எழுத்தாளர் அ.வெண்ணிலாவின் “கங்காபுரம் (Gangapuram) நாவல்” – ராதிகா விஜய் பாபு

Writer A. Vennila in Gangapuram Novel Book Review by Rathika vijayababu. Book day Website is Branch of Bharathi Puthakalayamகங்காபுரம் (Gangapuram) என்ற அற்புதமான நாவலைப் படித்த பெண் எழுத்தாளர் வெண்ணிலா அவர்களுக்கு எனது வாழ்த்துகளும் பாராட்டுகளும். பெண் எழுத்தாளர் என்று குறிப்பிட வேண்டியுள்ளது ஒரு ஆண் எழுத்தாளர் எழுதுகிறார் என்றால் அவர்களுக்கு பெரிதாக எந்தப் பொறுப்பும் இல்லை ஆனால் ஒரு பெண் எழுத்தாளர் எழுதுகிறார்கள் என்றால் குழந்தைகளை பார்க்க வேண்டும் குடும்ப பொறுப்பு அதிகம் அப்படிப்பட்ட சூழ்நிலையில் கடலைப் போன்ற இமயம் போன்ற ஒரு பிரம்மாண்டமான சோழ சாம்ராஜ்யத்தை பற்றி ஒரு நாவலை படைத்ததற்கு ஒரு பெருத்த கைதட்டல்.

பொதுவாக இது எங்கள் மண்ணைப் பற்றிய கதை என்ற ஒரு ஈர்ப்பு அடிப்படையிலேயே இருக்கிறது. சோழர்கால கதைகளை பற்றி படிக்கும் பொழுது ஒரு பெருமிதம் பொங்கும் அவ்வாறு ஒரு ஆர்வத்துடன் கங்காபுரம் படிக்கத் துவங்கினேன். பொன்னியின் செல்வன் படித்து விட்டு இந்த கங்காபுரம் படிப்பவர்களுக்கு மனதில் ஒரு வறட்சி ஏற்படும் இந்த வறட்சி ராஜேந்திர சோழனின் மனதை பிரதிபலிக்கக் கூடியதாக உள்ளது.

ராஜராஜ சோழன் ராஜேந்திர சோழன் ராஜாதிராஜன் இவ்வளவு ஆளுமைகளையும் கதையில் வடிவமைப்பதே மிகப் பெரிய சவால் தான். எவ்வளவு வரலாற்று தகவல்கள் உண்மை நிகழ்வுகள் தரவுகளுடன் நாவல் நகர்வது சிறப்பு. முன்பக்கத்தில் சோழர் கால தமிழகம் ராஜேந்திரசோழன் வடநாட்டு பகுதி படையெடுத்து வென்ற இடங்கள், அவர்கள் ஆண்ட காலம், அவர்கள் ஆண்ட வென்ற நாடுகளின் தற்கால பெயர்கள் போன்றவை படிக்கும் நேரத்தில் சரிபார்த்துக் கொள்ள உதவியது.அதே போல கடைசிப் பக்கத்தில் சொல் விளக்கம் பல வார்த்தைகளை கற்று கொடுத்தது.

கங்காபுரம் நாவல் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது முதல் பகுதியில் ராஜேந்திர சோழன் நீண்டகால காத்திருப்பிற்குப் பிறகு இளவரசர் பட்டம் சூட்டப்பட்டு பிறகு ராஜராஜசோழன் மறைவிற்குப் பிறகு ஆட்சியில் அமர்வது இரண்டாம் பகுதியின் தலைநகரை மாற்று திட்டமிடுவது, கங்கை வரை படையெடுத்துச் சென்று கங்கை கொண்ட சோழபுரத்தை உருவாக்குவது, ஏரியை அமைப்புகளை உருவாக்குவது, ராஜாதிராஜன் வட கிழக்கு நாடுகளில் படையெடுத்து வெல்வது, இறுதியில் ராஜேந்திர சோழன் மரணத்தோடு முடிவடைகிறது.

நாவலின் தொடக்கம் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரம் தில்லை நடராஜர் கோயிலில் துவங்குகிறது.கோவிலில் ஒரே பரபரப்பு ராஜேந்திர சோழனுக்கு குருவான சர்வசிவ பண்டிதர் இன்னும் தன் சீடனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டவில்லை என்று கோபத்தில் பூஜையை நிறுத்துங்கள் என்று கூறுகிறார்.இளவரசரின் பிறந்தநாள் அதுவும் இத்தனை ஆண்டுகள் சோழர குடும்பமே இங்கு தான் இருக்கும் ஆனால் புதிதாக தஞ்சை பெரிய கோயில் கட்டப் பட்டதால் அரசர் வராதது அனைவருக்கும் வருத்தமாக இருக்கிறது அப்பொழுது இந்த கதையின் முக்கியமான முதன்மை கதாபாத்திரம் அறிமுகமாகிறது.இந்தக் கதையின் நாயகனாக ராஜேந்திர சோழன் இருந்தாலும் ராஜேந்திர சோழனின் அச்சாணியாக விளங்குவது வீரமாதேவி. பெயருக்கு ஏற்றார் போல வீரம் கண்ணியமும் ஒவ்வொரு செயலிலும் வெளிப்படுகிறது. பொன்னியின் செல்வனில் வரும் குந்தவை, வானமாதேவி, நந்தினி போன்ற அனைத்து ஆளுமை கதாபாத்திரங்களையும் ஒன்றிணைக்க பெற்று நாவல் முழுவதும் வலம் வரும் வீரமங்கை.வீரமாதேவி அறிமுகப்படுத்தும் காட்சியை பலமுறை படித்தேன் அழகு என்பதை விட ஆளுமையான காட்சி கதையின் ஆரம்ப அறிமுகம் கூட இராஜேந்திர சோழனுக்கு இல்லை அதிலும் இரண்டாம் இடம்தான்.

அதேநாளில் தஞ்சாவூரில் ராஜராஜ சோழன் தன் மகனுக்காக சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. அனைத்தும் பரிபூரணமாக இருந்தும் ஒரு வெறுமை அனைவர் மனதிலும் நிழலாடுகிறது. அது ராஜேந்திர சோழனின் மகன்களுக்கு கூட திருமண வயது வந்து நிலையில் இன்னும் இளவரசர் பட்டம் சூடாமல் இருப்பது ஏன் என்ற ஒரே கேள்வியை அதற்கு காரணம்.

ராஜராஜ சோழன்:

சோழ ராஜ்யத்தின் ஆதாரமாக விளங்குபவர் தன் சோழ சாம்ராஜ்யத்தை விரிவு படுத்தி அதை கட்டமைத்து வழிநடத்திய ஒரு சக்தி வாய்ந்த ஆற்றல் மிக்க சக்கரவர்த்தி.தன் பட்டத்து அரசி லோகமாதேவி மூலம் குழந்தை இல்லை என்றாலும் திரிபுவன மாதேவி என்றழைக்கப்படும் வானமாதேவி மூலம் ராஜேந்திர சோழன் என்ற ஒரு வீரத்திலகத்தையும் குந்தவை என்ற ஒரு மகளும் தன் அக்காவின் பெயர் குந்தவை மேல் உள்ள அதீத அன்பால் மகளுக்கும் குந்தவை என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார். ராஜராஜ சோழனுக்கு குருவாக இருப்பவர் கருவூர்த்தேவர் இந்த நாவலில் தஞ்சாவூர் பெரிய கோவில் ராஜராஜனின் முதுமை காலத்தில் கட்டியது போல காட்டப்பட்டுள்ளது.அவருக்கு ராஜேந்திரன் என்னும் மதுராந்தகன் இளவரசர் பட்டம் சூட்ட வேண்டும் என்று இருந்தாலும் லோகமாதேவி ஆல் அதை செயல்படுத்த முடியவில்லை தன் இறுதிக்காலத்தில் தன் ஒட்டுமொத்த வெறுப்பையும் லோகமாதேவி இடம் திரும்புகிறது.

லோகமாதேவி:

தன் ஆரம்ப கால வாழ்க்கை ஆனந்தமாக தனக்கு குழந்தை இல்லை என்றாலும் ராஜேந்திர சோழனை தன் மகனாக பாவித்தாலும் பிற்காலத்தில் துர் புத்தி கொண்டவர்களின் ஆலோசனையால் தன்னை எல்லோரும் ஒதுக்கி வைக்கிறார்கள் என்ற விரக்தியில் தன் கோபத்தை அரசரிடம் காட்ட தொடங்குகிறார். வயதான காலத்தில் குழந்தைக்காக இரணிய பிரசவம் செய்துகொள்வது அரசருக்கு பிடிக்கவில்லை என்றாலும் அரசரை கட்டாயப்படுத்தி செய்துகொள்கிறார். மேலும் தில்லை தேர் திருவிழாவில் கழகம் ஏற்படுத்துவது ராஜேந்திர சோழனின் இலவச பட்டா பிஷேகம் போது பாதியில் எழுந்து செல்வது என பல தவறுகள் இழைத்தாலும் பிற்காலத்தில் வருந்தி மன்னிப்பு கேட்கிறார்.

வீரமாதேவி:

ராஜேந்திர சோழனுக்கு இணையான ஒரு பெண்பால் வீரமாதேவி. அழகிலும் கல்வியிலும் வீரத்திலும் பக்தியிலும் பழமொழி தேர்ந்தவளாக திகழ்கிறார். சிறு வயதில் பெற்றவர்களை இழந்து தன் அண்ணனுடன் வாழ்கிறார் சிறுவயதில் திருவாரூர் கோவிலுக்கு தேவரடியார் ஆக நேந்து விடப்படுகிறார்கள். வேதம் கற்கும் ஆர்வத்தில் தன்னை ஆண் போல வேடம் தரித்து வேதம் கற்கிறார் அரசனின் காதல் நாயகியாகி பின் திரு மணம் புரிகிறார் திரு மணம் புரிந்தாலும் தன் தனித்தன்மையை விட்டுக் கொடுக்க மறுத்து அரண்மனை வாசம் செய்ய மறுக்கிறார் ராஜேந்திர சோழனுக்கு பல முறை மன கலக்கத்திற்கு தீர்வாக அமைகிறார். தேர் என்றாலே திருவாரூர் தேர் தான் அப்படிப்பட்ட திருவாரூர் தேரில் சுவாமியுடன் அரசருக்கு இணையாக அமர்ந்து வலம்வரும் பேரு பெற்றவர்.இராஜேந்திர சோழன் இறப்பிற்குப்பின் உடன்கட்டை ஏறி இந்த நூலின் கதாநாயகியாக திகழ்கிறாள். வீரமாதேவி அறிமுகப்படுத்தும் காட்சி திருவாரூரில் ஆரம்பிக்கிறது அடுத்த காட்சியில் தில்லையில் இருக்கிறது, சரியான பொருத்தமாக தோன்றவில்லை.ராஜேந்திர சோழன்:

கால்வைத்த இடமெல்லாம் வெற்றியாக குவித்த ராஜராஜசோழனின் மகனாக திகழும் ராஜேந்திரசோழன். தாய் எட்டடி என்றால் மகன் 16 அடி என்பதற்கு ஏற்ப ராஜராஜ சோழனை காட்டிலும் பராக்கிரம திகழ்ந்தாலும் ராஜராஜனின் இந்த சோழ சாம்ராஜ்யத்தின் அஸ்திவாரமாகவும் புகழுக்கு இமயம் அளவிற்கு உயரம் வரை அடைந்த தாலும் எல்லா புகழும் ராஜராஜனை அடைந்தது. மானியக் கடகத்தில் அரசர் ராஜராஜன் தோல்வியை தழுவினார் அந்த அவமானத்தால் அரண்மனைக்கு வராமல் அரண்மனையின் வெளியே கொட்டகை அமைத்து அங்கே தங்கியிருந்த பொழுது தந்தையின் அவமானத்தை துடைக்க மானியக் கடகம் சென்று வெற்றி பெற்று வந்தார்.அப்பொழுது இளவரசர் பட்டம் சூட்டப்படும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. அப்பொழுதும் நிகழவில்லை இப்படியாக சோழப் படையின் தளபதியாக பல ஆண்டுகள் உரிமை மறுக்கப்பட்ட தன் வெளிப்பாடாக ராஜராஜன் இடம் ஒரு இடைவெளி உள்ளுக்குள் உருவாகிறது இதன் காரணமாகவே தலைநகரை மாற்றி அமைக்க திட்டம் விழுகிறதோ என்று தோன்றுகிறது இருந்தாலும் தான் ஒரு விழுது தான் என்பதை இறுதி காலகட்டத்தில் உணர்கிறார்.தான் பட்ட கஷ்டங்கள் பின்வரும் தலைமுறை அனுபவிக்கக் கூடாது என்று ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பொழுது இளவரசர்களுக்கு ஒரு ஒரு ராஜ்ஜியத்தை கொடுத்து ஆட்சியில் அமர்த்தினார். தன் தந்தை சூரிய ஒளியைப் போல விளங்கியதால் இவர் எவ்வளவு பிரகாசமாக ஒளி விட்டாலும் அதன் ஒளியை கண்ணுக்கே தெரியவில்லை. இவர் இறப்பின்போது வீரமாதேவி உடன்கட்டை ஏறியதால் ஊரில் எல்லோரும் அவளைப் பற்றியே பேசி இறப்பிலும் இவருக்கு இரண்டாம் இடம் என்ற வரியை படித்ததும் கண் கலங்கி விட்டது.

தேவரடியார்கள்:

கோவிலுக்கு தெய்வப் பணிகளை செய்வதற்கு சில பெண்களை அனைத்து ஊர்களில் இருந்தும் நேந்து விடப்படுகிறார்கள்.அவ்வாறு நேர்ந்து விடப்படும் பெண்கள் இறைவனை கணவனாக கொண்டு கோவில் திருப்பணிகளை செய்கிறார்கள்.சிவன் ஆலயமாக இருந்தால் சூலத்தையும் விஷ்ணு ஆலயமாக இருந்தால் சங்கு சக்கரத்தையும் கையில் தரித்துக் கொள்கிறார்கள்.யாரையாவது திருமணம் செய்து கொள்ள விரும்பினால் ஊர் பஞ்சாயத்தை கேட்டு ஊர் ஒப்புதலுடன் திருமணம் செய்து கொள்ள வேண்டும், ஒத்துக்கொள்ளவில்லை என்றால் அரசிடம் முறையிட்டு திருமணம் செய்து கொள்ளலாம்.ஆங்கில ஆட்சிக்குப் பிறகு தான் இவர்களை பார்க்கும் கண்ணோட்டமும் மாறி இருக்கிறது என்று சொல்லலாம்.

ஜாதி அமைப்பு:

கோவிலில் பணிபுரியும் அனைவரும் இறைவனுக்கு தொண்டு செய்யும் மன நிலையில்தான் எல்லோருக்கும் இருந்திருக்கிறது. கோவிலின் கருவறை சமையலறை அனைவரும் சென்று வந்து இருக்கிறார்கள் அரசர்கள் வட நாட்டிற்கு சென்று பிராமணர்களை அழைத்து வந்து குடியமர்த்தி இதோடு இல்லாமல் அவர்களுக்கு அதிக உரிமையையும் நிலத்தையும் கொடுத்ததன் விளைவுதான் ஜாதி அமைப்பை உருவாக்கி இருக்கிறது என்பதை கிடைக்கும் இடங்களில் எல்லாம் பதிவு செய்து இருக்கிறார். இவ்வளவு ஆண்டுகள் ஒற்றுமையாக இருந்த இனம் பிராமணர்கள் உயர்ந்த முதல் ஜாதி அவர்களுக்கு அடுத்த இரண்டாம் நிலைக்கு போட்டி ஏற்பட தொடங்கி இருக்கிறது இவ்வாறு அவர்கள் தங்களுக்கான நிலையை தக்க வைத்து இருக்கிறார்கள் என்பதை தைரியமாக கூறியிருக்கிறார்.

ஊர் பஞ்சாயத்து:

இன்றும் இந்திய அரசியல் கட்டமைப்பில் அடிப்படையாக உள்ள பஞ்சாயத்து அமைப்பு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஊர் பஞ்சாயத்தை அமைத்து சிறந்த ஆட்சி செய்ததை எண்ணி ஆச்சரியமாக உள்ளது.

பொருளாதாரமும் வியாபாரமும்:

ஆடு மாடுகள் தான் அன்றைய வணிகத்தின் முக்கிய பங்கு வகிக்கிறது.கடந்த 8 ஆண்டுகளாக பொருளாதாரம் எந்த அளவிற்கு உயரவில்லை என்று உரையாடும் காட்சியில் ராஜராஜசோழனின் சிறப்பான ஆட்சி வெளிப்படுகிறது. வியாபாரிகள் கடல்கடந்து சென்று பண்டமாற்று தின் மூலம் நாட்டின் செல்வத்தையும் பெருமையையும் உயர்த்துவதற்கு முக்கிய காரணிகளாக விளங்குகிறது.

உப்பளம்:

தனியார் உடமையாக உள்ள உப்பளத்தை அரசு எடுத்து விலை நிர்ணயிப்பது மூலம் மக்களுக்கு சரியான விலையில் உப்பு விற்கப் படுகிறது இதை இன்றைய தலைகீழ் நிலையை ஒப்பிடாமல் இருக்க முடியவில்லை.ஆதுரசாலை:

அப்பொழுது இருந்த மருத்துவ முறைகளை புரிந்து கொள்ள முடிந்தது மண்ணை மேல் பூசி சேற்றுக் குளியல் அப்பொழுது இருந்த பாட்டி வைத்தியம் அனைத்தையும் ஒன்று சேர்ந்த வைத்தியமுறை உடல் கழிவுகளை வெளியேற்றுவது ஆரோக்கியத்தின் அடிப்படை போன்றவைகள் மேலான வைத்திய முறையாக இருந்திருக்கிறது.

உணவு:

அந்தக் காலத்து உணவுமுறை பலவகைப்பட்ட அரிசி சோறு, பழங்கள், தினைமாவு, தேன் ,நெய், கேப்பைக் களி, நெய்யில் வறுத்த மிளகு ,உளுத்தம் மாவு உருண்டை என்று எவ்வளவு ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது.சாப்பிடுவதற்கு முன் உப்பு வைக்கும் மரபு இன்றளவும் கடைப்பிடிக்கின்ற என்பது மகிழ்ச்சியாக உள்ளது.

பிரம்மாண்ட தருணம்:

இந்த நாவலின் இரண்டு பிரம்மாண்டமான காட்சிகளை வாசகர்மனதை பதைபதைக்கச் செய்து காட்சியை நம் கற்பனைக்கே விட்டு விட்டார். முதலாம் ராஜராஜ சோழனின் மறைவு உற்றார் உறவினர் ஊர் மக்கள் அனைவரின் மன நிலையையும் நம்மிடமே விட்டுவிட்டார் ,அதைப்போல ஆதி நகர் மீது போர் தொடுக்கப்படும் காட்சி. ஒரு மாநிலம் விட்டு ஒரு மாநிலத்திற்கு ஆயிரக்கணக்கான படைகளுடன் சென்று அங்கு உள்ள
ராட்சஸர்கள்க்கு இணையான வீரர்களுடன் படைத்து எடுத்து வென்ற காட்சி.

இறை சேவை:

சோழ வம்சமே சிவபக்தியில் திகைத்து நின்றது. ராஜராஜ சோழனின் மூதாதையர்கள் ஆகட்டும் குந்தவை நாச்சியார் ராஜேந்திரசோழன் ராஜாதிராஜன் அனைவரும் செல்லும் இடங்களில் எல்லாம் சிவஸ்தலங்களை அமைத்து பல நூற்றாண்டுகள் கடந்தும் இன்றும் சோழ சாம்ராஜ்யத்தின் புகழை நிலைத்திருக்கச் செய்கிறது.

சதுர அடிகள்:

நம் பூமியை சித்தர் பூமி என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக சதுரஅடிகள் வரும் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.” சொந்த குடிகளுக்கு இல்லாத உரிமையை அன்னியர் பெற்றால் அவை என்றுமே நன்மையை விளைவிக்காது” எவ்வளவு பொருத்தமான சொல் இன்றும் அனைத்து உயர் பதவியும் பொறுப்பும் நம் மக்களுக்கு இல்லை. ராஜேந்திர சோழன் இறுதிக்காலத்தில் சதுரத் தடிகளுடன் ஆன உரையாடல் அவர் கேட்கும் பல கேள்விகளும் அரசர் மனம் அமைதியடைய செய்கிறது. ராஜராஜன் காலத்தில் திருமுறைகள் தேவாரம் பண்ணிசைத்து பாட வேண்டும் என்ற தேடலுக்கு இவர்தான் சரியான வழிகாட்டியாக இருந்திருக்கிறார்.

கங்கைகொண்ட சோழபுரம்:

இந்த நாவலின் இரண்டாம் பகுதி பெரும்பான்மையான பகுதி கங்காபுரம் அமைவதும், ஏரிகளை அமைப்பதும் கோவில் கட்ட முனைவதும், நீர்நிலைகளை உருவாக்குவதும், கோவிலை சுற்றி நகரங்கள் உருவாக்குவதும், கற்களைக் கொண்டு வருவது, சிற்ப வேலைப் பாடு, தில்லை அழகி ஆதித்தியன் உம்முடைய காதல் காட்சிகள், அவர்களது மரணம், மகேந்திரவர்ம பல்லவன் எழுதிய மத்தவிலாசப் என்ற நாடகம், அங்கு பணிபுரிபவர்களின் நிலை, இவற்றையெல்லாம் மிகவும் தெளிவாகவும் காட்சிப்படுத்த கூடியதாகவும் நாவலை வடிவமைத்திருக்கிறார்.

நாவலை ஆரம்பிக்கும் பொழுது சற்று கடினமாக இருந்தாலும் போகப்போக விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் அமைந்தது.

நூல்: கங்காபுரம் (Gangapuram)
ஆசிரியர்: அ. வெண்ணிலா
வெளியீடு:
அகநி வெளியீடு

3 பாடசாலை தெரு
அம்மையப்பட்டு
வந்தவாசி – 604408
விலை: ரூ. 450/-

பெங்களூரிலிருந்து
ராதிகா விஜய் பாபுஇப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.