பிரித்விராஜின் ஆடுஜீவிதம் திரைவிமர்சனம் - Goats Day movie review

உலக சினிமா வரலாற்றில் ஒர் இந்திய சினிமா மகுடம் சூடுகிறது. திரைமொழியில் இந்திய கலைஞர்கள் வெற்றியின் எல்லைகளை கடந்துவிட்டார்கள் என்று பெருமிதம் கொள்ளச் செய்யும் படம்.

கேரளத்து இரு இளைஞர்களை ஓர் அரபு கனவான் அழைத்துச் சென்று அவர்களை பெருவெப்ப பாலைவனம் ஒன்றில் செம்மறி ஆடுகளை மேய்க்கவிடுகிறார். அதிலிருந்து மீளும் வலிசுமந்த முயற்சிதான் இந்த படத்தின் முழுமை.

காதல் மனைவியோடு கேரளத்தின் அழகிய நீர்நிலை தீரத்தில் மழையில் நனைந்தும் குளத்தில் மூழ்கியும் படகில் மகிழ்ந்தும் சத்தமிட்டும் முத்தமிட்டும் மணல் அள்ளி விளையாடியும் கலவி கொண்டு களிக்கும் காட்சிகள் ரொமான்ஸின் உச்சம். ஒளிப்பதிவாளர் கேமராவில் படம் பார்க்கும் ஒவ்வொருவரையும் ஈரம் சொட்டச் சொட்ட குளிரவைத்திருக்கிறார். பல நிறத்து வண்ணங்கள் கேரமாவில் ஒழுகி கண்களுக்கு இதம் சேர்க்கின்றன.

கேரளத்தின் ஈர மணலிலிருந்து அரபின் வறண்ட மணலுக்கு மாறும் காட்சிகள் இயக்குநரின் திறமைக்கு சபாஸ்போட வைக்கிறது. ஒளிப்பதிவு கவிதை போல மிளிர்கிறது. படத்தொகுப்பு இந்த இடத்தில் கைதட்ட வைக்கிறது.

ஒளிப்பதிவும் படத்தொகுப்பும் பின்னணியிசையும் நம்மை பாலைவனத்தின் நெருப்பைக் கக்கி தகதகக்க வைக்கிறது. ஏசி அரங்கத்தில் கூட புழுக்கத்தில் வியர்க்கவைக்கிறது. படம் பார்த்து முடிந்த பிறகும் தகிக்கும் பாலை நிலத்தின் அனல் நெஞ்சில் ஆறாமல் கனன்றுகொண்டே இருப்பதை ஒவ்வொருவராலும் உணர முடிகிறது.

தீப்பிழம்பை கக்கிக் கொண்டிருக்கும் மஞ்சள் உச்சி்வெயில் பொழுதில் செம்மறி ஆடுகளின் ரோமங்கள் லேசாக அசையத் தொடங்கி வேகமாக நான்கு திசையும் சுழல்கிறது. இந்த குளோசப் சாட் முடிந்ததும் கேரமா ஷூம் அவுட் ஆகும்போது வானத்திற்கும் பூமிக்குமாக ராட்சச சிலிண்டர் வடிவில் பாலைவனப்புயல் கோரமாக காற்றை ஊதிக்கொண்டு அதகளம் செய்யும் காட்சி மிரட்டலாக உருவாக்கப்பட்டிருக்கிறது.

கண்ணுக்கு எட்டும் தொலைவு வரை பாலை வனம் விரிந்து நிற்கிறது. எங்கெங்கு பார்த்தாலும் மணல் மணல் மணல் மட்டுமே!
காற்று மணல் மேடுகளில் வரைந்த கோடுகளில் துரோகத்தின் வரிகள் எரியும் கங்குகள் கொண்டு எழுதப்பட்டிருக்கின்றன.

இவர்கள் இருவரை கனவான் ஒருவர் கடத்தி்வர, தாம் கடத்திவரப்பட்டிருக்கிறோம் என்பதை உணராமல் தவித்து நிற்கும் காட்சியில் கதாநாயகன் நம்மை கதறவைக்கிறார்.இவர்கள் அவரிடம் கடவுசீட்டை காண்பித்து வேலை கேட்க, இரண்டு பறவைகளை உயிருடன் பிய்த்து போடுவதைப் போல பாஸ்போர்ட் மற்றும் விசா முதலானவைகளை கிழித்து பறக்கவிடும் காட்சியும் அதனால் ஏற்பட்ட பதற்றமும் பதறவைக்கிறது.

தப்பிக்கலாம் என் பல முறை நடந்த முயற்சிகளில் சவுக்கடிகளும் துப்பாக்கியால் தாக்குதல்களும் அரங்கேற்றப்பட எல்லா கதவுகளும் அடைக்கப்பட்ட புழுக்கமான மனநிலைக்கு பார்ப்பவர்களும் வந்துவிடுகிறார்கள்

தலைக்கு மேல் துண்டும் அந்த துண்டின் மேல்பகுதியில் வட்டமாக சுற்றி வைக்கப்பட்ட சாட்டையும் அடிமைகளை பல முறை இரக்கமே இல்லாமல் பதம் பார்க்கின்றன.

யாரோ ஒரு மனிதனின் இறக்கப்போதும் உடலை கழுகுகள் கவ்வி தின்னும் காட்சியில் கழுகுகளோடு சண்டைபோட்டு காப்பாற்றத் துடிக்கும் இடத்தில் பிரித்திவியின் நடிப்பு அபாரம்.பறந்துகொண்டே கூர்மையான அலகுகளால் கொத்தியும், பெரிய கனத்த சிறகுகளால் அறைந்தும் இம்சிக்கும் பிணந்தின்னி கழுகுகள் என்று அழைக்கப்படும் பாருகழுகுகளின் காட்சி மிரட்டலாக படமாக்கப்பட்டுள்ளது.

நெருப்பு கங்குகளின் மீது சுட்டு்எடுக்கப்படுகின்ற ஒரு அங்குலம் கனமுடைய ரொட்டியில் இருக்கும் சாம்பலை உள்ளங்கைகளால் துடைத்து பசிக்கு கிடைத்த அந்த முதல் உணவை பிச்சித்தின்னும் காட்சி பரிதாப உணர்வை பற்றவைக்கிறது.

இனி போய்விடுவது என முடிவு செய்துவிட்டு பாலைவன ஆட்டுப்பட்டியிலிருந்து வெளியேறுகிற நாயகன் கடைசியாக பசித்த ஒட்டகங்களுக்கு தீவனமும் தவித்த ஆடுகளுக்கு உலர்ந்த புல்லு கட்டுகளும் போட்டுவிட்டு விடைதரும் காட்சியில் தொண்டை அடைக்கும் துக்கம் ஏதோ செய்கிறது.

நாள்கணக்கில் ஆடுமேய்த்து பழகிவிட்ட நாயகன் கால்நடைகளுக்கு தீவனம் கொண்டுவந்த வண்டி ஒன்றின் பக்கவாட்டு கண்ணாடியில் தன் முகத்தை பார்த்து பதறும் காட்சி உலகத்தரம். தோலெல்லாம் வெயிலில் கருத்து முகமெல்லாம் முடிவளர்ந்து முகத்தை மறைத்த தன் உருவத்தைப் பார்த்து துயரம் கலந்த பதற்றம் அடையும் போது நடிப்பில் அசுரத்தனத்தை காண்பிக்கிறார்.

கோரமாக மாறியிருக்கும் தன் முகத்தை அறுவெறுப்பாகப் பார்த்து ஆத்திரத்தை இருக்கும்போது வண்டியின் கண்ணாடி டோப்பென்ற சத்தத்தோடு உடைக்கப்படுகிறது. உடைந்து சிதறிக்கிடக்கும் கண்ணாடி பிம்பங்களில் தன்னை தானே பார்க்கும் காட்சியில் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். உடைந்த கண்ணடி துண்டில் ஒன்றை எடுத்து தன் வலது தாடையில் இருக்கும் தாடியின் மயிற் கற்றையை கரகரவென தானே அறுக்கும் காட்சி உலகத்தரம்.நடிப்பில் மிளரவைக்கிறார் பிருத்திவி.

ஊரிலிருந்து ஒன்றாக வந்த நண்பன் பாலைவனத்தின் வேறொரு பகுதியில் அடிமையாய் ஆடுமேய்த்து வருகிறானா? இல்லை என்ன ஆனான் என்று மனதிற்குள் குழம்பிக்கொண்டிருக்கும் நிலையில் நூறு மீட்டர் தொலைவில் ஒல்லியான ஒரு உருவம் நிற்கிறது. தொலைத்த நண்பனை கண்டடைந்துவிட்ட மகிழ்ச்சியில் கட்டியணைத்து கண்ணீர் சிந்தும் கையறுநிலை காட்சி தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் எல்லோருமே கைகுட்டை எடுத்து கண்ணீர்த்துடைக்கிறார்கள்.

மந்தையில் ஓர் ஆட்டினை துப்பாக்கியால் சுட்டு அதன் மயிர் கொத்துகளை நீக்கி, அதே ஆட்டை சமைத்து அதன் கால்பகுதியை உண்ணுமாறு சொல்லி ஒரு மாமிசப் பிண்டத்தை மடியில் எறியும் காட்சியும், வளர்த்த ஆட்டை உண்ண மறுத்து பசியோடு வாடும் நாயகனின் பாவமும் பல விருதுகளை அள்ளுகிறது.

மலம் கழித்துவிட்டு ஆடுகள் குடிப்பதற்காக வைக்கப்பட்ட தண்ணீரில் அவன் கழுவத்தொடங்கும் போது கால்களால் எட்டி உதைத்து இம்சிக்கும் காட்சி பறிதாபத்தை அள்ளுகிறது.

இருள்கவிந்த பொழுதொன்றில் வெளிறிய கண்களோடும் கருத்த தேகத்தோடும் மண்டியிட்டு ஆடுகள் குடிக்கும் தண்ணீர்தொட்டியில் முதுகை முன்புறமாக வளைத்து ஆடுகளோடு சேர்ந்து அதே நீரை பருகும் காட்சியை அத்தனை இயல்பாக உருவாக்கி இருக்கிறார்கள்.

“மெயின் ரோடு போகணும் …வழிசொல்லுங்க” என்று திசை தெரியாத பிரதேசத்தில் மொழிதெரியாத ஊரில் தவிக்கும் தவிப்பும், பதில் கிடைக்காமல் துடிக்கும் வேதனையையும் தத்ரூபமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

எத்தனையோ உலக இளைஞர்கள் அரபு பூமியில் வாழ்நாள் கொத்தடிமைகளாக வாழ்ந்த சுவடே தெரியாமல் மரித்துப் போயிருக்கிறார்கள் என்ற சோகத்தை இந்தப்படம் வெளிச்சத்திற்கு கொண்டுவந்திருக்கிறது. வறுமையின் காரணமாக உலகெங்கும் புலம் பெயரும் கூட்டத்தில் ஒரு பகுதியினர் வாழ்வைத் தொலைக்கும் அவலத்தை கண்ணீர் பனிக்க சொல்கிறது.

இசைப்புயல் ரகுமானின் காட்சிக்குப் பொருத்தமான அர்த்தமுள்ள இசையும். உள்ளதை உள்ளபடியே காட்டும் உயிருள்ள ஒளிப்பதிவும், தொடர்ச்சி அருந்து போகாத அளவிற்கு துல்லியமாக செய்திருக்கும் படத்தொகுப்பும், நடிப்பதற்கு பதிலாக வாழ்ந்து காட்டியிருக்கும் கதாபாத்திரங்களின் திரைமொழியும் அனைவரது பாராட்டுக்களைப் பெறுகிறது.

பென்யாமின் என்னும் நாவலாசிரியரின் உயிரோட்டமான உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்ட நாவலை அதே ஆன்மாவின் வலியை திரையில் அப்படியே கடத்தி இருக்கிறார் படத்தின் இயக்குநர்.

எழுதியவர் 

போ.மணிவண்ணன்

 
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 One thought on “ஆடுஜீவிதம் – திரைக் கண்ணோட்டம்”
  1. சிறப்பு சிறப்புங்க அன்பு நண்பரே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *