'சிக்கன நடவடிக்கை' என்ற பெயரில் அரசு அடக்குமுறை | Government repression in the name of 'austerity' - Politics - Modi Government - https://bookday.in/

‘சிக்கன நடவடிக்கை’ என்ற பெயரில் அரசு அடக்குமுறை

‘சிக்கன நடவடிக்கை’ என்ற பெயரில் அரசு அடக்குமுறை

சோவியத் யூனியனில் சோசலிசத்திற்கு ஏற்பட்ட பின்னடைவு குறித்து இன்றளவும் பல விளக்கங்கள், ஆராய்ச்சிகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால், பெருமளவிலான ஆய்வுகள் சோசலிசம் தோல்வி அடைந்த ஒரு சமூக அமைப்பாக சித்தரிக்கின்றன. சோசலிச முறையை அவதூறு செய்யும் நோக்கத்துடன் அவை வெளியிடப்படுகின்றன.

ஆனால் சோவியத் சரிவு ஏற்பட்ட அதே 1990 – காலங்களில் முதலாளித்துவம் உலகம் முழுவதும் மேற்கொண்ட அநீதிகளைப் பற்றி அதிகம் பேசப்படுவதில்லை.‘சிக்கன நடவடிக்கை ‘ என்ற முதலாளித்துவத்தின் ஒரு தாக்குதலே பெரும் துயரங்களை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

சிக்கன சீரமைப்பு எனும் தாக்குதல்

1990களில் இருந்து, பெரும்பாலான ஆசிய நாடுகள் பல சமூக நலத் திட்டங்களை குறிப்பிடத்தக்க அளவில் குறைத்து நவதாராளமயக் கொள்கைகளைப் பின்பற்றின. அரசாங்கங்கள் சுகாதாரம், கல்வி மற்றும் ஓய்வூதியம் போன்ற அத்தியாவசிய சேவைகளை பொதுத்துறையிலிருந்து தனியார் துறைக்கு மாற்றின.அனைவருக்கும் நலத்திட்டங்கள் என்பதற்கு பதிலாக குறைவான எண்ணிக்கை தீர்மானித்து அவர்களுக்கு மட்டும் சமூக நலத் திட்டங்கள் என்ற அணுகுமுறையை பின்பற்றின. இதனால் அதிக அளவில் மக்கள் சமூக பாதுகாப்பிலிருந்து விலக்கப்பட்டனர்.

வணிகமயமாக்கப்பட்ட சுகாதார சேவை மற்றும் விரிவடையும் தனியார் கல்வி காரணமாக குறைந்த வருமானம் கொண்ட மக்கள், சுகாதாரம் மற்றும் தரமான கல்வியிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர். உழைக்கும் மக்கள் தொழிலாளர் உரிமைகள் மற்றும் சமூகப்பாதுகாப்புகளிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர். பெரிய நிறுவனங்களுக்கு ஆதரவான வரிக் கொள்கைகள் ஏழை, நடுத்தர குடும்பங்களை பாதித்துள்ளன.

சீரமைப்பு, சீர்திருத்தம் எனும் பெயர்களில் உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான நாடுகள், மேற்கண்ட பாதையில் பயணித்தன. சர்வதேச நிதி நிறுவனம் (IMF), உலக வங்கி, G20 நாடுகள் மற்றும் பிற சர்வதேச நிதி நிறுவனங்களால் இத்தகைய சீரமைப்புகள், சிக்கன நடவடிக்கைகள் மற்றும் நிதி மேலாண்மை நடவடிக்கைகள் ஊக்குவிக்கப்பட்டன.

பல வளர்ச்சியடையாத நாடுகள் கடுமையான சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்த நிர்பந்திக்கப்பட்டன. பெரும்பாலான ஆசிய நாடுகளின் அரசாங்கங்கள் 2021 முதல் தங்கள் பொது செலவினங்களை வெகுவாகக் குறைத்தன. அவை சமூக நலத் திட்டங்களுக்கான நிதிகளை வெட்டிச் சுருக்கின.

"Privatization of the PSUs is a political decision, 'சிக்கன நடவடிக்கை' என்ற பெயரில் அரசு அடக்குமுறை | Government repression in the name of 'austerity' - Politics - Modi Government - https://bookday.in/

இத்தகைய நிதி சிக்கன நடவடிக்கைகள் தனியார்மயமாக்கலை தீவிரப்படுத்தியது. வேலைகளை சமூகப்பாதுகாப்பற்றதாக மாற்றி, தொழிலாளர் உழைப்புச் சுரண்டலை அதிகப்படுத்தியது. இதனால், கோடிக்கணக்கான மக்கள் கடன் மற்றும் வறுமைக்குள் தள்ளப்பட்டனர்.. எந்தவொரு சமூகப் பாதுகாப்பும் இல்லாத முறைசாரா துறையில் உள்ள தொழிலாளர்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாகினர். பெண்கள் மற்றும் குழந்தைகளும் இந்தக் கொள்கைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

மத்திய ஆசிய நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் 2021 இல் செலவினங்களை மிகவும் குறைத்தன. தெற்காசியப் பிராந்தியத்தின் 8 நாடுகளில் 5 நாடுகளில் பட்ஜெட் வெட்டுக்கள் அதிகமாக இருந்தன. இந்த நாடுகள் இன்னும் அந்தப் போக்கை மாற்றவில்லை.

பிலிப்பைன்ஸில் சுகாதாரம் மற்றும் கல்வியின் தனியார்மயமாக்கல், பல சமூக நலத் திட்டங்களுக்கான அரசாங்க செலவினத்தைக் குறைத்து உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை வீழ்ச்சி அடையச் செய்துள்ளது. தென் கொரியா, கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக, தொழிலாளர் பாதுகாப்பு ஏற்பாடுகளை அகற்றியது. இவை இந்த நாடுகளில் சமத்துவமின்மையையும் அதிகரித்தது.

இந்தோனேசியா தனது நலத்திட்டங்களை சுருக்கி, பண பரிமாற்றங்களை அறிமுகப்படுத்தியது. அதாவதுநேரடியாக ஒரு பகுதி மக்களுக்கு பணம் அளித்து மற்ற நலத்திட்டங்களை விலக்கிக் கொள்வது என்கிற நடைமுறை பின்பற்றப்பட்டது.

தாய்லாந்தில் நடைபெற்று வரும் பண-பரிமாற்றத் திட்டம் தாய்லாந்தின் தேசிய பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டு கவுன்சிலால் (NESDC) விமர்சிக்கப்பட்டது. தாய்லாந்தின் ஏழைகளில் பாதி பேர் பண உதவியைப் பெறவில்லை என்றும், அதைப் பெறுபவர்களில் 90% பேர் தேசிய வறுமைக் கோட்டிற்குக் கீழ் இல்லை என்றும் அந்த அரசு சார் அமைப்பே அம்பலப்படுத்தியது.

இலங்கையின் அவலம்

இலங்கையில், சுமார் 2 கோடியே 20 லட்சம் மக்கள்தொகையில் சுமார் ஒரு கோடியே 30 லட்சம் மக்கள் நவ தாராளமயம் மற்றும் சிக்கன நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டனர்.

இலங்கையின் தற்போதைய பொருளாதார அரசியல் நெருக்கடிகள் நிச்சயமாக ஆளும் வர்க்கத்தினரின் நவதாராளமயக் கொள்கைகளின் விளைவாகும். இலங்கையின் சமூக நலத் திட்டங்கள் முற்றிலும் சிதைந்துவிட்டன. தற்போது வங்காளதேசமும் இந்த வரிசையில் இணைந்துள்ளது.

கடந்த ஆண்டு, IMF-ன் நிபந்தனைகளை நிறைவேற்றும் வகையில், இலங்கை அரசாங்கம் ஓய்வூதிய நிதிகளைப் பயன்படுத்தி உள்நாட்டு கடனை மறுசீரமைக்க முடிவு செய்தது. இதனால், ஊழியர்களின் வாழ்நாள் சேமிப்புகளில் ஏற்படும் கடுமையான பாதிப்புகளை குறிப்பிட்டு, 80க்கும் மேற்பட்ட இலங்கை அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் IMF-க்கு கண்டனக் கடிதம் எழுதின.

ஐ.எம்.எப் தனது பொருளாதார பரிந்துரைகள் மூலம் இலங்கையின் பொருளாதாரத்தை நசுக்கி வருவதாக IMF-ஐ அவர்கள் குற்றம் சாட்டினர். அவர்கள் கடிதத்தில் குறிப்பிட்டனர்:

“உங்களது (IMF) கடன் மறுசீரமைப்புத் திட்டம் எங்கள் பொருளாதாரத்தை இயக்கி வருகிறது;எங்கள் சமூகத்தில் மதிப்பை உருவாக்கும் இலங்கை உழைக்கும் மக்களை அது முடமாக்கிவிட்டது. 16 IMF தலையீடுகளின் போது செயல்படுத்தப்பட்ட முந்தைய சீர்திருத்தங்களின் எதிர்மறையான விளைவுகளை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், எங்கள் மீது மேலும் மேலும் திணிக்கப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்கள் எங்கள் பொருளாதாரத்தை நசுக்கிவிட்டன.”

ஏழை முதலாளித்துவ நாடுகளில் ஏகாதிபத்தியம் ஏற்படுத்தி வரும் கடுமையான பொருளாதார தாக்குதல் இந்தக் கடிதத்தில் வெளிப்படுகிறது.

பாலின சமத்துவமின்மை

இந்த விளைவுகள் இலங்கையில் மட்டுமல்ல, சர்வதேச நிதி நிறுவனங்களின் கட்டளைகளுக்கு அடிபணிந்துள்ள முதலாளித்துவ நாடுகள் அனைத்துக்கும் பொருந்தும்.

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) ஆய்வுகளின்படி, பொருளாதார நிலைத்தன்மையின் பெயரால் பின்பற்றப்பட்ட சிக்கன நடவடிக்கைகள் குறைந்த வருமானம் கொண்ட மக்கள் மீது பொருளாதார அழிவை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நடவடிக்கைகள் ,குறிப்பாக,ஆசியாவில் குறைந்த வருமானம் கொண்ட பெண்களின் வாழ் நிலைமைகளை மோசமாக்கி உள்ளது. அத்துடன்,சமூகத்தில் அவர்களின் ஒடுக்கப்பட்ட மற்றும் கீழ்ப்படிந்த நிலைமைகளை மாற்றம் எதுவும் ஏற்படுத்தாமல் நிலைநிறுத்தி வருகிறது. ‘

“ஆசிய அதிசயங்கள் “ என்று கூறி வெற்றிகரமான ஆசியப் பொருளாதாரங்கள் என்று அழைக்கப்படும் அனைத்து நாடுகளிலும், பெண்கள் பாதுகாப்பற்ற மற்றும் குறைந்த ஊதியம் கொடுக்கப்படும் முறைசாரா வேலைகளில் பணியமர்த்தப்பட்டு விளிம்பு நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

தெற்காசியாவில் சுமார் 95% பெண்கள் முறைசாரா வேலைகளில் ஈடுபடுகின்றனர்.அவர்களுக்கு தொழிலாளர் சட்டப் பாதுகாப்போ சமூக நலன்களோ இல்லை. மேலும், அதிகரித்து வரும் இடப்பெயர்ச்சி அவர்களின் குடும்ப கட்டமைப்பை உடைத்துக் கொண்டிருக்கிறது. அரசு நிதியுதவி பெறும் சேவைகள் சுருங்குவது பெண்களை மேலும் வறுமைக்குள்ளாக்கி, பாலின சமத்துவமின்மையை அதிகரித்துள்ளது.

வேலையின்மைக்கான நிவாரணம்

Unemployment as a Political Weapon - 'சிக்கன நடவடிக்கை' என்ற பெயரில் அரசு அடக்குமுறை | Government repression in the name of 'austerity' - Politics - Modi Government - https://bookday.in/

இளைஞர்களையும் இளம் பெண்களையும் பாதித்த சிக்கன நடவடிக்கைகளில் ஒன்று வேலையின்மைக்கான நிவாரணத்திற்கு ஒதுக்கப்படுகிற குறைந்தளவு நிதியாகும். சர்வதேச தொழிலாளர் அமைப்பு 2021 ஆம் ஆண்டின் அறிக்கையில், வேலையின்மைக்கான பாதுகாப்பு சமூக பாதுகாப்பின் மிகக் குறைவாக செயல்படுத்தப்பட்ட பிரிவாக இருப்பதாக தெரிவித்தது.

ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் வேலையின்மை 4.2 சதவீதமாக உள்ளது, அதாவது 2024 இல் எட்டு கோடியே 78 லட்சம் பேர் வேலையின்றி இருக்கின்றனர். இந்நிலையில், வேலையில்லாக் கால நிவாரணம் மிக முக்கியமான தேவையாக எழுந்துள்ளது.எனினும் இதில் தொடர்ந்து ஒதுக்கீடு குறைக்கப்பட்டு வருகிறது.

மக்கள் மீது திணிக்கப்பட்ட சிக்கன நடவடிக்கைகள், பல ஆசிய நாடுகளில் வறுமை, சமத்துவமின்மை பிரச்சினைகளை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன. இந்தியாவிலும் பாஜக அரசின் சிக்கன நடவடிக்கைகள் கடந்த 10 ஆண்டுகளாக பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.

உழைக்கும் மக்கள் நவதாராளமயத்திற்கு எதிராக தொடர்ந்து ஒன்றுபட்டு குரல் எழுப்பி வருகின்றனர். உள்நாட்டு பொருளாதார வளர்ச்சிக்கு திட்டமிடும்போது, சமூக நலன் மற்றும் பலவீனமான பிரிவினரின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்க ஆளும் வர்க்கத்தை நிர்ப்பந்திக்க வேண்டும். உழைக்கும் மக்களின் ஒற்றுமையே இதனை சாதிக்கும்.

உண்மையில்,முதலாளித்துவம்தான் பெரும் தோல்வியை சந்தித்திருக்கிறது.மக்கள் நலனே முன்னுரிமை என அன்றைய சோவியத் யூனியன் மேற்கொண்ட மக்கள் நலத் திட்டங்கள் போன்று இதுவரை எந்த முதலாளித்துவ அரசும் மேற்கொண்டதில்லை.பல பின்னடைவுகளை சந்தித்தாலும், சோசலிசம் உயரிய மாற்று சமுக அமைப்பு என்பதுதான் வரலாறு.

 

கட்டுரையாளர் :

'சிக்கன நடவடிக்கை' என்ற பெயரில் அரசு அடக்குமுறை | Government repression in the name of 'austerity' - Politics - Modi Government - https://bookday.in/

என். குணசேகரன்
மாநில செயற்குழு உறுப்பினர் – சிபிஐ (எம்)



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



 

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *