“குஜராத் கோப்புகள்”  2016 ல் முதல்பதிப்பாக வந்து அதே மதத்தில் இரண்டாம் பதிப்பையும் கண்ட நூல்.
     இதன் ஆசிரியர் ராணா அய்யூப் ஒரு பெண் பத்திரிகையாளர். டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் தெஹல்கா இணைய பத்திரிகையின் எடிட்டராக இருந்தவர். ஒரு துணிச்சலான புலனாய்வுப்பணியை திறம்பட செய்யும் திறன் வாய்ந்தவர். சுதந்திர பத்திரிகையாளர். இவரது புலனாய்வுக்கட்டுரைகளின் “அம்பலப்படுத்தல் “காரணமாக 2010ஆம் ஆண்டு அமித்ஷா சிறை செல்வதற்கு வழிவகுத்தார். 2011ஆம் ஆண்டு பத்திரிகை சேவைக்கான சான்ஸ்க்ருதி விருது இவருக்கு வழங்கப்பட்டது.
2001 லிருந்து 2010வரையிலான காலகட்டத்தில் குஜராத்தில் நடைபெற்ற கலவரங்களுக்கும், என்கவுண்டர்களுக்கும்  காரணங்களை புலனாய அந்தமாநிலத்திற்கு செல்கிறார். இவருடைய அறிக்கையின் அடிப்படையில்தான் உள்துறை அமைச்சராக இருந்தவர்  மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது என்று தெரிந்தபின்பும் தைரியமாக மீண்டும் குஜராத் சென்று இந்நூலில் கூறப்பட்டுள்ள எல்லா செய்திகளையும் சேகரிக்கிறார். இவர்தான் ராணா அய்யூப் என்று தெரிந்தால் உயிருக்கு உதிரவாதமில்லை என்ற நிலையில் தைரியமாக குஜராத் செல்கிறார். பெயரை மாற்றி வைத்துக்கொள்கிறார். இப்போது இவர் பெயர் மைதிலி தியாகி. உத்தரபிரதேச மாநிலத்தில் ஒரு காயஸ்தா குடும்பத்தில் பிறந்தவர் என்று அடையாளத்தை மாற்றிக்கொள்கிறார். இந்த ஸ்டிங் ஆபரேஷனில் இவருக்கு உறுதுணையாக இருந்தவர் மைக் என்ற 19வயது பிரான்சு மாணவர். பரிமாற்றம் திட்டத்தின்கீழ் இந்தியாவிற்கு வந்தவர், ராணா கேட்டுக்கொண்டதினால் அவருக்கு உதவுகிறார்.
நாக்பூரில் இருக்கும்போது அங்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டதை கூறுகிறார். பெரும்பான்மை பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் சிலர் அரசால் கைது செய்யப்படுகின்றனர். காரணம் பகத்சிங் மற்றும் சந்திரசேகர ஆஸாத் ஆகியோர்களின் புத்தகங்களை வைத்துக் கொண்டிருந்ததால் நக்ஸ்லைட்டுகள் என்று குற்றம் சாட்டி சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தக்கொடுமையக் கண்டு இவருக்கு ஒருமாதிரியாகிவிடுகிறது, மருத்துவரிடம் சென்று காண்பித்ததில் அதனால் ஒன்றுமில்லை என்று கூறி அனுப்பிவிடுகிறார், இதற்குப் பின்னர்தன் குஜராத் செல்கிறார்.
குஜராத்தில் உள்துறை அமைச்சராக இருந்த ஒருவருக்கு  மிக நெருக்கமானவராக இருந்ததாக வதந்தியில் சிக்கிய போலீஸ் அதிகாரி அபய சூட சாமாவிற்கு மிக நெருக்கமானவராக இருந்தவர் சோராபுதீன் ஷேக். அவர்தான் என்கவுண்டரில் கொல்லப்படுகிறார்.
அகமதாபாத்தில் ஒரு விடுதியில் தங்குகிறார். சினிமா தயாரிப்பாளர் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொள்கிறார்.
இந்த ஸ்டிங் ஆபரேஷன் முடிந்து செல்லும்போது அந்தப்பிரான்ஸ் மாணவன் எழுதிவைத்த கடிதத்தின் வார்த்தைகள் “மைதிலி இனி உங்களை நீங்களே கவனமாகப் பார்த்துகொள்ளுங்கள் “என்று எழுதிவைத்து செல்கிறான் என்றால் இந்த ஆபரேசனால் ராணாவுக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய ஆபத்தை உணர்ந்திருந்தான் 19வயது நிரம்பிய அந்நியநாட்டு மாணவன். அப்படியென்றால் உண்மை எவ்வளவு கொடூரமாக இருக்கும் என்று எண்ணும்போது நமக்கு கலவரமாகத்தான் இருக்கிறது.
தன்னுடைய ஆபரேஷனுக்கு தேவைப்பட்ட அதிகாரிகள், அரசியல் வாதிகள் என்று அனைவரையும் சந்திப்பதற்கு இவருக்கு முதன்முதலாக உதவியவர் குஜராத் மொழி நடிகர் நரேஷ் கன்னோடியா ஆவார். இவர் மூலமாக போலீஸ் அதிகாரி ஜி. எல். சிங்கால் என்பவரை சந்திக்க முயலுகிறார்.
அதற்கு முன்னதாக அந்த நடிகரின் உதவியுடன் பெண் மருத்துவரும், சட்டமன்ற உறுப்பினருமான மாயா கோட்னானியை சந்திக்க முடிகிறது. அந்த மருத்துவர் மாயா என்பவர் குஜராத் கலவரங்களின் போது தீவிரமாக இயங்கியவர் என்று ஆசிரியர் கூறுகிறார். அவரின் மருத்துவமனைக்குள் உள்ளே நுழையும்போது, துப்பாக்கியுடன் இருந்த இரண்டு மெய்காவலர்களைத் தாண்டித்தான் செல்லவேண்டியிருந்தது. மைதிலி என்ற பெயரைக்கேட்டதும், சீதா பெருமாட்டியின் பெயரல்லவா என்று மகிழ்ச்சியடைந்தார். ஆனால் மைக் ஒரு வெளிநாட்டினன் என்று அறிந்து அவனை வெறுப்புடன் நோக்கினார். தீவிர rss தொண்டர். இவரின் வாக்குமூலத்தில், “என்னை கலவரங்கள் நடக்கும்போது பயன்படுத்திக்கொண்டு இப்போது தூக்கியெறிந்து விட்டார்கள் “என்கிறார். மேலும் கோர்தான் ஜடாபியா என்பவர் அப்போது குஜராத்தின் உள்துறை அமைச்சராக இருந்தவர். அவைரையும் இப்போது தூக்கியெறிந்துவிட்டனர் என்றும் கூறுகிறார்.
ஜி எல் சிங்கால் ஒரு தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த அதிகாரி. அவருடனானப் பேட்டியில் அவர் கூறியது, “எவரேனும் எங்களிடம் ஏதேனும் புகாருடன் வந்தால், நாங்கள் அவரை திருப்தி படுத்திவிட்டோம் என்றால் அரசாங்கத்தை நிலைகுலையச்செய்துவிடும், நாங்கள் அரசுக்கு சாதகமாக நடந்துகொண்டால் புகார் அளித்தவரை திருப்தி பண்ணமுடியாது. போலீசாகிய நாங்கள் இருவருக்குமிடையில் சிக்கிக்கொண்டுள்ளோம்.
அரசுடன் சமரசம் செய்துகொள்ளாமல் அந்த அமைப்பில் ஒரு அதிகாரியக்கத்தொடர்வது, பணிபுரிவது அவ்வளவு ஒன்றும் எளிதில்லை.
ஒரு தடவை நீங்கள் சமரசம் செய்துகொண்டீர்கள் என்றால் பின்னர் நீங்கள் அனைத்துடனும் சமரசம் செய்துகொள்ளவேண்டி இருக்கும். உங்கள் சிந்தனை, மனசாட்சி இப்படி எல்லா மட்டங்களிலும் சமரசம் செய்துதானாகவேண்டும்.
அரசியல்வாதிகள் எந்த நிலையிலும் அவர்களின் நிலையை பாதுகாத்திடவே விரும்புவர். நம்மைப்பற்றிய அக்கறையெல்லாம் வந்துவிடாது. “
என்று பேட்டியளிக்கிறார்.
ராஜன் பிரியதர்சி மாநிலத்தின் உயர் போலீஸ் அதிகாரிகளில் ஒருவர், அவர் அளித்த பேட்டி.
“நான் எவ்வளவு பெரிய அதிகாரியாக இருந்தாலும் தன்னுடைய கிராமத்தில் நான் இன்னும் தீண்டத்தகாதவனாகவே உள்ளேன்.
அவர் ஒவ்வொருவரையும் முட்டாளாக்கிக்கொண்டிருக்கிறார், மக்களும் முட்டாளாக்கப்படுகிறார்கள். (அவர் என்பது வாசிப்பவருக்கு புரியும் என நினைக்கிறேன் ).
அமைச்சரின் கட்டளைக்கிணங்க சோராபுதீனையும், துளசி பிரஜாபதியையும் அவர்கள் தீர்த்துக்கட்டினார்கள்.
ஜூனாகாத் காவல்துறைத்தலைவராக இருக்கும்போது, உள்துறை செயலாளரிடமிருந்து எனக்கு ஒரு உத்தரவு வந்தது, அந்த மூன்று இஸ்லாமியர்களையும் கொன்றுவிடுபடி, இந்த உத்தரவு வரும்போது அவர் குறிப்பிட்ட அந்த மூன்றுபேரும் என் எதிரில்தான் இருந்தனர், அவர்களால்தான் அந்தக்கலவரம் கட்டுப்படுத்தப்பட்டது, அதனால் உங்கள்
 உத்தரவை செயல்படுத்தமுடியாது என்று கூறிவிட்டேன்.
இந்த அரசாங்கம் ஒரு மதவெறி மற்றும் ஊழல் அரசாங்கமாகும். 1985கலவரத்தை இப்போதுள்ள அமைச்சர் தான் எப்படியெல்லாம் தூண்டிவிட்டேன் என்று பெருமையடித்துக்கொள்வார்”, என்றார்.
அசோக் நாராயணன். உள்துறை செயலாளராக இருந்தவர்.
பா. ஜ. க ஆட்சியில் இருக்கும்போது விஸ்வஹிந்த் பரிஷத்தின் பேரணிக்கு தடைவிதித்தவர்.
சங்கேத மொழியில் தகவல் பரிமாறி கலவரங்கள் தூண்டப்பட்டது. அந்த ஏரியாவில் கலவரம் எதுவும் நடக்கவில்லை, பார்த்துக்கொள்ளுங்கள் என்றுதான் தொலைபேசியில் தெரிவிப்பார்கள் அடுத்த நொடி அங்கே கலவரம் நடக்க ஆரம்பிக்கும். அதனால் இதைவைத்து தூண்டுபவர்களை கைது செய்யமுடியாது.
அவர்களுக்கு ஒத்துழைப்பு தராததால் என் பதவி உயர்வு மறுக்கப்பட்டது.
டைரக்டர் ஜெனரலாக இருந்த சக்கரவர்த்தி அவர்களுக்கு உடன்படாததால் அவருக்கும் பதவி உயர்வு மறுக்கப்பட்டது.
கோத்ராவில் இருந்த இறந்தவர்களின் உடல்கள் அகமதாபாத்திற்கு வந்ததால் மக்கள் உணர்ச்சிவயப்படுவதற்குக் காரணமாக அமைந்தது.
ராகுல் சர்மா என்ற நேர்மையான அதிகாரி கலவரங்களை கட்டுப்படுத்த முயன்றார், அதனால் அவர் மாற்றப்பட்டு ஓரம்கட்டப்பட்டார். பின்னர் அரசால் கொடுக்கப்பட்டது நெருக்கடியில் விருப்ப ஓய்வுக்கு தள்ளப்பட்டார்.” என்றார்.
ஜி. சி. ரெய்கர். உளவுத்துறை தலைவராக இருந்தவர்.
“கலவரங்கள் நடந்த அந்த மூன்று மாதங்களையும் மறக்கவேண்டும் என நினைக்கிறேன்.
அரசை ஆதரித்தவர்கள் தவிர மற்ற நாங்கள் அனைவரும் நிலைகுலைந்து விரக்தியில் இருந்தோம்.
கலவரங்கள் அந்தக்கட்சிக்கு பெரும் வாய்ப்பாக அமைந்தது.
வாய்வழி உத்தரவுகளினால் ஆதாயம் அடைந்தவர்கள் அரசியல்வாதிகளே.
ஒரு பள்ளியில் இருந்த இஸ்லாமிய குழந்தைகளை ராகுல் சர்மா காப்பாற்றியதோடு, தாக்கவந்தவர்களை கைது செய்தார். அதனால் அவர் உடனே இங்கிருந்து தூக்கியடிக்கப்பட்டார்.
நேரடியாக அவர்களால் என்னை ஒன்றும் செய்யமுடியாது, மறைமுகமாக என்னை கொல்லப்படுவதற்கு அவர்கள் நடவடிக்கை எடுக்கலாம் ஆனாலும் இங்கே ஜனநாயகம் இன்னும் இருக்கிறது, எனவே என்னைபோன்றவர்கள் இன்னும் உயிருடன் இருந்துகொண்டிருக்கிறோம். “என்றார்.
பி சி பாண்டே. அகமதாபாத் கமிஷனராக இருந்தவர்.
“போலீசார் பொதுவான சமூக சூழ்நிலையிலிருந்து ஒதுங்கி இருக்கமுடியாது. சமூகத்தின் உணர்வுநிலை மாறும் சமயத்தில் போலீசாரும் அதன் ஒரு அங்கமாக மாறுவார்கள், அந்த உணர்வுகள் அவர்களிடமும் ஒட்டிக்கொள்ளும். “
இப்படி சொன்னதைவைத்து இவர்மீது ஒரு மதிப்பீட்டிற்கு வரலாம்.
RSS தான் குஜராத் பாஜக அரசின் முதுகெலும்பாகும். அதனால்தான் உள்துறைக்கு மட்டும் rss காரர்களை மட்டும்தான் நியமிப்பர். முக்கியமான இலாக்காவிற்கு நம்பகமான ஆட்கள் தேவையென்று கருதுவார்கள்தானே.
தெஹல்கா ஒரு மஞ்சள் ஏடு
குல்தீப் சர்மா என்ற ஒரு போலீஸ் அதிகாரி முதல்வரிடம் சென்று உங்களின் உள்துறை அமைச்சர் ஒரு போக்கிரி என்று புகார் அளித்தார். அதனால் அவர் கம்பளித்துறைக்கு மாற்றப்பட்டார்.
டீஸ்டா செதல்வாட் என்ற சமூக ஆர்வலரை இவர் போக்கிரி என்கிறார்.
கலவரம் நடந்ததால் குஜராத் சர்வதேச அளவில் கவனிக்கப்பட்டது. எதிர்மறையாக இருந்தாலும் தெரிதல்  என்பது நல்லதுதானே.”
சக்கரவர்த்தி. கலவரங்கள்போது காவல்துறைத்தலைவர்.
“உங்களை வளர்த்தெடுக்கும் அமைப்பு ஒன்றில் தவறாக ஈடுபட்டிருக்கும்போது, அதிலும் அதிகார பசியுடன் நீங்கள் இருக்கும்போது அந்த அமைப்பின் கட்டளைக்கு கட்டுப்பட்டு, தலைசாய்த்துதான் இருக்கவேண்டும்.
முடிந்த அளவிற்கு நான் எதிர்தரப்பை காப்பாற்ற முயற்சி செயதேன், ஆனால் எதுவும் ஒரு எல்லை மட்டும்தானே.
நான் ஒரு விஷயத்தை அரசின் கவனத்துக்கு கொண்டுவரத்தான் முடியும். அது என்னுடைய எல்லை. அதற்குமேல் தவறு நடந்தால் நான் அதற்கு பொறுப்பேற்கமுடியாது.
விஸ்வஹிந்த் பரிஷத் என்பது பாஜகவின் ஒரு அங்கம்.
தலைமை செயலாளர் சுப்பாராவ் அரசின் மனம் கோணாமல் நடந்துகொண்டதால் ஓய்வு பெற்ற பிறகு எரிசக்தி முறைப்படுத்தல் ஆணையத்திற்கு தலைவராகியுள்ளார்.
ஹரேன் பாண்டியா, கேசுபாய் பட்டேல் அமைச்சரவையில் உள்துறை அமைச்சர். அவர் ஒருநாள் அவரது காரில் பிணமாக கிடந்துள்ளார். துப்பாக்கிக்குண்டுகளால் உடல் துளைக்கப்பட்டுள்ளது. காரில் ரத்தம் காணப்படவில்லை. அவரை கொன்றதாக முப்தி சபியான் என்பவர் ஒரு முஸ்லீம் மதகுரு குற்றஞ்ச்சட்டப்படுகிறார், அவன் எப்படியோ நாட்டைவிட்டு தப்பி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது, அதற்கடுத்த சிலநாட்களில் அவனுடைய குடும்பமும் இங்கிருந்து தப்பிச்செல்கிறது. குஜராத் வரலாற்றின் மாபெரும் அரசியல் கொலை என்று இந்த விஷயத்தை நூலாசிரியரிடம் மும்பை போலீசின் புகழ்பெற்ற என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டான தயாநாயக் கூறியுள்ளார். அவருடைய உடலில் ஒரு குண்டு கீழே விதைப்பையிலிருந்து சுடப்பட்டு நெஞ்சு வரை ஏறி நின்றுள்ளது. அவரின் தந்தைமட்டும் இது அவனுடைய அரிசியல் எதிரிகளால் செய்யப்பட்டது என்று அவரின் இறுதிக்காலம் வரை சொல்லிக்கொண்டிருந்தார். இதுவரையிலும் அது கண்டுபிடிக்கமுடியாத ஒரு வழக்காக இருக்கிறது.
அரசியல் அதிகாரத்திற்காக எந்த நியாயமும் பார்க்கவேண்டியதில்லை என்று ஒளரங்கசீப் கதையே நமக்கு உணர்த்துகிறது. அதிகாரம் என்பது பாவங்களினால் வருவது போலும். நயவஞ்சகமும், நம்பிக்கைத்துரோகமும், காலைவாரிவிடுவதும், மனசாட்சியை அடகு வைப்பதும், காட்டிக்கொடுத்தலும், கலைப்பிடிப்பதும், காரியம் ஆனஉடனே கழுத்தைப்பிடிப்பதும் என்றாகி போனது.
இந்தப்புத்தகத்தைபடித்ததும் எனக்கு சத்யராஜ் அரசியல்வாதியாக நடித்த ஒரு படம்தான் நினைவுக்கு வருகிறது. அந்த பாடத்தில் ஆரம்பத்தில் தேங்காய் பொறுக்கிக்கொண்டிருப்பார். பின்னர் ராஜராஜசோழனாகி விடுவார்.
இந்த நூலில் உள்ள உப்பை மட்டுமே உங்களிடம் பகிர்ந்துள்ளேன் நண்பர்களே. காரமும் மாங்காயும் நூலில் உள்ளது. படித்தால் பிரமித்துப்போவீர்கள்.
என்ன ஒரு கொடுமையான விஷயம்னா, இவ்வளவு உயிரை பணயம்வைத்து செய்திகளை சேகரித்து கொண்டுபோய் தெஹல்கா நிறுவனத்தில் கொடுத்தார் ராணா அய்யூப். ஆனால் அந்த நிறுவனம் இதை வெளியிட மறுத்துவிட்டது. வேறு வழியின்றி புத்தகமாக்கி விட்டார்.
தைரியமான பொண்ணு.
நூல் =குஜராத் கோப்புகள்
ஆசிரியர் =ராணா அய்யூப்
தமிழில் =ச. வீரமணி
வெளியீடு= பாரதி புத்தகாலயம்
விலை =ரூ. 170/
அன்புடன் =பெ. அந்தோணிராஜ் 
தேனி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *