ஜெர்மன் நாட்டுப்புறக் கதை: “புத்திசாலி உழவர் மகள்”
– தமிழில் கே.என்.சுவாமிநாதன்
ஜெர்மன் கிராமம் ஒன்றில், ஏழை விவசாயி தன்னுடைய மகளுடன் வசித்து வந்தான். அவர்கள் வசிக்க சின்ன குடிசை இருந்தாலும் விவசாயம் செய்ய நிலம் இல்லை. ஒரு முறை தந்தையிடம் மகள் சொன்னாள், “நம்முடைய அரசர் ஏழைகளுக்கு உதவுபவர். அவரிடம் சென்று உழுவதற்கு நிலம் கேட்டு வா அப்பா” என்றாள். அவர்களின் வறுமையை அறிந்த அரசர், அவர்களுக்கு நிலம் ஒன்றைத் தானமாக அளித்தார். இருவருமாக நிலத்தைக் கொத்தி சீரமைத்து, சோளம் பயிரிட முடிவு செய்தார்கள்.
நிலத்தைக் கொத்தும் போது, அவர்களுக்கு தங்கத்தால் செய்யப்பட்ட இடிக்கல் கிடைத்தது. விவசாயி மகளிடம் சொன்னான், “அரசர் நமக்கு நிலத்தைக் கொடுத்தாலும், இந்த இடிக்கல் அவருக்குச் சொந்தம். ஆகவே அரசனிடம் கொடுத்து விட்டு வருகிறேன்.” “வேண்டாம் அப்பா, நீங்கள் இதைக் கொடுத்தால், உலக்கை எங்கே என்ற கேள்வி வரும். உன்னிடம் இல்லையென்று சொன்னால் அரசர் ஒப்புக் கொள்ள மாட்டார்.” என்றாள் மகள். விவசாயி அதற்கு சம்மதிக்கவில்லை. அரசரிடம் தங்க இடிக்கல்லைக் கொடுத்த போது, உலக்கை எங்கே என்று கேட்டார் அரசர். இது மட்டும் தான் நிலத்தில் கிடைத்தது என்று சொன்னதை நம்ப மறுத்த அரசர் இடிக்கல் கொண்டு வந்து கொடுக்கும் வரை, உழவன் சிறையில் இருக்க வேண்டும் என்று கட்டளை இட்டார்.
பாவம் விவசாயி. மகள் சொன்னதைக் கேட்காமல் தவறு செய்து விட்டேன் என்று புலம்பி அழுது கொண்டே இருந்தார். அரசருடைய காதுக்கு இந்தச் செய்தி எட்டியது. விவசாயியைக் கூப்பிட்டுக் கேட்டார். “உன் மகள் என்ன சொன்னாள்” என்று கேட்டார். “இடிக்கல்லை கொண்டு அரசரிடம் கொடுத்தால், உலக்கை எங்கே என்று கேட்பார். நீ தெரியாது என்று சொன்னால், அரசர் ஒத்துக் கொள்ள மாட்டார். ஆகவே, உலக்கையும் கிடைத்தால், இரண்டுமாக அரசரிடம் கொடுக்கலாம். இதை மட்டும் கொடுத்தால் உனக்கு தண்டனை தான் கிடைக்கும்” என்று மகள் சொன்னாள் என்றான் விவசாயி.
“உன்னுடைய புத்திசாலி மகளை நான் பார்க்க வேண்டும். அவளை அரசவைக்கு வரச் சொல்” என்றார் அரசர். மகள் அரசவைக்கு வந்தாள். அவளின் அழகில் மயங்கிய அரசர் சொன்னார். “நான் உனக்கு ஒரு விடுகதை கொடுக்கிறேன். அதனைப் புரிந்து கொண்டு நீ சரியாகச் செய்தால், உன்னை மணந்து கொள்கிறேன்” என்றார். “நான் சொல்வது போல நீ அரசவைக்கு வர வேண்டும். உடலில் துணி எதுவுமில்லாமல், ஆனால் நிர்வாணமாக இல்லாமல், சவாரி செய்யாமல், நடக்காமல், சாலையில் வராமல், சாலையை விட்டு வெளியேறாமல் வர வேண்டும்.”
விவசாயி மகள் வீடு சென்று, உடம்பிலிருந்து உடைகளை எல்லாம் களைந்தாள். மிகப் பெரிய மீன் வலை ஒன்றை எடுத்து உடம்பு முழுவதும் சுற்றிக் கொண்டாள். பின்னர் ஒரு கழுதையை வாடகைக்கு எடுத்து, அதன் வாலில் மீன் வலையின் ஒரு பகுதியை இறுக்கிக் கட்டினாள். கழுதை அவளை இழுத்துக் கொண்டு ஓடியது. கழுதையை வண்டித் தடங்களில் ஓடச் செய்தாள். இதனால் அவள் கால் நகங்கள் சாலையில் பட்டது. பாதங்கள் படவில்லை. இவ்வாறு அரசர் சொன்ன கட்டளைக்கு உட்பட்டு அரசவைக்கு வந்தாள். “நீ உண்மையிலே புத்திசாலி” என்று மெச்சிய அரசர் அவளை மணந்து கொண்டார். ராணிக்கு உண்டான சகல உரிமைகளையும் அவளுக்கு அளித்தார். அவள் தந்தையை சிறையிலிருந்து விடுதலை செய்தார்.
சில வருடங்கள் கழிந்தன. அரசர் தனது படை வீரர்கள் சிலருடன் நகர் வலம் சென்றார். அப்போது. விறகு வியாபாரிகள் இரண்டு வண்டியில் விறகுடன் வந்திருந்தனர். அரண்மனைக்கு முன்னால் வண்டிகள் நின்றிருந்தன. ஒரு வண்டி எருதுகள் பூட்டியது. மற்றது, குதிரைகள் பூட்டியது. குதிரைகளில் ஒன்று குட்டியை ஈன்றது. அந்தக் குதிரைக் குட்டி ஓடிச் சென்று எருது வண்டியில் எருதின் பக்கம் நின்றது. அந்தக் குதிரைக் குட்டி, தன்னுடைய எருதுக்குப் பிறந்தது என்ற வண்டிக்காரன் குதிரைக் குட்டியைத் தர மறுத்தான். கூச்சலைக் கேட்ட அரசர் என்ன வென்று விசாரித்தார். இரு தரப்பையும் கேட்ட பின்னால், குதிரைக் குட்டி எங்கு இருந்ததோ அவருக்குத் தான் சொந்தம் என்று தீர்ப்பளித்தார். குதிரை வண்டிக்காரன் சொல்வதை அவர் கேட்கவில்லை.
இராணி ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தவள், புத்திசாலி என்று அறிந்த குதிரை வண்டிக்காரன், இராணியிடம் சென்று தனக்கு நியாயம் கிடைக்க உதவும்படிக் கேட்டுக் கொண்டான். அவனுக்கு உதவ விரும்பிய இராணி சொன்னாள். “நான் உனக்கு ஒரு உபாயம் சொல்கிறேன். ஆனால், இதை யார் சொல்லிக் கொடுத்தது என்று கேட்டால் என்னை மாட்டி விடக் கூடாது. நாளைக் காலை அரசர் தன்னுடைய வீரர்களுடன் வரும் போது, சாலையில், நீ பெரிய மீன் வலையை கையில் வைத்துக் கொண்டு மீன் பிடிப்பது போலவும், வலையில் மீன்கள் சேர்ந்ததும், அதைக் கூடையில் கொட்டுவது போலவும் நடித்துக் கொண்டிரு” என்றாள். மேலும் அரசரின் வீரர்கள் கேள்விக்கு என்ன பதில் சொல்ல வேண்டும் என்றும் சொல்லிக் கொடுத்தாள்.
அடுத்த நாள் காலை, அரசன் வரும் போது குதிரை வண்டிக்காரன், வறண்ட சாலையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தான். அந்த முட்டாள் மீன் வலையை வைத்துக் கொண்டு சாலையில் என்ன செய்து கொண்டிருக்கிறான். விசாரித்து வா என்று ஒரு வீரனை அனுப்பினார் அரசர். வீரன் கேட்டதற்கு “பார்த்தால் தெரியவில்லையா? நான் மீன் பிடித்துக் கொண்டிருக்கிறேன்” என்றான் வண்டிக்காரன். “என்ன உளறுகிறாய், வறண்ட சாலையில் எப்படி மீன் கிடைக்கும்?” என்று கேட்டான் வீரன். “ஏன் முடியாது. ஒரு எருதுக்கு, குதிரைக் குட்டி பிறக்கும் போது, வறண்ட சாலையில் மீனும் கிடைக்கலாம்” என்றான் வண்டிக்காரன்.
அரசரிடம் சென்ற வீரன் எல்லாவற்றையும் சொன்னான். அந்த வண்டிக்காரனைக் கூட்டி வரச் சொன்னார் அரசர். அவனிடம், “யார் இப்படி செய்யச் சொல்லி உன்னிடம் சொன்னது.” என்று கேட்டார். “யாரும் சொல்லித் தரவில்லை. என் மனதில் தோன்றிய எண்ணம்” என்று சொன்னதை அரசர் ஒத்துக் கொள்ளவில்லை. வண்டிக்காரனைக் கட்டி வைத்து அடித்து கொடுமைப் படுத்தினார். வேறு வழி தெரியாத வண்டிக்காரன் இவ்வாறு செய்யச் சொன்னது இராணி என்ற உண்மையைச் சொன்னான்.
தனக்குத் தெரியாமல் வண்டிக்காரனுக்கு இராணி உதவியது அரசருக்குப் பிடிக்கவில்லை. அந்தப்புரம் சென்றவர், “நீ ஏன் எனக்கு எதிராக நடந்து கொண்டாய். உனக்கு என்னுடன் வாழ தகுதியில்லை. உன்னுடைய குடிசைக்குத் திரும்பிச் சென்று விடு. அரண்மனையிலிருந்து உனக்கு மிகவும் பிடித்த பொருள் ஒன்றை நீ உன்னுடன் எடுத்துச் செல்லலாம். அதனுடைய மதிப்பு எத்தனை அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை” என்றார்.
“உங்களை விட்டுத் தனியாக இருப்பது கடினமான செயல். ஆனால், உங்களுடைய கட்டளைக்குக் கீழ் படிய வேண்டியது என்னுடைய கடமை. செல்வதற்கு முன்னால் நாம் இருவரும் ஒன்றாகப் பழரசம் அருந்த சம்மதிக்க வேண்டும்” என்றாள் இராணி. பழரசம் கொண்டு வந்த இராணி, அரசரின் பழரசத்தில் நிறைய தூக்க மாத்திரையைக் கலந்தாள். அதனைக் குடித்த அரசர் சில வினாடிகளில் மயங்கி விழுந்தார்.
மயக்கத்தில் இருந்த அரசரைப் பணியாட்கள் உதவியுடன், அரச வாகனத்தில் தன்னுடைய வீட்டிற்கு தூக்கிச் சென்று, அங்கிருந்த கட்டிலில் படுக்க வைத்தாள். அரசர் மயக்கம் தெளிந்து எழுந்து கொள்ள ஒரு நாள் ஆனது. எழுந்தவுடன், தான் புது இடத்தில் இருப்பதை உணர்ந்து கொண்டார். பணியாட்களைக் கூப்பிட்டார். யாரும் வரவில்லை. விவசாயி மகள் வந்தாள். தான் இருப்பது அவளுடைய வீடு என்பதை உணர்ந்து கொண்ட அரசர் கோபம் கொண்டார். என் அனுமதி இல்லாமல், என்னை உன் வீட்டிற்கு தூக்கி வந்தது குற்றம் என்றார். உழவர் மகள் சொன்னாள், “இல்லை. உங்கள் அனுமதியுடன் தான் தூக்கி வந்திருக்கிறேன். அரண்மனையிலிருந்து எனக்குப் பிடித்த பொருளை எடுத்துச் செல்ல நீங்கள் எனக்கு அனுமதி அளித்தீர்கள். மனைவிக்குத் தன் கணவனை விடவும் பிடித்த பொருள் இருக்குமா?” என்று கேட்டாள்.
அவள் சொன்னதில் உண்மையும், அவளுக்குத் தன்னிடம் உள்ள அன்பையும் புரிந்து கொண்ட அரசர் சொன்னார். “நீ எப்போதும் என்னுடன் இருக்க வேண்டியவள். வா, நாம் அரண்மனைக்குத் திரும்பிச் செல்வோம்.”
தமிழில் எழுதியவர்:
கே.என்.சுவாமிநாதன்
சென்னை
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

