பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு(ILO)மற்றும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்(UNICEF) இணைந்து 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளியிட்ட அறிக்கையில்,உலகளவில் 5 முதல் 14 வயதிற்குட்பட்ட 16 கோடி குழந்தைகள் தொழிலாளர்களாக இருக்கின்றனர் என்று கூறப்பட்டுள்ளது; அதாவது பத்தில் ஒரு குழந்தை(10:1),குழந்தை தொழிலாளியாக அவதிப்படுகின்றனர் .2011-ஆம் ஆண்டிற்கான இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி (census)ஒரு கோடியே பத்தாயிரம் குழந்தைகள், தொழிலாளர்களாக வாழ்வை பெருந்துயரத்துடன் களிக்கின்றனர். கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகான ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை நிச்சயம் உயர்ந்து விட்டிருக்கும்.

ஒரு மகோன்னதமான இலக்கியப்படைப்பின் “நிலைத்ததன்மை” என்பது காலங்கள் பல கடந்தும்,அதன் சாரங்கள் நமது சமகால சமூகத்துடன் “அன்னியோனியமாகி” தோன்றுவதில் இருக்கிறது.“கிகோர்” எனும் இந்த அதிஅற்புத “துயர்காவியப்” படைப்பின் மையக்கரு,இன்றைய நமது சமகாலத்திலும் பொருந்திப்போவதே இதன் உயிர்புக்கு முக்கியமானகாரணமாகும். பன்னிரெண்டு வயதே ஆன சிறுவன் “கிகோர்”,தனது குடும்பத்தின் வறுமைக் காரணமாக ஆர்மேனிய நாட்டின் சிறு கிராமத்தில் இருந்து,திப்லிஸ் நகருக்கு வேலைத்தேடி தனது தந்தை ஹம்போவுடன் செல்கிறான் .அந்த நகரில்”பஸாஸ் அர்த்தெம்” எனும் குரூர மனம் படைத்த வியாபாரியிடம் வேலைக்கு சேர்ந்து, அவனது வக்கிரச் சுரண்டலால்”கிகோர்” மரணிப்பதே இத்துயர காவியத்தின் கதைச்சுருக்கம்.
மக்களுக்காக படைக்கப்படும் இலக்கியப் படைப்பு உணர்வுகள் கொண்டு வார்த்தெடுக்கப்படுகிறது.பொதுவாக”மக்கள் இலக்கியங்களுக்கு” பிற தேசம்,நிலம் போன்ற எந்த பேதங்களும் கிடையாது. நாடுகளுக்கு இடையில் மொழி, கலாச்சாரம், பழக்கவழக்கம் முதலானவை வேறுபட்டிருக்கும்; ஆனால்,மக்கள் படும் இன்னல்கள் பொதுவானவையே. வறுமை,பஞ்சம், வேலையின்மை, முதலானவை அனைத்து நாடுகளுக்கு மத்தியில் காணப்படும் பொதுமை பிரச்சனையாகும்.

          எம். ரிஷான் ஷெரீப்

உலகில் அதிகமும் நிந்திக்கப்படுபவர்கள் குழந்தைகளே. முகில்வதற்கு முன்பு மொட்டிலே குழந்தைகளை கருக்கச் செய்து விடுகிறது நம் சமூகம். குழந்தைகள் பிறப்பித்தவுடனே அவர்களுக்கான வாழ்வின் நோக்கங்கள் நிச்சயதன்மையில் குறிக்கப்பட்டுவிடுகிறது. நுகர்வே(Consumption )வாழ்வின் தலையாய குறிக்கோளாக கொண்டுள்ள 21-ஆம் நூற்றாண்டின் சமூகம், குழந்தைகளின் தோள்களில் சுமக்கவியலாத சுமைகளை தூக்கிவைத்து விடுகிறது.

குழந்தைகளுக்கென்று ஒரு உலகமும், வெளியும் இல்லையென்பது நமது கற்பிதம்.பெரியவர்களின் வாழ்வில் குழந்தைகளும் ஒரு கதாபாத்திரம் என்பதே சமூக யதார்த்தம். முன்னெபோதுமில்லாத அளவில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை கூடிவிட்டிருக்கிறது; அவர்களது குழந்தைமை குறிவைத்து தகர்க்கப்படுகிறது; அவர்களுக்கான சுதந்திர வெளிகள் நிர்மூலமாக்கப்படுகிறது .சமூகத்தில் நிலவும் இள வயது தற்கொலைகள், குழந்தை தொழிலாளர்கள் பிரச்சனை , போதை பழக்கங்கள், சாதியப்பேதங்கள், வன்முறை,பாலியல் கொடுமைகள் முதலானவை குழந்தைகளுக்கு எதிரான சமூக அவலங்களுக்கு சில எடுத்துக்காட்டுகள்.

ஆர்மேனிய இலக்கியத்தின் பெருமதியான “ஹோவன்னஸ் டூமேனியன்”-இன் “கிகோர்” நாவல் நிச்சயத்தன்மையில் ஒரு”துயர்காவியப்”படைப்பே. படைக்கப்பட்டு ஒரு நூற்றாண்டு கடந்தும் அதன் சமகாலத்து அன்னியோனியம் தொடரவேச் செய்கிறது. ஒரு கவிஞராக, எழுத்தாளராக, சமூக நலப் போராளியாக, மொழிபெயர்ப்பாளராக, இலக்கியவாதியாக வாழ்ந்த டூமேனியன், ஆர்மேனிய நாட்டின் தேசிய கவியாவார். இவரது வாழ்க்கை வரலாறு 38 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது. இவரது “கிகோர்” நாவல் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்ப்பாகி,பல நாடுகளுக்கும் பயணப்பட்டுள்ளது. திரைப்படங்களாகவும் வெளிவந்து பாராட்டுகள் மற்றும் விருதுகளை வாங்கி குவித்துள்ளது.

                           கிகோர்

இந்த உணர்வுப்பூர்வமான காவியத்தை மொழிபெயர்த்து வழங்கியவர், இலங்கையை சேர்ந்த தமிழ் எழுத்தாளர், கவிஞர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் எம். ரிஷான் ஷெரீப் ஆவார். அந்நிய தேசம் ஒன்றின் படைப்பாக தோன்றாத வண்ணம்,நமக்கு மிகவும் நெருக்கமாக; நமது நிலத்தின் காவியமாக தோன்றும் வண்ணம், உணர்வுபூர்வமாக மொழிபெயர்த்து தமிழுக்கு வழங்கியது மெச்சத்தக்கது.எழுத்து துறையில் பல பரிணாமங்களில் இயங்கிவரும் இவர் இலங்கை அரசின் சாகித்திய விருது, கனடா இயல் விருது, இந்திய வம்சி விருது முதலான முக்கிய விருதுகளை வென்றுள்ளார். உறுதியாக, ரிஷானின் மொழிப்பெயர்ப்பில் “கிகோர்” எனும் இந்த அதி அற்புத காவியத்தை வாசித்து முடிக்கையில் ;நமது உள்ளத்தில் சொல்லவியலா துன்பம் குடிகொண்டுவிடும் என்பது நிச்சயம்.

                        நூலின் தகவல் 

நூல்                      : கிகோர்

நூலாசிரியர் : ஹோவன்னஸ் டூமேனியன்

தமிழாக்கம்  : எம். ரிஷான் ஷெரீப்

வெளியீடு      : வம்சி புக்ஸ்.

பக்கங்கள்     : 64

விலை              : ரூ.60

                       எழுதியவர்

            நந்தசிவம் புகழேந்தி

 
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *