தோழர்களுக்கு அன்பு வேண்டுகோள்! இந்நூலை அவசியம் வாங்கி வாசிக்க வேண்டுகிறேன். வாசிப்பு அனுபவம் சொல்வதற்கு முன்பு ஏன் புத்தகத்தை படிக்கச் சொல்கிறீர்கள் என்று கேட்கலாம். காரணம் நமது நாட்டில் ஏன் உலகில் பெரும்பாலான நாடுகளில் கார்பரேட்டின் கையில் மருத்துவம் இருக்கிறது. இந்நிலையில் மக்களுக்காக அயராது மருத்துவம் பார்த்த மருத்துவரை சிறையில் அடைத்து சித்திரவதை செய்த உத்திரப்பிரதேச யோகியின் அயோக்கியத்தனத்தால் துவண்டு போகாமல் நாடு முழுவதும் கடும் நோயால், பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி மருத்துவர்கள் பலருடன் இணைந்து பெரும்பாலான மக்களை நோயிலிருந்து மீட்டு அவர்களின் வாழ்வில் இருக்கும் நிறைய மூடநம்பிக்கைகளுக்கு விளக்கம் கூறி மக்களையே மருத்துவர்கள் போன்று சிந்திக்க வைத்து தொண்டாற்றி இப்போது வரை யோகி ஆதித்யநாத்தால் மருத்துவர் கஃபீல் கான் பழிவாங்கப்பட்டு, அவருக்கு பணி வழங்காமல் பணி நீக்கம் செய்த கொடூரம் கண்முன் தெரிவதால் உடன் அனைத்து விவரமும் அறிந்து மக்களின் மருத்துவம் பாதுக்காக்கும் மருத்துவர் கஃபீல் கான் போன்று மக்கள் பணி செய்யும் மருத்துவர்களுக்கு நாம் பக்கபலமாக இருந்து சுகாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே முதலில் இந்நூலை பரிந்துரை செய்கிறேன் தோழர்களே.
இந்நூலை வாசிக்கும் யார் ஒருவரும் இவ்வளவு கேடுகெட்ட முதல்வரா யோகி என்று வாசிப்பவர்கள் மனதில் சிந்திக்காமல் வாசிக்க மாட்டார்கள். அவ்வளவு அயோக்கியத்தனம் மருத்துவரை விட அம்மாநில மக்களுக்கு யோகி செய்து வருவது புரியும்.
2017 ஆகஸ்டு 10ஆம் தேதி இரவு மருத்துவர் தனது குடும்ப சூழல் காரணமாக விடுப்பு எடுத்துவிட்டு இரவு தூங்கிக்கொண்டிருந்த போது கோரக்பூர் மருத்துவமனையிலிருந்து போன், ‘சார் இங்கு மிகப்பெரிய விபரீதம் ஏற்பட்டிருக்கு. குழந்தைகள் இறந்து கொண்டிருக்கின்றனர். காரணம் ஆக்சிஜன் தீர்ந்துபோனதால் மூச்சுத் தினறி இறந்துவிட்டனர். இன்னும் நிறைய குழந்தைகள் மூச்சுத் தினறிக்கொண்டிருக்கின்றனர். என்ன செய்வதென்றே தெரியவில்லை’ என்று வந்த போனால் கண்ணை கசக்கிக்கொண்டு எழுந்தவரை பார்த்து அவருடைய மனைவி, ‘என்னாச்சுங்க திடீரென்று பதற்றமாக இருக்கிறீங்க’ என்று கேட்கவும், “ஒன்றுமில்லை ஒரு குழந்தைக்கு அவசர மருத்துவம் பார்க்க வேண்டும் எனவே உடனே நான் போயாக வேண்டும்” என்று மனைவிக்கு கூறிவிட்டு அவசரமாக மருத்துவமனை இருக்கும் 10 கி.மீ தூரத்திற்கு காரில் செல்வதற்கு ஓட்டுநரை கூப்பிட நேரமில்லை என்று தானே காரை ஓட்டிக்கொண்டு துறைத் தலைவரிலிருந்து ஆக்சிஜன் வழங்கும் நிறுவனம் வரைக்கும் பேசி பேசியும், குழந்தைகளுக்கு பாதிப்புகள் அதிகம் ஆகாமல் இருக்க அங்கிருக்கும் மருத்துவர்களுக்கு, ஊழியர்களுக்கு ஆலோசனைகள் சொல்லிக்கொண்டும் அவ்வளவு பதற்றம் இருப்பினும் தெளிவான வழிகாட்டுதல்களை கொடுத்துக்கொண்டு சென்றார்.
மருத்துவமனையின் நிலைமையை மருத்துவர் கூறும்போது நமக்கு கூடுதல் கோபம் வரும் உ.பி மருத்துவ கட்டமைப்பின் மீது. ஆம் 2016ல் அங்கு பணியில் சேரும்போது மருத்துவமனையில் பினாயில் இல்லை, தேவையான பெட் இல்லை, தீவிர சிகிச்சைப் பிரிவு சாதாரண வார்டு போல மக்கள் கூட்டம் கூட்டமாக இருந்தது. நோயாளிகள் படுக்கவேண்டிய படுக்கையில் நாய்கள் படுத்திருந்தது; மாட்டுச்சாணம் உள்ளே இருந்தது; குப்பைமேட்டில் இருக்கவேண்டிய குப்பைகள் மருத்துவமனைக்குள் தாராளமாக கிடந்தது; ஒரு குழந்தைக்கு மூச்சு வழங்க வேண்டிய வெண்டிலேஷனில் மூன்று நான்கு குழந்தைகள் படுக்க வைக்கப்பட்டிருந்தது; ஊழியர்களுக்கு கையுறைகள் எதுவும் இல்லாமல் இருந்தது; இப்போது கழிவறைகளின் நிலையைப்பற்றி நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் தோழர்களே. இருக்க வேண்டிய மருத்துவர்களுக்கு மிகவும் குறைவான மருத்துவர்கள் இருந்தது. இன்னும் நிறைய அகோரங்கள் கோரக்ப்பூர் அரசு மருத்துவமனையில் நிலவியது. மருத்துவர் தனது சொந்த செலவில் நிறை சுகாதாரப் பொருட்களை வாங்கிப் போட்டுள்ளார். இப்படிப்பட்ட மருத்துவர் தான் பதற்றத்துடன் மருத்துவமனைக்குச் சென்றார் குழந்தைகளைக் காப்பாற்ற. வேடிக்கை என்னவென்றால் இவர் ஒரு விரிவுரையாளர் மட்டுமே. துறைத் தலைவர் அங்கில்லை, வார்டுகளுக்கு பொறுப்பு மருத்துவர் இல்லை. எல்லோருக்கும் போன் செய்கிறார்.
ஆனால் எவ்வித பதற்றமும் இல்லாமல் சாதாரணமாக பேசுகிறார்கள் எதிர்முனையில் பேசியவர்கள். பொறுப்பை பிறர் மீது போட்டு ஒதுங்க நினைக்கின்றனர். கையறுந்துபோன நிலையில் அனைத்தையும் தன் கையில் எடுத்து பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆகஸ்டு 10 இரவு 11,12 ஆகிய மூன்று நாட்கள் தூங்காமல் போராடுகிறார் டாக்டர் கஃபீல் கான். இதற்குள் நிறைய குழந்தைகள், பெரியவர்களும் இறந்துகொண்டே இருக்கின்றனர். சிலிண்டர் தீர்ந்ததற்குக் காரணம் சிலிண்டர் நிறுவனத்திற்கு ரூ.68 லட்சம் பாக்கி வைத்திருந்தது நிர்வாகம். எனவே சிலிண்டர் பிரச்சினை. மருத்துவர், பல மருத்துவமனைகள், தனியார் சிலிண்டர் நிறுவனங்களுடன் பேசி பேசி தனது பணத்தை போட்டு அன்றிரவே 50 சிலிண்டரை வரவழைக்கிறார். தேவை 500 சிலிண்டர். நினைத்துப்பாருங்கள் இந்நிலையில் அவர் செய்த பணிகள் தான் மிகப்பெரிய உழைப்பு.
பிறகு என்ன நடந்தது; ஊடகத்திற்கு தெரிந்தது; அதனால் பரபரப்பு; யோகி மருத்துவமனை வருதல்; ‘நீதான் டாக்டர் கஃபீல் கானா?’ என்று ஒருமையில் பேசியது; பிறகு டாக்டர் கஃபீலை வீட்டுக்குச் செல்ல துறைத்தலைவர் கட்டாயப்படுத்தியது; அதன் தொடர்ச்சியாக அவரை சிறையில் தள்ளியது; தொடர்ந்து சிறைக்கு மேல் சிறை; சஸ்பெண்டு மேல் சஸ்பெண்டு; குழந்தை இறப்புகளை அரசியல் செய்து யோகி அசிங்கப்பட்டது; அதனால் டாக்டர் கஃபீல் கானுக்கு 2021 வரை பணி வழங்காதது; உயர் மற்றும் உச்ச நீதிமன்றம் வரை ‘டாக்டர் கஃபீல் கான் மீது எந்தத் தவறுமில்லை’ என்று விடுதலை செய்த போதும் யோகி தனது மதவெறி வெறுப்பால் டாக்டருக்கு பணி வழங்காமல் அவரை டிஸ்மிஸ் செய்தது; அவரது குடும்பத்தை கொடும் தொந்தரவு செய்தது; சிறையில் டாக்டர் மிகவும் அவமரியாதையாக நடத்தப்பட்டது; தனது சகோதரனை மதவெறிக் கும்பல் துப்பாக்கியால் சுட்டது. இப்படி எண்ணற்ற எண்ணற்ற கொடுமைகளும், கொடுமைகளுக்கு நடுவே தனது அயராத மருத்துவப்பணியை சம்பளமின்றி செய்தது. இன்னும் ஏராளமாக இருக்கிறது தோழர்களே. அவர் சுயசரிதையாக எழுதிய நூல் வெறுமனே இட்டுக்கட்டி எழுதப்பட்டதல்ல, அத்தனைக்கும் சான்றுகளை இந்நூலில் இறுதியில் இணைத்துள்ளார். அவரைப்பற்றி முழுமையாக வாசித்த பின்பு, சென்னை மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர் தோழர் Anu Rathna அவர்கள் தான் என் நினைவுக்கு வந்தார்கள். ஏனெனில் அவரும் தொடர்ந்து மக்களுக்கான மருத்துவராக பணியாற்றி வருகிறவர்கள் தானே.
தோழர்களே இந்நூலை நாம் வாசிப்பது மட்டுமல்ல வாசிக்கும் அனைவருக்கும் அறிமுகப்படுத்த வேண்டும். புது வாசிப்பாளர்களும் மிக எளிதாக வாசிக்கலாம். தோழர் #சசுப்பாராவ் அவர்கள் மிகமிக எளிய நடையில் மிக அற்புதமாக மொழிப் பெயர்த்திருக்கிறார்கள். கோரக்பூர் மருத்துவமனை 2017 கோரச் சம்பவம் அப்போது நினைவில் இருந்தாலும் நமது வாழ்க்கை ஓட்டத்தில் மறந்துபோய்விட்டோம். இந்நூலை வாசித்த போது ஆற்றாமையே நீடிக்கிறது. நமது தமிழ் மண் சுகாதாரத்திற்கு பெயர் போனது. இங்கேயும் நாம் பல குறைகளைக் கண்டு பிடிக்கலாம். அப்படி இருக்கும்போது உத்திரப்பிரதேச மக்களின் நிலையை நினைத்தால் மிகவும் கோபமே எழும் நமக்கு.
தோழர்களே இதுவே அதிகம். இந்நூலை வாசிக்கும் திரை இயக்குநர்கள் நிச்சயம் மிகப்பெரிய திரைப்படமே எடுக்கலாம். அவ்வளவு இருக்கிறது. போதும் தோழர்களே வாசியுங்கள்.
அருமையான நூலை மொழிப்பெயர்த்த தோழர் ச.சுப்பாராவ் அவர்களுக்கு எப்படி நன்றி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை.
டாக்டர் கஃபீல் கான் அவர்களுக்கு ராயல் சல்யூட்.
வாசிப்போம்!
உலகை நேசிப்போம்!!

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

