’கேண்டிடா’ பெண் விடுதலையை உயர்த்திப் பிடிக்கும் ஜார்ஜ் பெர்னார்டு ஷாவின் நாடகம்.
– பெ.விஜயகுமார்.
ஜார்ஜ் பெர்னார்டு ஷா (1856-1950) இருபதாம் நூற்றாண்டு இங்கிலாந்தின் மிகச் சிறந்த நாடகாசிரியராகவும், கருத்தாளராகவும், பேச்சாளராகவும் போற்றப்பட்டார். இலக்கிய உலகில் யாரையும் பீடத்தில் அமர்த்தி வைத்துத் துதி பாடக்கூடாது என்று சொல்லி அனைத்துப் பிம்பங்களையும் உடைத்த பெருமைக்குரியவர் (Iconoclast) பெர்னார்டு ஷா. சிறந்த தத்துவவியலாளரும் சமத்துவவாதியும்கூட. ஃபேபியன் சொசைட்டி என்ற சமத்துவவாதிகள் சங்கத்தின் தீவிர உறுப்பினராக இருந்தார். பெண்ணுரிமைக்கும், முற்போக்குச் சிந்தனைகளுக்கும் பெயர் பெற்ற பெர்னார்டு ஷா ஆங்கில மொழியின் பேச்சும், எழுத்தும் சீர்திருத்தப்பட வேண்டும் என்பதிலும் ஆர்வம் காட்டினார். இதை வலியுறுத்தியே ‘பிக்மேலியன்’ என்ற நாடகத்தை எழுதினார்.
அயர்லாந்தில் வாழ்ந்த ஷாவின் குடும்பம் வாழ்வைத் தேடி லண்டன் மாநகர் வந்தது. பெர்னார்டு ஷா தொடக்கத்தில் பத்திரிகைகளுக்கு இசை குறித்தும், நாடகங்கள் குறித்தும் விமர்சனம் எழுதுபவராக இலக்கிய உலகுக்கு அறிமுகம் ஆனார். இவரின் நாடக விமர்சனங்கள் மூன்று தொகுப்புகளாக வெளிவந்துள்ளன. ஐரோப்பாவில் சிறந்த நாடகாசிரியராக வலம்வந்த ஹென்றிக் இப்சன் வழிவந்த ஷா நாடகங்களில் சமூக, அரசியல், பொருளாதாரப் பிரச்சனைகள் விவாதிக்கப்பட வேண்டும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தார். ஷாவின் நாடகங்கள் நூல் வடிவில் படிக்கப்பட்டும், மேடையில் அரங்கேற்றப்பட்டும் கொண்டாடப்படுகின்றன. தன் வாழ்நாளில் இரண்டு உலகப் போர்களின் கொடூரங்களைப் பார்த்த ஷா உலக அமைதிக்காக உரக்கக் குரல் கொடுத்தார். ஷாவின் நாடகங்கள் நகைச்சுவையும், பகடியும் நிறைந்தவை. ஒவ்வொரு நாடகத்துக்கும் நீண்ட முன்னுரையை அழகு உரைநடையில் எழுதினார்.
’கேண்டிடா’ நாடகம் நகைச்சுவை நிறைந்த உரையாடல்களுடன் பெண்ணுரிமையைப் பேசுகிறது. கேண்டிடா என்ற அறிவும், அன்பும், அடக்கமும், ஆற்றலும் கொண்ட பெண்ணே நாடகத்தின் நாயகி. ’கேண்டிட்’ என்ற ஆங்கிலச் சொல்லின் பொருள் ’தெளிவு’ என்பதாகும். தன் பெயருக்கேற்ப கேண்டிடா சிந்தனையிலும், செயலிலும் தெளிவானவள். அவள் கணவர் ஜேம்ஸ் மாரல் சர்ச் ஆஃப் இங்கிலாந்தின் போதகர். சமத்துவவாதியும்கூட. சர்ச்சில் உணர்ச்சிப் பூர்வமாக ஆன்மீக உரையாற்றும் ஜேம்ஸ் மாரல் அரசியல் மேடைகளில் சமத்துவ தத்துவம் குறித்து உரையாற்றுவதிலும் வல்லவர். அவரின் மேடைப் பேச்சைக் கேட்பதற்கு மக்கள் குவிந்தனர்.
கேண்டிடா – ஜேம்ஸ் மாரல் தம்பதிகள் ஒருவருக்கொருவர் பொருத்தமானவர்களாக வெற்றிகரமாக இல்லறம் நடத்துகின்றனர். கேண்டிடாவின் தந்தை பர்ஜஸ் லாபத்தில் மட்டுமே குறியாக இருக்கும் வணிகர். மருமகனின் சமத்துவவாதக் கருத்துகளைக் கேலி செய்பவர். மாமனார் மருமகன் இடையே இருந்த இடைவெளி மலைக்கும், மடுவுக்குமானது. மாமனார் முதலாளித்துவத்தை உயர்த்திப் பிடித்தார். மருமகன் சோசலிச சித்தாந்தத்தில் நம்பிக்கை கொண்டிருந்தார். தந்தை – கணவர் இருவரின் கருத்து வேறுபாடுகளையும் நன்கறிந்த கேண்டிடா இருவரையும் போற்றிப் பாதுகாக்கிறார்.
போதகர் ஜேம்ஸ் மாரலின் அலுவலகப் பணியாளர் பிராசர்பைன் நேர்மையுடன் பணியாற்றுபவர். ஏழைக் குடும்பத்தில் பிறந்த அவரை ஜேம்ஸ் தன்னுடைய குடும்பத்தில் ஒருவராக அன்புடன் நடத்துகிறார். மாரல் தம்பதிகளின் குழந்தைகள் நாடகத்தின் உரையாடலில் மட்டுமே குறிப்பிடப்படுகிறார்கள். மேடையில் தோன்றுவதில்லை. ’லெக்சி’ என்று அன்புடன் அழைக்கப்படுக் போதகர் அலெக்சாண்டர் சர்ச் பணியில் ஜேம்ஸ் மாரலுக்கு உதவியாளராக இருக்கிறார். ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்துவிட்டு இறைப் பணியில் பணியாற்ற வந்திருக்கும் இளைஞர். தன்னுடைய வழிகாட்டியாக ஜேம்ஸ் மாரலை ஏற்றுக்கொண்டவர். யூஜின் என்ற பதினெட்டு வயது வாலிபன் நாடகத்தின் முக்கியமான கதாபாத்திரம். வசதியான குடும்பத்தில் பிறந்த இந்த இளைஞன் ஒரு கவிஞனும்கூட. நாடகத்தின் நகைச்சுவைக்கும், விறுவிறுப்பான நிகழ்வுகளுக்கும் காரணமாக இருப்பவன் இவனே. இவனின்றி இந்நாடகம் இல்லை.
இந்த ஓரங்க நாடகம் மூன்று பாகங்ளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. நாடகம் தொடக்கத்திலிருந்து முடியும்வரை சுவாரசியமாக நகர்கிறது. நாடகம் முழுவதும் போதகர் ஜேம்ஸ் வீட்டின் வரவேற்பறையில் நடக்கிறது. ஒரு நாளில் நடக்கும் நிகழ்வுகள் மட்டுமே காட்சிப்படுத்தப்படுகின்றன. செவ்வியல் நாடகத்தின் இலக்கணமான காலம், இடம், வினை ஒருங்கமைவினைக் காண்கிறோம்.
நாடகத்தின் முதல் பாகம் காலை பத்து மணிக்கு பரபரப்பான உரையாடலுடன் தொடங்குகிறது. ஜேம்ஸ் மாரலின் உதவியாளர் பிராசர்பைன் அலுவலக நாட்குறிப்பிலிருந்து போதகரின் அன்றைய நிகழ்ச்சிகளை வாசிக்கிறார். நாட்குறிப்பில் இருக்கும் பட்டியல் நீண்டு நெடியதாக உள்ளது. ஜேம்ஸ் மாரல் வெறும் போதகர் மட்டுமல்ல சிறந்த சோசலிசவாதியும், சமூகச்செயற்பாட்டாளரும்கூட. சோசலிஸ்டுகள் சங்கமாகிய ’ஃபேபியன் சொஸைட்டி’ தொடங்கி நிறைய முற்போக்கு சங்கங்கள், அமைப்புகள் அவரைப் பேச அழைத்துள்ளனர்.
ஜேம்ஸ் மாரல் என்ன செய்வதென்று சிந்தித்துக்கொண்டிருக்கும்போது அவருடைய சர்ச் உதவியாளர் போதகர் லெக்ஸ் வருகிறார். அவரைப் பார்த்ததும் ‘’நான் இன்று ஓய்வெடுக்கப் போகிறேன். லெக்ஸ்! எனக்குப் பதிலாக எல்லா கூட்டங்களிலும் நீ கலந்துகொள்,’’ என்கிறார். ஜேம்ஸ் மாரல் முகத்தில் பொங்கும் மகிழ்ச்சியைக் கண்டு ‘’என்ன விஷேசம்’’ என்று கேட்கிறார் லெக்ஸ். ’’நீண்ட நாளாக வெளியூர் சென்றிருந்த என் மனைவி குழந்தைகளுடன் இப்போது வருகிறார். இன்றைய பொழுதை அவர்களுடன் மகிழ்ச்சியுடன் கழிக்கப் போகிறேன்,’’ என்கிறார். ’’இம்மாதக் கடைசியில்தானே வருவதாக இருந்தார்கள்?’’ என்ற லெக்ஸ் கேள்விக்கு, ‘’இரண்டு நாட்கள் மட்டுமே இங்கிருப்பார். அவர் இல்லாதபோது வீட்டை நாம் எப்படி வைத்திருக்கிறோம் என்று பார்க்க வேண்டும் அல்லவா? அதற்காக வருகிறார்.’’
’’லெக்ஸ்! நீ விரைவில் திருமணம் செய்துகொள். அப்போதுதான் உனக்கு இல்லற வாழ்வின் அருமை தெரியும். அதுவும் என் மனைவி கேண்டிடா போன்ற ஒரு பெண் உனக்கு மனைவியாக அமைந்தால் வாழ்வு இன்பமயமாகும். பூமியில் சொர்க்கத்தைப் படைக்க வேண்டும் என்றுதானே பிரசங்கம் செய்கிறோம்,’’ என்று அவர் சொன்னதும், ‘’உங்களிடம் ஒன்றைச் சொல்ல மறந்துவிட்டேன். வரும்வழியில் உங்கள் மாமனாரைச் சந்தித்தேன். அவர் இன்று உங்கள் வீட்டுக்கு வருவதை உங்களிடம் சொல்லச் சொன்னார்,’’ என்று லெக்ஸ் சொல்கிறார். ’’என்ன ஆச்சரியம்! மூன்றாண்டுகளுக்குப் பிறகு மகளைப் பார்க்க வருகிறாரே!,’’ என்று வியப்புடன் சொல்லி வரவேற்பறையின் நடுவில் இருக்கும் வாயில் வழியாக வீட்டுக்குள் செல்கிறார்.
அவர் உள்ளே சென்றதும் போதகர் ஜேம்ஸ் தன் மனைவி கேண்டிடா மீது கொண்டிருக்கும் அன்பைப் பற்றி பிராசர்பைனும், லெக்ஸும் பெருமையுடன் பேசுகிறார்கள். ’’எந்நேரமும் ‘கேண்டிடா! கேண்டிடா! என்று அன்பைப் பொழிகிறாரே; என்னவொரு அருமையான தம்பதிகள்!’’ என்று சொல்லி இருவரும் வியக்கிறார்கள். ஜேம்ஸ் இன்று ஓய்வில் இருப்பதால் கூட்டங்களில் பங்கேற்க போதகர் லெக்ஸ் விரைகிறார். அந்நேரம் கேண்டிடாவின் தந்தை பர்ஜஸ் வீட்டுக்குள் நுழைகிறார்,
போதகர் ஜேம்ஸ் – அவர் மாமனார் பர்ஜஸ் இடையிலான உரையாடல் பகடியும், நகைச்சுவையும் நிரம்பியதாக இருக்கிறது. சர்ச் நடத்தும் ஏழைக் குழந்தைகள் விடுதியில் தங்கியிருப்பவர்களுக்கு உடைகள் தைப்பதற்கான துணிகளை வழங்குவதற்கான டெண்டரை பர்ஜஸ் எடுத்திருந்தது குறித்துப் பேசுகிறார்கள். ‘’எவ்வளவு குறைந்த விலையில் டெண்டர் எடுத்திருந்தேன். என்னை லாபத்திற்காக அலையும் தொழில் அதிபர் என்று திட்டுகிறீர்கள்’’ என்கிறார் பர்ஜஸ். ’’இதில் ஏற்பட்ட இழப்பை உங்கள் தொழிலாளர்கள் தலையில் கட்டி இருப்பீர்கள். தொழிலாளிகளின் உழைப்பைச் சுரண்டித்தானே லாபம் ஈட்டுகிறீர்கள், உங்கள் ஆலையில் வேலை பார்க்கும் பெண்கள் எல்லாம் என்னுடைய சர்ச்சுக்குத்தானே வருகிறார்கள். பாவம்! அவர்களின் பரிதாபகரமான நிலைமையைப் பார்க்கிறோமே. அவர்களின் கூலியைக் கூட்டச் சொல்லிக் கடிதம் எழுதினோமே. அப்பெண்களின் கூலியைக் கூட்டினீர்களா, இல்லையா?’” என்று ஜேம்ஸ் கேட்கிறார்.
’’என்னுடைய ஆலையில் மாற்றங்கள் கொண்டுவந்துள்ளேன் ஜேம்ஸ்! பெண்களை வேலையில் சேர்ப்பதே இல்லை. இப்போது என் ஆலையில் இயந்திரங்கள்தான் வேலை செய்கின்றன. எல்லாம் இயந்திரமயம்!’’ என்று பெருமையுடன் கூறுகிறார். ’’தொழிலாளர் நலம் குறித்தெல்லாம் நீங்கள் பேசுவதைப் பத்திரிகைகளில் படிக்கிறோமே. தொழிலாளர்கள் கூலியை உயர்த்த வேண்டும் என்று சொல்வதெல்லாம் அர்த்தமற்றது. கூலியை உயர்த்தினால் தொழிலாளர்கள் பணத்தை வீணடித்து விடுவார்கள். பணத்தின் அருமை அவர்களுக்குத் தெரியாது ஜேம்ஸ்!’’ என்று பர்ஜஸ் முதலாளித்துவ கொள்கையை முழக்குகிறார். இதைக் கேட்டுக் கோபமடைந்த ஜேம்ஸ், ‘’சரி; இப்போது நீங்கள் வந்த விஷயம் என்ன? மறுபடியும் காண்ட்ராக்ட் எடுக்கலாம் என்று வந்துள்ளீர்களா? அல்லது உங்கள் மகள் கேண்டிடா மீதான அன்பில் அவளைப் பார்க்க வந்தீர்களா? என்று ஜேம்ஸ் கேட்கிறார்.
’’என் அன்பை நீங்கள் சந்தேகித்தால் நான் போய்விடுகிறேன்’’ என்று பர்ஜஸ் கோபப்பட்டதும், ஜேம்ஸ், ‘’கோபம் வேண்டாம்; நாம் அவரவர் வழியில் செல்வோம். நீங்கள் எங்கள் வீட்டுக்குத் தாராளமாக வரலாம்’’ என்று சொல்லி ஜேம்ஸ் சண்டைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், கேண்டிடா வீட்டுக்குள் நுழையவும் சரியாக இருக்கிறது. கேண்டிடா 33 வயது நிரம்பிய, நிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட பார்வையும் கொண்ட பெண்மணியாகக் காட்சியளிக்கிறார். நிறைய சுமையுடன் வரும் தன் மனைவியைப் பார்த்து, ‘’எப்படி இவ்வளவு சுமையுடன் வந்தாய்? என்று கேட்டு அவரை அன்புடன் ஆரத்தழுவிக் கொள்கிறார். ‘’நான் தனியாக வரவில்லை,. என்னுடன் இதோ! இந்தப் பையன் வந்தான்’’ என்று சொல்லி யூஜினை அறிமுகம் செய்து வைக்கிறார். ’’யூஜின் ஒரு பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவன். அவனுடைய மாமா ஒரு பண்ணையார். யூஜின் ஒரு சிறந்த கவிஞனும்கூட,’’ என்கிறார்.
தன் மகள் கேண்டிடாவுடன் சிறிது நேரம் அன்பைப் பரிமாறிக் கொண்ட பின்னர் பர்ஜஸ் விடைபெறுகிறார். ஜேம்ஸ் – கேண்டிடா தம்பதிகள் யூஜின் அவர்களுடன் மதிய உணவில் சேர்ந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றனர். வரவேற்பரையில் அவர்கள் இருவரையும் பேசிக்கொண்டிருக்கச் சொல்லிவிட்டு கேண்டிடா வீட்டுக்குள் செல்கிறார். நல்ல நட்புடனேயே இருவரும் உரையாடலைத் தொடங்குகிறார்கள். யூஜின் திடீரென்று ஜேம்ஸிடம்,’’நான் உங்கள் மனைவி கேண்டிடாவைக் காதலிக்கிறேன்’’ என்றதும் ஜேம்ஸ் அதிர்ச்சி அடைகிறார். ‘’என்ன உளறுகிறாய்! உன் வயதென்ன? அவர் வயதென்ன? இருபது வயதைத் தாண்டாத நீ எப்படிக் காதலில் விழலாம்? இது ஒரு குழந்தைக் காதல் அல்லவா?’’ என்று ஜேம்ஸ் கோபமும், சிரிப்பும் கலந்து யூஜினிடம் கேட்கிறார். ’’கேண்டிடாவின் அழகு, அன்பு, அடக்கம் போன்ற உன்னதப் பண்புகளை நான் நேசிக்கிறேன். என்னால் அவருக்கு அன்பான, அழகான வாழ்க்கையை அமைத்துத் தர முடியும். நீங்கள் எந்நேரமும் சர்ச்சில் பிரசங்கம் செய்தும், கூட்டங்களில் சோசலிசம் குறித்து உரையாடியுமே கழிக்கின்றீர்கள். நான் கேண்டிடாவை உங்களிடமிருந்து காப்பாற்ற விரும்பிகிறேன்.’’ என்று யூஜின் கூறியதும் ஜேம்ஸ் கோபத்தில்.’’நீ கவிஞனாக இருக்கலாம். அதனால் உனக்கு மட்டுமே காதலிக்கத் தெரியும் என்று நினைக்காதே. கேண்டிடா மீது நான் கொண்டுள்ள காதலை நீ எப்படி அறிவாய்? உன்னால் என்போல் சர்ச்சில் பிரசங்கம் செய்ய முடியுமா? அல்லது சோசலிசம் குறித்து உரையாடத் தெரியுமா? நீ இங்கிருந்து உடனே போய்விடு. கேண்டிடா உன் அபத்தமான பேச்சைக் கேட்கும் முன் போய்விடு’’ என்று ஜேம்ஸ் சொல்லும்போது நல்ல வேளையாக அங்கே கேண்டிடா வருகிறார். யூஜின் – ஜேம்ஸ் இடையே நடந்த சண்டையை அறியாததால் கேண்டிடா அவருக்கே உரிய அன்புடனும் நிதானத்துடனும் வருகிறார்.
‘’யூஜின்! எங்கே போகிறாய்? இதோ! மதிய உணவு தயார். எங்களுடன் நீ சாப்பிட வேண்டும்’’ என்று வெகுளித்தனமாகப் பேசுகிறார். ‘’நான் இங்கு சாப்பிடுவதை உங்கள் கணவர் ஒப்புக்கொள்வாரா என்று முதலில் தெரிந்து கொள்ளுங்கள்’’ என்று யூஜின் சொன்னதும், ஜேம்ஸ் மிகவும் பெருந்தன்மையுடன், ‘’நீ எங்களுடன் சாப்பிடுவதில் எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லையே’’ என்று சொல்லி தன் வேலைகளைக் கவனிக்கத் தொடங்குகிறார்.
நாடகத்தின் இரண்டாம் பாகம் மேலும் சுவாரசியமாகிறது. நன்பகல் நேரம். யூஜின் வரவேற்பறையில் காத்திருக்கிறான். அலுவலகப் பணியில் தீவிரமாக இருக்கும் பிராசர்பைனிடம், யூஜின் ‘’நீங்கள் காதலிக்கிறீர்களா?’’ என்று திடீரென்று கேட்டதும், பிராசர்பைன் திடுக்கிட்டு,’’நான் யாரையும் காதலிக்கவில்லை, அதில் உங்களுக்கென்ன பிரச்சனை’’ என்று கோபத்துடன் கேட்கிறார். ‘’காதல் மனித வாழ்வில் அவசியமான ஒன்று. நீங்கள் காதல் அனுபவத்தை விரைவில் பெற வேண்டும். வெட்கம் காதலுக்கு குறுக்கீடாக உள்ளது. நீங்கள் அதிகம் வெட்கப்படுகிறீர்கள்’’ என்று பிராசர்பைனிடம் தேவையற்ற வாதத்தைத் தொடங்குகிறான். ‘’காதலைத் தவிர நீ வேறு எதைப்பற்றியும் பேச மாட்டாயா’’ என்று கோபத்துடன் கேட்கிறார். ’’கொஞ்ச நேரம் பொறு; ஜேம்ஸ் வந்ததும் அவரிடம் பேசு. அவர் உனக்கு நிறையக் கற்றுத் தருவார்’’ என்று அவர் சொன்னதும் யூஜின்,’’மிஸ்டர் ஜேம்ஸ் நிறையப் பேசுவார், ஆனால் அவருக்கும் காதல் மொழி தெரியாது. காதல் மொழி என் போன்ற கவிஞர்களுக்கு மட்டுமே தெரியும்’’ என்று யூஜின் உளறத் தொடங்குகிறான். நல்ல வேளையாக மிஸ்டர் பர்ஜஸ் அங்கு வந்ததும் பிராசர்பைன், ‘’அய்யா! இதோ! இந்த இளைஞனிடம் சற்று நேரம் பேசிக்கொண்டிருங்கள். நான் என் வேலையைப் பார்க்கிறேன்’’ என்று சொல்லி யூஜினிடமிருந்து தப்பித்து ஓடுகிறார்.
தன்னுடைய மாமனார் வருகையை அறிந்த ஜேம்ஸ் அவரை வரவேற்கிறார். மாமனார் படிப்பதற்கு நிறைய படங்களுடனான ஒரு இதழைக் கொடுக்கிறார். யூஜின் மீண்டும் விதண்டா வாதம் பேசுகிறான். ‘’மிஸ்டர் ஜேம்ஸ்! கேண்டிடா எப்போதும் எதையாவது துடைத்துக் கொண்டே இருக்கிறார். நீங்கள் அவருக்கு எந்த உதவியும் செய்வதில்லை’’ என்று யூஜின் தன் கணவரைக் குறை கூறும் நேரத்தில் கேண்டிடா உள்ளே வருகிறார். ‘’யூஜின்! நீ எனக்கு என்ன பரிசளிப்பாய்? என் வேலைகளிலிருந்து விடுதலைப் பெறுவதற்கு’’ என்று யூஜினிடம் கேலியாகக் கேட்கிறார். உடனே யூஜின்,’’வேலைகள் எதற்கு? உங்களை நான் கூட்டிச் செல்லும் இடம் சொர்க்கலோகம் போல இருக்கும். அங்கு நீங்கள் எந்த வேலையும் செய்ய வேண்டியதில்லை. நாம் இருவரும் அங்கு மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதப்போம்’’ என்று காதல் மொழி பேசுகிறான்.
காலையில் ஜேம்ஸ் சர்ச்சில் பேச வேண்டிய உரையை அவருக்குப் பதிலாக லெக்ஸ் பேசிவிட்டு மாலை வீடு திரும்புகிறார். அன்று மாலை ஜேம்ஸ் பேச வேண்டிய கூட்டத்தில் மாற்றுப் பேச்சாளர் கிடைக்காததால் ஜேம்ஸ் போக வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ஆனால் ஜேம்ஸ். ‘’எனக்கு விருப்பமில்லை. நான் இன்று வீட்டில் என் குடும்பத்தினருடன் இருக்க விரும்புகிறேன்’’ என்கிறார். ஆனால் லெக்ஸ், பர்ஜஸ், பிராசர்பைன், கேண்டிடா ஆகிய நால்வரும் ஜேம்ஸ் கூட்டத்திற்குச் செல்ல வேண்டும்; அவரின் பேச்சைக் கேட்க ஆவலுடன் காத்திருக்கும் மக்களை ஜேம்ஸ் புறக்கணிக்கக் கூடாது என்று சொல்கின்றனர். மேலும் ஜேம்ஸ் சொற்பொழிவைக் கேட்க பர்ஜஸ், லெக்ஸ், மற்றும் பிராசர்பைன் விரும்புகின்றனர். கேண்டிடாவும், ‘’நான் இச்சிறுவன் யூஜினுடன் இருக்கிறேன். நீங்கள் அனைவரும் கூட்டத்திற்கு போய் வாருங்கள்’’ என்று சொல்லி அனைவரையும் அனுப்பி வைக்கிறார்.
நாடகத்தின் மூன்றாம் பாகம் உணர்ச்சி பூர்வமானது. ஜேம்ஸ்ஸும் மற்றவர்களும் கூட்டத்துக்குச் செல்கிறார்கள். யூஜினும், கேண்டிடாவும் தனிமையில் இருக்கிறார்கள். யூஜின் தன் கவிதைகளை வாசிக்கத் தொடங்குகிறான். கேண்டிடா அலுப்பில் அசந்து தூங்கிவிடுகிறார். யூஜின், ‘’என்ன கேண்டிடா! என் கவிதைகளைக் கேட்காமல் தூங்குகிறீர்கள்’’. என்று கோபப்படுகிறான். ’’போதும்; உன் கவிதைகள்; எவ்வளவு நேரம் கேட்பது. வேறு ஏதாவது பேசு என்கிறார்.’’ உடனே யூஜின்,’’கேண்டிடா! கேண்டிடா! கேண்டிடா!’’ என்று அவர் பெயரை உச்சரித்துக் கொண்டே இருக்கிறான். போதும், போதும் நிறுத்து என்று கேண்டிடா தடுத்ததும், ’உங்கள் பெயரை ஆயிரம் தடவை உச்சரிப்பேன்’’ என்று சொல்பவனைப் பார்த்துச் சிரிக்கிறார் கேண்டிடா.
சொற்பொழிவை முடித்துக் கொண்டு ஜேம்ஸ் வீடு திரும்புகிறார். மற்றவர்கள் பர்ஜஸ் அளிக்கும் விருந்தில் பங்கேற்றுவிட்டு வருவார்கள் என்கிறார். காலையில் நடந்த வாக்குவாதம் மீண்டும் தொடங்குகிறது. ஜேம்ஸ் – யூஜின் இடையில் கடுமையான போட்டி நடக்கிறது. கேண்டிடா,’’இருவரும் என் மீதான காதலை வெளிப்படுத்துங்கள். நான் முடிவெடுக்கிறேன்.’’ ஜேம்ஸ்,’’என் பலம் உன்னைப் பாதுகாக்கும்; என் உழைப்பு உன்னை வாழவைக்கும்; என் மரியாதை உனக்குப் பெருமை அளிக்கும்’’ என்று உணர்ச்சிப் பூர்வமாக தன் காதலைச் சொல்கிறார். அடுத்து யூஜினை நோக்கி, ‘’நீ, உன் காதலைச் சொல்’’ என்றதும், ‘’என் பலவீனம், என் துயரம், என் தேவை அனைத்திற்கும் துணை நிற்க நீங்கள் வேண்டும், கேண்டிடா” என்று முடிக்கிறான்.
இறுதியில் கேண்டிடா தன் தீர்ப்பைச் சொல்கிறார். ‘’ஜேம்ஸ்தான் இந்த வீட்டின் தலைவர்; அவர் இடத்தை வேறு எவராலும் நிரப்ப முடியாது’’. என்று தன் முடிவை உணர்ச்சிப் பூர்வமாகச் சொல்கிறார். ‘’யூஜின்! நான் உனக்கு ஒரு நல்ல தாய் ஆவேன். சகோதரி ஆவேன். உன் வயது என்ன யூஜின்?’’ என்று கேட்கிறார். யூஜின்,’’பதினெட்டு’’ என்கிறான். யூஜின்! ’’நான் சொல்லும் இரண்டு வரிகள் பற்றி நீ கவிதை எழுத வேண்டும். அந்தக் கவிதையை நீ என்னை நினைக்கும் போதெல்லாம் உனக்குள் சொல்லிக்கொள்ள வேண்டும்’’ என்கிறார். ’’அந்த வரிகளைச் சொல்லுங்கள்’’ என்கிறான் யூஜின். ’’இதோ; அந்த வரிகள். ’’எனக்கு முப்பது வயதாகும் போது அவருக்கு வயது நாற்பத்தைந்து! எனக்கு நாற்பத்தைந்து வயதாகும் போது அவருக்கு வயது அறுபது!’’ இதுதான் அந்த இரண்டு வரிகள் என்றதும், ‘’நூறாண்டுகள் சென்றாலும் இந்த இடைவெளி இருக்கத்தான் செய்யும். ஆனால் என் மனதில் இதைவிட மற்றொரு ரகசியம் இருக்கிறது’’. என்று சொல்லி கேண்டிடா முன் மண்டியிடுகிறான். அவன் நெற்றியில் கேண்டிடா முத்தமிட்டு அனுப்பிவைக்கிறார்.
யூஜின் வீட்டிலிருந்து வெளியேறி இருளுக்குள் மறைகிறான். ஜேம்ஸ் – கேண்டிடா தம்பதிகள் தங்கள் கரங்களை இறுகப் பற்றிக்கொண்டு வீட்டுக்குள் செல்கிறார்கள். யூஜின் மனதில் இருக்கும் அந்த ரகசியம் என்ன என்பதை அவர்கள் அறியார். திரை கீழே விழுகிறது.
——————————
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | “கேண்டிடா” நாடகம் (Candida Play) |
| ஆசிரியர்: | ஜார்ஜ் பெர்னார்டு ஷா (George Bernard Shaw) |
| வெளியீடு: | Sahitya Sarowar |
| விலை: | ₹.99 |
| அறிமுகம் எழுதியவர்: | ✍🏻 பெ.விஜயகுமார், மதுரை- 18. இமெயில்: vijayakumarmuta@gmail.com |
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

