கிரேக்க மன்னர் மிலின்டரின் கேள்விகள் – நூல் அறிமுகம்
சமகாலத்தில் உலகில் மிக கடுமையான சூழல் நிலவிக் கொண்டிருக்கிறது 1. இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் மீது நூற்றுக்கணக்கான எரிகுண்டுகளை வீசி மக்களைக் கொன்று குவித்து வருகிறது. 2. உள்நாட்டில் பல்வேறு கூச்சலும் குழப்பங்களும் தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக மாநிலங்களின் உரிமையும் அந்தஸ்தையும் குறைக்கும் நோக்கிலும் கல்வியை பொதுப் பட்டியிலிருந்து மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளைத் தடுப்பதிலும் மும்மொழிக் கொள்கை என்னும் போர்வையில் இந்தியையும் சமஸ்கிருதத்தையும் திணிக்கும் நோக்கத்திலும் செயல்படுவதைக் காணமுடிகிறது. 3. தமிழ்நாட்டில் கூட்டாட்சி கொள்கையை எதிர்பார்த்த போது, அமைச்சரவை மாற்றம் என்கின்ற பெயரில் சில மாற்றங்களை மட்டுமே நடத்தி தன்னுடைய மகனுக்கு துணைமுதல்வர் பதவி தமிழ்நாடு அரசாங்கம் வழங்கியுள்ளது. ஆனால் மத்தியில் அரசாங்கம் ஆளும் கட்சியாக வரும்பொழுது தங்களுக்குத் தேவையான அமைச்சர்களைக் கேட்டு வாங்கிக்கொண்டு கூட்டாட்சியை வலியுறுத்துகிறது.
இவை எல்லாவற்றுக்கும் அதிகாரம் மட்டுமே முதன்மையான நோக்கம். அதனால்தான் தனி மனிதனாக இருந்தாலும் அரசியல் கட்சியாக இருந்தாலும் அதிகாரத்தை நோக்கி நகர்வதற்கு முயற்சிக்கின்றனர். ஆனால் அதிகாரத்தை நுகரக்கூடியவர்கள் அனைவருக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும். அதை விடுத்து அதிகாரத்தால் அனைத்தையும் வென்று விடலாம் என்ற எண்ணம் ஒரு காலத்தில் காலாவதியாகி விடும். இதை உலகில் பல்வேறு நாடுகள் தொடங்கி, உள்நாட்டு வரை சொல்ல முடியும் (ஹிட்லர் தொடங்கி தமிழ்நாட்டில் செல்வி ஜெயலலிதா வரை). அதனால் அதிகாரம் வெறும் அதிகாரமாக இல்லாமல் சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் என்று வலியுறுத்தும் தன்மையில் அமைந்திருக்க வேண்டும்.
இதுதான் மனித வாழ்வின் அடிப்படை கோட்பாடு. இந்த கோட்பாட்டின் அடிநாதம் அன்பு. அன்புதான் இந்த உலகத்தில் வாழும் மந்திர சொல். புத்த பிரானும் இவ்வுலக உயர்வுக்கு ஒரு மனிதனுக்கும் இன்னொரு மனிதனுக்கும் உள்ள ஏற்றத்தாழ்வு நீங்கி அன்பை விதைக்க வேண்டும் என்கிறார். இவ்வுலகில் தோன்றிய அனைத்து சமயங்களும் அன்பையும் கருணையும் போதிக்கின்றன. உன்னிடத்தில் நீ அன்பு கூறுவதைப் போல பிறரிடத்தில் அன்பு கூறுவாயாக என்கிறது கிறித்துவ சமயம். அனைவரிடத்திலும் அன்பு செய் என்று வலியுறுத்துகிறது பௌத்தம். உயிர்களிடத்தில் அன்பு வேணும் என்கிறார் பாரதியார். அன்பில்லாத உயிரை எம்புதோல் போர்த்திய உடம்பு என்கின்றார் வள்ளுவப் பெருந்தகை. அன்பைப் பற்றி எண்ணற்ற உதாரணங்களை சொல்லிச்செல்ல முடியும். அதனால் தான் அன்பையும் கருணையும் மிக முக்கியமானது, வேண்டத்தக்கது என்று வலியுறுத்தும் சமயம் பௌத்தம். இன்று உலகில் அதிக சிலைகள் கொண்டவர் இருவர். ஒருவர் இயேசு பிரான் மற்றொருவர் புத்த பிரான். புத்தர் பிறந்த புண்ணிய பூமியை The light of Asia என்கிறார் சர் எட்வின் அர்னால்ட். ஆனால் இந்திய நாட்டில் உருவான சமயம் உலக நாடுகளில் பரவி பௌத்த நாடுகளாகவும் பௌத்தர்களாகவும் வளரும் சூழலில் இந்தியாவில் பௌத்தத்திற்கு பெரிய அங்கீகாரமும் வரவேற்பும் கிடைக்கவில்லை என்று தான் சொல்ல முடியும்.
இங்கு கிரேக்க மன்னர் மிலின்டரின் கேள்விகள் எனும் நூலும் இதையே வலியுறுத்தும் தன்மையில் அமைந்துள்ளது. இந்நூலை தமிழில் மொழி பெயர்த்தவர் பௌத்த அறிஞர் திரு. ஓ.ரா.ந. கிருஷ்ணன் அவர்கள். அவர் இதுவரை பௌத்தம் தொடர்பாக 60க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். மிக அண்மையில் பௌத்த பைபிள் தொகுதி – I,II நூல்களையும் வெளிக்கொணந்துள்ளார். அந்த வகையில் மிலின்டரின் கேள்வி என்னும் இந்நூல் தமிழ்ச் சமூகத்தில் குறிப்பாக பௌத்தர்களுக்கு முக்கியமான நூலாக கருதப்படுகிறது.
தேரவாதத்திற்கு நாகசேனருக்கும், கிரேக்க மன்னர் மிலின்டருக்கும் நடந்த உரையாடலால் உருவானது இந்நூல். நூல் உருவான வரலாறு குறித்து பின்வருமாறு காணலாம். ”ஆப்கானிஸ்தானையும் வட இந்தியாவில் பெஷாவரிலிருந்து பாட்னா வரையிலான பிரதேசங்களையும் வென்று ஆட்சி செய்து வந்தவர் மன்னர் மிலின்டர். அவரது ஆட்சிக்காலம் கிமு 225 – 95. தத்துவ ஆராய்ச்சிகளிலும் உரையாடல்களிலும் விவாதங்களிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் மன்னர் மிலின்டர். பல தத்துவ கருத்துக்களில் அவர் கொண்டிருந்த ஐயங்களை தீர்த்துக் கொள்ள பல சமய கணக்காளர்களோடு உரையாடி இருக்கிறார். ஆனால் அவரது ஐயப்பாடுகள் தீரவில்லை. இறுதியில் பிக்கு நாக சேனரை சென்று காண்கின்றார் மிலின்டர். இருவருக்கும் இடையே நிகழ்ந்த உரையாடல்களின் தொகுப்பு தான் இந்நூல் (ப.11).
அதேபோன்று பௌத்தர்களின் அடிப்படையான கருத்துக்களை உள்ளடக்கியது. மறுபிறவி தத்துவம், அநாத்மக் கோட்பாடு, கர்ம வினை கோட்பாடு ஆகியவற்றை தெளிவாக விளக்குகிறது. மலின்டரின் கேள்விகளுக்கு நாகசேனர் கூறும் பதில்களில் அவர் பயன்படுத்தியுள்ள உதாரணங்களும் உவமைகளும் பேசுபொருள்களை உள்ளங்கை நெல்லிக்கனி போல விளக்கமாக தெளிவுபடுத்தி உள்ளன. இந்த உதாரணங்களும் பௌத்த கலாச்சாரத்திற்கும் இடையே நிகழ்ந்த முதன்மை முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக, எதிர்காணலாக இது கருதப்படுகிறது. இந்த உரையாடலுக்குப் பிறகு மன்னர் மிலின்டர் தமது அரச பதவியை துறந்து ஆட்சிப் பொறுப்பை மகனிடம் ஒப்படைத்து விட்டு பௌத்த சங்கத்தில் சேர்ந்து துறவியாகி இறுதியில் தேரவாத பௌத்த சமயத்தின் உன்னத இலக்கான அரகந்தர் நிலையை அடைந்ததாக கூறப்படுகிறது (பக்.11,12). இதுதான் மிலின்டரின் கேள்விகள் நூல் உருவான வரலாறு. இந்நூலில் மொத்தம் 48 கேள்விகளும் அதற்கான பதிலும் இடம் பெற்றுள்ளன. இவ்வனைத்து கேள்விகளும் பௌத்தம் பற்றி அறிந்து கொள்வதற்கான அடிப்படை தேவைகள்.
பௌத்தம் பற்றி அறிமுக நிலையில் இருப்பவருக்கும் அல்லது பௌத்தம் குறித்து தேடலில் ஈடுபடுபவர்களுக்கும் பயன்படக்கூடிய சிறந்த நூல் என்று கூற முடியும். பௌத்தம் என்றால் என்ன?, பௌத்த மார்க்க வினா விடை உள்ளிட்ட நூல்களின் வரிசையில் மிலின்டரின் கேள்விகள் நூலும் ஒப்பிட்டு சிந்திக்கதது. முன்னர் குறிப்பிட்டதை போன்று 48 வினாக்கள் இடம் பெற்றிருந்தாலும், சில இடங்களில் ஆழமான புரிதலுக்கு பல துணைக் கேள்விகளும் கேட்கப்படுகிறது. அந்த கேள்விக்கான பதிலிலிருந்து முழுமையான புரிதலைத் தருகிறது.
இதில் இடம் பெற்றுள்ள அனைத்துக் கேள்விகளும் முக்கியமானவை. தவிர்க்க முடியாதவை என்றாலும் அவற்றுள் சில வினாக்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக காண முடியும். அதில் தியானத்தின் தனி சிறப்பு, மெய்யறிவு, மறுபிறப்பு, பொருள்களின் ஆக்கக்கூறுகள், ஆன்மா, புலணுர்வு – அறிவுணர்வு, விஞ்ஞானம், நிர்வாணம், நிப்பானம் இப்படி மிலின்டரின் அர்த்த முடிய எண்ணற்ற கேள்விகளை கேட்கும் பொழுதும், அதற்கு எந்த சலிப்பும் வெறுப்பும் இல்லாமல் மிக நிதானமான முறையில் பிக்கு நாகசேனர் பதிலளித்துள்ளார். அவற்றுள் சில கேள்விகளையும் பதிலையும் பின்வருமாறு காணலாம்.
கேள்வி: நாகசேனரே, மரணத்திற்குப் பிறகு, ஒரு தனிப்பட்ட வகையில் குறிப்பிட்டு காட்ட முடியாத ஓர் உயிர் அல்லது மனிதராக மறுபிறப்பு கொள்ளாத யாராவது இருக்கிறார்களா?
பதில்: சிலர் அப்படியே மறுபிறப்பு கொள்கிறார்கள், சிலர் அப்படி இல்லை.
கேள்வி: அவர்கள் யார்?
பதில்: பழிப்பாவச் செயல்களைச் செய்யாதவர்கள் மறுபிறப்புக் கொள்கிறார்கள். பழிப்பாவச் செயல்களில் ஈடுபடாமல் தூய்மையான வாழ்க்கை வாழ்ந்தவர்கள். ஆசைகளை அறுத்தவர்கள் மறுபிறப்புக் கொள்வதில்லை.
கேள்வி: நீங்கள் மறுபிறப்புக் கொள்வீர்களா?
பதில்: நான் மரணம் அடையும் போது எனது இதயத்தில் மேலும் வாழ வேண்டும் என்கின்ற வேட்கையோடு மரணம் அடைவேன் ஆகின், நான் மறுபிறப்புக் கொள்வேன்; இல்லையெனில் இல்லை (பக்.29,30). இப்படி நூல் முழுவதும் விரிவாகச் செல்கிறது.
இந்நூலை பௌத்தத்தை பின்தொடர்பவர்கள் மட்டுமல்ல, எல்லோருக்குமான ஒரு நூலாகத் திகழ்கிறது. காரணம் தியானம் பற்றிய நிறைய புரிதல்களையும் மன அமைதியையும் நல்லொழுக்க பாதையை தேர்வு செய்வதையும் அதை பின்தொடரும் அவசியத்தையும் வழிமுறைகளையும் விரிவாக எடுத்து இயம்புகிறது. அறிவு பசி கொண்டு பின் செல்லும் வாசகர்களுக்கு இந்நூல் அவர்களின் சிந்தனைக்கு தீனி போடும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
நூல் அறிமுகம் எழுதியவர் :
பேரா. எ.பாவலன்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.