கிரெட்சன் கிரீன் (Gretchen Green) என்பவர் ஒரு பிரபலமான மருத்துவர், ஒரு கதிரியக்க நிபுணர்,கல்வியாளர் மற்றும் ஆய்வாளர் ஆவார். இவர் 2013 ஆம் ஆண்டில் இல்லினாய்ஸ் கணிதம் மற்றும் அறிவியல் அகாடமியிலிருந்து முன்னாள் மாணவர் சிறப்பு தலைமைத்துவ விருதைப் பெற்றார். இவர் வணிக விண்வெளிப் பயணத்தின் மூலம் விண்வெளிக்குச் சென்ற முதல் பெண் மருத்துவர் என்ற வரலாற்றைப் படைத்தார்.
ஆரம்ப வாழ்க்கை

இவர் 1986 ஆம் ஆண்டு விண்வெளி முகாமில் ஒரு பயிற்சியில் ஈடுபட்டார். இது வாழ்நாள் முழுவதும் ஆய்வுக்கான ஆர்வத்தைத் தூண்டியது. பின்னர் இவர் ஒரு குழு பயிற்சியாளராகத் திரும்பினார். இவர் தனது 16 ஆவது வயதில், உலகப் பசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அமெரிக்க முழுவதும் சைக்கிள் ஓட்டினார். இது சாகசத்துடன் இணைந்த ஒரு சேவைச் செயலாகும்.
இவர் நரம்பியல் அறிவியலில் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்தார். பின்னர் மருத்துவம் மற்றும் மருந்தியல் வரலாற்றில் மருத்துவ அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். அதன் பிறகு பிரவுன் பல்கலைக்கழகத்தில் கௌரவ மருத்துவப் பட்டம் பெற்றார். இங்கு இவர் படிக்கும்போது விண்வெளி முகாம் குழு பயிற்சியாளராக தனது கற்பித்தல் பயணத்தைத் தொடங்கினார்.
தொழில்

இவர் மருத்துவத்தில் ஒரு தொழிலைத் தொடர்ந்தார். இவர் வட கரோலினாவில் உள்ள வேலி ரேடியாயாலஜி பிரிவில் ஒரு கதிரியக்கவியலாளர் ஆனார். இவர் பெண்கள் இமேஜிங்கில் நிபுணத்துவம் பெற்றார். இவர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நோய் அறிதல் ஆய்வுகளைச் செய்தார். மேலும் முக்கியமான சுகாதார முடிவுகள் மூலம் நோயாளிகள் மற்றும் மருத்துவர்களை வழி நடத்தினார்.
இவர் மருத்துவ வரலாறு குறித்த ஆராய்ச்சி மற்றும் அமெரிக்க மருத்துவ சங்கத்தின் மகளிர் மருத்துவர்கள் காங்கிரஸில் தீவிரமாகச் செயல்பட்டார். இவர் பெண்கள் இமேஜிங் தலைப்புகள் மற்றும் மருத்துவத்தில் பெண்களின் வரலாறு குறித்து தேசிய அளவில் விரிவுரை செய்கிறார். இவர் சக ஊழியர்களுடன் இணைந்து மார்பக இமேஜிங் குறித்த இரண்டு மருத்துவ பாடப் புத்தகங்களை எழுதியுள்ளார்.
விண்வெளி

இவர் 2022 ஆம் ஆண்டில் வட துருவத்திற்கு ஒ பயணம் செய்தார். விண்வெளி தயாரிப்புக்காக பூமியின் மிக மோசமான நிலப்பரப்புகளில் பயிற்சி எடுத்தார். விண்வெளி முகாம் முன்னாள் மாணவர் வாரியத்தின் தலைவராகவும் பணியாற்றினார். இவர் 2023 ஆம் ஆண்டு முதல் அமெரிக்க விண்வெளி மற்றும் ராக்கெட் மைய கல்வி அறக்கட்டளை வாரியத்தில் பணியாற்றி வருகிறார்.
விண்வெளிப் பயணம்
இவர் 2025 ஆம் ஆண்டு மே 31 அன்று ப்ளூ ஆரிஜின் NS-32 பயணத்தின் மூலம் விண்வெளிக்குச் சென்றார். இது ஒரு துணை சுற்றுப்பாதை விண்வெளிப் பயணமாகும். ராக்கெட் ஏவப்பட்ட போது எதிர்பார்த்த அளவுக்கு சத்தமாக இல்லை. ஆனால் முடுக்கம் உடனடியாக சக்தி வாய்ந்ததாக இருந்தது. ஒரு வானளாவிய கட்டிடத்தில் மிக வேகமாக லிஃப்டில் மேலே செல்வது போல் உணர்ந்தார்.
வானம் நீல நிறத்தில் இருந்து அடர் கருப்பு நிறத்திற்கு மாறுவதைக் கண்டார். பூமியை விட்டு வெளியேறியவுடன் திடீரென்று அவர் மிதந்தார். எடை இல்லாமல் அவர் ஒரு புரட்டலைச் செய்தார். ஜன்னலுக்கு வெளியே பார்த்த போது பூமி முழுவதும் மேதத்தால் மூடப்பட்டிருந்தது. விண்வெளியின் கருமை, வளிமண்டலத்தின் மெல்லிய நீலக் கோடு மற்றும் மேகத்தால் மூடப்பட்ட பூமியின் மென்மையான, வெள்ளை வளைவு ஆகியவற்றைக் கண்டார். அது வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட அழகாக இருந்தது என்றார்.
எழுதியவர் :

✍️ – ஏற்காடு இளங்கோ
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளதிற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
