில் நடந்த நிகழ்வு கவிதை ஆக்கப்பட்டுள்ளது)

வறட்சி
இயற்கையின் பாடம் அது
கோபத்தின் வடிகால் அன்று
இயற்கைச் சங்கிலியின்
மிக வலிமையான கண்ணி அது
சற்றே நீளமானதும் கூட

வறட்சியால்
ஈரம் குறைந்த வெப்பக் காற்றின்
பாரம் மூச்சில் கனத்தது
நீர் இழந்த மண்ணின் புழுதி
எங்கும் அதன் வாசம்
வாசலில்
வீதிகளில்
பாதங்களில்
கால்களில் – விளையாடும்
குழந்தைகளின் முழங்கால் வரை

கொஞ்சமும் பசுமை இன்றி
மஞ்சளாய் மாறிய இலைகளால்
தஞ்சம் தரத்தான் முடிந்தது
அப்புழுதிக்கு

வெப்பத்திற்கு பயந்து
உதிர்ந்த இலைகளோ
ஒளிந்து கொண்டன அப்புழுதியில்
அசை போட ஏதுமின்றி
புல் பூண்டுகள் காய்ந்திட
துருத்தி நின்றன
இளைத்துப்போன கால்நடைகளின்
விலா எலும்புகள்

தாகத்தில்
தம் ஒரே மூச்சில்
நீரைப் பருகி முடித்த
ஆற்று மணலில் பறித்த
ஊற்றுகளும் காய்ந்து
நாட்கள் பல ஆயின

நான்கு பக்கங்களிலும்
ஊரே நின்று நீர் இறைக்கும்
எங்கள் வாசலில் இருக்கும் கிணற்றில்

மேலிருந்து பார்க்கையில்
அலை அடித்துச் சிரிக்கும் நீர்
ஒரு மிடறில் அதன் குளிர்ச்சி
உடலில் கொடி கட்டிப் பறக்கும்
எண்ணெய் கண்டு நாளான
மர உருளையின் ‘தட தட’ச் சத்தம்
இன்னிசையாய்ப் பரவும்
தெருவெங்கும்

சலனமற்ற நீரில் முழு நிலவு
நிறம் மங்கா புராதன ஓவியமெனக்
காட்சி தந்து மனம் நிரப்பும்
பௌர்ணமி இரவுகளில்

காய்ந்து – அடியில்
கரும்பாறை தெரிந்தது இன்று
நீருக்கு மாற்றாய்

“எத்திசையில் சென்றாலும்
ஏழு எட்டு மைல் நடந்து
சுமந்தால் தான் நீர்”
ஓயாது சொன்ன அப்பா
ஒரு சில நாட்களில்
நோயில் படுக்க – அவருக்குப்
படுக்கையில் தான் எல்லாம

முதுமையைக் காரணம் காட்டியது ஊர்
அப்பாவைப் புரிந்த
எனக்குப் புரிந்தது
உண்மைக் காரணம்
“சேரி ஜனங்களை
ஊரில் யாரும்
தண்ணி சேந்த விட மாட்டாங்களே”
நினைவு வந்த போதெல்லாம்
தட்டுத் தடுமாறி சொன்னார் அப்பா
மறக்காமல்

அவர் பேசிய வார்த்தைகள்
திணறிய சுவாசத்தில் கரைந்து
தெளிவின்றி வெளி வந்தன
எதைப் பேசினார் எனத்
தெளிவாய்த் தெரிந்தது எனக்கு

“அடுத்த ஐப்பசி மழையிலும்
என் கிணறு வறண்டே இருக்குமோ?”
பயம் பிறழ்ச்சியுடன் வெளிப்பட
மரணத்தை நோக்கி – அது
வேகமாய் இழுத்துச் சென்றது அவரை

ஊருக்குக் குடி நீர் தருவதில்
இன்று என் முறை
நன்றாய்ப் புரிந்தது
நான் செயல்பட வேண்டிய தருணம் இதுவென

வெடி வைத்து பாறையைத் தகர்த்தால் ஊற்று கிடைக்கும் என
ஊரின் அனுபவம் சொன்னது
நானும் சம்மதித்தேன் நம்பிக்கையுடன்

தினம் இரண்டு, மூன்று வெடிகள்
பாறைகள் பாளம் பாளமாய் உடைந்து கிணற்றை நிறப்பின
திரியைப் பற்ற வைத்த பின்னும்
வெடிப்பதற்கு முன்னும்
நிலவும் நிசப்தத்தை அனுபவிக்க
வெடித்த பின் பாறைகள் பறப்பதை
வேடிக்கை பார்க்க வந்தோர்
அப்பாவின் நலனையும் விசாரித்து
விடை பெற்றனர்
அப்பாவின் நலன் விசாரிக்க வந்தோர்
வெடி வெடிப்பதையும்
வேடிக்கை பார்த்துச் சென்றனர்

மூன்றாம் நாள்
மூச்சுத் திணறத் தொடங்கியது
காட்டித் தந்தது அவர் முகம்

அன்று
முதல் வெடியில் விரிசல் விட்ட பாறை
பெரியதொரு ஊற்றுக்கு வழிவிட
அடி ஆழத்திலிருந்து
பீய்ச்சி அடித்த நீர்
கிணற்றுக்கு மேலே
ஆளுயரம் எழுந்து அதனுள் விழுந்தது
கரும்பாறைத் துகள்களுடன்
தொடர்ச்சியாக

கூடியிருந்தோர் ஒன்றாய்ச் சேர்ந்து “ஊற்று கிடச்சிருச்சு” என
இட்ட சத்தத்தில்
அப்பாவின் குழி விழுந்த கண்களில்
குளம் போல் தேங்கியது கண்ணீர்
மகிழ்ச்சி அவர் முகமெல்லாம்
நிறைந்து வடிந்தது

“சேரி ஜனங்க
நம்ம கிணத்திலெ
எப்பவும் சேந்துவாங்க அப்பா”
மகிழ்ச்சி பொங்கக் கத்தினேன்
அவர் காதுக்கு அருகில்

இதற்காகவே காத்திருந்தது போல் இரண்டொரு நிமிடங்களில்
அவரது உயிர் பிரியும் வேளை
“கங்கா தீர்த்தம் எடுத்துட்டு வாங்க”
சுற்றி நின்றிருந்தோர் சொல்ல
கிணற்றில் பீய்ச்சி அடித்த நீரில்
கொஞ்சம் கையில் பிடித்து
அவர் வாயில் ஊற்றினேன்
சொட்டுச் சொட்டாய்
அவருக்கு அது தான்
கங்கா தீர்த்தம் என எனக்குத் தெரியும்
மகிழ்ச்சியுடன் நீரை விழுங்கியது
அவர் முகத்தில் தெரிந்தது

நானும் கொஞ்சம்
என் வாயில் ஊற்றிப் பார்த்தேன்
அதன் சுவை கூடியிருந்தது இப்போது
மூச்சு நின்ற பின்னும்
அவரது கண்களில் நீர் பொங்கியதாய்
அருகில் நின்றிருந்தோர்
ஆச்சரியத்துடன் பேசிக் கொண்டனர்

அப்பாவின் இழப்பிற்கு அப்பால்
இழுத்துச் சென்றது என்னை
கிணற்றில் கிடைத்த ஊற்று
அவரது தலைமாட்டில் ஏற்றி வைத்த
குத்து விளக்கு
மங்கலமாய் ஒளி வீச
இசையாய் ஒலித்தது பறை
தெருவில்

கறுப்புச் சந்தையில்
வெடி மருந்து வாங்கிய
கிணற்றின் சொந்தக்காரர்
அப்பாவைத் தேடி வந்த
பிரிட்டிஷ் போலீசுக்கு
அவரது சாம்பலைக் கரைத்த
கங்கையாய் மாறிய
எங்கள் கிணற்றைக் காட்டினேன்
ஊற்றில் நீர் பொங்கும் சத்தம்
கிணற்றின் சுவர்களில் முட்டி மோதி எதிரொலித்துக் கொண்டிருந்தது

விடுதலைக்கு முன்பே
எல்லாக் கிணறுகளிலும்
சேரி மக்களைச்
சேந்த அனுமதித்த அச்சிற்றூர்
சேந்து கிணறு எனும்
சரியான அடைமொழியுடன்
எங்கள் தெருவிற்கு
அப்பாவின் பெயரைச் சூட்டி
அவரைக் கௌரவித்தது
தன்னைத் திருத்திக் கொண்ட அது

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *