நூல் அறிமுகம்: கி ராஜநாராயணனின் “கோபல்ல கிராமம்” – சரிதா ஜோ

நூல் அறிமுகம்: கி ராஜநாராயணனின் “கோபல்ல கிராமம்” – சரிதா ஜோ



கதை ஒருவரியில் : தெலுங்கு தேசத்திலிருந்து தமிழகத்திற்குப் புலம் பெயர்ந்த மக்களின் கதை.
கரிசல் இலக்கியத்தின் பிதாமகன் கி.ரா அவர்கள் முதலில் எழுதிய நாவல் கோபல்ல கிராமம். கதை எழுதும்போது வட்டார வழக்கில் எழுதியதோடு தமிழ் இலக்கணங்களை பின்பற்றி எழுதவில்லை என்று பல்வேறு விதமான எதிர்மறையான கருத்துக்கள் எழ ஆரம்பித்தது. எழுத்தாளர்கள் மட்டுமல்ல தமிழ் ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் என்று அனைவரும் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். ஆனால் பின்வந்த நாட்களில் ஏற்றுக் கொண்டு கொண்டாடப்பட்டார்.
இன்று இந்த 98 வயதில் எழுதி வெளிவந்த அண்டரண்டபட்சி கையெழுத்துப்பிரதி வரை தன்னுடைய முதலில் எந்த எழுத்துக்கு எதிர்ப்பு வந்ததோ அதே எழுத்து வடிவத்தில் தான் எழுதி வருகிறார்.

கிராமம் இதோ கிராமத்துக்குள் நுழைகிறோம். கதையின் தொடக்க வரி “கிராமம் ஆழ்….ந்த தூக்கத்தில் இருக்கிறது” அதைத் தொடர்ந்து வரும் கிராமத்தைப் பற்றிய குறிப்புகள் மிக மிக அழகின் உச்சம். இரவு ஜீவராசிகள் சன்னம் சன்னமாக தன்னுடைய அரவத்தை ஒடுக்கிக் கொண்டு வந்தது இப்படியாக மிக அழகான வரிகளோடு நீள்கிறது இந்தக் கதை. கதையை ஒரு வரியில் சொல்ல வேண்டுமானால் புலம்பெயர்ந்த மக்களின் கதை. ஏன் புலம் பெயர்கிறார்கள்? என்பதற்கான ஒரு கதை அதன் பின்பு எப்படி இங்கு வந்து வாழ்கிறார்கள்? எப்படி அந்த வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறார்கள்? என்பதனை கதையோடு சில சுவாரசியமான மனிதர்களைப் பற்றியும் எழுதியுள்ளார்.

ரெங்கசுப்ரமணி: கோபல்ல கிராமம் - கி. ராஜநாராயணன்
இந்த கதையின் முன் கதையை கூறுபவர் அதாவது கதைசொல்லியாக மங்கத்தாயாரு அம்மாமாள் 138 வயது பூட்டி. கதை கேட்பவராக கோவிந்தப்ப நாயக்கர். இந்தக் கதையின் மிக முக்கியமான கதாபாத்திரம் சென்னாதேவி. சென்னாதேவி மிகமிகப் பேரழகி.சென்னா தேவியின் அழகை அவ்வளவு அழகாக வர்ணித்திருப்பார். அவளுடைய சிரிப்பை அவளுடைய அந்த முத்துப்பல்லை.
அவளுடைய மூக்கில் தொங்கும் புல்லாக்கின் கீழ் ஒரு முத்து தொங்கும் பற்கள் மின்ன அவள் சிரிக்கும் போதெல்லாம் அந்த முத்துக்கு பற்களுக்கு போட்டிதான் ! புல்லாக்கில் அப்படி ஒரு முத்தைக் கோர்த்து பற்களுக்கு நேராக தொங்க விடணும் என்று ஒரு ஆசாரிக்குத் தோனியிருக்கே அது எப்படிப்பட்ட ரசனை என்ற வரிகளில் கி.ரா அவர்களின் ரசனை தெரிகிறது. இந்த பேரழகி மீது ஒரு துலுக்க ராஜா ஆசைப்படுகிறார். அந்த மன்னருக்குத் தங்களுடைய மகளைக் கொடுக்க மறுத்து அங்கிருந்து தப்பித்து ஊரைவிட்டுக் கிளம்புகிறார்கள்.
எங்கு செல்கிறோம் என்பது தெரியாமல் சென்று கொண்டு ஓர் இடத்தில் தங்களை தகவமைத்துக் கொள்கிறார்கள். காடாக இருந்த ஒரு இடத்தை எப்படி விளைநிலமாக மாற்றி அந்த இடத்தில் கோட்டை கட்டி தங்களுடைய தங்களுக்கான ஒரு கிராமத்தையே உருவாக்குகிறார்கள் என்பதை மிக மிக சுவாரஸியமாகக் கூறியுள்ளார். பாம்படத்தைத் திருடிய ஒரு திருடனுக்குக் கழுவேற்றம் என்ற தண்டனை கொடுக்கப்படுவது பற்றியும் முடிவில் அந்த திருடனால் கொல்லப்பட்ட பெண்ணைத் தெய்வமாகக் கொண்டாடுவதோடு கழுவிலேற்றிக் கொல்லப்பட்ட திருடனையும் தெய்வமாக வழிபடுகிறார்கள்.
கோபல்ல கிராமம்- நாவலில் கி.ரா. விவரிக்கும் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு- கே.எஸ். ராதாகிருஷ்ணன் | Tamil literature speaks on Locust attack - Tamil Oneindia
வெட்டுக்கிளி விளைநிலத்தை நாசம் பண்ணுகிறது என்று சில மாதங்களுக்கு முன்பு நாம் படித்திருப்போம் அதேபோல அந்த காலங்களிலும் இருந்திருக்கிறது என்பதை இவருடைய எழுத்துக்களின் மூலமாக அறிந்து கொள்ள முடிகிறது. ஒரு எழுத்தாளன் சமகாலத்தில் நடக்கும் பிரச்சனைகளை தன்னுடைய எழுத்துக்களின் மூலம் கொண்டு வருவதன் மூலமாக அந்த எழுத்துக்களை வாசிக்கும் வாசகன் அந்தக் காலத்தில் நடைபெற்றவற்றை அறிந்து கொள்ள முடியும் என்பதை இவரின் எழுத்துக்கள் மூலமாக நாம் அறிந்து கொள்ள முடிகிறது.
98 வயசிலும் எழுதிக் கொண்டிருக்கும் எழுத்தாளருக்கு ஞானபீடம் கண்டிப்பாக இந்த வருடம் கிடைக்கும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை. கிடைக்க வேண்டும் அதுவே அந்த பெரும்பாலானோரின் விருப்பமும் கூட. கரிசல்காட்டு வாழ்க்கை முறையை பாடல்களை சொலவடைகளை கதைகளை பழமொழிகளை என்று தன்னுடைய கதைகளில் கூறியதோடு தனியாகவும் தொகுத்து அகராதியும் தொகுத்து வெளியிட்டிருக்கிறார்.
1976 இலேயே எழுதப்பட்ட இந்தக் கதை திரும்பத் திரும்ப வாசிக்கத் தூண்டும். இந்தப் புத்தகம் வாசிப்பை நேசிக்கும் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய புத்தகம்.


நூல் : கோபல்ல கிராமம்
ஆசிரியர் : கி ராஜநாராயணன்
பக்கங்கள் : 200
விலை : 225
பதிப்பகம் : காலச்சுவடு


Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *