கிகோர் – நூல் அறிமுகம்
நூலின் தகவல்கள் :
நூல் :கிகோர்
ஆசிரியர் : ஹோவன்னஸ் டுமேனியன்
தமிழாக்கம்: எம்.ரிஷான் ஷெரீப்
பக்கங்கள்: 64
விலை: ₹60
வெளியீடு: வம்சி பதிப்பகம்
சோவியத் நூலின் தமிழாக்கம்
ஒரு மலைக் கிராமத்தில் அப்பா,அம்மா,தங்கை,தம்பியுடன் வாழும் 12 வயது சிறுவன் கிகோர். குடும்ப சூழ்நிலை காரணமாக தந்தை ஹம்போ, கிகோரை நகரத்துக்கு அழைத்துச் சென்று ஏதேனும் வேலையில் சேர்த்து விடுவெதென முடிவு எடுக்கிறார்.
கிராமத்தில் உள்ள அனைவரும் ஹம்போ மற்றும் கிகோரை வழியனுப்ப கிராமத்தின் எல்லை வரை வருகின்றனர்.
கிகோர் கிராமத்தையும், நண்பர்களையும், குடும்பத்தையும் பிரிய மனமில்லாமல் தந்தையின் கைப்பிடியிலிருந்து மீள இயலாமல் அவருடன் நடக்க ஆரம்பித்தான். கிராமம் பார்வையிலிருந்து மறைகிறது.
நகரத்தை வந்தடைகிறார்கள். கிகோர் நகரத்தில் வேலை செய்ய வேண்டிய தேவையை தந்தை அவனுக்கு சொல்கிறார். பல முயற்சிக்குப் பிறகு ஒரு கடையில் வேலை கிடைக்கிறது.அடுத்த 5 வருடத்துக்கு சம்பளம் இல்லா வேலை. உணவு மற்றும் உறைவிடம் மட்டும் இலவசம்.வீட்டிலும் கடையிலும் வேலை.
வீட்டில் உள்ள கடைக்காரனின் மனைவிக்கு கிராமத்தில் இருந்து வந்த கிகோர் மீது வெறுப்பு. அவனை வீட்டை விட்டு வெளியேற்ற விரும்புகிறாள். எப்போதும் திட்டு. சாப்பாடு கிடைப்பது அரிது. அனைவரும் வீட்டில் உண்டு முடித்த பிறகு கிடைக்கும் மீதமுள்ள உணவே எப்போதும். அதுவும் சரியான நேரத்துக்கு கிடைக்காது.
அவ்வப்போது அடியும் உதையும் கிடைக்கும். அந்த வீட்டில் உள்ள முதலாளியின் வயதான அம்மா மட்டுமே கிகோருக்கு ஆதரவு.
கிராமத்து நினைவுகள் கிகோரை வாட்டுகிறது.
ஒரு சூழ்நிலையில் கிகோர் கடை வேலைக்கு அனுப்பப்படுகிறான். எந்நேரமும் கடை வாசலில் நின்று எல்லோரையும் “வாங்க..வாங்க..நம்ம கடைக்கு வாங்க..” என்று தொண்டை வற்ற கத்துவது முக்கிய வேலைகளில் ஒன்று. மற்றும் வீட்டிலிருந்து சாப்பாடு கொண்டு வந்து வேலை செய்பவருக்கு கொடுப்பதும். மாதங்கள் செல்கிறது.
ஒரு நாள் தெருவில் கிராமத்து ஆட்கள் இருவரை கிகோர் பார்க்கிறான். சந்தோசத்தில் நீண்ட நேரம் பேசுகிறான். அவர்களுடன் சென்று விடலாமா என்று யோசிக்கிறேன். கிராமத்து குடும்ப சூழ்நிலை மற்றும் அப்பா தன்னிடம் இருந்து பண உதவி எதிர்பார்க்கிறார் என்பதை நினைத்து வேறு வழியில்லாமல் வேலையை தொடர்கிறான். தங்கைக்காக ஆங்காங்கே கிடைக்கும் பொத்தான்கள்,ரிப்பன் போன்றவைகளை சேகரிக்கிறான்.
நகரத்தில் பனிக்காலம் தொடங்குகிறது. எங்கும் கடுங்குளிர் மற்றும் பனி மழை. நகரத்தில் பெரும்பான்மையான கடைகள் திறக்கப்படவில்லை. கிகோர் கடையில் மட்டும் வேலை தொடர்கிறது. தெருவில் நின்று “வாங்க..வாங்க..நம்ம கடைக்கு வாங்க..” என்று கத்துவது தொடர்கிறது.
கடுமையான பனிமழை, பனிக்காற்று மற்றும் கடுங்குளிர் காரணமாக கிகோர் மயக்கமடைகிறான்.
கடை முதலாளி, கிகோரை ஆஸ்பத்திரியில் சேர்கிறார். அதே சமயம் தம் பொறுப்பில் இருந்து கிகோரை விடுவித்து விட விரும்புகிறார்.
கிகோர் உடல் நிலை மிகவும் மோசம் அடைகிறது.கடை முதலாளி கிகோர் அப்பாவுக்கு தகவல் தெரிவிக்கிறார்.
அப்பா நகரத்துக்கு வந்து மகனின் நிலையை கண்டு மிக வருத்தப்பட்டு ” நகரம் வேண்டாம்.. கிராமத்துக்கு திரும்பி விடுவோம்..” என்கிறார். கிகோர் மிகுந்த சந்தோசமடைகிறான்.
இரு நாட்கள் கழித்து, கிராமத்தின் எல்லையில் அனைவரும் கிகோர் மற்றும் தந்தையின் வருகைக்கு காத்து இருக்கிறார்கள்.
கிகோர் மற்றும் அவனின் அப்பா கிராமத்துக்கு திரும்பி வந்தார்களா.? என்பது மீது நாவல்.
64 பக்கங்கள் கொண்ட சிறிய நாவலாக இருந்தாலும் கிகோர் மனதை தொட்டு விடுகிறான்.
100 வருடத்துக்கு முன் எழுதப்பட்ட நாவலாக இருந்தாலும், நிகழ்வு இன்றைக்கும் பொருந்துகிறது.
இந்த நாவல் 1934 (A silent film) மற்றும் 1982 ஆண்டில் கிகோர் என்ற பெயரில் திரைப்படமாக வெளிவந்துள்ளது. இணையத்தில் பார்க்க கிடைக்கிறது. படமாக்கிய விதமும் சிறப்பு.
நூல் அறிமுகம் எழுதியவர் :
ச. கணேசன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.