மைக்கேலா “மிச்சி” பென்தாஸ் (Michaela “Michi” Benthaus) என்பவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஒரு விண்வெளிப் பொறியாளர் ஆவார். இவர் நடக்க முடியாத ஒரு மாற்றுத்திறனாளி. இவர் விண்வெளிக்குச் சென்று வந்தார். இதன் மூலம் உலகிலேயே முதன் முறையாக விண்வெளிக்குச் சென்ற முதல் மாற்றுத்திறனாளி பெண் என்ற சாதனையைப் படைத்தார். இது சர்வதேச விண்வெளி வரலாற்றில் ஒரு புதிய சாதனையாகும். மேலும் இவர் விண்வெளிக்குப் பயணம் செய்த இரண்டாவது ஜெர்மன் விண்வெளி வீரர் ஆவார்.
ஆரம்ப வாழ்க்கை
இவர் 1992 ஆம் ஆண்டு ஜெர்மனியின் கீல் என்ற ஊரில் பிறந்தார். இவர் தனது பள்ளிப் படிப்பிற்குப் பிறகு லின்ஸில் உள்ள ஜோஹன்னஸ் கெப்லர் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அங்கு மெக்கட்ரானிக்ஸ் என்ற பாடப்பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர் விண்வெளி மற்றும் வானியற்பியலில் நிபுணத்துவம் பெற்றார். இவர் விண்வெளி பொறியியல் துறையில் தனது முதுகலைப் பட்டத்தை மியூனிக் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் முடித்தார்.
விபத்து
![]()
இவர் இளம் வயதிலேயே மலை பைக்கிங்கில் ஈடுபட்டார். இது மோட்டார் சைக்கிள் ஓட்டும் ஒரு சாகச விளையாட்டு. இது மலைப் பாதைகள், பாறைகள், கரடு முரடான நிலப்பரப்புகள் மற்றும் சவாலான சரிவுகளில் மோட்டார் சைக்கிள் ஓட்டுவதாகும். இவர் 2018 ஆம் ஆண்டு செப்டம்பரில் மலையேற்ற பைக்கிங் (Mountain Biking) சம்பவத்தின் போது விபத்து ஏற்பட்டது. அதனால் அவரது முதுகுத் தண்டுவடம் உடைந்தது. அவரால் நடக்க முடியாமல் போனது. இவர் சக்கர நாற்காலியைப் பயன்படுத்தும் ஒரு மாற்றுத்திறனாளியாக மாறினார். இப்படிப்பட்ட ஒரு துயரம் அவரது 26 ஆவது வயதில் நிகழ்ந்தது.
ஆய்வுப் பணி
இந்த விபத்துக்குப் பிறகு ஜெர்மன் விண்வெளி மையத்தில் இண்டன்ஷிப்பை முடித்தார். அங்கு அவர் செயற்கைக் கோள்களின் விமான இயக்கவியலில் பணிபுரிந்தார். இவர் டிசம்பர் 2022 ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஆஸ்ட்ரோ அக்சஸ் (Astro Access) திட்டத்தின் ஒரு பகுதியாக ஒரு பரவளைய ஆராய்ச்சி விமானத்தில் (Zero-G Research Flight) பங்கேற்றார்.
இந்த விமானத்தில் பறந்த போது அவர் முதல்முறையாக எடையின்மையை அனுபவித்தார். இடுப்பு நங்கூரமிடும் அமைப்பு மற்றும் அவசரகால வெளியேற்ற நடைமுறைகள் போன்ற முடக்குவாத விண்வெளி வீரர்களுக்கான தழுவல்களை அவர் பரிசோதித்தார். இதன் பிறகு அமெரிக்க அரசு சாரா நிறுவனமான ஆஸ்ட்ரோ அக்சஸின் தூதராக நியமிக்கப்பட்டார்.
இவர் 2024 ஆம் ஆண்டில் ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தில் (ESA) இளம் பட்டதாரி பயிற்சி திட்டத்தைத் தொடங்கினார். இவர் போலந்தில் உள்ள லுன்ஆரெஸ் நிலையத்தில் முடக்குவாதம் பற்றிய ஆய்வில் ஈடுபட்டார். இந்தப் பணி செவ்வாய்க் கிரக தளத்தில் வாழ்க்கையை உருவாக்குவது சம்பந்தப்பட்டது. மேலும் அத்தகைய சூழலில் ஏற்படும் சவால்களை ஆராய்வதையும் நோக்கமாகக் கொண்டது. இதன் மூலம் ஒரு அனலாக் விண்வெளி வீரர் பணியை முடித்தார்.
விண்வெளிப் பயணம்

தான் ஒரு விண்வெளி வீரர் ஆக வேண்டும் என்ற தனது லட்சியத்தை ஓய்வு பெற்ற விண்வெளிப் பொறியாளர் ஹான்ஸ் கோனிக்ஸ்மேனிடம் கூறினார். அவர் ஃப்ளூ ஆரிஜின் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் அவர்களிடம் பேசி ஏற்பாடு செய்தார். இவர்கள் இருவரும் மைக்கேல் பென்தாஸ் விண்வெளிக்குச் செல்ல நிதி உதவிச் செய்தனர்.
இந்தப் பயணத்தில் மாற்றுத் திறனாளிக்கான வசதிகள் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டன. விண்கலத்திற்குள் செல்லவும் வெளியே வரவும் தரை ஆதரவு உபகரணங்கள் சேர்க்கப்பட்டன. விண்கலத்தின் கதவிலிருந்து நீட்டிக்கப்பட்ட இருக்கையின் உதவியுடன் இவர் தனியாகவே தனது சக்கர நாற்காலியிலிருந்து விண்கலத்திற்குள் சென்றார். பூமியின் தனித்துவமான காட்சியை ஜன்னலுக்கு வெளியே எட்டிப் பார்க்க அவரது இருக்கையிலிருந்து வெளியேறும் வகையில், அவரின் கால்களை ஒரு சிறப்பு பட்டையால் கட்டப்பட்டது. இவருக்கு உதவியாக ஹான்ஸ் கோனிஸ்மேன் இவரது அருகிலேயே அமர வைக்கப்பட்டார்.
இவர் 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 20 அன்று ஃப்ளூ ஆரிஜின் NS-37 பயணத்தின் மூலம் விண்வெளிக்குச் சென்றார். ஒலியின் வேகத்தை விட மூன்று மடங்கு வேகத்தில் ராக்கெட் சென்றது. இதன் விண்கலம் 106 கிலோ மீட்டர் உயரம் வரை சென்று திரும்பியது. இந்தப் பயணம் 11 நிமிடங்கள் வரை நீடித்தது. இவர் விண்வெளியில் 3 நிமிடங்கள் எடையற்ற தன்மையை அனுபவித்தார். இவரின் பயணத்தின் மூலம் இனி மாற்றுத்திறனாளிகளும் விண்வெளிப் பயணத்தில் ஈடுபட முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.
அனுபவம்
நான் எப்போதும் விண்வெளிக்குச் செல்ல விரும்பினேன். அது உண்மையில் தற்போது நடந்து விட்டது. நான் மேலே செல்லும் வரை சிரித்தேன். மேலே செல்வது எனக்குப் பிடித்திருந்தது. மேலே செல்லும் ஒவ்வொரு கட்டமும் மிகவும் அருமையாக இருந்தது. விண்வெளியில் ஒரு முறை தலைகீழாக மாற முயற்சி செய்தேன்.
இந்த அனுபவம் தனது வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்று என்று மைக்கேலா கூறினார். விண்வெளியின் காட்சியும், எடையில்லாத நிலையும் மட்டுமில்லாமல், மேலே எழுந்து செல்லும் ஒவ்வொரு கட்டமும் தன்னை மிகவும் மகிழ்வித்ததாக அவர் தெரிவித்தார். நேர்மையாகச் சொன்னால், இது இதுவரை இல்லாத அளவுக்கு அருமையான அனுபவம் என தனது பேட்டியில் தெரிவித்தார்.
📚 எழுதியவர்:

✍️ – ஏற்காடு இளங்கோ
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
