நூல் அறிமுகம்: *கெத்து (சிறுகதைத் தொகுப்பு) – இலட்சுமணப் பெருமாள் கதைகள்* | பா.அசோக்குமார்கெத்து (சிறுகதைத் தொகுப்பு) – இலட்சுமணப் பெருமாள் கதைகள்
கதைத் தேர்வு: ச. தமிழ்ச்செல்வன்
பாரதி புத்தகாலயம்
பக்கங்கள்: 96
விலை: ₹.80
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/ghethu-lakshmanaperumal/

எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் அவர்களால் தேர்வு செய்யப்பட்டுள்ள இலட்சுமணப் பெருமாள் அவர்களின் ஒன்பது சிறுகதைகள் அடங்கிய தொகுப்பே இந்நூல். ஒவ்வொரு சிறுகதையும் ரத்தினங்களாக ஜொலிக்கின்றன என்றால் மிகையன்று.

கரிசல் வட்டார வழக்கில் அமைந்த சிறுகதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகமே. ஒரு சிறுகதைக்குள் நவரசங்களையும் கொண்டு வர முனைந்துள்ளாரோ என்ற ஐயம் உண்டாவதைத் தவிர்க்க இயலவில்லை. அதில் வெற்றியும் அடைந்துள்ளார் என்பதே கனக்கச்சிதமானதே…

எளிய மனிதர்களின் அன்றாட வாழ்வியலை சிறந்த சொற்கட்டோடு யதார்த்தமான வாழ்வியல் சூழலுடன் காட்சிபடுத்திய பாங்கு போற்றுதலுக்குரியதே… தாழ்த்தப்பட்ட இனத்தவரின் வாழ்வியல் அவலங்களை பட்டவர்த்தனமாக புடம் போட்டு பொன்னாக வடித்துள்ளதாகவே தோன்றுகிறது.

கெத்து:

நாயே பிரதான கதாபாத்திரமாக இருப்பினும் ராமசாமித் தேவருக்கும் ராமையாத் தேவருக்குமான பெயரை வைத்து உண்டாகும் ரகளை களேபரமென்றால், நம்பியாபுரத்து நாயக்கருக்கும் நாய்க்குமான ரகளையே அந்தோ பரிதாப ரகமே…

அரைச் சண்டியர்:

போதையின் அவலத்தைத் தோலுரித்துக் காட்டும் கதையே இது. இதனுள் பொங்கி வரும் எள்ளலும் துள்ளலும் இறுதியில் துயரத்தில் முடிவது யதார்த்தமே. பிள்ளைக்கு வாய்ப்பாடு வாங்கிக் கொடுக்க துடிக்கும் மனம் போதையில் மூழ்குவது சாபக்கேடு தானே…

சாகஸம்:

துயரத்தின் உச்சமென இச்சிறுகதையை உணரலாம். ஒரு காலத்தில் கொடிக் கட்டி பறந்த தொழில் (மட்பாண்டங்கள் செய்தல்) அறிவியல் முன்னேற்றத்தால் நசிந்து அதனால் சிக்கி சின்னாபின்னமாகி போகும் ஒரு எளிய குடும்பத்தின் சாகஸமே இச்சிறுகதை… கண்ணீர் சிந்தாமல் கதையை நிறைவு செய்வது கடினமே.கிருஷ்ணப் பருந்து:

முத்துக்கூத்தனின் பிணம் காணாமல் போவதில் தொடங்கும் கதைக்குள் விரியும் சம்பவங்கள் ஒவ்வொன்றும் காவியங்களே… தாழ்த்தப்பட்ட இனத்தவரின் சுடுகாட்டு பிரச்சினையை மையமாகக் கொண்டதென எளிதில் சுருக்கிவிட முடியாத கதைக்களமே இது. கூத்துக்கலையின் நம்பிக்கையை (கிருஷ்ணப் பருந்து) முத்துக்கூத்தனின் மரணத்துடன் இணைத்த விதம் அளப்பரியது. நரிக்குரவர்களின் ஈமச்சடங்கு முறை புத்தம் பதிய தகவலே எனக்கு…

பிறிதின் நோய்:

முதலாளியின் கிடைக்கு ஆடு மேய்ப்பவன் கல்யாணச் சாப்பாட்டு ஆசையால் அடையும் அவலங்களை அங்கதச் சுவையுடன் பகிர்ந்துள்ள கதையே இது. முதலாளித்துவத்தின் அயோக்கியத்தனத்தை எளியவர்களின் பலவீனத்துடன் தோலுரித்துக் காட்டிய விதம் கவனிக்கத்தக்கது. “ஆடுகள பட்டினிப் போட்டு பாவத்த சுமக்காத” என்ற முதலாளியின் வாசகம் கொடூரத்தின் உச்சமன்றி வேறேது.

மாலை பூத்த வேளை:

இத்தொகுப்பில் என்னை மிகவும் பாதித்த சிறுகதை இதுவே. பச்சை என்ற கதாபாத்திரத்தின் துடுக்குத்தனத்தில் தொடங்கி அவளின் திருமண பந்தத்தின் பயத்தில் புன்வுறுவலித்து அதற்காக அவள் எடுக்கும் முடிவில் துணுக்குற்று வாழாவெட்டியாக அம்மாவீட்டு வாசத்தில் கண்ணீர் சிந்தி விரக தாபத்தில் சிக்குண்டு நிற்கும் நிலையை என்னவென்று உரைப்பது… பாலியல் கல்வியின் அவசியத்தை உணர்த்தும் கதையாக கருதலாமென்றே தோன்றுகிறது. அம்மா வெள்ளத்தாயின் கதாபாத்திரம் தாய்ப்பாசத்தையும் பெண்ணிய மனதையும் படம்பிடித்துக் காட்டக் கூடியதே…

துடி:

முழுக்க முழுக்க எள்ளல் சுவையுடன் துள்ளல் நடையுடன் பயணிக்கும் கதையே இதுவென்று தோன்றினாலும் இதனுள் மறைந்து நின்று நாற்றமெடுக்கச் செய்யும் சாதீய கொடூரங்களே மிகுந்து காணப்படுகின்றன. மேட்டுக்குடி சாமியாருக்கும் தாழ்த்தப்பட்ட இனத்தவரின் கோவில் சாமியாருக்கான போட்டியாகத் தொடங்கினாலும் துடியான சாமியாட்டம் உணர்த்தும் பாடமோ மிக மிக அவசியமானதே…

“”யப்பா” உனக்கு ஒரு ஆளுக்கு துடி வந்தே நம்ம கோயிலு அஞ்சு நிமிசத்துல சுத்தமாயிருச்சே, நம்ம காலனி ஆளுக எல்லோர்க்கும் துடி வந்தா?” இந்த ஒற்றை வாக்கியமே நெத்தியடி அன்றோ…மருவாதி:

இந்த சிறுகதையும் தாழ்த்தப்பட்டவர்களின் அவலத்தைக் காட்டக்கூடியதே… எனினும் மது போதையில் பிறரை அடித்து தன்னை நிலைநிறுத்த முயலும் தன்மை நகைச்சுவைப் பாங்குடன் சித்தரிக்கப்பட்டுள்ளது.

வயனம்:

இறை நம்பிக்கை எளியவர்களிடம் உண்டாக்கும் தாக்கத்தை மிக மிக யதார்த்தமான நடையில் பகர்வதே இக்கதையின் சூட்சமமாக கருதுகிறேன். இருக்கன்குடி மாரியம்மன் கோவிலை மையமாகக் கொண்டு ஆறு பெண் பிள்ளைகளைப் பெற்ற குடும்பத்தின் ஏழ்மை நிலையை சோதிக்கும் நிகழ்வுகள் கண்ணீரை வரவைப்பனவே. கைக்குழந்தையுடன் கையறு நிலையில் நிற்கும் கணவன் கதாபாத்திரம் மிக மிக நேர்த்தியாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மனைவி எடுக்கும் முடிவோ “ஏழ்மையிலும் கருணை” என்ற உயரிய மனப்பான்மையை பறை சாற்றுவதாகவே அமைந்துள்ளது.

ஆக மொத்தத்தில் ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு வாழ்க்கையில் நம்மை நுழையச் செய்து புதியதோர் அனுபவத்தையும் வாழ்வியல் பாடத்தையும் பகர்வதாகவே தோன்றுகிறது. அற்புதமான கதைத் தேர்வுகள். கண்ணீருடன் பயணித்தாலும் கருணையைச் சுரக்க வைக்கும் வல்லமை கரிசல் எழுத்துகளுக்கு உண்டு என்பதை நிரூபிக்கும் வண்ணம் எழுத்தாளர் இலட்சுமணப் பெருமாள் கதைகளை வடிவமைத்துள்ளார் என்பதே நிதர்சனம்.
வாய்ப்புள்ளோர் வாசிக்க முயலுங்கள். நன்றி.

கெத்து (சிறுகதைத் தொகுப்பு) – இலட்சுமணப் பெருமாள் கதைகள்
கதைத் தேர்வு: ச. தமிழ்ச்செல்வன்
பாரதி புத்தகாலயம்
பக்கங்கள்: 96
விலை: ₹.80
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/ghethu-lakshmanaperumal/

பா.அசோக்குமார்
மயிலாடும்பாறை.