நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள மூன்று வேளாண் சட்டங்கள் குறித்து தமிழ்நாட்டில் அவற்றிற்கு ஆதரவான நிலைபாடுகளையும் எதிர்நிலைபாடுகளையும் ஏற்படுத்தியுள்ளன. தம்மை ஒரு விவசாயி என்று கூறிக்கொள்ளும் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இந்தச் சட்டங்கள், விவசாயிகளுக்கு அனுசரணையானவை என்றும் 20 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு அரசாங்கம் எடுத்த முன் முயற்சிகளை உள்ளடக்கியுள்ளன என்றும் கூறுகிறார். அவர், மேலும் இந்த 3 சட்டங்களில் ஒன்றான விலை உத்திரவாதம் மற்றும் வேளாண் பணிகள் குறித்த விவசாயிகள் ஒப்பந்தச் சட்டம், தமிழ்நாடு அரசாங்கம் 2019இல் இயற்றிய “விவசாயிகள் உற்பத்தி மற்றும் கால்நடைகள் ஒப்பந்தப் பண்ணையமைப்பு மற்றும் பணிகள் ஒப்பந்தச் சட்டம் போன்றதாகும் என்றும் கூறுகிறார். அவர் மேலும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்ட சட்டங்களில் ஒன்றான விவசாயிகளின் உற்பத்தி வர்த்தகம் மற்றும் வாணிபச் சட்டம் விவசாயிகளுக்கான கொடுக்கல்-வாங்கல்களை குறைப்பதற்கு வழிவகை செய்யும் என்றும் கூறுகிறார்.
இன்னொரு பக்கத்தில் தமிழ்நாட்டில் செயல்படும் பல விவசாயிகள் சங்கங்களும் எதிர்க்கட்சிகளான திமுக. காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகளும் அம்மூன்று சட்டங்களையும் மிகக் கடுமையாக எதிர்க்கின்றன. தி.மு.க தலைவரான எம்.கே.ஸ்டாலின், இந்த மூன்று சட்டங்களுக்கான மசோதாக்களை மாநிலங்களவையில் ஆளும் அ.இ.அ.தி.மு.கவின் உறுப்பினர் எஸ்.ஆர். பாலசுப்ரமணியன் எதிர்த்த போதிலும் நாடாளுமன்றத்தில் அக்கட்சி (அ.இ.அ.தி.மு.க) அம்மசோதாக்களுக்கு ஆதரவு அளித்து தமிழகத்தின் விவசாயிகளுக்கு துரோகம் இழைப்பதாக குற்றஞ்சாட்டினார். அவர் மேலும், இந்த 3 சட்டங்களும், தமிழகத்தில் விவசாயிகள் தங்களுடைய விளைபொருட்களை நேரடியாக மக்களுக்கு விற்பனை செய்ய உதவும் நோக்குடன் 1999இல் தி.மு.க அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்ட “உழவர் சந்தைகள்” போன்ற கோட்பாடுகளுக்கு எதிராக உள்ளன என்றும் குறிப்பிட்டார். “இது, விவசாய சமூகத்திற்கு எதிரான பா.ஜ.க.வின் சதியாகும்; இதற்கு தமிழ்நாட்டின் ஆளும் அ,இ.அ.தி.மு.க கூட்டுப் பங்காளி” என்றும் ஸ்டாலின் கூறுகிறார்.
இந்நிலைமையில், தமிழ்நாட்டின் அரசியல் பொருளாதாரம் குறித்து ஆராய்ந்து வரும் சமூக அறிவியலாளர் ஜே.ஜெயரஞ்சனிடம் ஃபிரண்ட் லைன் அக்டோபர் மாத இதழுக்காக பேட்டி காணப்பட்டது. அப்போது அவர், இந்த மூன்று சட்டங்களும் தமிழ்நாட்டின் விவசாயத்துறையிலும் அதில் சிறப்பாக நிறுவப்பட்டுள்ள சமூகநலத்திட்டங்களிலும் மிக வேகமான மற்றும் பெருமளவிலான விளைவுகளை ஏற்படுத்தும் என்று கூறினார். அவர், தமிழ்நாட்டின் சமூகநீதிக்கான அடித்தளத்தின் ஒட்டுமொத்த கட்டமைப்பானது, பொது விநியோக முறை, மானியம் வழங்கல், இவை தவிர விவசாயத்திற்கு இலவச மின்சாரம்-இவை போன்ற திட்டங்களின் மீது கட்டப்பட்டிருக்கிறது. இதுவெல்லாம், உணவுக்கான சங்கிலித் தொடர் நடவடிக்கைகள் (Food chain) ஆகும். இவை பறிக்கப்படுவதற்கு அனுமதிக்க கூடாது என்று கூறினார். இந்தப் பேட்டியில் அவர் தமிழ்நாடு தமது உணவுப் பற்றாக்குறையை தீர்ப்பதற்கு ஒரு செயலமைப்பை எப்படி மிகுந்த கவனத்துடன் உருவாக்கியது என்பதையும் எப்படி இந்த உணவுக்கான சங்கிலித் தொடர் நடவடிக்கைகளை ஏனைய சமூக நலத்திட்டங்களுடன் ஒருங்கிணைத்தது என்பதையும் விளக்கினார். இந்தப் பேட்டியின் சுருக்கம் வருமாறு.
கேள்வி: தமிழ்நாடு, கடந்த 50 ஆண்டு காலமாக ஒரு மக்கள் நலத்திட்ட மாநிலமாக இருந்திருக்கிறது. ஒரு சமயத்தில் கடுமையான உணவுப் பஞ்சத்தை எதிர்கொண்ட இந்த மாநிலம் அதனை மிகுந்த கவனத்துடனான திட்டமிடல் மூலம் பின்னுக்குத் தள்ளியது. தன்னுடைய விவசாயத்திற்கு தேவைப்படும் தண்ணீருக்கு பக்கத்து மாநிலங்களை நம்பியிருக்க வேண்டியுள்ள இந்த மாநிலம், தனது மக்களுக்கான உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கூடிய அடித்தளக் கட்டமைப்பை உருவாக்கியிருக்கிறது. எப்படி இந்த மாநிலம் மக்களுக்கான ஒரு உணவுப் பாதுகாப்பை எப்படி சாதிக்க முடிந்தது என்பதையும் இந்த உணவுப் பாதுகாப்பை சமீபத்தில் நாடாளுமன்றத்தில்நிறைவேற்றப்பட்ட 3 வேளாண் சட்டங்கள் எப்படி பாதிக்கும் என்பதையும் நீங்கள் விளக்க முடியுமா?
பதில்: தமிழ்நாடு, மிகக் கவனமாக திட்டமிட்டு மிகக் கவனமாக செயல்படுத்தியும் கடந்த 70 ஆண்டுகளில் உணவுக்கான சங்கிலித் தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டது; இந்த நடவடிக்கைகள்தான் தமிழ்நாட்டின் அனைத்து மக்களுக்கும் அத்தியாவசியப் பொருட்களின் சமமான விநியோகத்தை உறுதிப்படுத்தியிருக்கிறது. ஆனால் இந்த உணவுக்கான சங்கிலித் தொடர் நடவடிக்கைகளை நாடாளுமன்றத்தின் 3 வேளாண் சட்டங்களும் கடுமையாக பாதிக்கும். வேளாண் துறையை சுதந்திரச் சந்தைக்கு திறந்து விடுவதென்பது தற்போதைய வரைமுறைப்படுத்தப்பட்ட சந்தைக்குப் பதிலாக வரைமுறைப்படுத்தப்படாத சந்தைக்கு திறந்து விடுவதாகும்; இது வேளாண் சமூகத்தை பாதிக்கும் என்பது மட்டுமின்றி, வேளாண் சமூகம், சந்தையின் எதிர்பாராத, கட்டுப்படுத்த முடியாத மாற்றங்களுக்கு உள்ளாக்கப்படும், அத்துடன், சமூக நல அரசு (Welfare state) என இந்த மாநிலம் நிறுவியுள்ள பொறுப்பிலிருந்து அதனை சுதந்திரச் சந்தைமுறை வெகு தொலைவிற்கு தள்ளிவிடும். மூன்று வேளாண் சட்டங்களும் சுதந்திரச் சந்தை என்ற பெயரில் பெரும் கார்ப்பரேட்களுக்கு சாதகம் செய்கின்றன. அவை (வேளாண் சட்டங்கள்) விவசாய விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்தும் எதிர்காலத்தில் அரசாங்கத்தின் கொள்முதல் கொள்கைகள் எப்படி இருக்கும் என்பது குறித்தும் மவுனமாக உள்ளன. இந்தச் சட்டங்கள், தற்போதைய பாதுகாப்பானதும் ஒழுங்குபடுத்தக்கூடியதுமான ஏற்பாடுகளை அழித்துவிடும்.
தமிழ்நாட்டில் அரிசி அரசியல்
உண்மையில் 1960ஆம் ஆண்டுகளின் இறுதியிலிருந்து தமிழ்நாட்டில் நிகழ்ந்த துரிதமான அரசியல் நிகழ்வுகளின் முக்கியமான அம்சமாக அரிசி இருந்திருக்கிறது. காலனிய ஆட்சி காலத்திலிருந்து, இந்த மாநிலம், அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறை திரும்பத் திரும்ப ஏற்படுவதை பார்த்திருக்கிறது. மாநிலத்தின் அனைத்து மக்களுக்கும் அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதற்கான செயல்திட்ட முறை எதுவும் நிறுவப்படவில்லை. கருத்தோட்டம் ஒன்று இருந்தது. அது என்னவெனில், உணவுப் பற்றாக்குறையால் நகர்ப்புற மக்கள் மட்டுமே சிரமப்பட்டார்கள். அதே சமயத்தில் கிராமப்புற மக்களோ, ஆங்காங்கே உள்ளூர் ஆதாரங்களை பயன்படுத்தி வாழ்க்கையை சமாளித்தார்கள் என்பதுதான் அது. நகர்ப்புறத்தை மையமாகக் கொண்ட இந்த நாட்டின் காலனிய முறையானது, நாடு சுதந்திரமடைந்த பிறகு தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியின்போதும் இருந்தது.
நாடு சுதந்திரமடைந்த பிறகு சமூக நல அரசு என்ற கோட்பாடு நாடு முழுவதிலும் உதயமானது. புதிதாக உருவாக்கப்பட்ட மத்திய அரசாங்கம், நாடு முழுவதும், அத்தியாவசியப் பொருட்களின் கடுமையான பற்றாக்குறை என்ற மிகப் பெரும் பிரச்சனையை எதிர்கொண்டது. 1960ஆம் ஆண்டுகளில் அந்த அரசாங்கம், உணவுப் பொருட்கள் மக்களுக்கு கிடைப்பதை அதிகரிக்கவும் உணவு உற்பத்தியில் சுய சேவைப் பூர்த்தியை நோக்கிச் செல்வதற்கும் முடிவு செய்தது. இது பசுமைப் புரட்சிக்கு இட்டுச் சென்றது. இந்த பசுமைப் புரட்சியானது, உணவு தானியம் பயிரிடுவதற்கான நிலப் பகுதியையும் தானிய விளைச்சலையும் அதிகரித்தது. இதன் பொருட்டு ஒரு போகம் மட்டுமே பயிரிடப்பட்டு வந்த விளைநிலப் பகுதிகள், இரண்டுபோக விளைநிலங்களாக மாற்றப்பட்டன; இதன் பொருட்டு பல்வேறு குறுகிய கால பயிர்கள் அறிமுகப்படுத்தப்பட்டன; மேலும் நெருக்கமான பயிரிடலும் அதிகரிக்கப்பட்டது. அதிக விளைச்சலை அளிக்கக்கூடிய நெல் பயிர் வகைகளும் கோதுமை பயிர் வகைகளும் அறிமுகப்படுத்தப்பட்டவை. இந்த நடவடிக்கைகள் உணவு தானிய உற்பத்தியை பெருக்குவதற்கு இட்டுச் சென்றது.
விளைந்த தானியங்களை அரசாங்கமே கொள்முதல் செய்தல், குறைந்தபட்ச ஆதரவு விலைகள், ஊக்கத் தொகைகள், கடன்கள், ஏனைய சலுகைகள் ஆகியவற்றிற்கான கொள்கைகள் வரையறுக்கப்பட்டன. பின்னர் அவை ஒரு செயல்முறை அமைப்பாக இணைக்கப்பட்டன. உணவு தானியங்கள் கொள்முதல் செய்யப்பட்டன. நெருக்கடியான நேரங்களில் மக்களுக்கு விநியோகிக்கப்பட்ட அத்தானியங்கள் இருப்பு வைக்கப்பட்டன. இதன்பொருட்டு இந்திய உணவுக் கழகம் உருவாக்கப்பட்டது. கூடுதலான கையிருப்புகள் உணவுப் பற்றாக்குறைக்கு எதிரான முக்கியமானதொரு பாதுகாப்பாக உருவெடுத்தன. நியாய விலைக் கடைகள் மூலம் உணவு தானியங்களை விநியோகிக்கும் பணி, மாநிலங்களிடம் விடப்பட்டது.
தமிழ்நாடு அரசாங்கம் போன்ற அப்போதைய மாநிலங்களின் அரசாங்கங்கள், அவ்வப்போது ஏற்படும் பஞ்சங்கள், வேளாண் உற்பத்தியில் ஏற்படும் பற்றாக்குறைகள் ஆகியவற்றால் ஏற்படும் சவால்களை ஏக காலத்தில் எதிர்கொள்வதற்கு சிறு அளவிலான உதவிகளை அளித்தன. 1970ஆம் ஆண்டுகளுக்கு முன்பு ரேஷன் முறை சென்னை மற்றும் கோயம்புத்தூர் மட்டிலுமே பிரபலமாகியிருந்தது; அப்போது அந்நகர்களில் வாழ்ந்த மக்களுக்கு ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டன. தமிழ்நாடு, அவ்வப்போது அரிசிப் பற்றாக்குறையை எதிர்கொண்டது. காவிரி டெல்டாவில் விளைச்சல் மாநிலத்தின் அரிசித் தேவையை எதிர்கொள்வதற்கு போதுமற்றதாக இருந்தது; எனவே, தமிழ்நாடு, மத்திய உணவு மையத்திலிருந்து கிடைக்கும் தானிய ஒதுக்கீடுகளை நம்பி இருக்க வேண்டியதாயிற்று; ஆனால் அந்த ஒதுக்கீடுகளும் போதுமானதற்றதாக இருந்தன. இதில் ரொம்ப முக்கியமானது என்னவெனில், மத்திய உணவு மையத்திலிருந்து கிடைக்கக்கூடிய தானிய ஒதுக்கீடு, அப்போது மத்திய அரசாங்கத்தின் கரங்களில் கிடைத்த வலுவான அரசியல் கருவியானது.
தமிழ்நாட்டை கடந்த காலத்தில் ஆட்சி செய்து கொண்டிருந்த காங்கிரஸ் அரசாங்கம், அவ்வப்போது ஏற்பட்ட உணவு நெருக்கடியை சரியான முறையில் கையாளவில்லை என கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது. அப்போது இடதுசாரிக் கட்சிகள், உணவுப் பற்றாக்குறையை முன்னிலைப்படுத்தி தெருவில் இறங்கி பல கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தின. அப்போது முதிர்ச்சியடைந்திராத தி.மு.க. உணவு நெருக்கடி நிலைமையை ஒரு பொன்னான வாய்ப்பாக கருதியது. மேலும் உணவு நெருக்கடி நிலமையை, ஒரு மிக முக்கியமான அரசியல் பிரச்சினையாக மாற்றியது. இதனை ஒரு தளமாக பயன்படுத்தி அப்போது சி.என். அண்ணாதுரை தலைமையிலான தி.மு.க, அப்போது மாநிலத்திலும் மத்தியிலும் இருந்த காங்கிரஸ் அரசாங்கங்கள் மீது கடுமையான தாக்குதல்களை தொடுத்தது; மக்களை பட்டினியில் ஆழ்த்தி துயரப்படுத்துவதாக குற்றஞ்சாட்டியது.
சுயசார்புக்கான நடவடிக்கைகள்
இந்த அரிசி அரசியல், தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றை மாற்றி எழுதியது. இதில் தி.மு.க. தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு தேர்தல் வாக்குறுதியை அளித்தது; அதில் அக்கட்சி, தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்திற்கு வருவதற்கு வாக்களிக்கப்பட்டால், ஒரு ரூபாய்க்கு 3 படி அரிசி வழங்கப்படும் என்பதுதான் அந்த வாக்குறுதியாகும். இதனைத் தொடர்ந்து 1967ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. மிகப் பெருவாரியான வெற்றியை சாதித்து காங்கிரஸ் கட்சியை தோற்கடித்து தமிழ்நாட்டில் அதிகாரத்தை கைப்பற்றியது. இதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. ஆனால் தி.மு.க. ஆட்சி அதிகாரத்தில் ஏறியபோது அன்றைய உண்மைநிலை அதனை கடுமையாக இடித்தது. ஏனெனில் உணவுக் கிடங்குகள் காலியாக இருந்தன. கடுமையான அரிசிப் பற்றாக்குறையும் அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறையும் நிலவியது. இதனால் தி.மு.க. ஆட்சிக்கு இக்கட்டான நிலைமை ஏற்பட்டது. ஒரு ரூபாய்க்கு 3 படி அரிசி என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் போனதால்சங்கடமான நிலைமைக்கு உள்ளானது. கூடுதலான அரிசி மற்றும் அத்தியாவசியப் பொருட்களை அனுப்புமாறு அது முன் வைத்த கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துவிட்டது.
இதன் தொடர்விளைவாக, தன்னுடைய பிரபலமான அரிசித் திட்டத்தை அடையாளபூர்வமான வகையில் செயல்படுத்துவதோடு திருப்தி அடைந்து கொள்ள வேண்டியிருந்தது.
ஒரு சமயம், உண்மையிலேயே தமிழ்நாட்டில் கடுமையான உணவு தானிய பற்றாக்குறை ஏற்பட்டதைத் தொடர்ந்து உணவு நிலைமை மிகக் கடுமையானதாகியது; அப்போது முதலமைச்சர் எம். கருணாநிதி திடீரென டெல்லிக்குச் சென்று அப்போதைய மத்திய உணவுத்துறை அமைச்சர் ஜெகஜீவன்ராமை சந்தித்து, தமிழ்நாட்டுக்கான வழக்கமான அரிசி ஒதுக்கீட்டுடன் ஒரு லட்சம் டன் அரிசி கூடுதலாக வழங்குமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் இந்த அனுபவம் அவருக்கு கசப்பானதாகவே இருந்தது. அப்போது அவர், தமிழ்நாடு ஒரு மாநில அமைப்பு என்ற முறையில் சுயசார்பானதாக இருக்க வேண்டும் என்பதை உணர்ந்தார். இதனைத் தொடர்ந்து உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டனொள்ளப்பட்டன; மத்திய அரசின் செயல்முறை திட்டத்திற்கு இணையான செயல்திட்டம் ஒன்றை மாநில அளவில் ஏற்படுத்துவதற்கும் மத்திய அரசாங்கத்தின் இந்திய உணவுக் கழகத்தின் வழிமுறையில் அதனுடன் இணைந்த தானிய உற்பத்தி, கொள்முதல், இருப்பு வைத்தல், வர்த்தகம், விநியோகம் ஆகியவற்றை கையாள்வதற்குமே உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
நேரடிக் கொள்முதல்
முடிவாக, இந்த மாநிலம், இந்திய உணவுக் கழகத்தினைப் பற்றிய தனது சொந்தக் கண்ணோட்டத்தில், தமிழ்நாடு உணவுப் பொருட்கள் விநியோக கழகத்தை ஆரம்பித்தது; நேரடியாக தானியக் கொள்முதலில் இறங்கியது. மேலும் A.D.T.27 என்பன போன்ற புதிய குறுகிய கால நெல் வகைகளை அறிமுகப்படுத்தி பயிரிட்டலை தீவிரப்படுத்தியது.
மேலும் 1970ஆம் ஆண்டுகளின் கடைசியில் கிராமப்புறங்களை மின்சாரமயமாக்கும் நடவடிக்கை மாநிலத்தில் பரந்த அளவில் மேற்கொள்ளப்பட்டது. இது, பாசன வசதியில் “பம்ப்செட் புரட்சி”க்கே இட்டுச் சென்றது; இதனாலும் விவசாய விளைபொருள் உற்பத்தி மேலும் அதிகரித்தது. மாநிலத்தில் கிணற்றுப் பாசனம், விவசாயத்திற்கான முக்கியமான நீர் ஆதாரமாகியது. மேலும்,ரொம்பத் தாமதமாக, விவசாயத்திற்கான மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டது. இது, விவசாயிகள், தங்களுடைய நெல்விளைச்சலுக்கான நிலத்தை மேலும் விரிவாக்குவதற்கு வழிவகை செய்தது. இத்தகைய கிணற்று நீர் பாசனம் மாநிலத்தில் நெல் உற்பத்திக்கு மேலும் ஊக்கம் அளித்தது.
அதே காலத்தில் தமிழ்நாட்டில் பொது விநியோக முறையும் பரந்துபட்ட முறையில் விரிவாக்கப்பட்டது. பொது விநியோக முறையின் விரிவாக்கமும் முன்னேற்றமும் அனைத்து அரசியல் ஆட்சிகளிலும் தொடர்ந்தன. இவை தவிர மேலும், வேளாண்மை, விளைபொருள் உற்பத்தி, சந்தைப்படுத்தல், விநியோகம் ஆகியவற்றிற்கான செயல்முறைத் திட்டத்தை வலுப்படுத்துவதற்கு தொடர் நடவடிக்கைகளை மாநில அரசாங்கம் செயல்படுத்தியது. அது, நிலச்சீர்திருத்திற்கான சட்டத்தை இயற்றவும் கூட செய்தது. எனினும், நிலச்சீர்திருத்தம் கறாராக அமுல்படுத்தப்பட்ட கேரளாவைப் போல ல்லாமல், தமிழ்நாட்டில் நிலச்சீர்திருத்தத்தின் நோக்கங்கள் சாதிக்கப்படவில்லை. ஏனெனில் நிலச்சீர்திருத்தத்தில், பல சமரசங்கள் செய்து கொள்ளப்பட்டன. இதனால் பெரும் நில முதலைகள் தப்பிவிட்டன; அதே சமயத்தில், கோவில்கள், மடங்கள் ஆகியவை (நில உச்சவரம்பிலிருந்து) விதிவிலக்கு அளிக்கப்பட்டுவிட்டன. ஆனால் உண்மையிலேயே மாநிலத்தின் எந்தவொரு முதலமைச்சரும், பொதுவிநியோக முறையில் குறுக்கிடுவதற்கு துணிந்ததில்லை. மாறாக அதனை மேம்படுத்தும் நடவடிக்கைகளையே மேற்கொண்டனர்.
மாநில முதலமைச்சர் கருணாநிதி மாநிலத்திற்கான பொதுவிநியோக முறையை தயாரித்தார். அவர், உணவு விநியோக கழகத்தை உருவாக்கினார்; அத்துடன் அதற்கான தானிய சேகரிப்பு கூடங்களையும் அரவை ஆலைகளையும் உருவாக்கினார். மாநிலத்தின் அனைத்துக் குடும்பங்களுக்கு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டன. கூட்டுறவு அமைப்புகளும், உணவு விநியோக கழகமும் தொடங்கப்பட்டதுடன் மாநில முழுமைக்கும் நியாயவிலைக் கடைகள்களை திறக்குமாறு உத்திரவிடப்பட்டன. எம்.ஜி.ஆர் (எம்.ஜி.ராமச்சந்திரன்) மாநில முதல்வர் பொறுப்பை ஏற்றபோது அப்போதைய பொதுவிநியோக முறைக்கு ஒரு உற்சாகத்தை ஏற்படுத்தினார். அவர், மாநில நியாய விலைக் கடைகளின் எண்ணிக்கையை தொடர்ந்து அதிகப்படுத்தினார். அப்போதெல்லாம் மத்திய உணவு கழகத்தின் ஒதுக்கீடு போதுமற்றதாக இருக்கும்போதெல்லாம் தேவைப்படும் கூடுதல் அரிசி, பக்கத்து மாநிலங்களின் திறந்தவெளிச் சந்தைகளிலிருந்து வாங்கப்பட்டது. அடுத்தடுத்து வந்த மாநில அரசாங்கங்களும் பொதுவிநியோக முறையானது பயனாளிகளுக்கு பயனளித்தது என்பதை உறுதிப்படுத்தின. 1970ஆம் ஆண்டுகளில் இருந்த 500 நியாய விலைக் கடைகள் 35 ஆயிரம் கடைகளாக அதிகரித்துள்ளன. இந்த மாநிலத்தில் 90 சதவீத்திற்கும் அதிகமான குடும்பங்கள் பொதுவிநியோக முறையுடன் இணைப்பு கொண்டுள்ளன; இது நாட்டிலேயே அதிகபட்சமாகும்.
உலகமயமாக்கலுக்குப் பிறகு, மானியங்கள் குறித்த கொள்கைகள் அரசியல்ரீதியான முடிவுகளுடன் இணைக்கப்பட்டன. பொது விநியோக முறையானது ஏழைகளுக்கும் ஆதரவு தேவைப்படுவோர்களுக்கும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் என ஆதரவு அளிக்கப்பட்டது. தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டமும் (National Food Security Act) கவனத்திற்கு உள்ளான பொதுவிநியோக முறையாக கருதியது; அதே சமயத்தில் இந்த பரந்த பொது விநியோகத்தை தமிழ்நாடு வெற்றிகரமாக தொடர முடிந்தது. இதன் விளைவாக, மத்திய அரசின் மானியத்தை தவிர்த்து பொதுவான உணவு தானிய விநியோகத்திற்கு ஆகும் கூடுதல் செலவை மாநில அரசாங்கம் ஏற்க வேண்டியதாகியது. இந்த வகையில், பொது விநியோக முறையை தொடர்ந்து மேற்கொள்வதற்கு மாநில அரசாங்கம், ஒவ்வொரு ஆண்டும் ரூ.6500 கோடி அளவிற்கு செலவழித்து வருகிறது.
மத்திய அரசின் உணவு தானிய கழகத்திடமிருந்து கிடைத்து வந்த தானிய ஒதுக்கீடு, ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு பெருமளவில் குறைந்துவிட்டது. ஏனெனில், ஆரம்பத்தில் நிலைமைக்கு ஏற்ப, தானிய ஒதுக்கீடு செய்து வந்த இந்திய உணவுக் கழகம், இதற்குமாறாக, தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை (National Food Security Act) அமுல்படுத்தி அதன் விதிகளின் அடிப்படையில் தானிய ஒதுக்கீடு செய்தது. இதனால் தமிழ்நாட்டில் பொது விநியோகமுறையில் குடும்ப அட்டைகளுக்கு தானியம் வழங்குவதில் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால், தேவைப்பட்ட கூடுதல் தானியம், இந்திய உணவுக் கழகத்திடமிருந்தே வெளிச் சந்தை விலையில் வாங்கப்படுகிறது. இப்படியாக இவ்வாறு, தமிழ்நாட்டின் பொது விநியோக முறையானது இந்திய உணவுக் கழகத்தினையே பெருமளவிற்கு சார்ந்திருக்கிறது, அதாவது இந்திய உணவுக் கழகத்திடமிருந்து வாங்கும் தானியத்தின் அளவு, ஒரு கிலோ அரிசி ரூ, 3 என்ற விலையில் இந்திய உணவுக் கழகத்தால் வழங்கப்படும் அரிசிக்கு தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்படியான மானியம் ஆகிய இரண்டு அம்சங்களின் அடிப்படையில் தமிழ்நட்டின் பொது விநியோகமுறை, இந்திய உணவுக் கழகத்தை பெரிதும் சார்ந்திருக்கிறது. நெல்கொள்முதல், அதனை இருப்பு வைத்தல், இந்திய உணவுக் கழகத்தின் சேமிப்பிலிருந்து கிடைக்கும் அரிசி ஒதுக்கீடு ஆகியவற்றில் ஏதேனும் இடைஞ்சல் ஏற்படுமானால், மாநிலத்தின் பொது விநியோக முறை பாதிப்புக்குள்ளாகும்.
கேள்வி: விவசாயிகளின் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச விலையை திரும்பப் பெறும் எண்ணம் எதுவும் தன்னிடம் இல்லையென மத்திய அரசாங்கம் கூறுகிறது; ஆனாலும் மத்திய அரசாங்கத்தின் வேளாண் சட்டங்களில் குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்து எந்தக் குறிப்பும் இல்லாதது பற்றி விவசாயிகள் தங்களுடைய அச்சத்தை தெரிவித்துள்ளனர். விளைபொருள் உற்பத்தியிலும் வர்த்தகத்திலும், இருப்பு வைத்தலிலும், வேளாண் பொருட்களுக்கு விலை நிர்ணயிப்பதிலும் கார்பரேட்களையும் பெரும் வர்த்தகர்களையும் அனுமதிப்பதென மத்திய அரசாங்கம் அனுமதித்துவிட்டது. ஆனால், அது இப்பவும் தாம் விவசாயிகளுக்கு அனுசரணையாகவே இருப்பதாகவும் விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பதை உறுதிப்படுத்தும் என்றும் கூறுகிறது. இது சாத்தியம்தானா?
பதில்: மத்திய அரசின் புதிய விதிகளின் கீழ் ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ள மாற்றங்களுடன் குறைந்தபட்ச ஆதரவு விலையும், கொள்முதலும் தொடரும் என மத்திய அரசாங்கம் வாக்குறுதி அளித்துள்ளது; இந்நிலைமையில், இந்திய உணவுக்கழகம், இதனுடைய கூடுதலான தானிய கையிருப்பு, மிகுந்த அளவில் மானியத்துடன் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தானிய ஒதுக்கீடு என்பது பற்றியெல்லாம் ஏன் கவலைப்பட வேண்டும் என்று யாரேனும் ஒருவர் வாதிடலாம். ஆனால் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு ஆதரவாக எந்தவொரு சட்டமும் இருக்கவில்லை. தேசிய உணவு பாதுகாப்புச் சட்டமும் நிரந்தரமானதல்ல. மிக முக்கியமாக குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது சந்தை விலையிலிருந்து வேறுபடுத்தும் ஒரு தலையீடாகும். அது (குறைந்தபட்ச ஆதரவு விலை) சுதந்திரச் சந்தையுடன் இணைந்து போக முடியாது. ஒரு காரியம், இரண்டு தன்மைகளை கொண்டிருக்க முடியாது.
சந்தை என்பது சுதந்திரமானதாகவோ அல்லது வரைமுறைப்படுத்தப்பட்டதாகவோ (Regulated) மட்டும் தான் இருக்க முடியும். பல துறைகளில் ‘சுதந்திரச் சந்தை’ கொள்கைகளுக்கு சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது; இந்நிலைமையில், குறைந்தபட்ச ஆதரவு விலையை தொடரப் போவதாக அளிக்கப்படும் வாக்குறுதி நம்பிக்கைத் தன்மையுடையது அல்ல; இந்த வாக்குறுதி, வெற்றுத் தன்மையையும் அக்கறையின்மையையுமே தெரிவிக்கிறது. இந்நிலைமை, தமிழ்நாட்டின் பொதுவிநியோக முறைக்கு மிகப் பெரும் அச்சுறுத்தலாகவே உள்ளது என்று நான் அனுமானிக்கிறேன்.
குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது அவ்வப்போதைய மாநில அரசுகளால் எடுக்கப்படும் நிர்வாக முடிவாகும்; இதற்கென சட்டம் எதுவும் இயற்றப்பட்டிருக்கவில்லை. இந்நிலைமையில்மத்திய அரசாங்கத்தின் வேளாண்மைச் சட்டங்கள், வசதியாக குறைந்தபட்ச ஆதரவு விலையை கண்டு கொள்ளவில்லை. இந்தச் சட்டங்கள், விவசாயத்தை வரைமுறைப்படுத்தப்பட்ட சந்தை (Regulated market) யிலிருந்து வரைமுறையற்ற சந்தை (Unregulated Market)யிடம் தள்ளி விடுகின்றன. இந்த நிலைமையானது இந்திய உணவுக் கழகம் போன்ற பொது மக்கள் நல அமைப்புகளின் முக்கியத்துவத்தை பயனில்லாமல் ஆக்குகிறது. ஏற்கெனவே, பொதுவிநியோக முறை மூலம் அரிசிக்கு வழங்குவதற்குப் பதிலாக, நேரடியாக பணமாக கொடுப்பது என்ற முறை (நாட்டின் குறிப்பிட்ட பகுதிகளில்) பரிசோதனை முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது; இந்த முறை, விரைவில் ஏனைய பகுதிகளுக்கும் விரிவாக்கப்படலாம்.
விளைபொருளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையானது, விவசாயிகளுக்கு முக்கியமான பங்காற்றியுள்ளது. அறுவடை காலத்தில் நிகழும் விலை வீழ்ச்சியிலிருந்தும் அவசரத் தேவைகளுக்காக நெருக்கடியான நேரத்தில் விவசாயிகள் விளைபொருட்களை விற்கும் போதும் அவர்கள் சுரண்டப்படுவதிலிருந்தும் அவர்களை பாதுகாத்துள்ளது. தமிழ்நாட்டில் வேளாண்மை செய்பவர்களுக்கு குறிப்பாக நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு அவர்களின் வாழ்க்கைக்கு தேவையான வருமானத்தின் ஒரு முக்கியமான ஆதாரமாக இருந்திருந்திருக்கிறது. அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் கொள்முதல், இதில் எவ்வளவோ குறைபாடுகள் இருந்தபோதிலும் கிட்டத்தட்ட 55 ஆண்டுகளாக நெல் விவசாயிகளுக்கு ஆதரவாக இருந்திருக்கிறது. அவர்கள் (விவசாயிகள்) அவர்களின் ஏனைய அனைத்து விளைபொருட்களுக்கான “சுதந்திர சந்தை”யையும் அனுபவித்திருக்கிறார்கள். அவர்களில் எவர் ஒருவரும் வரைமுறைப்படுத்தப்பட்ட சந்தைகளை கைவிடுமாறு அரசாங்கத்திடம் கேட்டதில்லை. அவர்களுடைய புகார்களெல்லாம், அரசாங்கம் சந்தையை போதுமான அளவிற்கு முறைப்படுத்த திரும்பத் திரும்ப தவறிவிடுகிறது என்பதாகத்தான் இருந்திருக்கின்றன. இன்று குறைந்தபட்ச ஆதரவு விலை அளிக்கப்பட வேண்டிய சரக்குகளாக 22 விளைபொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன; இவற்றில் நெல் போன்ற மூன்று அல்லது நான்கு மட்டுமே பிரதான கொள்முதல் பிரிவில் இடம் பெற்றுள்ளன. மற்ற ஏனைய சரக்குகளெல்லாம் குறிப்பிட்ட இடங்களில்தான் கொள்முதல் செய்யப்படுகினற்ன, எல்லா இடங்களிலும் அல்ல. இன்று வரை இதுதான் நிலைமை, வெளிச் சந்தையை ஊக்கப்படுத்தினால், சந்தைப்படுத்தல் சட்டம் (Marketing Act) தானாக காலாவதியாகிப் போய்விடும். அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கட்டுப்பாட்டிலிருந்து பல பொருட்கள் நீக்கப்படுமேயானால் அது, பதுக்கலுக்கே இட்டுச் செல்லும்; இதன் தொடர்விளைவாக கறுப்புச் சந்தை தான் மேலோங்கும்.
கேள்வி: தமிழ்நாட்டில் வரைமுறைப்படுத்தப்பட்ட சந்தைகள் அல்லது மண்டிகள் செயல்படுவதில் அவைகளுக்கு வரம்புக்குட்பட்ட பங்குதான் உள்ளது என்று ஒரு வாதம் உள்ளது. மாநிலத்தில், விவசாய விளைபொருட்களுக்கான சந்தை வரைமுறையற்றதாக ஆக்கப்பட்டால் விவசாயிகளும் வியாபாரிகளும் நேரடியாக வர்த்தகம் செய்து கொள்வார்கள், இது சந்தை விலையை உறுதிப்படுத்தும் என்பது தான் அந்த வாதம். தமிழ்நாட்டின் பின்னணியில் இதைப் பற்றி நீங்கள் விளக்க முடியுமா?
பதில்: தங்களுடைய விளைபொருட்களை வாங்குபவர்களை தேடிப்போய் கண்டுபிடிக்குமாறு யாரும் விவசாயிகளை கட்டாயப்படுத்த முடியாது. விவசாயம், மாநிலத்தின் விவகாரமாகும்; எனவே, விளைபொருட்களின் உபரியின்போதும் சரி பற்றாக்குறையின்போதும் சரி விவசாயிகளுக்கு நியாயமான விலைகளை உறுதி செய்வது மாநில அரசாங்கத்தின் பொறுப்பாகும். விவசாய விளைபொருட்கள் சந்தைப்படுத்தல் சட்டம் (Agricultural Produce Marketing Act) நாடு முழுவதும் ஒரே மாதிரியாக அமுல்படுத்தப்படுவதில்லை. இந்தச் சட்டமானது, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் வலுவானதாக உள்ளது, அதே நேரத்தில், பல மாநிலங்களில் வலுவற்றதாக உள்ளது. இந்தச் சட்டம், கேரளா போன்ற மாநிலங்களில் செயல்படுத்தப்படவில்லை. இப்படியே இந்தச் சட்டத்தை மேலும் நீர்த்துப் போகச் செய்வது, வரைமுறைப்படுத்தப்பட்ட சந்தைமுறையை நீக்கிவிடும், மேலும் விவசாயிகளை, கார்பரேட் பொருளாதார சக்திகள் முன்பு நிறுத்திவிடும். விவசாய பொருட்களை சந்தைப்படுத்தும் கமிட்டிகளும் அவற்றின் மண்டிகளும் சந்தையை வரைமுறைப்படுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்டன. எந்த இடத்திலிருந்தும் செயல்படுத்துவதற்கு தகவல் தொழில்நுட்பங்களை இந்நிறுவனங்களில் பயன்படுத்திக்கொள்ள முடியும். விளைபொருட்களை வாங்குபவர்கள் (வர்த்தகர்கள்) விவசாயிகளிடமிருந்து அவர்களுடைய பொருட்களை வாங்கிக்கொள்ள முடியும். தமிழ்நாட்டில் 26 சந்தைக் கமிட்டிகளின்கீழ் வரைமுறைப்படுத்தப்பட்ட சந்தைகள் மொத்தம் 288 வரை உள்ளன. மண்டிகளுக்கும் குறைந்தபட்ச ஆதார விலைக்கும் ஆதரவான திட்டமும் அரசாங்கத்தின் தலையீடும் சுரண்டல்காரர்களிடமிருந்து விவசாயிகளையும் அவர்களின் விளைபொருட்களை இறுதியாக நுகரக்கூடிய நுகர்வோரையும் காப்பதற்கும் எப்போதும் இருக்க வேண்டும்.
வலுவான பொருளாதார, அரசியல் சக்திகள் சந்தையை கைப்பற்றி, சுதந்திர போட்டியை அழித்தொழிக்கின்றன. இந்த நாட்டில் தொலை தொடர்பு துறையில் என்ன நடந்தது என்பதை நினைவுபடுத்தி பார்க்க வேண்டும். எந்த மூலதனமும் (முதலீட்டாளர்) இந்த நாட்டில் கோடிக்கணக்கில் உள்ள சிறு, குறு விவசாயிகளின் நல்வாழ்வு குறித்து அக்கறை கொள்ளப் போவதில்லை. மூலதனங்கள் லாபங்களை ஏற்படுத்திக் கொள்ளவே இருக்கின்றன; அத்தோடு, சுதந்திரச் சந்தை என்ற பெயரில் முறைகேடான சந்தை அமைப்பையே உருவாக்குகின்றன. ஆகவே, விவசாயத்தையும் விவசாயிகளையும் காப்பதற்கு ஒரு வரைமுறைப்படுத்தப்பட்ட சந்தை அமைப்பு கடைப்பிடிக்கப்பட வேண்டும். இந்தக் காரணத்திற்காகவே, மத்திய அரசாங்கத்தின் வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானவையாகும்.
• • •
நன்றி: ஃப்ரண்ட் லைன் 2020 அக்டோபர் 23 இதழ்.