இஎம்எஸ் எனும் வரலாற்று நாயகன்
இந்தியாவில் இதிகாசங்களும், எண்ணற்ற காவியங்களும் எழுந்துள்ளன. அவைகள் பெரும்பாலும் கதைகளாகவும் அல்லது கற்பனைகளாலும் வடிக்கப்பட்டுள்ளன. ஆனால் அவற்றிலிருந்து மாறி வாழ்ந்த மனிதனின் வரலாறு காவியமாக படைக்கப்பட்டிருக்கிறது என்றால் அது இஎம்எஸ் எனும் மூன்றெழுத்து நாயகனின் அரசியல் வாழ்க்கை வரலாற்றை படைத்திருக்கும் தோழர் கோவிந்தபிள்ளையைச் சாரும். மலையாளத்தில் அவர் எழுதிய “இம்எஸ் நம்பூதிரிபாடு: ஒரு அரசியல் வாழ்க்கை வரலாறு” (EMS Namboodripad: A Political Biography) எனும் நூல் ஆங்கிலத்தில் எம்.ஜி.ராதாகிருஷ்ணன் அவர்களின் ஆங்கில மொழியாக்கத்தில் ஏப்ரல், 2025-ல் லெப்ட் வோர்டு (LeftWord Books) வெளியிட்டுள்ளது.
நூலாசிரியர் தோழர் பி.கோவிந்தப்பிள்ளை மாணவனாக சுதந்திர போராட்ட காலத்தில் இஎம்எஸ்ஸை சந்தித்தது முதல் இறுதிவரை அவருடன் சகதோழனாக பயணித்ததால் இஎம்எஸ்-சின் குடும்பம், சீர்திருத்த இயக்கம், காந்தியின் சீடராக தொடங்கி கம்யூனிஸ்ட் ஆக மாற்றமடைந்த அரசியல் பரிணாமம், தேச விடுதலைப் போராட்டம் , அவரது மார்க்சீய புலமை , இந்திய பாதையை தீர்மானித்த அவரது கூரிய பார்வை மற்றும் நவீன கேரளத்தை வடிவமைத்ததில் அவருடைய பாங்கு என அவரது வாழ்வின் அனைத்தையும் மிகவும் சுவாரஸ்யமாகவும், வாசிப்பதற்கு எளிதாகவும், புரிந்து கொள்ளவும் மற்றும் கற்றுக் கொள்வதற்கு ஏதுவாகவும் ஒரு காவியமாக படைத்துள்ளார்
இந்த புத்தகம் கேரள வரலாற்றை இரண்டு கட்டங்களாக பிரிக்கிறது. முதல் கட்டத்தில் கேரள மறுமலர்ச்சி இயக்கத்தின் சிற்பியான ஸ்ரீ நாராயண குரு, 1888 ஆம் ஆண்டு தொடங்கிய சீர்திருத்த இயக்கம் கேரளத்தின் பெரும்பாலான அறிவுசார், சமூக மற்றும் அரசியல் மாற்றங்களுக்கு உத்வேகம் அளித்தது. அந்த இயக்கத்தின் தொடர்ச்சியாக இரண்டாவது கட்டத்தில் 1937-ம் ஆண்டில் கேரளாவில் எழுந்த கம்யூனிஸ்ட் கட்சி. இரண்டு கட்டங்களும் கேரள அரசியல் சமூக பொருளாதார மாறங்களுக்கும், வளர்ச்சிக்கும் பங்களித்த வரலாற்றையும் அதில் முக்கிய பங்கு வகித்த இஎம்எஸ்-ன் அரசியல் வாழ்க்கையையும் இந்த புத்தகம் முன்வைக்கிறது.
இஎம் எஸ்-ன் தனித்துவ பண்புகள்
இஎம்எஸ் தன்னை விட வயதில், அனுபவத்தில் குறைந்தவர் எவரிடமிருந்தும் மாறுப்பட்ட கருத்துக்கள் வந்தாலும் புறக்கணிக்காமல் பொறுமையாக கேட்பார்; தனது கருத்துக்களை எடுத்துரைப்பார். மற்றவர் கருத்து ஏற்புடையதாக இருக்கும் பட்சத்தில் தனது கருத்தினைத் மாற்றிக் கொள்ளவும் தயங்கமாட்டார். ஒரு பிரச்சினையின் அனைத்து அம்சங்களையும் ஆழமாக சிந்திக்காமல் எதையும் முடிவு செய்யமாட்டார். மார்க்சிய அறிஞர், வரலாற்றாசிரியர் மற்றும் திட்டமிடுபவர் என்ற இஎம்எஸ்-ன் பரிணாம வளர்ச்சிக்கு தத்துவத்தை நடமுறையுடன் இணைக்கும் அவரது திறமை அடிப்படையாக அமைந்தது. பள்ளியில் கற்றுக்கொண்ட ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருதம் மட்டுமல்லாமல், தமிழ், இந்தி, உருது மொழிகளையும் கற்றுத் தேர்ந்தார்.
சமூக சீர்திருத்தம்
தனது இளமைப் பருவத்தில் ஸ்ரீ நாராயண குருவின் சீர்திருத்த மறுமலர்ச்சி இயக்கத்தால் ஈர்க்கப்பட்டார். கேரளாவின் மிக உயர்ந்த, செல்வமிக்க நம்பூதிரி குடும்பத்தில் பிறந்த இஎம்எஸ் அதன் பழமைவாதத்தையும், ஆச்சாரங்களையும், பெண்ணடிமைத்தனத்தையும் எதிர்த்து சமூக சீர்திருத்தத்தை தொடங்கினார். முற்போக்கு சிந்தனை கொண்ட நம்பூதிரி இளைஞர்களால் யோகக்ஷேமசபா 1905-ல் நிறுவப்பட்டது. அதன் முன்னணியில் இருந்து செயல்பட்டார். நம்பூதிரி பெண்கள் எதிர்கொள்ளும் பாகுபாட்டிற்கு எதிராக சமூகத்தைத் தட்டி எழுப்புவதற்காக “அடுக்களையில் நின்னு அரங்கதேக்” என்ற வரலாற்று நாடகம் எழுந்தது. இந்த நாடகத்தின் முக்கிய அமைப்பாளர்களில் ஒருவரான இஎம்எஸ், அதனை அரங்கேற்றினார். இவற்றின் விளைவாக அவர் பிறந்த சமூகத்திற்குள் பல மாற்றங்களும் நடைப்பெற்றது. சமூக சீர்த்திருத்ததை தனது முதல் அரசியல் பிரவேசமக இஎம்எஸ் முன்னெடுத்தார். பின்னர், ஸ்ரீ நாராயண குருவின் மறுமலர்ச்சி இயக்கம் தீர்க்கமான சமூக அறிவியல் அர்த்தத்தில் ‘முதலாளித்துவம்’ என்று இஎம்எஸ் விமர்சித்தார்.
ஒத்துழையாமை இயக்கம்- இடதுசாரி தாக்கம்
காந்தியின் வருகையினால் ஈர்க்கப்பட்ட இஎம்எஸ் கல்லூரி படிப்பை துறந்து சுதந்திர போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று கண்ணூர் சிறையில் அடைக்கப்பட்டார். கண்ணூர் சிறை அவரது எதிர்கால அரசியல் வாழ்வில பெரும் மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதை அவர் அப்போது அறிந்திருக்கவில்லை. கண்ணூர் சிறையில் இருந்தபோது இஎம்எஸ்-ன் சிந்தனையிலும் எதிர்கால அரசியல் வாழ்க்கையிலும் மிக ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியவர், லாகூர் சதி வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இளம் கைதி கிரோன் சந்திர தாஸ் ஆவார். வேலூர் சிறைக்கு மாற்றப்பட்ட பின்னர் காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்களை தொடர்பு கொள்ளவும், உரையாடவும் ஏராளமான வாய்ப்பு கிடைத்தது. சிறை வாழ்க்கையில் இஎம்எஸ்-க்கு படிக்கவும், எழுதவும் நேரம் கிடைத்தது. காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தியதால் 20 மாதங்களில் விடுதலையானார். இஎம்எஸ் சிறையில் 20 மாதங்கள் மட்டுமே கழித்தாலும், அதிலிருந்து அவர் பெற்ற அனுபவம் 20 ஆண்டுகள் மதிப்புடையது. சிறையில் இருந்து மாற்றமடைந்த மணிதராக வெளியே வந்தார்.
கம்யூனிஸ்ட் கட்சியில்
காந்தியின் கொள்கைகளில் அதிருப்தியுற்று நேருவின் இடதுசாரி கொள்கைகளினால் ஈர்க்கப்பட்டும், சோசலிச கொள்கைகள் மீதான பிடிப்பினாலும் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியில் அவரது அரசியல் பரிணாமம் தொடர்ந்தது. இரண்டாம் உலகப் போரில் ஒரு தெளிவான நிலையை எடுக்க காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி தவறியது. ஜார்ஜ் டிமிட்ரோவ் முன்வைத்த வரலாற்றுத் தீர்மானம் அவரை சிந்திக்க தூண்டியது. அதனை தொடர்ந்து தோழர் சுந்தரைய்யாவை சந்தித்து தெளிவு பெற்றதன் பின்னர் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராக 1936-ம் ஆண்டில் சேர்ந்தார். தோழர் கிருஷ்ணப்பிள்ளை மற்றும் தோழர்களுடன் இணைந்து கேரளவின் சோசலிஸ்ட் கட்சி கிளையை ஒட்டு மொத்தமாக கம்யூனிஸ்ட் கிளையாக மாற்றியதன் மூலம் புதிய அத்தியாயத்தை துவங்கினார். இந்த மாற்றத்தின் வரலாற்று பின்னணிகள் குறித்து புத்தகம் விரிவாக விளக்குகிறது.
சேதாரத்தை விளைவித்த அரசியல் நிலைபாடுகள்.
பாசிசப் போரினால் உலகில் ஏற்பட்ட நெருக்கடி இந்தியாவையும் உலுக்கியது. இந்த நிலை கம்யூனிஸ்டுகள் பாசிச எதிர்ப்புக்கும், வெள்ளையனே வெளியேறு இயக்கத்திற்கும் இடையில் வரலாற்று சிக்கலில் சிக்கினர். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தனது கொள்கையை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்தியாவின் சுதந்திரம் போராட்டம் ஃபாசிச எதிர்ப்பு போர் முயற்சிகளுக்கு இடையூறாக இருக்கக்கூடாது என்ற புதிய நிலையை எடுத்தது. இந்த நிலைப்பாட்டால் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பெரும் சேதாரத்தை சந்தித்தது, இதைவிட மற்றுமொரு மோசமான நிலையை எடுத்தது. அனைத்து இந்தியர்களையும் ஒன்றிணைக்கும் நோக்கில் காங்கிரஸ் கட்சிக்கும், முஸ்லீம் லீக்கிற்கும் விடுத்த அழைப்பு, மத அடிப்படையில் பிரிக்க விரும்பிய லீக்கை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிப்பதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியது. இது பெரும்பகுதி ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளிடமிருந்து கட்சியை அந்நியப்படுத்தியது. இது லெனினின் தேசிய இனப் பிரச்னை குறித்த கோட்பாட்டை தவறாக புரிந்து கொண்டதன் விளைவு. இது குறித்து புத்தகம் விவரித்துள்ளது.
பிரிட்டிஷ் அரசு கட்சியின் மீதான தடையை விலக்கியது, 1943 மே 28 முதல் ஜூன் 1 வரை மும்பையில் நடைபெற்ற முதல் சிபிஐ காங்கிரஸிற்குப் பிறகு கட்சி வெளிப்படையாக செயல்படத் தொடங்கியது. மாநாட்டில் கலந்து கொண்ட இஎம்எஸ் கட்சியின் வளர்ச்சியில் மாநாடுகள் குறிப்பிடத்தக்க பங்கு வகித்த போதிலும், மக்கள் யுத்தம் மற்றும் பாகிஸ்தானுக்கான கோரிக்கைக்கு ஆதரவு கொண்ட புதிய அரசியல் நிலைப்பாட்டினை வகுப்பதில் கிட்டத்தட்ட உள் கட்சி விவாதங்கள் இல்லை என்று பலவீனங்களை சுட்டிக்காட்டி எழுதினார் என்று புத்தகம் குறிப்பிடுகிறது.
இந்திய புரட்சி பாதை
இந்தியாவிற்கான புரட்சி பாதையை வகுப்பது என்பது அவ்வளவு எளிமையாக இருந்திருக்கவில்லை என்பதை புத்தகத்தை வாசிக்கும் போது புரியவரும். நாடு சுதந்திரம் அடைந்த பின் அதனை ஏற்கமறுத்து சிபிஐயின் இரண்டாவது கட்சி மாநாடு தெலுங்கானா இயக்கத்தைப் பின்பற்றி இந்திய விடுதலைக்கு ஆயுதமேந்திய கிளர்ச்சிக்கு அழைப்பு விடுத்தது. இந்த கருத்தின் தலைமையாக பிடிஆர் இருந்தார். இது பிரபலமாக கல்கத்தா அறிக்கை என்று அழைக்கப்பட்டது, அதன் குறுங்குழுவாதம் கூடவே பயணித்தவர்களையும் நண்பர்களையும் இடதுசாரி இயக்கத்திலிருந்து விரட்டியடித்தது. கட்சி மிகப் பெரும் அடக்குமுறைக்கு உள்ளானது. ஐதராபாத்தின் சூழ்நிலைகள் இல்லாத பிராந்தியங்களில் போராட்டத்தை அதனை முன்னெடுப்பது ஒரு பெரும் தவறு என்றார் இஎம்எஸ். மக்கள் யுத்தம் என்ற கருத்திலும், வெள்ளையனே வெளியேறு போராட்டத்திற்கான அணுகுமுறையிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடுமையான தவறுகளைச் செய்ததாக இஎம்எஸ் பின்னர் கூறியதாக புத்தகத்தில் குறிப்பிடப்பட்ட்டுள்ளது.
இந்தியப் புரட்சி பாதை எது என்பது விவாதத்திற்கு வந்தது. சோவியத் பாதைக்கும், சீனப் பாதைக்கும் வாதாடிய முக்கிய தலைவர்களை கொண்ட குழு 1951-ல் மாஸ்கோவுக்குச் சென்றது. அங்கு சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை மற்றும் ஜோசப் ஸ்டாலின் ஆகியோருடன் விவதித்தது. அதைத் தொடர்ந்து 1951 அக்டோபரில் கல்கத்தாவில் நடைபெற்ற சிபிஐயின் சிறப்பு மாநாட்டில் புதிய அரசியல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, மாநாடு கல்க்கத்தா கொள்கையை நிராகரித்தது. தெலுங்கானா ஆயுத கிளர்ச்சியை திரும்ப பெற்றது. புதிய கொள்கை மக்கள் ஜனநாயகப் புரட்சியின் புதிய வியூகம் மற்றும் தந்திரோபாயங்களை தீர்மானித்தது. நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அனைத்து சாத்தியங்களையும் பயன்படுத்துவது என்றும் புதிய குடியரசு அரசியலமைப்பின்படி நடைபெறும் முதல் பொதுத் தேர்தல்களில் பங்கேற்பது என்றும் முடிவு செய்தது. சோவியத் யூனியன் மற்றும் சீனாவைச் சேர்ந்த கம்யூனிஸ்டுகள் இந்திய நாடாளுமன்ற அமைப்பு மற்றும் சிபிஐக்கு அது வழங்கிய வாய்ப்புகள் குறித்து முரண்பட்ட மற்றும் அதீதக் கருத்துக்களைக் கொண்டிருந்ததாக இஎம்எஸ் எழுதினார்.
தத்துவார்த்த பிரச்னை – கட்சி பிளவு
சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது காங்கிரஸில் பொதுச் செயலாளர் நிகிதா குருஷேவ் சமர்ப்பித்த அறிக்கை சர்வதேச பிரச்சினைகளில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் இருந்த வேறுபாடுகளை கூர்மையாக்கியது. மேலும், தேசிய முதலாளித்துவம் மற்றும் அரசு குறித்த அணுகுமுறை போன்ற குறிப்பிட்ட உள்ளூர் பிரச்னைகளிலும் வேறுபாடு இருந்தது. பாலக்காட்டில் (1956) நடைபெற்ற நான்காவது மாநாட்டில் தோன்றிய வேறுபாடு, 1961-ல் விஜயவாடாவில் நடைபெற்ற ஆறாவது மாநாட்டில் கட்சி க்குள் செங்குத்தான பிளவுக்கு வழிவகுத்தது. ஏப்ரல் 15,1964 அன்று நடைபெற்ற தேசிய கவுன்சில் கூட்டத்தில் இருந்து வெளியேறிய 32 தோழர்கள் 1964 அக்டோபர் 3 முதல் நவம்பர் 7 வரை கல்கத்தாவில் நடந்த மாநாட்டில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தோற்றத்தை அறிவித்தனர். கட்சித் திட்டம் வகுக்கப்பட்டது. மேற்குலக ஐரோப்பியரிடமிருந்து விலகிய இந்திய முதலாளித்துவத்தின் தனித்துவமான பாதை பற்றிய இஎம்எஸ்-ஸின் திருத்தம் கட்சி திட்டத்தில் சேர்க்கப்பட்ட மிக முக்கியமான ஒன்று, இந்திய முதலாளித்துவத்தின் சுய வளர்ச்சிக்கும், அதைத் தொடர்ந்து சோசலிசத்தால் மாற்றப்படுவதற்கும் முதலாளித்துவத்திற்கு முந்தைய சமூக அமைப்பை வீழ்த்துவது அவசியம் என்பது அடிப்படையானது.
‘சில கருத்தியல் பிரச்சினைகள்’
கட்சித் தலைமையின் ஒரு பிரிவு பல கருத்தியல் மற்றும் சர்வதேச விவகாரங்களில் சீனாவுக்கு ஆதரவாக இருந்தது. சீன சார்பு முகாமுக்குள் வேறுபாடுகள் இருந்தன. ஆனால் அனைத்து குழுக்களும் சீனப் புரட்சியின் பாதையை அடிப்படையில் ஏற்றுக்கொண்டன. சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் திருத்தல்வாதத்தை நிராகரித்த இஎம்எஸ் சீனாவுடனும் பல பிரச்சினைகளில் கருத்து வேறுபாடு கொண்டிருந்தார். எம். பசவபுன்னையா, பிடிஆர், ஜோதி பாசு போன்ற தலைவர்கள் கூட இந்த பிரச்சினைகளில் தெளிவான நிலைப்பாட்டை எட்டவில்லை. கருத்தியல் பிரச்சினைகள் குறித்து பிரத்தியேகமாக விவாதிக்க ஒரு சிறப்பு பிளீனத்தைக் கூட்ட கட்சி 7-வது மாநாடு முடிவு செய்தது அதன்படி 1969 மே மாதம் மேற்கு வங்காளத்தில் உள்ள பர்துவானில் சிறப்பு பிளீனம் நடைபெற்றது. ஆழமான விவாதங்களுக்குப் பிறகு- ‘சில கருத்தியல் பிரச்சினைகள் குறித்து’- என்ற ஒரு ஆவணத்தை ஏற்றுக்கொண்டது.
அவசரநிலையும்- கட்சியின் நிலையும்
ஆயினும், பிரச்னைகள் அத்துடன் முடியவில்லை. சிபிஐ (எம்) தொண்டர்கள் மீது காங்கிரஸ் கட்டவிழ்த்துவிட்ட அரை பாசிச அடக்குமுறை ஆயுதமேந்திய போராட்டத்திற்கு சூழலை அளிக்கின்றன என்று பல பிரதிநிதிகள் வாதிட்டனர். 1951-ம் ஆண்டு கட்சியின் திட்டத்தில் குறிப்பிடப்பட்ட ‘யுக்தியை ‘ அவர்கள் சுட்டிக்காட்டினர், இதன் விளைவாக ஜே. பி. தலைமையிலான சர்வாதிகாரத்திற்கு எதிரான எதிர்ப்பு இயக்கத்தில் சிபிஐ (எம்) முழுமையாக பங்கேற்கத் தவறியது. அவசரநிலை அறிவிப்புக்கு பின்னரும் கட்சியில் இருந்த சுந்தரய்யா முகாம் அணித் திரட்டலுக்கான புதிய சாத்தியங்களைக் காண மறுத்துவிட்டது. பெரும்பான்மையான அரசியல் தலைமைக் குழு மற்றும் மத்தியக் குழு உறுப்பினர்கள் அவசரநிலையை எதிர்த்துப் போராட முதலாளித்துவ எதிர்க்கட்சிகளையும் உள்ளடக்கிய ஒரு ஐக்கிய முன்னணிக்கு அழைப்பு விடுத்தனர். இதனை ஏற்றுக் கொண்ட பி.சுந்தரய்யா பொது செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார். அந்த நேரத்தில் இஎம்எஸ், அவசரநிலைக்கு எதிராக கட்சியின் எதிர்ப்பை வழிநடத்தினார். சிபிஐ (எம்) அதன் பிறப்பிலிருந்து எதிர்கொண்ட மிக ஆழமான உள்-கட்சி நெருக்கடி இதுவாகும். அவசர நிலைக்கு பின்னர் நடந்த தேர்தலில் மே.வங்காளத்தில் இடது முன்னணியின் மாபெரும் வெற்றி அரை பாசிச பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது. திரிபுராவில் நிருபன் தலைமையிலான இடதுசாரி முன்னணியின் பெருமைக்குரிய வெற்றியை அடந்தது. இது கட்சியின் சரியான நிலைப்பாட்டை நிருபணம் செய்தது. ஜலந்தரில் நடைபெற்ற 10 வது மாநாட்டில் இஎம்எஸ் பொதுச் செயலாளர்ராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
வலது-இடது திருத்தல்வாதம்
ஜலந்தரில் 10வது மாநாட்டில் பி.சுந்தரய்யா தலைமையிலான இடதுசாரி திருத்தல்வாதங்களை சிபிஐ (எம்) நிராகரித்தது, பட்டிண்டாவில் டாங்கே தலைமையிலான வலதுசாரி தீவிரவாதத்தை சிபிஐ நிராகரித்தது. சுந்தரய்யாவின் நிலைபாடு இறுதியாக 1978 டிசம்பரில் மேற்கு வங்காளத்தின் சால்கியாவில் நடைபெற்ற சிபிஐ (எம்) அகில இந்திய பிளீனமில் புதைக்கப்பட்டது. கட்சியை அதன் காலாவதியான 1951 கொள்கையிலிருந்து பிளீனம் விடுவித்தது.
அனைத்து மக்களுக்கும் இடமளிக்கும் ஒரு பாட்டாளி வர்க்க புரட்சிகர வெகுஜனக் கட்சியாக சிபிஐ(எம்) உயர்வதற்கு உதவுவதும், ஒரு குறுங்குழுவாத வட்டத்திற்குள் தன்னை மட்டுப்படுத்திக் கொள்ளாததும், சால்கியா பிளீனம் எடுத்த மிக முக்கியமான முடிவாகும். அரசியல் சித்தாந்த மோதல்களில் கட்சி கடந்து வந்த பாதை குறித்து மிக விரிவாகவும் விளக்கமாகவும் எழுதப்பட்டுள்ளது. மார்க்சிசத்தின் உயிர் மூச்சை இயக்கத்தில், கருத்துக்களின் தோற்றத்தில், நடைமுறையின் நிலையான பரிபூரணத்தில் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.
சர்வதேசிய அரங்கில் இஎம்எஸ்
1956 அக்டோபரில் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு (சிபிசி) சென்ற மூன்று உறுப்பினர்களைக் கொண்ட குழுவில் இஎம்எஸ், பி.சி.ஜோஷி மற்றும் பி.சுந்தரைய்யா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். அந்த குழுவின் தலைவ்ராக இஎம்எஸ் இருந்தார். இஎம்எஸ்-க்கு நாட்டிற்கு வெளியேச் சென்ற முதல் பயணமாக இருந்தது, இது தனிப்பட்ட முறையிலும் அரசியல் ரீதியாகவும் அவருக்கு மிகவும் உற்சாகம் அளிக்கும் அனுபவமாக இருந்தது. சீன கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் CPSU 20வது மாநாடு மற்றும் குருஷேவ் அறிக்கை ஆகியவை அடி நீரோட்டமாக இருந்தது. மாநாட்டின் தலைமையில் மாவோ, சூஎன் லாய், லி ஷியோஷி, டெங் ஷியோ பெங் ஆகியோர் இருந்தனர். ஆயினும்கூட, விவாதங்களில் ஒரு முணுமுணுப்பும் வரவில்லை என்று இஎம்எஸ் கருத்து தெரிவித்துள்ளார். தலைமைக்குள் உள்ள கருத்து வேறுபாடு மற்றும் சீனாவிற்கும் சோவியத் யூனியனுக்கும் இடையிலான ததத்துவார்த்த மோதல்களின் வெடிப்பு போன்ற முக்கியமான நிகழ்வுகளின் அறிகுறிகளை மாநாடு கவனிக்கவில்லை. இது போன்ற போக்குகள் மாவோவிடமிருந்து பல தலைவர்களை விலக்கியது.
சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் மைக்கேல் கோர்பச்சேவ் கிளாஸ்நோஸ்ட் மற்றும் பிரெஸ்ட்ரோய்காவின் பேரழிவுக் கொள்கைகளைத் தொடங்கியதிலிருந்து சோவியத் ஒன்றியத்தின் முன்னேற்றங்கள் குறித்து சிபிஐ (எம்) கவலை கொண்டிருந்தது. அக்டோபர் புரட்சியின் 70 வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் மாஸ்கோவுக்கு வந்த இந்திய தூதுக்குழு சார்பாக, கோர்பச்சேவ் சரியான பாதையில் செல்லவில்லை என்று இஎம்எஸ் எச்சரித்தார்.
தேசாபிமானி
மக்கள் மத்தியில் தொடர்புக்கு பத்திரிக்கையின் அவசியத்தை இஎம்எஸ் மற்றும் பிற தோழர்கள் உணர்ந்தனர். இது செப்டம்பர் 1942-ல் ஒரு வார இதழாக தேசபிமானி உருவாக வழிவகுத்தது. தனது வீடு மற்றும் குடும்பச் சொத்தின் முழுப் பங்கையும் ரூ.1 லட்சத்திற்கு விற்று தேசாபிமானிக்கு நிதியை இஎம்எஸ் வழங்கினார். இது மிகப்பெரிய பங்கு மூலதனமாக அமைந்தது. அதன் பின்னர் இஎம்எஸ் தனது வாழ்நாள் முழுவதும் எந்த ஒரு சொத்துக்களையும் கொண்டிருக்கவில்லை. கட்சி கொடுக்கும் சாதாரண ஊதியத்திலும் அவரது எழுத்துக்களிலிருந்து பெறப்பட்ட ராயல்டிகளிலும் வாழ்ந்தார். தேசபிமானி மிகப்பெரிய செய்தித்தாள் சங்கிலிகளில் ஒன்றாக, தினசரி விற்பனையில் மூன்றாவது பெரிய பத்திரிகையாக வளர்ந்தற்கு இம்எஸ்-சின் பங்களிப்பே காரணம் என்கிறார் ஆசிரியர்.
மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கம்
மொழிவாரி மாநிலங்களை உருவாக்குவது என்பது இந்திய தேசிய காங்கிரஸால் அளிக்கப்பட்ட வாக்குறுதியாகும். ஆனால் பல ஆண்டுகளாக இது நிறைவேற்றப்படவில்லை. வெகுஜன போராட்டங்கள் மற்றும் பிரச்சாரங்கள் மூலம் சிபிஐ மற்றும் இஎம்எஸ் ஆற்றிய முக்கிய பங்கு புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய கேரளம் நவம்பர் 1,1956 அன்று நடைமுறைக்கு வந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தை தமிழ் நாட்டில் இணைப்பதற்கு எதிராக கேரளாவில் கடுமையான ஆட்சேபனைகள் எழுந்தன. ஆனால் இஎம்எஸ் அவற்றை குறுங்குழுவாத கோரிக்கைகள் என்று நிராகரித்து மொழி அடிப்படையில் மாநிலங்கள் பிரிவதை ஆதரித்தார் என்ற செய்தி புத்தகத்தில் உள்ளது.
கேரளாவில் முதல் இஎம்எஸ் அமைச்சரவை
புதிய கேரளாவில் 1957-ம்ஆண்டில் நடந்த இரண்டாவது பொதுத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெற்றிப் பெற்று இஎம்எஸ் தலைமையில் முதல் அமைச்சரவை அதிகாரத்திற்கு வந்தது. உலகில் முன்னுதாரணம் இல்லாத இந்த வரலாற்று நிகழ்வு இந்தியாவிற்கு உள்ளேயும் வெளியேயும் தாக்கத்தையும் மற்றும் புதிய அனுபவத்தையும் ஏற்படுத்தியது. ஆட்சிக்கு வந்த ஆறு நாட்களில், நிலத்திலிருந்து கட்டாயமாக வெளியேற்றப்படும் குத்தகைதாரர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் அவசரச் சட்டத்தை அரசாங்கம் நிறைவேற்றியது. இது நாட்டில் முன்னெப்போதும் இல்லாத ஒன்றாகும். மேற்குவங்கம் மற்றும் திரிபுராவைத் தவிர வேறு எந்த மாநிலமும் இதனை செயல்படுத்தவில்லை. ஆனால், “1959 ஆம் ஆண்டு 31. July அன்று ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட “உலகின்” “முதல் கம்யூனிஸ்ட் அரசாங்கத்தை மத்திய அரசு கலைத்தது”. இந்த இலக்கை அடைய அவர்கள் தேசிய மற்றும் சர்வதேச நட்பு நாடுகளிடமிருந்து தார்மீக மற்றும் நிதி ஆதரவைப் பெற்றனர். அனைத்து அறிவார்ந்த பார்வையாளர்களும் அது அரசியலமைப்பு நெறிமுறை சார்ந்து இருக்கவில்லை என்பதை அறிந்திருந்தனர்.
கேரள வளர்ச்சி மாதிரி
கேரள மாதிரி என்பது நிலச் சீர்திருத்தங்கள் பற்றியது மட்டுமல்ல. கல்வி, பொது சுகாதாரம், பொது நிர்வாகம் மற்றும் காவல்துறை ஆகியவற்றில் செயல்படுத்தப்பட்ட பிற நடவடிக்கைகளுடன் நிலச் சீர்திருத்தங்கள் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளன. பல ஆண்டுகளுக்குப் பிறகு முழு கல்வியறிவு மற்றும் கட்டாய ஆரம்பக் கல்வியை அடைவதற்கான ஆரம்ப நடவடிக்கைகளை கல்விச் சீர்திருத்தங்கள் உருவாக்கின. மலையாளத்தை அதிகாரப்பூர்வ மொழியாகவும், கற்பித்தல் மொழியாகவும் மாற்றுவது, குறைந்தபட்ச ஊதியம் மற்றும் மற்ற வேலை நிலமைகளை அமுல்படுத்துவது மற்றும் இஎம்எஸ்-சின் மிகப்பெரிய கனவுகளில் ஒன்றான அதிகாரத்தை பரவலாக்குவது ஆகியவை பழைய தடத்தை மாற்றி அமைக்கும் மற்றொரு நடவடிக்கைகளாகும்.
கட்சியை காப்பாற்றுவதில் இஎம்எஸ்.
கட்சியில் ஏற்பட்ட பிளவுக்கு பின்னர் முதலில், அரசு மற்றும் சுயநலவாதிகளின் தாக்குதல்களிலிருந்து கட்சியைக் காப்பாற்றுவது. இரண்டாவதாக, அன்றைய சிக்கலான அரசியல் பிரச்சினைகளை ஆராய்ந்து. கட்சியின் நிலைப்பாட்டைப் பற்றி கட்சி உறுப்பினர்களுக்கும் அனுதாபிகளுக்கும் கற்பிப்பது. அவர்கள் கருத்தியல் வேறுபாடுகளின் வலையில் சிக்கியதால், சிபிஐ (எம்) தான் உண்மையான கம்யூனிஸ்ட் கட்சி என்பதை உணர்த்த வேண்டியிருந்தது. பல மாதங்களாக மாநிலம் முழுவதும் மற்றும் வெளியேவும் தொடர்ந்து பயணம் செய்து, தொழிலாளர்களைச் சந்தித்து, கட்டுரைகளை எழுதி, பிரசுரங்களை தாயாரித்து இந்த கடமையை நிறைவேற்றுவதில் இஎம்எஸ் ஒரு சாதனையை படைத்தார். 1964 பிளவிலிருந்து இன்னும் மீள முடியாத கட்சிக்குள் தீவிர இடதுசாரி பிரிவுகளிடமிருந்து எழுந்த சவால், சிபிஐ (எம்) கட்சியை கடுமையான நெருக்கடிக்கு இட்டுச் சென்றது. இடதுசாரி தீவிரவாதத்திற்கு எதிரான இஎம்எஸ்-ன் சக்திவாய்ந்த உரைகள் மற்றும் எழுத்துக்கள் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தின. தோழர்களுடனான இஎம்எஸ்-ன் தொடர்புகள் இந்த அலைகளை தடுப்பதில் நீண்ட தூரம் சென்றன.
கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி
ஒரு உறுதியான அரசியல் அணி சேர்க்கை ஆரம்பத்தில் உருவாகவில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிகள் கூட பதவி காலத்தை நிறைவு செய்ய முடியவில்லை. ஆட்சிக் கவிழ்ப்பும், ஆட்சிக் கலைப்பும் என தொடர்ச்சியாக கம்யூனிஸ்ட் கட்சி பிரச்னையை சந்தித்தது. அரசியல் வளர்ச்சி போக்கில் இஎம் எஸ் எடுத்த அரசியல் உத்தி இடது ஜனநாயக முன்னனணியை நிலைப்பெறச் செய்தது. இடதுசாரி ஒற்றுமையை உருவாக்குவதற்கும், காங்கிரஸ் அல்லாத அரசாங்கத்தை அமைப்பதற்கும் இஎம்எஸ் மேற்கொண்ட முயற்சிகள் சிபிஐ (எம்) மற்றும் சிபிஐ மாநாடுகளிலிருந்து பலம் பெற்றன. இது இடது ஜனநாயக முன்னணியை உருவாக்க உதவியது. இன்றுவரை இடது ஜனநாயக முன்னணி செயல்பட்டு வருகிறது. அதன் தலைமையில் அரசும் செயல்பட்டு வருகிறது.
மார்க்சியத்தை விரிவாக்கம் செய்த இஎம்எஸ் படைப்புக்கள்
எப்போதும், கேரளாவின் ஆரம்பகால வரலாறு பற்றிய ஆய்வு இஎம்எஸ்-ன் விருப்பமான ஒன்றாக இருந்தது. மலபார் குத்தகை சீர்திருத்தம், விவசாய இயக்கத்தின் வரலாறு, ஒன்றரை கோடி மலையாளிகள், மலையாளிகள் தாய்நாடு, தேசியப் பிரச்னை, ஆகிய அவரது படைப்புகள் புதிய கேரளாவை உருவாக்குவதற்கான ஒரு முக்கிய படியாகும். அவரது சுயசரிதை (1969) 20 பதிப்புகள் வெளிவந்தது. அவரது சுயசரிதை 1970-ம் ஆண்டில் கேரள சாகித்ய அகாடமியின் விருதை வென்றது. அவசர நிலையில் அவர் எழுதிய சுதந்திரப் போராட்ட வரலாறு 30 பகுதிகளுடன் 1150 பக்கங்களில் வெளிவந்தது. அதுஅவரது மிகப் பெரிய பங்களிப்பாகும். அவர் சிந்தாவில் எழுதிய கட்டுரைகள் அவரது மொத்த 100 தொகுதிகளில் 20 தொகுதிகளாக இருந்தன. மாணவராக இருந்தபோது 22 வயதில் எழுதிய அவரது முதல் புத்தகம் நேரு வாழ்க்கை வரலாறு பற்றியதாக இருந்தது. அவர் எழுதிய் கடைசி புத்தகமும், நேருவைப் பற்றியதாகும். அவரது படைப்புக்கள் வரலாற்று பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தில் இருந்ததால் அதிக முக்கியத்துவத்தைப் பெற்றது
கேரளா கட்சிக்குள் கருத்து மோதல்கள்
முஸ்லீம் லீக்கை கூட்டணியில் கொண்டு வரவேண்டும் என்ற ராகவனின் கருத்தினை இஎம்எஸ் புறக்கணித்தார். மதச்சார்பின்மைக் கொள்கையை சந்தேகத்திற்கு இடமின்றி நிலைநிறுத்த வேண்டும் என்பதில் இஎம்எஸ் தெளிவான நிலப்பாட்டில் இருந்தார். வகுப்புவாத தலைமைகளை எதிர்த்து போராடாமல் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவ சமூகங்களின் உறுப்பினர்களை தொழிலாள வர்க்கத்தின் பக்கம் கொண்டு வருவது சாத்தியமற்றது என்றார்.
பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டில் வசதிபடைத்தவர்களை விலக்க வேண்டும் என்று இஎம்எஸ் முன்வைத்த திட்டம் கட்சிக்குள் பிரச்னையை உருவாக்கியது. அதனை எதிர்த்து பி. கெங்காதரன் கட்சியை விட்டு வெளியேறினார். ஆணையம் பின்தங்கிய சமூகத்தின் 95% மக்களுக்கு அனைத்து உரிமைகளையும் தக்க வைத்தது, ஆனால் ஒரு சிறு துளி அளவே உள்ள வசதிப்படைத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு சலுகையை திரும்பப் பெற பரிந்துரைத்தது. ஒரு தொழிலாள வர்க்கக் கட்சிக்கு இந்த சிறுபகுதியினரின் உரிமைகளைப் பாதுகாக்கும் அவசியம் இல்லை என்று கட்சி முடிவு செய்தது.
கே. ஆர். கெளரியின் முன்னெடுத்த கலகம் கட்சிக்கு சேவை செய்த பாரம்பரியத்திற்கு மாறாக மிகவும் அழிவுகரமான செயலைக் கொண்டிருந்தது. 1987 தேர்தலில் இடது ஜனநாயக முன்னணி வெற்றி பெற்றபோது அவர் முதலமைச்சராக வேண்டும் என்ற அவரது எண்ணம் ஈடேறவில்லை. பின்னர், இஎம்எஸ் கையாண்ட முறைகள் மற்றும் அவரது உயர் சாதி பாசம் காரணமாக ஒரு பின்தங்கிய ஈழவா சாதியைச் சேர்ந்த தனக்கு முதலமைச்சர் பதவி மறுக்கப்பட்டது என்று கௌரி கூறினார். இஎம்எஸ், அவரது வாழ்நாளில் இயக்கத்திற்குள் எதிர்கொண்ட கடைசி பிரச்னை கௌரியின் கலகம் ஆகும். அது வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது.
தேசாபிமானி வாசகர் வட்டம்
புதிய கேரளாவை கட்டியெழுப்புவதற்கான அவரது பன்முக முயற்சிகளில் கலை மற்றும் இலக்கியத்திற்கான இஎம்எஸ்-ன் பங்களிப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன. கதேசாபிமானி வாசகர் வட்டத்தை உருவாக்க இஎம்எஸ் முன்மொழிந்தார். கலாச்சார உலகத்திலிருந்து வாசகர் வட்டம் பெற்ற பெரும் அங்கீகாரம் அதன் அமைப்பாளர்களையும் கூட ஆச்சரியப்படுத்தியது. இரண்டு தசாப்தங்களாக செயலற்ற நிலையில் இருந்த முற்போக்கான கலாச்சார நடவடிக்கைகளின் தளம் எழுத்தாளர்கள், கவிஞர்கள், நாடக வல்லுநர்கள் மற்றும் விமர்சகர்களின் ஆகியவர்களின் பங்கேற்புடன் ஒரு புதிய விழிப்புணர்வை கண்டது. தேசாபிமானி வாசகர் வட்டம் முற்போக்கு கலை மற்றும் இலக்கிய அமைப்பின் (புரோகமனா கலா சாகித்யங்கம்) பிறப்புக்கு வழி வகுத்தது. மரபான மற்றும் தேவையற்ற கலாச்சார சொற்பொழிவை சீர்திருத்துவதன் மூலமோ அல்லது நிராகரிப்பதன் மூலமோ சமூக அர்ப்பணிப்புள்ள ஒரு புதிய கலை உணர்வு மற்றும் கதைச் சொல்வதற்கு வழிவகுத்தது என்று வாதிட்டார். இந்த விவாதங்களின் போது இரண்டு குறிப்பிடத்தக்க அம்சங்கள் வெளிவந்தன. முதலாவதாக, மனிதநேயத்திற்கு எதிரான படைப்புகளை நிராகரிப்பதில் கூட நாம் சகிப்புத்தன்மையுடன் இருக்க வேண்டும். இரண்டாவது, 1948-49 ல் இஎம்எஸ் மற்றும் பிறரைப் பாதித்த அரசியல் பிளவினால் கலாச்சார இயக்கம் மீண்டும் பாதிக்கப்படக்கூடாது என்பதை நினைவூட்டுவதாக இருந்தது.
கட்சி வகுப்புகள்
இஎம்எஸ் கட்சி வகுப்புகளின் உள்ளடக்கத்தையும் கட்டமைப்பையும் மாற்றினார். மார்க்சிசத்தின் அடிப்படை தலைப்புகள் மட்டுமின்றி, இந்திய மற்றும் மேற்கத்திய தத்துவங்கள், அரசியல், புவியியல் மற்றும் வானியல் போன்ற பாடங்களும் கட்சி பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டன. இதனை நிறைவேற்ற, கட்சியில் உறுப்பினராய் இல்லாத அறிஞர்கள் வகுப்பு எடுக்கவும், கட்சி தொண்டர்களுடன் கலந்துரையாடவும் அழைக்கப்பட்டனர். கட்சியின் அரசியல் வகுப்புகள் ஒரு முழுமையான கல்வித் திட்டமாக வளர்ந்தன.
கேரள வளர்ச்சிக்கான சர்வதேச மாநாடு
பொருள் உற்பத்திக்கு அடிப்படையான விவசாயம், தொழில் துறைகளில் தேக்கத்தை மாற்றுவதற்கு 1994 –ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் ஏகேஜி ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகள் மையத்தால் நடத்தப்பட்ட கேரள ஆய்வுகள் குறித்த சர்வதேச மாநாடு, அடுத்த அரசு மேற்கொள்ள வேண்டிய முக்கிய திட்டங்களுக்கான விரிவான அடிப்படையை வடிவமைக்கும் நோக்கில் இந்த மாநாடு நடைபெற்றது. ஒரு வாரம் நீடித்த மாநாட்டில் கருத்தரங்குகள் மற்றும் விவாதங்களில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஆர்வலர்களுடன் மதத் தலைவர்கள் மற்றும் கலாச்சார ஆர்வலர்கள் இணக்கத்துடன் கலந்து கொண்டதை வெளிப்படுத்தியது. மாநாட்டில் வழங்கப்பட்ட கட்டுரைகள் ஐந்து தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன, அவை கேரள ஆய்வுகளுக்கான விரிவான ஆதாரத்தைத் தொடர்ந்து அளிக்கின்றன.
அதிகார பரவலாக்கம்
சோவியத்துகளை அடிப்படையாகக் கொண்ட சோசலிச அரசையும், நிர்வாகத்தின் அனைத்து மட்டங்களிலும் வெகுஜன பங்கேற்பை உறுதி செய்யும் பரவலாக்கப்பட்ட பிரிவுகளையும் லெனின் முதலில் எண்ணியிருந்தார். கிராம சுயராஜ் என்ற மகாத்மா காந்தியின் கருத்து ஆரோக்கியமான மற்றும் வெகுஜன சார்ந்த நிர்வாக அமைப்புக்கு அழைப்பு விடுத்தது. இஎம்எஸ், 1930-கள் தொடங்கி ஜனநாயகம் அல்லது விவசாய சீர்திருத்தங்களுக்கு அதிகார பரவலாக்கத்தின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தி வந்தார். குறிப்பாக கல்வி, பொது சுகாதாரம் மற்றும் விவசாய சீர்திருத்தங்கள் போன்றவற்றில் உள்ளாட்சிகளை வலுப்படுத்தவும், மைய அதிகாரத்தைக் குறைக்கவும் இஎம்எஸ் விரும்பினார். மக்கள் திட்டமிடல் என்பது சுதந்திரப் போராட்டம் மற்றும் மாநில உருவாக்கத்திற்குப் பிறகு கேரளாவில் நடந்த மூன்றாவது மிகவும் புரட்சிகரமான திட்டமாகும்.
ரோஸா லக்சம்பெர்க் மற்றும் கிராம்சி
அவர் படித்த புதிய புத்தகங்களில் நம்பத்தகுந்த வாதங்களைக் கண்டபோது தனது பார்வையை மாற்றிக் கொள்ள ஒருபோதும் அவர் தயங்கியதில்லை. ஜெர்மன் புரட்சியாளர் ரோசா லக்சம்பர்க் (1871-1919) மற்றும் இத்தாலிய அறிஞர் ஆண்டனி கிராம்ஸி (1891-1937) ஆகியோரைப் படித்த பிறகு அவரது புதிய நிலைகள் அவரின் மாற்றத்திற்கு எடுத்துக்காட்டுகளாகும். ஸ்டாலினும் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்த இரண்டு புரட்சியாளர்களையும் புறக்கணித்தனர். ஸ்டாலின் செய்த பல தவறுகளில், மார்க்சிச சிந்தனையாளர்களை புறக்கணித்ததும் ஒன்று என்று இஎம்எஸ் கருதினார் என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
இஎம்எஸ் தனது கடைசி ஆண்டுகளில் ரோஸா லக்சம்பெர்க் மற்றும் கிராம்சி கருத்துக்களை நோக்கி ஈர்க்கப்பட்டார். அவர், லக்சம்பெர்க்கின் மூலதனத்தின் திரட்டல் தத்துவம் குறித்து தனது நண்பர் கேம்பிரிட்ஜ் பேராசிரியர் ஜான் ராபின்சனுடன் நீண்ட விவாதத்தில் ஈடுபட்டார், மேலும் அவரைப் பற்றி ஒரு புத்தகத்தை எழுத விரும்பினார். இந்த புத்தகம் எழுதும் எண்ணம் நிறைவேறவில்லை என்றாலும், அவர் இறப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த புத்தகத்தின் ஆசிரியருடன் இணைந்து கிராம்சியின் சிந்தனைகள் (1996) பற்றி எழுதினார்.
குடும்ப வாழ்வின் லட்சியம்
தனது வாழ்நாளில் கடுமையான சிரமங்கள் மற்றும் பதட்டங்களின் கொண்டிருந்தாலும், அவர் தனது குடும்ப வாழ்வில் முழுமையாக திருப்தி அடைந்தார் என்று இஎம்எஸ் எழுதினார். சமூக சீர்திருத்த இயக்கத்தின் நாட்களில் ஒவ்வொரு நபரும் வேலை செய்து சம்பாதிக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கமாக இருந்தது. இன்று, எனது குழந்தைகளும் அவர்களின் வாழ்க்கைத் துணைகளும் இந்த வழியில் வாழ்கிறார்கள் நம்பூதிரியை மனிதனாக மாற்றுவதற்கான எங்கள் குறிக்கோள் நனவாகியுள்ளது என்பதை அவர்களின் வாழ்க்கை நிரூபிக்கிறது. எனது கடைசி நாட்களை எனது குழந்தைகள், அவர்களின் வாழ்க்கைத் துணைகள் மற்றும் பேரக்குழந்தைகளுடனான எனது உறவுகளில் முழுமையாக திருப்தியுடன் செலவிடுகிறேன்என இஎம்எஸ் கூறியதை புத்தகம் பதிவு செய்துள்ளது.
இஎம்எஸ் இறுதி பயணம்
19-4-1998 காலையில் உள்துறை அமைச்சராக பொறுப்பேற்ற எல்.கே. அத்வானி மறைந்த இஎம்எஸ்-க்கு இறுதி மரியாதை செலுத்த மதியம் திருவனந்தபுரம் வந்தார். மார்ச் 19,1998. காலை 10 மணியளவில், தனது வீட்டில் இஎம்எஸ் வழக்கமான வேலைகளில் ஒன்றான தேசாபிமானிக்கு வாராந்திர கட்டுரையை தனது செயலாளரிடம் எழுத சொல்லிக் கொண்டிருந்தார். தான் சொல்லி முடித்த பிறகு, அவர் அதைப் படித்தார். தனது சொந்த கையால் சில திருத்தங்களைச் செய்தார். தலைப்பு “தொங்கு பாராளுமன்றம் வர்க்க அரசியல் நோக்கில் இருந்து” மற்றும் ஒரு அடைப்புக்குறியில் தொடரும் என்று முடித்தார். அடுத்த நிமிடத்தில் அவர் அமர்ந்திருந்த நாற்காலியில் சரிந்தார். காஸ்மோபாலிட்டன் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட சில மணி நேரங்களுக்குள், பிற்பகல் 3.40 மணியளவில், 89 வயதான இந்திய இடதுசாரி இயக்கத்தின் முன்னோடி, நவீன கேரளாவின் சிற்பி வரலாற்றில் புகுந்தார்.
வரலாற்று சூழலில் அரசியல், பொருளாதாரம், சமூகம் சார்ந்த பிரச்னைகளை மார்க்சீய வழியில் கூர்ந்து ஆராய்வதும், மக்களுக்கு போதிப்பதும், ஆய்வின் அடிப்படையில் தீர்விற்கான வழிமுறைகளை திட்டமிடுவதும், அதனை நிறைவேற்றிட மக்களை அணிதிரட்ட்டுவதும், தொய்வின்றி உழைப்பதையும், தான் ஏற்றுக் கொண்ட தத்துவத்தை நடைமுறைபடுத்துவதற்கான சாத்தியங்களை தறவிடாமல் புரட்சிகர நோக்கத்திற்கு முன்னேற்றுவதும் இஎம்எஸ் அரசியல் வாழ்க்கை கற்றுத் தரும் பாடம். தேசத்தை கட்டமைப்பதில் மிக முக்கியப் பங்காற்றிய காந்தி, நேரு, ஆசாத் மற்றும் படேல் உள்ளிட்ட செல்வாக்குமிக்க தலைவர்களின் வரிசையில் இஎம்எஸ்ஸும் ஒருவர் என்பது மிகவும் பொருத்தமானது.
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | “இம்எஸ் நம்பூதிரிபாடு: ஒரு அரசியல் வாழ்க்கை வரலாறு” ( EMS Namboodribad A Political Biography) |
| ஆசிரியர்: | மலையாளத்தில் கோவிந்தபிள்ளை | ஆங்கிலத்தில் எம்.ஜி.ராதாகிருஷ்ணன் |
| வெளியீடு: | லெப்ட் வோர்டு (LeftWord Books) |
| விலை: | ₹.360.00 |
| அறிமுகம் எழுதியவர்: | ✍🏻 கே.பாலச்சந்திரன் |
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

