வாசிப்புத் திறனில் உலகளாவிய பின்னடைவு: கற்பித்தல் முறையை மாற்றக் கோரும் ஆய்வு
உலகெங்கிலும், குறிப்பாக வளரும் நாடுகளில், உள்ள பல குழந்தைகள், வாசிக்க சிரமப்படுகிறார்கள் என ராயல் ஹாலோவே (Royal Holloway), லண்டன் பல்கலைக்கழகம் மற்றும் உலக வங்கி ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் இணைந்து சமீபத்தில் நடத்திய ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.
இந்த ஆய்வில், 48 வளரும் நாடுகளில் உள்ள 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் வாசிப்புத் திறன் ஆராயப்பட்டது. 96 மொழிகள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அதிர்ச்சியளிக்கும் விதமாக, பெரும்பாலான குழந்தைகள் அடிப்படை வாசிப்புத் திறன்களைக் கூட கற்கவில்லை என்பது கண்டறியப்பட்டது. எழுத்துக்களை அடையாளம் காண்பது, சொற்களை உச்சரிப்பது போன்ற எளிய பணிகளில் கூட அவர்கள் சிரமப்பட்டனர்.
கல்வி முறைகளில் குறைபாடு
இந்தப் பிரச்சினைக்குக் காரணம், பல பள்ளிகளில் பயன்படுத்தப்படும் கற்பித்தல் முறைகளில் உள்ள குறைபாடுகளே என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
குழந்தைகளில் கல்வியறிவை வளர்ப்பதற்கான சிறந்த வழி, ஆரம்பக் கல்வியின் போது உயர்தரமான, முறையான, ஒலிப்பு (Phonics Method) முறை கற்பித்தலைக் கடைபிடிப்பதே என பல்வேறு ஆராய்ச்சிகள் பரிந்துரைக்கின்றன. ஆனால், பல வளரும் நாடுகளில் இந்த முறை முறையாகப் பின்பற்றப்படுவதில்லை.
தற்போதைய நிலை தொடர்ந்தால், உலகளாவிய கல்வியறிவு இலக்குகளை அடைய முடியாது எனக் கூறும் இந்த ஆய்வு ‘நேச்சர் ஹியூமன் பிஹேவியர்’ என்ற இதழில் 08, நவம்பர், 2024 அன்று வெளியிடப்பட்டுள்ளது.
ஒலிப்பு முறை – திறவுகோல்
வளரும் நாடுகளில், வாசிப்புத் திறனை மேம்படுத்த, ஆதாரங்களின் அடிப்படையிலான கற்பித்தல் முறைகள், குறிப்பாக ஒலிப்பு முறை (Phonics Method), விரைவில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று இந்த ஆய்வு பரிந்துரைக்கிறது.
ஒலிப்பு முறை (Phonics Method) என்பது, எழுத்துக்களுக்கும் அவற்றின் ஒலிகளுக்கும் இடையிலான தொடர்பை குழந்தைகளுக்கு தெளிவாகக் கற்றுக்கொடுக்கும் ஒரு முறையாகும்.
உதாரணமாக இம்முறையில், “boy” என்ற வார்த்தையில் “oy” என்ற எழுத்துக்களின் கூட்டணியும், “play” என்ற வார்த்தையில் “ay” என்ற எழுத்துக்களின் கூட்டணியும் எவ்வாறு ஒலிக்கின்றன என்பது கற்றுக்கொடுக்கப்படுகிறது.
இந்த ஒலிப்பு முறைகளை அறிந்துகொண்டால், குழந்தைகள் அறிமுகமில்லாத சொற்களையும் எளிதாக வாசிக்க முடியும். உதாரணமாக, “toy” அல்லது “stay” போன்ற சொற்களை வாசிக்கும் போது, முன்னர் கற்றுக்கொண்ட “oy” மற்றும் “ay” ஒலிப்பு முறைகளைப் பயன்படுத்தி வாசிக்க முடியும்.
இந்த முறையானது, குழந்தைகள் சொற்களை எளிதாக உச்சரிக்கவும், வாசிக்கவும், புதிய சொற்களைக் கற்றுக்கொள்ளவும் உதவுகிறது. இதன் மூலம், குழந்தைகளின் வாசிப்புத் திறன் மேம்படுவதுடன், மொழி மீதான அவர்களின் ஆர்வமும் அதிகரிக்கும்.
உலகளாவிய கல்வியறிவை மேம்படுத்துவதில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் இந்த ஆய்வில் எழுத்துக்களை அடையாளம் காணல், சிறிய வார்த்தைகளின் சரியாக உச்சரித்தல் போன்றவற்றின் அடிப்படையில் குழந்தைகள் மதிப்பிடப்பட்டனர்.
அடிப்படை வாசிப்புத் திறன்கள் குறைந்தபட்ச அளவுகோல்களுக்குக் கீழே உள்ளன என்றும், வாசிப்பதைக் கற்றுக்கொள்வதன் முதல் மூன்று ஆண்டுகளில் செயல்திறன் இடைவெளி அதிகரித்து வருவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
விரைவான நடவடிக்கை அவசியம்
2015 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையால் நிர்ணயிக்கப்பட்ட நிலையான வளர்ச்சி இலக்குகளில் உள்ள உலகளாவிய கல்வியறிவு இலக்குகளை, சிறப்புத் தலையீடுகள் இல்லாமல் அடைய முடியாது என்றும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இங்கிலாந்தில் சுமார் 15 ஆண்டுகளாக ஒலிப்பு முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் விளைவாக, அடிப்படை வாசிப்புத் திறன்களில் வியத்தகு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. வளரும் நாடுகளின் கொள்கை வகுப்பாளர்கள் இதை அவசரமாக அறிமுகப்படுத்த வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
உலகளாவிய கல்வியறிவை மேம்படுத்துவது பலவிதங்களில் மிகவும் முக்கியம். வாசிப்புத் திறன் என்பது பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு முக்கிய அடித்தளமாகவும், சுகாதாரம், பாலின சமத்துவம் மற்றும் அரசியல் பங்கேற்பு ஆகியவற்றிற்கு முக்கிய பங்களிப்பாகவும் கருதப்படுகிறது.
கல்வியில் முதலீடு வீணாவதா?
குழந்தைகள் வாசிக்கக் கற்றுக்கொள்ளாததால், கல்வியில் செய்யப்படும் உலகளாவிய, பரந்த முதலீடுகள் எதிர்பார்த்த பலனைத் தருவதில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.
உளவியல் பேராசிரியர் கேத்தி ராஸ்டில், “இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் பொதுக் கொள்கையின் ஒரு பெரிய தோல்வியை வெளிப்படுத்துகின்றன. உலகளாவிய கல்வி முறைகளின் மிக முக்கியமான பணி குழந்தைகளுக்கு வாசிக்கக் கற்றுக்கொடுப்பதாகும். ஆனால், வளரும் நாடுகளில் உள்ள குழந்தைகள் தொடக்கத்திலேயே பின்தங்கி விடுகின்றனர். ஒலிப்பு முறை கற்பித்தல், இந்த மாணவர்களை வெற்றிகரமான வாசிப்புப் பாதையில் அழைத்துச் செல்ல உதவும்” என்று கூறினார்.
உலக வங்கியின் மைக்கேல் க்ராஃபோர்ட், “வெற்றிகரமாக வாசிக்க வைப்பது எப்படி என்பதைக் காட்டும், 30 ஆண்டுகளுக்கும் மேலான ஆராய்ச்சிகள் நம்மிடம் உள்ளன. கல்வித் துறையில் முடிவெடுப்பவர்கள் இந்த ஆதாரங்களை விரைவில் செயல்வடிவமாக்க வேண்டும்” என்று கூறினார்.
வாசிப்புத் திறனில் உலகளாவிய பின்னடைவு: கற்பித்தல் முறையை மாற்றக் கோரும் ஆய்வு ஆய்வுக்கட்டுரை இணைப்பு
https://dx.doi.org/10.1038/
கட்டுரையாளர் :
த. பெருமாள்ராஜ்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.