தற்போதைய நெருக்கடியின் மத்தியில் நம்மைச் சங்கடப்படுத்துவது என்னவெனில் பொது விநியோகத்தைப் பெருமளவு குறைத்து விட்டு அதற்குப் பதில் பணமாற்றுக்குச் செல்ல வேண்டும் என்று சிலர் கேட்பதாகும். இடைவெளிகள் இருந்தாலும் தற்போதைய நிலையில் மக்களைச் சென்றடைய மிகவும் திறனுள்ள கருவிகளில் ஒன்று பொது விநியோகம்.
தேசிய ஊரடங்கின் பின்விளைவுகளிலிருந்து மக்களுக்கு நிவாரணம் அளிப்பதில் பொது விநியோக முறை ஒரு முக்கியமான பங்கை ஆற்றியுள்ளது. கோவிட் 19 நோயாளிகள் அதிகரித்துக் கொண்டிருக்கும் வேளையில், நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து கொண்டிருக்கும் வேளையில், யாரும் விடுபட்டு விடாமலிருக்க சில சரிப்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. பெருமளவு பசி, பட்டினியைத் தடுக்க மானிய உணவு தானியம் ஒவ்வொருவரையும் சென்றடைய, இந்த அடிப்படை ஆதரவு நடவடிக்கை தேவை. இடைவெளிகள் இருந்தாலும் தற்போதைய நிலையில் மக்களைச் சென்றடைய மிகவும் திறனுள்ள கருவிகளில் ஒன்று பொது விநியோக முறை. இந்த ஊரடங்கின் போது அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் சர்வே நடத்தியபோது, 69 சத நகர்ப்புற மக்களும், 89 சத கிராமப்புற மக்களும் இந்த அரசுப் பொதுவிநியோகக் கடையில் உணவு தானியங்களைப் பெற முடிந்ததாகக் கூறினர். 30 சதவிகிதத்தினர் மட்டுமே ஜன் தன் பண மாற்றத்தில் பணம் பெற்றதாகக் கூறினர்.
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி சுமார் 60 சதவிகித மக்கட் தொகையினரிடம் முன்னுரிமை ரேஷன் கார்டுகள் உள்ளன. தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா போன்ற சில மாநிலங்களில் அவை தமது பட்ஜெட் ஆதரவு மூலம் அளிக்கும் கூடுதல் ஆதரவும் உண்டு. பிரதான் மந்திரி கரீப் கல்யாண் யோஜனாவின் கீழ் கூடுதலாக அளிக்கப்படும் 5 கிலோ உணவு தானியமும், ஒரு கிலோ பருப்பும் 81 கோடி மக்களைத்தான் சென்றடைகின்றன. அவர்கள் தற்போது தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் பலனைப் பெறுகிறவர்கள். இதனுடன் ஆத்மநிர்பார் திட்டத்தின் கீழ் புலம்பெயர்ந்த 8 கோடிப் பேர் சேர்ந்துள்ளனர். எனினும் இன்னும் ஏராளமானோர் உணவுப் பாதுகாப்பு வளையத்துக்குள் இல்லாமல் உள்ளனர். உணவு பாதுகாப்புச் சட்டத்தின்படித் தேவையான 67%ஐ நிறைவு செய்ய, தற்போதைய 2011 எண்ணிக்கைக்குப் பதிலாக 2020 மக்கட்தொகை மதிப்பீட்டைப் பயன்படுத்த வேண்டும். மேலும், தற்போதைய நெருக்கடியில் ஏராளமானோர் வாழ்வாதாரத்தை இழந்துள்ள நிலையில், தேவை இன்னும் மிக அதிகமாக இருக்கும். துரதிர்ஷ்டவசமாக அரசாங்கம் பொதுவிநியோகத் திட்டத்தை அனைவருக்குமாக ஆக்கவில்லை. நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் தொடரும் துன்பங்களைக் கண்டுகொள்ளாதது போல் ஜூலை முதல் நிவாரண நடவடிக்கைகளை நீட்டிப்பது குறித்து அறிவிப்பு இல்லை (30.6.20 அன்று நவம்பர் வரை நீட்டிப்பதாகப் பிரதமர் அறிவித்துள்ளார்)
தற்போதைய நெருக்கடியின் மத்தியில் நம்மைச் சங்கடப்படுத்துவது என்னவெனில் பொது விநியோகத்தைப் பெருமளவு குறைத்து விட்டு அதற்குப் பதில் பணமாற்றுக்குச் செல்ல வேண்டும் என்று சிலர் கேட்பதாகும். இந்த விவாதம் சில காலமாக நடந்து வருகிறது. 2019 – 20 பொருளாதார சர்வேயிலும் உணவு மானியம் கொடுக்கும் வருவாய் நிதிப் பற்றாக்குறையைக் குறைக்க இத்தகைய ஒரு கொள்கை திசையும் வலியுறுத்தப்பட்டுள்ளது. கையிருப்பு மிகவும் அதிகமாக அதிகரித்திருக்கும் வேளையிலும் அரசு தனது வருவாய்ப் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்த பொது விநியோகத்தை விரிவுபடுத்தத் தயங்குகிறது. பணத்தை நேரடியாகச் செலுத்துவது என்பது முதிர்ந்த வயது, விதவை மற்றும் மாற்றுத்திறனாளி ஓய்வூதியங்கள், கர்ப்ப கால உதவிகளுக்கு ஒரு முக்கியமான வடிவம். இவ்வாறு அளிக்கப்படும் பண உதவி கவலைப்படுமளவுக்கு போதாதது. இப்போதைய சூழலில் பொது விநியோகத்துக்குப் பதில் பண மாற்றத்துக்காக வாதிடுவது தவறானதும் திசைமாறியதுமாகும்.
முதலில் இந்திய உணவுக் கார்ப்பரேஷனின் நிதிநிலை மிகவும் கோளாறான நிலையில் உள்ளது. தேசிய சிறுசேமிப்பு நிதியிலிருந்து பெற்ற சுமார் 2.5 லட்சம் கோடி இன்னும் திருப்பிக் கொடுக்கப்படவில்லை. ஆனால் இது பெருமளவுக்குத் தனது வருவாய்ப் பற்றாக்குறையைக் குறைத்துக் காட்ட விரும்பும் அரசாங்கத்தின் கணக்கெழுதும் தவறான நிர்வாக முறையின் கோளாறாகும். இதற்கு இந்திய உணவு கார்ப்பரேஷனின் நிலைத்தன்மை விலை கொடுக்கிறது. அது தான் வாங்கிய உணவு தானியங்களுக்கு உரியத் தொகையைக் கொடுத்து விட்டது. புள்ளி விவரங்களை ஆராய்ந்தால், உண்மையான உணவு மானியமும் தேசிய சிறுசேமிப்பு நிதியிலிருந்து பெற்ற கடன் இரண்டும் சேர்ந்தே ஒரு ஆண்டுக்கான ஜி.டிபியில் ஒரு சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது என்பது தெரிகிறது. பட்ஜெட் தாண்டிய கடன்களை விலக்கி விட்டுப் பார்த்தால், கடந்த மூன்றாண்டுகளில் உணவு மானியம் ஜிடிபியில் 0.53க்கும் 0.59 சதவீதத்துக்கும் இடையேதான் இருந்துள்ளது. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் வருவதற்கு முன் இருந்த 0.8 – 0.85 சதவீதத்துக்கு இது மிகவும் குறைவானதாகும். எனவே உணவு மானியம் பன்மடங்காக அதிகரித்து வருகிறது என்பது முழுதும் உண்மையல்ல.
இரண்டாவது பொதுவிநியோகத்தைப் பண மாற்றத்தால் மாற்றுவதில் பல பிரச்சனைகள் உள்ளன. இப்போது ஏராளமானோரிடம் வங்கிக் கணக்கு இருந்தாலும் வங்கிக் கிளைகளை விட மிக அதிகமாக பொது விநியோகக் கடைகள் உள்ளன. பெரும்பாலான வங்கிக் கணக்குகளில் பணமும் இல்லை, பணத்தை எடுப்பதற்கான கட்டணங்களும் மிக அதிகம். இந்தியாவில் பணத்தை நேரடியாக அளிக்கும் திட்டங்களை ஆராயும்போது, அவை விலையேற்றத்துடன் இணைந்தவை அல்ல என்பதைச் சொல்வது பாதுகாப்பானதேயாகும். பணத்தின் உண்மை மதிப்பு குறைந்து கொண்டே இருக்கும், ஆனால் உணவு விநியோகத்தில் அப்படி நடக்காது. பொது விநியோக முறை இல்லாவிட்டால் கொள்முதல் செய்யப்படும் உணவு தானியங்களின் அளவும் குறையும் என்ற அச்சமும் உண்டு. அதன் பொருள் விவசாயிகளுக்குக் குறைந்த பட்ச ஆதரவு விலை கிடைக்காது என்பதாகும்.
பொது விநியோகத்திட்டத்தைத் திரும்பப் பெறுவதை மாநில அரசுகளும் ஆதரிக்கவில்லை. எந்த மாநில அரசும் இதற்கு முன்வரவில்லை என்ற பின்னணியில் சண்டிகர், தமன், டயு, புதுச்சேரி ஆகிய இடங்களில் மட்டுமே நேரடிப் பணம் செலுத்துவதை மத்திய அரசு அமலாக்க முடிந்தது என்பது ஒரு விஷயத்தைக் கூறுகிறது. புதுச்சேரியில் உள்ளூர் எதிர்ப்புக்குப் பணிந்து சில மாதங்கள் உணவு விநியோகம் தொடரப் பட்டது. இந்த விவாதங்கள் தொடரலாம். ஆனால் உணவுக் கிடங்குகளில் உணவு தானியம் குவிந்து கிடக்கும்போது மக்கள் பட்டினியில் இருப்பது அறநெறியாகாது. தற்போது இந்திய உணவு கார்ப்பரேஷன் கிடங்குகளில் உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஒரு வருடத்துக்குத் தேவையான தானியத்தை விட மிக அதிகமாக 100 மில்லியன் டன் தானியம் குவிந்துள்ளது. இன்னும் ஐந்தே மாதங்களில் அடுத்த கரீப் அறுவடை வரும் நேரத்தில், அரசிடம் இருப்பு வைக்கும் இடம் மிகக் குறைவாக உள்ளது. 2001-02இல் முழு நாடும் பஞ்சம், பசியில் கிடக்கும்போது, இவ்வாறு மிக அதிகமாகக் குவிந்து கிடந்த தானியம் வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ளவர்களுக்குக் கொடுக்கும் விலையில் நாட்டின் பல பகுதிகளில் ஏற்றுமதியாளர்களுக்குக் கொடுக்கப்பட்டது. மக்கள் துன்பத்திலும், கையிருப்பு அதிகமாகவும் இருக்கும் நிலையை நாம் மீண்டுமொருமுறை சந்திக்கிறோம். துரதிர்ஷ்டவசமாக நாம் மீண்டும் அதே தவறுகளைச் செய்வோம் என்று தோன்றுகிறது.
ப்ரிண்ட், 2020, ஜுன் 26,2020
கட்டுரையாளர்: தீபா சின்ஹா
அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி.
தமிழில்: கி.ரமேஷ்
குறிப்பு; நேற்று, 30.6.20 அன்று, இந்தியப் பிரதமர் 90000 கோடி செலவில் 80 கோடி ஏழை மக்களுக்கு நவம்பர் வரை இலவசமாக உணவுப் பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இந்தக் கட்டுரை அதற்கு முன் எழுதப்பட்டதாகும்.