லட்சத்தீவில் குஜராத் மாடல் – பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம் | தமிழில்: ச.வீரமணி
Image Source: Green Humour

லட்சத்தீவில் குஜராத் மாடல் – பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம் | தமிழில்: ச.வீரமணிலட்சத்தீவு யூனியன் பிரதேசம் என்பது சிறு சிறு தீவுகள் பலவற்றை உள்ளடக்கிய ஒன்றாகும். இதில் சுமார் 65 ஆயிரம் மக்கள் வசிக்கிறார்கள். இங்கே மிகவும் அமைதியுடனும் பரஸ்பரம் அன்புடனும்  வாழ்ந்து கொண்டிருந்த இம்மக்கள் மீது இரக்கமற்ற ஆட்சியாளர்கள் இப்போது இவர்களின் வாழ்க்கையையும், வாழ்வாதாரங்களையும், உணவையும், கலாச்சாரா உரிமைகளையும் பறிக்கும் விதத்தில் காட்டாட்சியைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்கள்.

லட்சத்தீவில் கொள்ளை நோய், கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்று வடிவத்தில் முதலில் வரவில்லை. மாறாக அது 2020 டிசம்பரில் புதிய நிர்வாகஸ்தர் (administrator) பதவியேற்றுக்கொண்டதன் மூலமாக வந்தது. அதுவரையிலும் அங்கே நிர்வாகஸ்தர்களாக இருந்த அனைவருமே ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக இருந்தார்கள். முதன்முறையாக, குஜராத்திலிருந்து ஓர் அரசியல்வாதி பிரபுல் கோடா பட்டேல் என்பவர், குஜராத்தில் முன்பு சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர், 2011இல் குஜராத்தில் நரேந்திர மோடி முதலமைச்சராக இருந்த காலத்தில் உள்துறை இணை அமைச்சராக இருந்தவர், அத்தீவுக்கு நிர்வாகஸ்தராக நியமனம் செய்யப்பட்டார்.

முன்பு இந்த நபர் தாத்ரா மற்றும் நாகர் ஹாவேலி மற்றும் டாமன் – டையு ஆகியவை ஒன்றாக இணைக்கப்பட்ட யூனியன் பிரதேசத்திற்கும் நிர்வாகஸ்தராக இருந்தார். அப்போது அவர் அங்கே டாமன் கடற்கரைகளில் இருந்த பழங்குடியினரின் வீடுகளை இடித்துத் தரைமட்டமாக்கி, அவர்களை வீடற்றவர்களாக மாற்றினார். இதனை எதிர்த்திட்டவர்களில் பலரை சிறையில் அடைத்தார்.  இவ்வாறு அங்கே பல்வேறு மோசமான நடவடிக்கைகளை மேற்கொண்டு பிரச்சனைக்குரிய நபராக மாறி இருந்தார்.

அந்த நபர்தான் இப்போது லட்சத்தீவுக்கு வந்திருக்கிறார். இங்கே அவர் இந்துத்துவாவையும் நவீன தாராளமயத்தையும் கலந்து குஜராத் மாடலைப் புனைந்துகொண்டிருக்கிறார். லட்சத்தீவில் வாழும் மக்களில் 99 சதவீதத்தினர் முஸ்லீம்களாவார்கள். இவர்கள் இப்போது  ஆட்சியாளர்களின் இந்துத்துவா பரிசோதனைக்கு மிகவும் கொடூரமான முறையில் உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள்.பட்டேல் மக்களின் நிலவுரிமைகள் மீது முழுமையாகத் தாக்குதலைத் தொடுத்திருக்கிறார். லட்சத்தீவு வளர்ச்சி அதிகார ஒழுங்குமுறைப் படுத்தல் வரைவு, நகரத் திட்டமிடலுக்காகவோ அல்லது இதர வளர்ச்சி நடவடிக்கைகளுக்காகவோ, மக்கள் அனுபவித்து வந்த சொத்துக்களை அவர்களிடமிருந்து பறிப்பதற்கோ அல்லது மாற்று இடங்களுக்கு அவர்களை விரட்டுவதற்கோ வகை செய்கிறது. இராட்சசத்தனமான இந்தக் கொள்கையின்கீழ் கட்டிடங்கள், பொறியியல் கூடங்கள், சுரங்கங்கள் மற்றும் அகழ்வாராய்ச்சி இடங்கள் என எதுவாக இருந்தாலும் வளர்ச்சி நடவடிக்கைகளுக்குத் தேவை என்று கூறி எடுத்துக்கொள்ள ஆட்சியாளர்களுக்கு அனுமதி அளிக்கிறது. இது, தீவுக்கூட்டத்தின் மிகவும் வலிமையற்ற புவியியல் அமைப்புமுறையை (eco-system) அழித்திடும்.

பட்டேல் கால்நடைப் பண்ணைகளை மூடிவிட்டார். அதற்குப் பதிலாக அமுல் நிறுவனத்திடம் பால் பொருட்களை சப்ளை செய்திடக் கேட்டுக்கொண்டிருக்கிறார். அரசின்கீழ் பல்வேறு துறைகளில் பணியாற்றிவந்த நூற்றுக்கணக்கான தற்காலிக மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப் பட்டிருக்கிறார்கள்.

இவை எல்லாவற்றையும்விட மிகவும் மோசமான தாக்குதல் என்பது மீனவர்கள் மீது ஏவப்பட்ட தாக்குதலாகும். இங்கே வாழும் மக்களில் பெரும் பகுதியினர் மீன் பிடி தொழிலை நம்பி வாழ்பவர்கள்.  அவர்கள் கடற்கரைகளில் தங்களுடைய மீன் பிடி வலைகள் மற்றும் உபகரணங்களை வைப்பதற்காகக் கட்டி வைத்திருந்த தற்காலிகக் கட்டுமானங்களை, ஆட்சியாளர்கள் கடற்கரைப் பாதுகாப்புச் சட்டத்தினை (Coast Guard Act) மீறிய நடவடிக்கைகள் என்று கூறி இடித்துத் தகர்த்தெறிந்துவிட்டார்கள்.

மக்களின் உணவு உட்கொள்ளும் பழக்க வழக்கங்களிலும் தாக்குதல்கள் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. பள்ளிக்கூடங்களிலும், அரசாங்கம் நடத்திவரும் விடுதிகளிலும் அசைவ உணவு வகைகள் அளிப்பது நிறுத்தப்பட்டுவிட்டன. மாடுகளைக் கொல்வதோ, விற்பதோ, வாங்குவதோ சட்டவிரோதமாக்கப்பட்டிருக்கிறது. மக்களின் மத உணர்வுகள் மற்றும் கலாச்சார உணர்வுகளின் அடிப்படையில் இத்தீவுகளில் மது விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இப்போது நான்கு தீவுகளில் சுற்றுலாவை மேம்படுத்துகிறோம் என்ற பெயரால் மது விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

தேர்தலில் போட்டியிட, இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருப்பவர்களுக்குத் தடை விதிக்கும் விதத்தில் பஞ்சாயத்துச் சட்டம் திருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. முஸ்லீம்கள் எப்போதும் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றிருப்பார்கள் என்ற இவர்களின் இழிவான பிரச்சாரத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

மேலும் கேரளாவுடன் இத்தீவு மக்கள் பாரம்பர்யமாக வர்த்தக உறவுகளையும், பொருளாதார உறவுகளையும் வைத்திருப்பதைத் துண்டித்திடும் விதத்திலும் ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. லட்சத்தீவிலிருந்து கப்பல்கள் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள பெய்போர் துறைமுகத்(Beypore port)திற்கு சரக்குகளை எடுத்துச் சென்றுகொண்டிருந்தார்கள். இப்போது புதிதாகப் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவுகளின்படி லட்சத்தீவிலிருந்து சரக்குகள் கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூர் துறைமுகதிற்குத்தான் எடுத்துச் செல்லப்பட வேண்டும்.

What's happening in Lakshadweep Islands, why are people protesting against  the Administrator? | The Hindustan Gazette

லட்சத்தீவுகளில் 2020ஆம் ஆண்டு முடியும் வரையிலும் கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் இல்லாது இருந்து வந்தது. கொரோனா வைரஸ் தொற்றுப் பரவாது தடுப்பதற்காக, பிரதான நிலத்திலிருந்து தீவுக்கு வருபவர்களிடம் கடும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்ததன் காரணமாக இது சாத்தியமானது. உதாரணமாக எவரொருவரும் யூனியன் பிரதேசத்திற்கு வந்தால் அவர்கள் கட்டாயமாகப் பதினான்கு நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டார்கள்.

எனினும், இப்போதைய ஆட்சியாளர்கள், இத்தகைய கட்டுப்பாட்டு விதிகளையெல்லாம் நீக்கிவிட்டார்கள். இதற்குப் பதிலாக ஒரு மறுதலிப்பு ஆர்டி-பிசிஆர் (negative RT-PCR) அறிக்கை போதும் என்று கூறி விட்டார்கள். இதன்பின்னர் ஜனவரியில் கோவிட் தொற்று பாதிக்கப்பட்ட முதல் நபர் கண்டறியப்பட்டார். இப்போது ஏழாயிரத்திற்கும் மேலானவர்கள் இத்தொற்றுக்கு இதுவரை ஆளாகியிருக்கிறார்கள். இது மொத்த மக்கள்தொகையில் பத்து சதவீதத்திற்கும் அதிகமாகும்.

ஆட்சியாளர்களுக்கு எதிராகக் கருத்துக்கூறுபவர்கள் மீது எதேச்சாதிகார ஒடுக்குமுறையைப் பயன்படுத்துவதிலும், இதற்காக கொடுங்கோன்மை சட்டங்களைப் பயன்படுத்துவதும் குஜராத் மாடலின் மற்ற வடிவங்களாகும். இங்கே கொண்டுவரப்பட்டிருக்கிற குண்டர்கள் கட்டுப்பாடு சட்டம் ஒருவரை சமூக விரோத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்காக ஓராண்டு வ்ரை தடுப்புக்காவலில் வைத்திட வகை செய்கிறது. இதுவரையிலும் மிகவும் குறைந்த குற்ற விகிதம் இருந்துவந்த இடத்தில்தான் இந்தச் சட்டம் கொண்டுவரப் பட்டிருக்கிறது. ஏற்கனவே ஆட்சியாளர்களுக்கு எதிராகக் கிளர்ச்சிப் போராட்டங்களில் ஈடுபட்டவர்களைக் கைது செய்திடும் நடவடிக்கைகளும், ஊடகங்களை ஒடுக்கும் நடவடிக்கைகளும் தொடங்கிவிட்டன. இணைய வழி சமூகத் தளங்கள் அனைத்தும் மூடப்பட்டுவிட்டன. மூன்று பள்ளி மாணவர்கள்கூட சமூக ஊடகங்களில் நிர்வாகஸ்தருக்கு செய்திகள் அனுப்பினார்கள் என்பதற்காக சமீபத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

மிகவும் அமைதியான சொர்க்கபூமியாக இருந்த லட்சத்தீவு இப்போது அமைதியற்ற நரகமாக மாறியிருக்கிறது.  மோடி-அமித் ஷா இரட்டையரின் ஓர் ஏஜண்டாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கும் நிர்வாகஸ்தரின் இந்துத்துவா பரிசோதனைகளே இதற்குக் காரணமாகும். ஏனெனில் லட்சத்தீவு யூனியன் பிரதேசத்தின் நிர்வாகஸ்தரான பட்டேல், அமித் ஷாவின் கீழ் உள்ள மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு மட்டுமே பதில் சொல்லவேண்டியவராவார்.முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள பிரதேசத்தில், பட்டேலின் கொள்கைகள் காஷ்மீர் அனுபவத்தையே வெளிப்படுத்திக் கொண்டுள்ள போதிலும், இதன் உண்மையான மாடல் இவர்கள் குஜராத்தில் பின்பற்றியது போன்றதாக இருந்து வருகிறது. அதாவது சிறுபான்மையினர் சமூகத்தின்மீது இந்துத்துவா கொள்கைகளைத் திணிப்பது, தங்களுக்கு எதிராகக் கருத்துக் கூறுபவர்கள் எவராக இருந்தாலும் அவர்களை நசுக்குவது, கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக் காலத்திலும்கூட மனித வாழ்க்கை குறித்துக் கிஞ்சிற்றும் கவலைப்படாதிருப்பது ஆகிய அனைத்தும் இவர்கள் குஜராத்தில் பின்பற்றி வந்த மாடல்களேயாகும்.

லட்சத்தீவு மக்கள், தங்களுடைய வாழ்க்கை நடைமுறைகளின்படி ஆட்சியாளர்களின் நடவடிக்கைகளுக்கு அமைதியான முறையில் எதிர்ப்பினைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் மீது ஏவப்பட்டுள்ள தாக்குதல்களுக்கு எதிரான போராட்டத்தில் இவர்கள் தனித்து விடப்படவில்லை. லட்சத்தீவு மக்கள் பேசும் மொழி ஒருவிதமான மலையாள மொழியேயாகும். இத்தகைய லட்சத்தீவு மக்களுடன் கேரளம் காலங்காலமாக மிகவும் நெருக்கமானக் கலாச்சார உறவுகளைக் கொண்டிருக்கிறது. கேரள மக்கள் லட்சத்தீவு மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக ஒட்டுமொத்தமாகக் கிளர்ந்தெழுந்திருக்கிறார்கள். ஆர்எஸ்எஸ்/பாஜக தவிர இதர அனைத்து அரசியல் மற்றும் சமூக ஸ்தாபனங்களும் லட்சத்தீவு மக்களுக்குத் தங்களுடைய ஒருமைப்பாட்டைத் தெரிவித்திருக்கின்றன.

பட்டேல் லட்சத்தீவு யூனியன் பிரதேசத்தின் நிர்வாகஸ்தராக இருப்பதிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் என்கிற கோரிக்கை வலுப்பெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தியாவின் மிகவும் அழகான மற்றும் அமைதிப் பூங்காவாக விளங்கும் லட்சத்தீவுக்கு மீளமுடியாத அளவுக்கு சேதங்கள் ஏற்படுவதற்கு முன்பு, மோடி அரசாங்கம் இந்தக் கோரிக்கைக்குச் செவி சாய்த்திட வேண்டும்.

(மே 26, 2021)Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *