வரும் 2022-23 கல்வியாண்டு முதல் 6ஆம் வகுப்பிலிருந்து 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக பகவத் கீதை கற்பிக்கப்படும் என்று குஜராத் மாநில அரசின் கல்வி அமைச்சர் அறிவித்திருப்பது, அரசு மதச்சார்பின்மைக் கொள்கையை அப்பட்டமாக மீறும் நடவடிக்கையாகும். அரசாங்கத்தால் நடத்தப்படும் பள்ளிகள் எதுவும் எவ்விதமான மத போதனைகளையும் அளிக்கக்கூடாது என்பது அனைத்து மதச்சார்பற்ற அரசுகளின் அடிப்படைக் கொள்கையாகும்.
இந்தக் கொள்கையை அமெரிக்கா, பிரான்சு, ஜப்பான் முதலான பல நாடுகள் பின்பற்றுகின்றன. தனியார் பள்ளிகள் எவ்விதமான மத போதனைகளையும் அளித்திட சுதந்திரம் அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அரசுப் பள்ளிகளுக்குக் கிடையாது. பகவத் கீதை என்பது ஒரு மதஞ்சார்ந்த நூலாகும். இது, இந்து மதத்தின் பாரம்பர்யங்கள் மற்றும் சித்தாந்தத்தின் அடிப்படையில் வாழ்க்கை முறை மற்றும் நடத்தையை மேற்கொள்ளவேண்டும் என்று கோருகிறது. அதன் மதப் பின்னணியை ஓரங்கட்டிவிட்டு, மாணவர்களுக்கு அறநெறி மற்றும் நெறிமுறைகளைக் கூறும் ஒரு நூலாக அதனைச் சித்தரித்திட முடியாது. கடவுளால் உண்டாக்கப்பட்ட இந்துக்களில் நால் வர்ணப் பிரிவை எவராலும் மாற்ற முடியாது என்கிற கீதையின் சில அம்சங்கள் குறித்து இந்துக்களிலேயே விமர்சிப்பவர்கள் உண்டு. கீதை படுபிற்போக்குத்தனமான ஒன்று என்பது குறித்தோ அல்லது அது சில பிற்போக்குத்தனமான சிந்தனைகளைக் கொண்டிருக்கிறது என்பது குறித்தோ உண்மையில் பிரச்சனை கிடையாது. அரசாங்கத்தின் கீழ் இயங்கும் பள்ளிக்கூடங்கள் குறிப்பிட்ட ஒரு மதத்தைச் சார்ந்த அறிவுரைகளை எப்படி அளித்திட முடியும் என்பதே முன்னுக்கு வந்திருக்கும் பிரச்சனையாகும்.
அரசமைப்புச்சட்டத்தின் கீழ், அடிப்படை உரிமைகள் குறித்து விவரித்திடும் 28(1)ஆவது அத்தியாயம் கூறுவதாவது: “அரசின் நிதி உதவியின்கீழ் இயங்கிடும் எந்தவொரு கல்வி நிறுவனமும் மதஞ்சார்ந்த எந்தவிதமான அறிவுரையையும் அளித்திடாது.” அரசாங்கத்தால் நடத்தப்படாத கல்வி நிலையங்களில் அல்லது அரசின் நிதி உதவியுடன் நடத்தப்படும் தனியார் கல்வி நிறுவனங்களில், ஏதேனும் மதஞ்சார்ந்த அறிவுரைகள் அளிக்கப்படுமானால், அதனைச் செவிமடுக்கும் மாணவர் வயதுக்கு வராதவராக (மைனராக) இருந்தால், அவருடைய பாதுகாவலரின் அனுமதியைப் பெறாமல், அத்தகைய அறிவுரைகளைச் செவிமடுக்க அனுமதிக்கக் கூடாது என்று அது மேலும் கூறுகிறது. எனவேதான், பகவத் கீதை தொடர்பான குஜராத் அரசு மேற்கொண்டுள்ள முடிவு, அரசின் நிதியின்கீழ் நடத்தப்படும் பள்ளிகளில் எவ்விதமான மதஞ்சார்ந்த அறிவுரைகளும் அளிக்கப்படக்கூடாது என்கிற நம் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை அம்சங்களுக்கு எதிரான ஒன்றாக மாறுகிறது.
குஜராத் பாணியை இப்போது இதர பாஜக ஆளும் மாநிலங்களும் பின்பற்றத் தொடங்கியிருக்கின்றன. கர்நாடகப் பள்ளிக் கல்விக்கான அமைச்சர், கல்வியாளர்களுடன் கலந்தாலோசனை செய்து, பள்ளிகளில் பகவத்கீதை அறிமுகப்படுத்தப்படுவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று கூறியிருக்கிறார். “பகவத் கீதை, இந்துக்களுக்கானது மட்டுமல்ல, அது எல்லோருக்குமானது” என்றும் அவர் திருவாய் மலர்ந்திருக்கிறார். இதே கர்நாடக அரசாங்கம்தான் கல்வி நிறுவனங்களில் முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் அணிவதைச் சட்டவிரோதமாக்கி இருக்கிறது. ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷியும், “பகவத் கீதை நமக்கு அறநெறிகளையும், நெறிமுறைகளையும் போதிக்கிறது. ஒவ்வொரு மாநில அரசாங்கமும் இதுபற்றிச் சிந்தித்திட வேண்டும்,” என்று கூறியிருக்கிறார்.
இந்திய அரசமைப்பின் ஆணிவேராக விளங்கும் மதச்சார்பின்மையை வேரறுத்திட வேண்டும் என்பதற்கான ஆர்எஸ்எஸ்/பாஜக-வின் ஒட்டுமொத்த திட்டத்தின் ஒரு பகுதியே இவ்வாறு அரசுப்பள்ளிகளில் இந்து மதம் சம்பந்தமான புத்தகங்களையும், புராணங்களையும் புகுத்துவதற்கான முயற்சிகளாகும். பள்ளிப் பாடப்புத்தகங்களில் கீதையைப் புகுத்துவதனை நியாயப்படுத்திட “இந்தியக் கலாச்சாரம் மற்றும் அறிவு முறைகள்” பாடப்புத்தகங்களில் சேர்க்கப்பட வேண்டும் என்கிற புதிய கல்விக் கொள்கையின் பரிந்துரைகளை குஜராத் கல்வி அமைச்சர் மேற்கோள் காட்டியிருக்கிறார். இதேபோன்றே அரசின் பல துறைகளிலும் அரசின் நிதி உதவியுடன் இந்து மத அடையாளங்களைப் புகுத்துவதற்கான முயற்சிகள் நடந்துகொண்டிருப்பதும், இந்து மதக் கோவில்களைப் புதுப்பித்திட நடவடிக்கைகள் மேற்கொள்வதும் வழக்கமான ஒன்றாக மாறியிருக்கிறது. இதற்கு பிரதமர் காசி விஸ்வநாத் கோவிலுக்கான பாதையைத் துவக்கி வைத்திருப்பது சிறந்த எடுத்துக்காட்டாகும்.
அரசு, நாட்டு மக்களில் பெரும்பான்மையாகவுள்ளவர்களின் மதத்திற்கு ஆதரவும் அரவணைப்பும் அளிப்பதும், அதற்கு அரசின் நிறுவனங்களிலும் அமைப்புமுறைகளிலும் சலுகைகள் அளிப்பதும் நாட்டில் ஆட்சியாளர்கள் மதச்சார்பின்மை தொடர்பாக பெயரளவில் செயல்படுவதென்பதற்கும் முடிவுகட்டிவிட்டது. ‘ஜிகாத் காதல்’ (‘love jihad’), மதமாற்றம் மற்றும் கால்நடைகள் வெட்டப்படுவதற்குத் தடை முதலானவற்றிற்கு எதிரான சட்டங்கள் சிறுபான்மை மக்களைக் குறிவைத்தே பாஜக ஆளும் மாநில அரசாங்கங்களால் கொண்டுவரப்பட்டுள்ளன. அதேபோன்றே ஒன்றிய அரசு நிறைவேற்றியுள்ள, குடியுரிமைத் திருத்தச் சட்டமானது ஒருவருக்குக் குடியுரிமை வழங்குவதற்கு அவருடைய மதத்தையும் பரிசீலித்திட வேண்டும் என்று விதி ஏற்படுத்தி இருக்கிறது. குஜராத்தில், பகவத் கீதையைப் பள்ளிகளின் பாடப்புத்தகங்களில் சேர்த்திருப்பதை, அங்கே பிரதான எதிர்க்கட்சியாக இருந்துவரும் காங்கிரஸ் உட்பட பல கட்சிகள் வரவேற்றிருக்கின்றன. காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் இதுகுறித்துக் கூறுகையில், “பள்ளிப் பாடப் புத்தகங்களில் பகவத்கீதையை அறிமுகப்படுத்தியிருப்பதை நாங்கள் வரவேற்கிறோம், ஆனால், அரசாங்கம்தான் கீதையிலிருந்து முதலில் பாடம் படிக்க வேண்டியது அவசியமாகும்,” என்று கூறியிருக்கிறார். இதேபோன்றே ஆம் ஆத்மி கட்சி செய்தித் தொடர்பாளரும், “நாங்கள் குஜராத் அரசின் முடிவை வரவேற்கிறோம். இது மாணவர்களுக்குப் பயனளிக்கும்” என்று கூறியிருக்கிறார்.
குஜராத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் இதற்கு அளித்திருக்கும் பிரதிபலிப்பு ஒரு புதிய எதார்த்த நிலையைக் காட்டுகிறது. அதாவது, அங்கே இந்துத்துவா மிகவும் உறுதியாக ஒரு மேலாதிக்க நிலைக்கு உயர்ந்திருப்பதை இது காட்டுகிறது. இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாக நீடிக்க வேண்டும் என்று விரும்புகிற இடது மற்றும் ஜனநாயக சக்திகள் அனைவரும், இந்த எதார்த்த நிலையைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, எதிர்காலத்தில் தங்கள் போராட்ட உத்திகளை வகுத்திட வேண்டும்.
(மார்ச் 23, 2022)
நன்றி: பீப்பிள்ஸ் டெமாக்ரசி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.