நூல் அறிமுகம்: எழுத்தாளர் கி. ராஜநாராயணன் அவர்களின் “கோபல்ல கிராமம்” – பா. அசோக்குமார்நூல்: “கோபல்ல கிராமம்”
ஆசிரியர்: கி. ராஜநாராயணன்.
பதிப்பகம்: அன்னம் வெளியீடு
பக்கங்கள் :176
₹. 100.

கிட்டத்தட்ட பதினெட்டு வருடங்களுக்குப் பிறகு மீள் வாசிப்பில் “கோபல்ல கிராமம்”.

மிகச்சிறந்த தமிழ் நாவல்களில் ஒன்றான “கோபல்ல கிராமம்” குறித்து புதிதாகச் சொல்வதற்கு எதுவுமில்லை என்றே தோன்றுகிறது. ஒவ்வொரு முறை படிக்கும் போதும் புது புது அனுபவங்களை நல்குவது தானே படைப்பின் உச்சம். ஆகச் சிறந்த இந்நூல் மட்டும் விதிவிலக்காகுமா என்ன???

ஒரு கதை சொல்லி ஓர் ஊரின் கதையை மிக மிக யதார்த்தமான நடையில் பகர்வதே இந்நாவல் என எளிதில் சுருக்கிவிட முடியுமா???

நாவலைப் படிக்கும் வாசகனை கரம் பிடித்து அழைத்துச் சென்று ஊர் உருவான வரலாற்றை ஊர் மாந்தர்களை ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தி நகர்த்தும் வித்தையைக் கண்டு வியக்காமல் இந்நாவலைக் கடக்க முடியுமா என்ன???

ஒரு கொள்ளையடித்தலில் கதை தொடங்குவதாக நினைத்துக் கொண்டிருக்கையிலேயே வேறொரு களத்தில் பயணமாகி நம்மை நனவிலி மனதில் மிதக்க வைப்பதாக அல்லவா இருக்கிறது இந்த கதையோட்டம்…

அக்கையாவைப் போலவே நாமும் பூர்வீக வரலாற்றை நம்பத் தயங்கினாலும் அவை உண்டாக்கும் சுவாரஸ்யமோ அமாஷ்யமான சக்தியால் விளைந்த வசியமன்றோ…

தீவட்டிக் கொள்ளை நிகழ்வுகள் தத்ரூபமாக நம்கண்முன் விரிவதாகக் காட்சிப்படுத்திய விதம் நம்மையும் கொள்ளையர் மேல் இரக்கம் கொள்ளச் செய்வதாக அல்லவா இருக்கிறது????

கோட்டையார் குடும்பத்தில் துவங்கிய கதாபாத்திரங்களின் அறிமுகப் படலம் சிறுதுளியென்றால் ஊரின் ஒவ்வொருவரின் அறிமுக கதைகளும் பட்டப்பெயர் விளக்கங்களும் தேன்துளிகளன்றோ?

காட்டைத் திரித்து கழனியாக மாற்றும் காட்சிகள் ஒவ்வொன்றும் தர்க்க ரீதியில் அமைந்த உண்மைச் சம்பவங்களாக நம் கண்களில் ஈரம் சுரக்க வைப்பதாகவே அமைந்துள்ளன.“பிள்ளைக்காடு” உருவாக்கத் தீட்டும் திட்டங்கள் ஒவ்வொன்றும் மிகுந்த ஆர்வத்தை விதைப்பதாக அமைந்து நம்மையும் சிந்திக்கத் தூண்டுவதாகவே காட்சிப்படுத்தியுள்ளார் கி.ரா அவர்கள்.

முயல், முள்ளெலி, பன்றி மற்றும் உடும்பு என ஒவ்வொரு உயிரினத்தையும் பிடிக்கும் யுக்திகளைச் சித்தரிக்கும் விதம் ஒவ்வொன்றும் ரத்தின சித்திரங்களே…

இளமைத் துள்ளலுடன் நகைச்சுவை உணர்வு பொங்கிப் பெருகப் பயணிக்கும் நாவலில் கண்ணீருக்கும் பஞ்சமில்லை…

அரசர்களின் ஆட்சி முடிவும் கும்பனியரின் ஆதிக்க எழுச்சி காலமே நாவல் பயணிக்கும் காலமென்றாலும் அதனை நாவலுடன் இணைத்த விதம் குறித்த பிரமிப்பு அகலவே இல்லை. கும்பனி ஆட்சியை ஏற்க கூறப்படும் காரணம் கவனத்தில் கொள்ளக்கூடியதே….

இரண்டு தார முறை, பிரம்மச்சரியம், ஜோதிடக்கலை, வைத்திய முறை, காயடிப்பு முறை முதல் வனவாசம், கழுவேற்றம் வரையிலான பழங்கால முறைமைகள் பற்றிய காட்சிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகத்தில் அமைந்து நம்மைப் பரவசமூட்டக் கூடியவையே….

அக்கால விவசாய முறை, கால்நடை வளர்ப்பு தொடங்கி வெட்டுக்கிளி அட்டூழியத்தால் விளைந்த பஞ்சம் வரை விவரித்த பாங்கில் இந்நாவல் ஒரு வரலாற்றுப் பெட்டகமாகவே மிளிர்கிறது எனலாம்.

நாவலின் ஒவ்வொரு பக்கத்திலும் ஏதோவொரு பத்தியில் பயின்று வரும் வசனங்கள் ஒவ்வொன்றும் ரசனை மிகுந்தவையே… எள்ளல் சுவையுடன் அமைந்து நம்மைத் துள்ளலோடு நாவலில் பயணிப்பதாகவே அமைந்துள்ளன.

இந்நாவலில் சொல்ல வேண்டியவையோ ஏராளம். 176 பக்கங்களில் கோபல்ல கிராமத்தைத் தரிசனம் செய்து திரும்பலாம் மனநிறைவாக….

சொல்லித் தெரிவதைவிடப் படித்துப் பரவசமடைதலே கனக்கச்சிதமாக இருக்குமென நம்புகிறேன்.

வாய்ப்புள்ளோர் வாசிக்க முயலுங்கள். மிகச் சிறந்த படைப்பு.

நன்றி.

பா. அசோக்குமார்
மயிலாடும்பாறை.