தென்னகப் பண்பாட்டு மரபின் மகத்தானக் கலைஞன்: நெடுமுடி வேணு – இரா. தெ. முத்துஆலப்புழை மாவட்டத்தில் பின்தங்கிய கிராமம் ஒன்றில் பிறந்த கேசவன் வேணுகோபால் என்கிற நெடுமுடிவேணுவின் மறைவு (அக்டோபர்11) கேரளத்திற்கும் அப்பால் தமிழ்நாட்டில் தென்னிந்தியாவில் அதிர்வலைகளை உருவாக்கியிருக்கிறது.

நெடுமுடி ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் வழியாக ரசிகர்களால் திரையுலகக் கலைஞர்களால் நினைவுக் கொள்ளப்பட்டு வருகிறார். சமூக ஊடகங்கள், இணையவெளி இதழ்கள், அச்சு -மின் ஊடகங்கள் எங்கும் நெடுமுடி வேணு செய்திகள் பரவி வருகின்றன.

நெற்பயிரும் விவசாயமும் நடவுப்பாடல்களும் நாட்டுப்புறப்பாடல்களும் ஒன்றை ஒன்று பிணைந்து வளர்ந்த ஆலப்புழை-கோட்டயம்-பத்தனம்திட்டா மாவட்டங்கள் அடங்கிய குட்டநாடு பகுதி சார்ந்த கலைஞராக அடையாளம் காணப்படுகிறார் நெடுமுடி வேணு.

மனோரமா தொலைக்காட்சிக்காக வேணு அளித்த பேட்டி ஒன்றில் தான் வளர்ந்த விதம் பற்றி குறிப்பிடும் பொழுது, தன் சொந்த ஊர் சார்ந்த பதினைந்து கிலோமீட்டர் சுற்றளவில் இருக்கும் பலவிதமான மனிதர்களை கலைஞர்களை தான் அறிவேன் என்கிறார்.

கடமனிட்ட ராமகிருஷ்ணன், அய்யப்பன் பணிக்கர், தகழி சிவசங்கரன் பிள்ளை போன்றோரின் ஓசையும் தாளகதியும் கொண்ட பாடல்கள் கவிதைகள் தம்மை செதுக்கியதாகப் பெருமை கொள்கிறார் நெடுமுடிவேணு.

குட்டநாடு சார்ந்த இசைக்கருவிகள் கலைகள் கூத்துகள் கதகளி என தம் மண் சார்ந்த இக்கலைகளுக்கு கேசவன் வேணுகோபாலை, நெடுமுடி வேணுவாக அவர் மனதில் கலையூற்றுக் கண்களை திறந்து வளர்த்து விட்டதில் பெரும்பங்கு உண்டு என நினைவு கொள்கிறார்.

பள்ளியில் கல்லூரியில் வேணு பாடம் படித்ததை விட, கவிதை,பாடல்கள் எழுதுவது, நாடகம் நடிப்பதிலேயே கவனமாக இருந்தார். கணவரின் ஒய்வூதியம் பெற்று வாழும் தன்னால் அதிக அளவு வேணுவை படிக்க வைக்க இயலவில்லை என்றாலும், கலைகளை கவிதைகளை வேணு கற்றதும் எழுதியதும் தனக்கும் சந்தோசம் தந்ததாக, நெடுமுடி வேணுவின் அம்மா கைரளி தொலக்காட்சிக்காக, கவிஞரும் மார்க்சிஸ்ட் சட்டமன்ற உறுப்பினராக இருந்த கடமனிட்ட ராமகிருஷ்ணனின் சகோதருக்கு அளித்த பேட்டியில் குறிப்பிடுகிறார்.

Great artist of the Southern cultural tradition: Nedumudi Venu - Era. The. Muthu. தென்னகப் பண்பாட்டு மரபின் மகத்தானக் கலைஞன்: நெடுமுடி வேணு.jpg - Wikimedia Commons

இயக்குநர் அரவிந்தன் வழியாக 1978 ல் மலையாள திரையுலகிற்கு தம்பு படத்தின் வழியாக அறிமுகம் ஆகிறார் நெடுமுடி வேணு. அரவிந்தன், பத்மராஜன், பரதன், கே.ஜி.ஜார்ஜ், மோகன், பாசில் போன்ற இயக்குநர்களின் படங்களில் தவிர்க்க இயலாத நடிகராக நடித்து உருவாகி வளர்ந்தவர்.

முப்பது வயதில் அறுபது வயது கிழவராக சஜன் இயக்கிய லவ்ஸ்டோரி படத்தில் ரோகிணி உடன் நடித்திருப்பார் நெடுமுடி வேணு. பாலச்சந்திர மேனன் இயக்கிய அச்சுவேட்டண்ட வீடு படத்தில் ஐம்பது வயதுக்காரராக இருபது வயது ரோகிணியின் அப்பாவாக நடித்து கலக்கி இருப்பார் வேணு.

இரண்டு பெண் குழந்தைகளுக்கான அப்பாவாக கன்னியாகுமரி மாவட்டம் பத்மனாபபுரத்திலிருந்து திருவனந்தபுரத்திற்கு குடியேறும் பதட்டம் கொண்ட அப்பாவாக பத்மனாபபுரம் போல இல்லா திருவனந்தபுரம் என வசனத்தை அடிக்கடி உச்சரித்து பாராட்டைப் பெறுவார் நெடுமுடி வேணு.

மார்த்தாண்ட உதயவர்மா எனும் வயது முதிர்ந்த அரசகுடும்பத்தின் தலைவன் பாத்திரத்தில் கனிவு, கம்பீரம், பாசம், ரசிகமனோபாவம் கொண்ட கலைஞன், வெறுப்பு, கோபம் என பலவித பாவங்களில் அசல் நம்பூதிரி மூத்த தரவாடாக சிறப்பான நடிப்பை சிபிமலயில் இயக்கிய ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா படத்தில் நடித்திருப்பார் நெடுமுடி வேணு. இந்தப்படத்தில் நடித்ததற்கான சிறந்த துணைநடிகருக்கான தேசிய விருதை 1990 ல் பெற்றிருக்கிறார்.

நாடகக்கலைஞர்களுக்கு உரிய ஓவர் மேக் அப், விக் வைத்து சக கலைஞர் சலஜா மீதான குறுகுறுப்பும் ஆர்வமும் மேலிடும் இளைய நடிகர் பாலகோபாலானாக கே.ஜி.ஜார்ஜ் இயக்கிய யவனிகா திரைப்படத்தில் யாவரும் ரசிக்கும் நடிப்பை வழங்கி இருப்பதை நாற்பதாண்டு கடந்து இன்றும் ரசிக்கலாம்.

சிறிய வயதில் நடுத்தர வயது மற்றும் வயது முதிர்ந்த பாத்திரத்தில் நடித்திருப்பதை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள் எனும் தொலைக்காட்சி ஒன்றிற்கான கேள்விக்கு இரண்டாண்டு முன்பு பதில் சொல்லும் பொழுது, தன்னால் மாற்று நடிப்பை தர இயலும் என இயக்குநர்கள் சக கலைஞர்கள் நம்பும் பொழுது தான் மாறுபட்ட நடிப்பை வழங்க முயற்சிக்கிறேன் என்றும் மனிதர்கள் உடனான நெருங்கியப் பழக்கமும் அவதானமும் இத்தகைய நடிப்பை வழங்குவதற்கு உதவுகின்றன என்று பேசியிருப்பார் நெடுமுடி வேணு.

திரைப்படக் கலைஞர்கள் முரளி, கடமனிட்ட ராமகிருஷ்ணன்,இன்னசன்ட் போல அரசியலில் ஆர்வம் காட்டுவதில்லையா என கேட்கப்பட்ட கேள்விக்கு, அரசியலை கவனிக்கிறேன் ஆனால் கட்சி அரசியல் மீது தனக்கு ஆர்வம் இல்லாததற்கு அதற்கான தனிப்பட்ட மனம் தேவை.தன்னிடம் அப்படிப்பட்ட மனம் இல்லாததே காரணம் என்கிறார்.

நடிகர் பிருதிவிராஜின் ட்விட்டர் பதிவில் தன் உடலை கலைக்கான உறைவிடமாக மாற்றிக் கொண்ட கலைஞர் நெடுமுடி வேணு என குறிப்பிடுவதன் வழி, தான் கற்ற பம்பை மேளம், உடுக்கை, கதகளி,இசைப்பாடல்கள், கவிதைகள், நாட்டுப்புறப்பாடல்கள் போல தன்னை தன் மனதை கலைக்கான முழு வாழ்விடமாக மாற்றி, தானும் கலைகளும் வேறல்ல ஒன்றான கலைமனது என வாழ்ந்து மறைந்திருக்கிறார் நெடுமுடிவேணு.

கேரளத் திரையுலகு மக்களின் நாட்டுப்புறப் பாரம்பரிய கலைகள் சார்ந்த மகத்தான கலைஞனை இழந்திருக்கிறது. மரபும் நவீனமும் கலந்த கலைகளின் சங்கமமான நெடுமுடிவேணுவோடு கேரளத் திரையுலகம் மட்டுமல்ல தென்னகமே தன் பண்பாட்டு மரபின் மைந்தனை இழந்திருக்கிறது.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.