காட்டுக்கோழி
ஆம் கொரோனா காலம் கொஞ்சம், இல்லை ரொம்பவே கொடூரமாகத்தான் இருந்தது, இருக்கின்றது. அலுவலகங்கள் இல்லை, பள்ளி, கல்லூரிகள் இல்லை, நண்பர்கள், உறவினர்கள் சந்திப்புகள் இல்லை… இப்படி பல ‘இல்லை’களுடன் கொரானாவோடு வாழப் பழகியிருந்தாலும் அதை மட்டும் அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. புரியவில்லையா? அசைவத்தையும் அசைவ பிரியர்களையும் தான் கூறுகிறேன். கறிக்கடைகளின் திறப்பிற்குப் பிறகு கூடிய கூட்டமே இதற்குச் சாட்சி. குறிப்பாக அசைவ உணவுகளின் பட்டியலில் சிக்கனுக்கு என்றுமே டாப் ரேங்க் தான். அதிலும் கொரானாவிற்கு பிறகு ‘சிக்கனை விட நாட்டுக்கோழி சாப்பிடுங்க அதான் உடம்புக்கு நல்லது’ என்பது போன்ற குரல்கள் வலுப்பெறத் துவங்கியுள்ளன. இப்படி மனிதர்களின் பல பயன்பாடுகளுக்காக வளர்க்கப்படும் நாட்டுக்கோழி முதல் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் யானை வரை மனிதரோடு நெருங்கி வாழும் உயிரினங்கள் அனைத்தும் ஒரு காலத்தில் காட்டுயிர்களாகவே இருந்துள்ளன.
மெதுவாக அதன் பயன்பாடுகளைத் தெரிந்து கொண்டோ அல்லது ஏதோ ஒரு சூழலில் ஏதாச்சியாக நடந்ததைக் கவனித்தோ இந்த உயிரினங்கள் மனிதர்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்திருக்கலாம்.
கிழக்கு ஆசியா பகுதிகளில் வசித்தவர்கள் மூங்கிலிலிருந்து வரும் மூங்கில் அரிசியைக் கவனித்துப் பயன்படுத்த ஆரம்பித்தனர். சிவப்பு காட்டுக்கோழியும் அதே மூங்கில் உள்ள வாழ்விடங்களில் தான் வாழ்ந்து வந்தது. இதைக் கவனித்த மக்கள் உணவுக்காக இதனைப் பயன்படுத்த ஆரம்பித்தனர். இதனைப் பிடித்து சொந்தமாகத் தனிப்பட்ட முறையில் வளர்க்கும் பொழுது இதன் முட்டைகளையும் உண்ண ஆரம்பித்தனர்.
இவர்களின் முப்பட்டானான காட்டுக்கோழி பற்றித் தான் இன்றைக்கு நாம் பார்க்கப்போகிறோம்.
இதன் ஆங்கிலப்பெயர் – Grey Junglefowl. காட்டுக்கோழியும், சிவப்பு கோழியான நாம் வளர்க்கும் வீட்டுக்கோழியும் 2.6 மில்லியன் வருடங்களுக்கு முன்னதாக தனித்தனி இனங்களாகப் பிரிந்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். திறந்தவெளிகள், புல்வெளியற்ற அடர்ந்த காட்டுப்பகுதிகளில் இக்கோழிகள் வாழ்வதால், இதனைக் காட்டுக்கோழிகள் என அழைத்திருக்கலாம்.
இதன் அறிவியல் பெயர் – Gallus sonneratii (Temminck, 1813)
Sonneratii – Pierre Sonnerat (1748–1814)
பியெர்ரே சொனெரேட் (Pierre Sonnerat) அவர்களின் நினைவாக இப்பெயரில் அழைக்கப்படுகிறது. பிரெஞ்சு இயற்கையாளர், களப்பணியாளர், எழுத்தாளர், காலணி ஆதிக்கத்தின் பொழுது நிர்வாகியாக இருந்தார்.
இவர் பல்வேறு தாவரங்கள், விலங்குகள் பற்றிய குறிப்புகளை நமக்குக் கொடுத்துள்ளார். ஆதலால் தாவர இனங்களில் பேரினமாகவே இவருடைய பெயரைப் பயன்படுத்தி வருகின்றனர்.
பாண்டிச்சேரி, தற்போது ஆந்திரப் பிரதேச பகுதியில் உள்ள யாணம் ஆகிய இடங்களில்1774 முதல் 1781 வரை பணியாற்றியுள்ளார். பாண்டிச்சேரியில் மட்டும்1786 முதல் 1813 வரை பணியமர்த்தப்பட்ட இவர் 1813ல் ஐரோப்பா நாட்டிற்கு திரும்பினார்.
(பறவையைப் பார்த்து படம் வரைந்து கொண்டிருப்பவர் – Pierre Sonnerat)
சீனாவில் உள்ள விளச்சி என்ற மரத்தை பற்றி முதன் முதலில் முழு விவரங்களையும் நமக்கு அளித்துள்ளார். Crocidura (or Diplomesodon) என்ற தாவர வகையில் உள்ள பேரினம், இவருடைய ஆய்வுக்கட்டுரை மூலமாக வைத்தே வரையறுக்கப்பட்டுள்ளது.
இரண்டு தொகுதிதிகள் கொண்ட புத்தகங்களை வெளியிட்டார். அதில் முதல் தொகுதியில் இந்தியாவைப் பற்றியும், இரண்டாம் தொகுதியில் சீனா, பர்மா, மடகாஸ்கர், மாலதீவுகள், சிலோன், இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய பகுதிகளை பற்றியும் எழுதி வெளிட்டுள்ளார். இந்த புத்தகத்தில்உள்ள ஓவியங்களை இவரே வரைந்துள்ளார். இவர் தாவரவியலாளரான பியெர்ரே பொய்வரே (Pierre Poivre) என்பவரின் மருமகன் என்பது கூடுதல் தகவலாகும். இக் காட்டுக்கோழியின் ஆங்கில பெயர் சொன்னேரட்டி (Sonneratii) என்று இவருடைய பெயரிலேயே அழைக்கிறோம்.
இந்த கோழிகள் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை முட்டையிடும். நான்கு முதல் ஏழு முட்டைகளையிட்டு அடைகாக்கும். குஞ்சுகள் 20 முதல் 21 நாட்களுக்குள் பொரிந்து வெளிவரும். இதனைப் பெட்டைக் கோழிகள் பராமரிக்கும். சேவல்கள் பொதுவாக 860 – 1,250 கிராம் வரையிலும், பெட்டைக் கோழிகள் 560 – 620 கிராம் எடை வரையிலும் வளரக்கூடியவை. இவை 5 ஆண்டுகள் வரை உயிர் வாழக்கூடியவை.
இக்கோழி பெரும்பாலும் தரைப்பகுதியில் தங்களது நேரத்தைக் கழித்தாலும் எதிரிகளிடமிருந்து தப்புவதற்காக மரங்களின் மேல் பறந்து தாவக்கூடியன. காட்டுக் கோழிகள் விதைகளையும், பூச்சிகளையும் உணவாக உண்கின்றன. குறிப்பாக இதன் குஞ்சுகளுக்கும் இதனையே உணவாகத் தரும். காட்டுக்கோழிகள் காடுகளில் விதை பரவலுக்கும் முளைப்புக்கும், பெருமளவில் உதவுகின்றன.
காட்டுக்கோழிகள் எப்போதும் இடம் பெயர்வதில்லை. பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு அமைப்பு 2012 ஆம் ஆண்டுவரை நடத்திய ஆய்வின்படி முன்பு இருந்த காட்டுக் கோழிகளில் சுமார் 30 சதவீதம் தற்போது அழிந்துவிட்டதாகவும், இப்போது இதன் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து வருவதாகவும் அறிவித்துள்ளது. இதற்குக் காரணம் காட்டுப்பகுதியில் ஏற்பட்டு வரும் ஆக்கிரமிப்புகளும் காடழிப்புமாக இருக்கலாம். காட்டுக்கோழிகளைப் பார்த்து இரசித்துப் பாதுகாப்பதே வனத்திற்கு நாம் செய்யும் நன்மையாகும்.
தரவுகள்
-
https://www.sciencedaily.com/releases/2008/02/080229102059.htm
-
https://www.sciencedirect.com/science/article/pii/S105579032030316X
முனைவர். வெ. கிருபாநந்தினி
பறவைகள் ஆராய்ச்சியாளர்
தொடர்புக்கு: knlifescience01@gmail.com
முந்தைய தொடரை வாசிக்க:
பெயர் சொல்லும் பறவைகள் – முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 2: ரிச்சார்டு நெட்டைக்காலி – முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 3: பச்சைக்கிளி – முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 4 (Green Cheeked Parakeet) – முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 5 – லோட்டன் தேன்சிட்டு (Loten’s Sunbird) | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 6 – செட்டிகதிர்க்குருவி | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 7 – Yellow-eyed Pigeon | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 8 – Jerdon’s Nghtjar (பக்கி) | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 9 – நீலகிரி காட்டுப்புறா | முனைவர். வெ. கிருபாநந்தினி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.