“இன்னாக்கா…! நல்ல நேரமே முடிஞ்சிடும் போல, உன்னும் அந்த டாக்டரை காணமே! அந்த ஆளு வரலன்னாகூட நமக்கு தான்கா பிரச்சனை” என்று பறபறத்தான் தினேஷ்.
“வந்துகிட்டு இருக்காரான்டா! நல்ல நேரம் முடியறதுக்குள்ள வந்துருவார்; தாம்பரம் தாண்டி வந்துட்டாராம்” என்றாள் அக்கா பிரேமா.
பெரிய ஐடி கம்பேனியில் அவுஸ் கீப்பிங் வேலை. குடும்பத்திலேயே இவன்தான் கல்லூரிக்கு படிக்கச் சென்றவன்; பி.ஏ பட்டதாரி. இவன் அப்பா அம்மா எல்லாம் கக்கூஸ் கழுவதான் அங்கு சென்று வந்திருந்தார்கள்.
அக்கா உடையது காதல் திருமணம்தான் எக்ஸ்போர்ட் கம்பேனியில் கூட்டிப் பெருக்குவது மற்றும் எடுபிடி வேலை. அக்காவின் கணவர் மாமா டோமனிக் பள்ளிக்கூடத்தை தாண்டவில்லை என்பதால் செப்டிக் டேங்க் சகதி அள்ளும் வேலையையே பாரம்பரியமாய் செய்து கொண்டு இருக்கிறார்.
அக்காவுக்கு கல்யாணம் முடிந்த வருடமே அப்பா இறந்து போனார். கம்பேனி ஒன்றில் கக்கூஸ் அடைப்பெடுக்கப் போனவர் ஹர்ட் அட்டாக்கில் இறந்துபோனதாக டாக்டர் சட்டிபிகேட் சொல்லியது. காலச் சக்கரம் சுழன்ற வேகத்தில் பத்து வருடங்களை பின்னோக்கி தள்ளியிருந்தது.
“அக்கா! சின்ன்டு ரெடியாயிடான் இல்லக்கா? அப்புறம் டாக்டர் வந்துட்டு; இவன் ரெடியாகம இருக்கப்போறான், டெயிம் இல்ல பாத்துக்க” என்றான் தினேஷ்.
“அதெல்லாம் ஆயிட்டான்! நீ வெளிய போயி டாக்டர் வண்டி வருதான்னு பாரு…” என்றாள் பிரேமா.
துருபிடித்த தகர கேட் கரகரப்பாய் சத்தமிட தெருவில் வந்து பார்த்தான் தினேஷ். தெரு வெறிச்சோடிக் கிடந்தது; ஆகஸ்ட் மாத வானம் லேசாய் தூரத் துவங்கி இருந்தது.
காலையில் ஆறு மணிக்கெல்லாம் இப்ப யாரும் எழுந்துக்கரதே இல்லப்போல; ஒன்றிரண்டு பேர்கள்தான் ரோட்டில் நடமாடிக் கொண்டு இருந்தார்கள். இன்று விடுமுறை நாளும் இல்லை நாட்டின் நூறாவது சுதந்திர தினத்திற்க்கு இரண்டு நாட்கள் விடுமுறை முடிந்து இன்று அடுத்த வேலை நாள். ஆகஸ்ட் 17, 2047 தொடர் இரண்டு நாள் லீவுக்குபின் சேர்ந்தார்ப்போல் அடுத்தநாள் லீவ் போடுவதற்கு அவன் பட்டப் பாடு அவனுக்குத்தான் தெரியும்.
“சிக்…கு முடி வங்கரதே! சிக்…கு முடி வங்கரதே! உங்ககிட்ட வேஷ்டா இருக்குற சிக்கு முடிய எங்க கிட்ட குடுங்க அதுக்கு நாங்க பணம் கொடுக்குறோம். பத்து கிராம் இரநூறு ரூபாய்; இருபது கிராம் நானூறு ரூபாய்; நூறு கிராம் இரண்டாயிரம் ரூபாய்க்கு வாங்கிக்குறோம்” என்று இருசக்கர வாகனத்தில் ஒலிபெருக்கியை அலறவிட்டுக் கொண்டு தெருவில் சென்று கொண்டிருந்தார் அந்த வியாபாரி.
“ஏன்டா இதவெச்சி இன்னாடா பண்ணுவானுங்க” என்றாள் பிரேமா வீட்டு வாசர்படியை துடைத்துக் கொண்டே.
“இத தான் பிஸ்கட்ல போடுறாங்கலாம்; அப்பதான் பிஸ்கட் மொறு மொறுண்டு இருக்குமாம்” என்று தெருவில் நின்று சிரித்துக் கொண்டே வாசலில் உட்கார்ந்து டீயில் பிஸ்கட்டை முக்கி உள்ளே தள்ளிக் கொண்டிருந்த சின்ன்டுவை கிண்டலாய் பார்த்தான் தினேஷ்.
“போ…மாமா; பிஸ்கட்ல போயி யருநாச்சம் முடிய போடுவங்கலா சும்மா உருட்டாதிங்க” என்றான் சின்ன்டு பிஸ்கட் சுவையில் திளைத்தபடி.
“இருவத்தஞ்சி வருஷத்துக்கு முன்னாடி நுறு கிராம் இரநூறு ரூபாய்க்கு வங்குனவனுங்க இப்ப இரண்டாயிரத்துக்கு வாங்குறானுங்க. பத்து மடங்கு ஏறி இருக்கு” என்றாள் பிரேமா.
“பிஸ்கட்டு விலையும்தான் பத்து மடங்கு ஏறி இருக்குது” என்று நக்கலடித்தான் தினேஷ்.
“உக்…கு இதெல்லா ஏறி இன்னா பன்றது அந்த பீ அள்ற வேலைக்கு அன்னைக்கி இன்னா குடுத்தானுங்களோ அதையேதான் இன்னிக்கு குடுக்குறானுங்க; அந்த ஆளை இந்த கப்பு புடிச்ச வேலைய வுட்டு தொலைன்னாலும் என்னய வேற வேலைக்கு யாரும் கூப்புடறது இல்லன்றாரு; அந்த ஆளுக்கு வேற வேலையும் ஒன்னும் தெரியாது. தோ போயிட்டு வந்துடறன்டு போன மனுசன உன்னும் காணம்பாரு” என்று சலித்துக் கொண்டாள் பிரேமா.
இரண்டு வீட்டிற்க்கும் சேர்த்து பெரிய மனுசன் மாமாதான்; அப்பா இறந்தபின் தினேசுக்கு பெண்பார்த்து மணம் முடித்து வைத்தவர் அவர் தான். நல்ல தங்கமான மனுசன் இரண்டு வீட்டிலும் எல்லா முடிவுகளும் அவரே தான் எடுப்பார். இதோ இப்பக்கூட சின்ன்டுவுக்கு இந்த சிப் இம்பிளான்டிங் பங்சனுக்கு எல்லா முடிவுகளும் அவர் மட்டும் தான் எடுத்தார். தாய் மாமன் என்ற முறையில் அதற்க்கான சீருடன் அவன் நேற்று இரவே வந்திருந்தான்.
இதற்க்கு தாய் மாமன் தான் முக்கியம் என்பதாலும்; கடைசியாகத்தான் அப்பாவை கையெழுத்து போட டாக்டர் கூப்பிடுவார் என்பதாலும் வீட்டில் இருந்து ஒரு ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் இருந்த அப்பார்ட்மெண்ட் ஒன்றில் செப்டிக் டேங்க் கிளின் பண்ண காலை ஐந்து மணிக்கே மாமா டோமனிக் சென்றிருந்தார். பங்சனுக்கு பணம் கொஞ்சம் முடை என்பதாலும் ஒரு மணி நேரம் வேலைதான் என்பதாலும் மாமா நேற்று இரவு வந்த இந்த வேலையை ஒப்புக் கொண்டிருந்தார்.
அப்பா காலத்திலெல்லம் ஏதாவது வீட்டு விழாக்கள் என்றால் நூற்றுக்கணக்கான உறவுகளும் நண்பர்களும் வந்திருந்து கூடிக்குலாவி, பேசி சிரித்து, சமையல் காரர்களை வைத்து சமைத்த அல்லது கேட்டரிங்காரர்களிடம் ஆர்டர் செய்து வரவைக்கப்பட்ட உணவை உண்டு பின் அன்பளிப்புகள் வழங்கி வாழ்த்தி செல்லும் வழக்கம் இருந்தது.
ஆனால் இப்போதெல்லாம் அப்படியெல்லாம் இல்லை; அழைக்கப்படுவதோ முப்பது நாப்பது பேர்கள்தான் அதிலும் யாரும் நேரில் வந்து வாழ்த்துவதில்லை. அழைப்பு எப்படி ஆன்லைனில் வாட்சப் அல்லது டெலகிராமில் இருந்ததோ அப்படியேதான் அன்பளிப்பும் வாழ்த்தும் ஆன்லைனில் இருக்கும். அழைக்கப் பட்டவர்களுக்கான உணவுமட்டும் சோமேட்டோ அல்லது வேறு ஏதாவது சேவைமூலம் வீட்டிற்க்கு அனுப்புவது வழக்கமாகிவிட்டது.
இப்போது செலவு குறைந்துவிட்டது போல் தோன்றினாலும் விலைவாசி பலமடங்கு உயர்ந்துவிட்டது. இந்த சின்ன விழாவின் செலவையே சமாளிக்க முடியாமல்தான் மாமா விடிந்தும் விடியாமல் இந்த வேலைக்கு சென்றிருக்கிறார்.
இருபத்தைந்து முப்பது வருடங்களுக்கு முன்பெல்லாம் இந்த சிப் இம்பிளான்டிங் எல்லாம் எதுவும் கிடையாதாம். கொஞ்சம் வருஷமாத்தான் அதுவும் இந்த கட்சி தொடர்ந்து ஆட்சிக்கு வந்த அப்புறம் தான் என்று பக்கத்து வீட்டு ராஜன் தாத்தா சொன்னது நினைவுக்கு வந்தது. எட்டு வயதுக்கு மேல் ஆனவர்களுக்கு எல்லாம் இந்த சிப்பை இடது கையின் பின்பகுதியில் கட்டை விரலுக்கும் ஆட்காட்டி விரலுக்கும் இடையில் உள்ள இடைவெளியில் அதற்கான ஊசியின் மூலம் தோலுக்கு அடியில் வைக்கும் முறை கட்டாயமாக்கப்பட்டு அது சட்டமாக்கப் பட்டுள்ளது. பெரியவர்களுக்கெல்லாம் சிப் வைக்கும் வேலை ஏற்கனவே முடிந்திருந்தது.
இதன் மூலம் அனைவரையும் அரசின் பார்வையில் வைக்க முடியும் அவர்களின் ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்க முடியும் என்பதே ஆட்சியாளர்களின் நோக்கம்; ஆனால் சலுகைகளை எளிதில் மக்களுக்கு வழங்கவே இந்த ஏற்ப்பாடு என்றும் இதன் மூலம் யாரும் விடுபட்டு விடுவது தவிர்க்கப்படும் என்றும் அப்போதைய தொலைக்காட்சி செய்திகள் கலர் கலராய் புலுகியது நினைவுக்குவந்ததால் சிரித்துக் கொண்டான் தினேஷ்.
அந்த சிப்பை ஸ்கேன் செய்தால் அவர்களைப் பற்றி எல்லா விவரங்களும் கணினியின் திரையில் மல மல வென வந்து விழுந்தது. பெயர், ஊர், பிறந்த தேதி, வயது, கல்வித்தகுதி, வங்கிக்கணக்கு விவரம், சொத்து விவரம், தேர்தலில் ஓட்டு போட்டார்களா? இல்லையா? அப்பா, அம்மா, என பலவும் அவற்றுடன் முக்கியமாக சாதியும் மதமும். இது சாதரண ஸ்கேனில்.
மருத்துவமனையில் ஸ்கேன் செய்தால் அவர்களின் இரத்தவகை, எந்த நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார், தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளதா? இல்லையா? இன்னும் என்னென்னவோ தகவல்கள் வந்தது.
போலிஸ் மிஸினில் ஸ்கேன் செய்தால் இன்னும் கூடுதல் தகவல்கள் குற்றவாளியா? இல்லையா? ஆர். சி புக், டிரைவிங் லைசென்ஸ் போன்ற விவரங்கள் கூடுதலாய் வந்தது. இப்படி எல்லா விவரங்களும் அவ்வப்போது அந்த சிப்பில் பதிவது கட்டாயமாக்கப் பட்டிருந்தது; ஆனால் இதை எல்லாம் எட்டு வயதிலேயே ஏன் செய்கிறார்கள் என்று தான் புரியவில்லை. ஒரு வேளை குழந்தையில் இருந்தே அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும் என்று நினைக்கிறார்களோ என்னவோ!
பதினைந்து வயதிற்க்குப்பின் அந்த சிப் நம்பரையேதான் மொபைல் நம்பராக ஆக்டிவேட் செய்து காலத்துக்கும் இருக்க வேண்டும். அந்த சிப்பை நீக்குபவர்கள் நாட்டின் குடிமகன் இல்லை என்றும் தேச துரோகிகள் என்றும் அறிவிக்கப்படுவதுடன் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்படுவார் என சட்டம் இயற்றப்பட்டு இருக்கிறது. அதன் பின் எல்லா அரசின் பயன் பாட்டிற்க்கும் அந்த நம்பர் தான். அரசை பொருத்தவரை சிப் பொருத்தப்பட்டவர்கள் எல்லாம் ஒரு நபர் அல்ல நம்பர்.
இவ்வளவு முக்கியத்துவம் உடையதாக இருப்பதால் தான் இதற்க்கு இவ்வளவு மெனக்கிடல்கள். அப்படியும் மக்கள் போகப் போக மிகச் சாதாரணமாக இந்த நிகழ்வை நினைத்துவிடக் கூடும் என்பதால் இதை பண்பாட்டு நிகழ்வாக மாற்ற வேண்டும் என்பதற்காக ஒரு விழாவாக கொண்டாட மக்கள் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.
தெருவில் தூரத்தில் தெரிந்த கார் ஒன்று அவனை நிகழ்காலத்துக்கு அழைத்து வந்தது.
“அக்கா…! கார் ஒன்னு வருது அவராத்தான் இருக்கும். அவர் சொன்னது எல்லாம் ரெடியா இருக்கானு ஒருமுறை செக் பண்ணிக்கக்க” என்று கேட்டில் இருந்தபடியே கூவினான் தினேஷ்.
டாக்டரை வரவேற்க்க தினேஷ் உடன் சேர்ந்து கொண்டாள் பிரேமா. தூரலின் மங்கலில் தூரத்தில் வெளிர் சிவப்பாய் தெறிந்த கார் காவி நிறத்தில் வந்து நின்றது. டாக்டர் குள்ளமாக குறுந்தாடியுடன் இருந்தார். அவர் நெற்றியில் இருந்த அந்த அடையாளம் அவர் அந்தக் கட்சிக் காரர்தான் என்பதை பார்த்தவுடன் புரிந்து கொள்ள முடிந்தது.
அந்தக் கட்சியை சேர்ந்த டாக்டர்களுக்கு மட்டுமே சிப் இம்பிளான்டேசனுக்கான லைசென்ஸ் வழங்கப்பட்டு இருந்தது; இல்லை என்றால் மிக முக்கியமான இந்த வேலையில் குளறுபடி நடந்துவிடும் என கட்சியும் அரசும் நினைப்பது இயல்புதானே?
டாக்டர் அந்த வித்தியாசமான ஊசியில் சிப்பை லோட் பண்ணியே கொண்டுவந்திருந்தார். சின்ன்டு இப்போது புது உடையில் இருந்தாலும் டாக்டர் வருவதற்க்கு முன் இருந்த சிரிப்பும் விழாவுக்கான கும்மாளமும் தொலைந்துபோய் அழத்துவங்கி இருந்தான். அவனது பிஞ்சுக் கையை பிடித்து அழைத்து வந்த தினேசும் அழுதுவிடுபவன் போலத்தான் இருந்தான். இந்த பிஞ்சு கைகளில் எப்படி ஊசிபோட்டு சிப்பை வைக்கமுடியும் என்று கவலையில் ஆழ்ந்தான்.
“அப்பு..! வலிக்காதுடா சும்மா எறும்பு கடிச்சப்லதான் இருக்கும்; ரெண்டு வாரம் முன்னாடி பக்கத்து வீட்டு சூசன் போட்டுகிட்டா இல்ல தம்பி அது மாதிரிதான்; ஒன்னும் வலிக்காது” என்றால் பிரேமா. இதை எல்லாம் வழிமொழிவதுபோல் சிரித்துக் கொண்டே சின்ன்டுவை அருகில் வரும்படி அழைத்தார் டாக்டர்.
சின்ன்டு “அம்மா….!” என்று அவன் பிஞ்சு குரலில் வீரிட்டு அலறி முடிக்கையில் அவன் கையில் சிப் செலுத்தப்பட்டு இருந்தது. ஊசி குத்திய இடத்தில் லேசாய் ரத்தம் எட்டிப் பார்த்தது. “ஒன்னும் இல்ல; அவ்ளதான்! முடிஞ்சிடுச்சி” என்றார் டாக்டர் டிஞ்சரில் நனைத்த பஞ்சில் ரத்தத்தை துடைத்தபடி.
“திரி டேஸ் இதைப்போடுங்க” என்று வலிக்கான மாத்திரையை கொடுத்துவிட்டு மேலும் மூன்று மாத்திரைகளை கொடுத்து “பீவர் வந்த மட்டும் போடுங்க இல்லன்னா வேணா” என்றபடி கையோடு கொண்டு வந்திருந்த பைலில் இருந்து நாங்கள் முன்பே அரசு அலுவலகத்தில் சமர்பித்திருந்த விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்டிருந்த ஆவணங்கள் அடங்கிய கோப்பை எடுத்தார்.
“இதுல அப்பா அம்மா சைன் பண்ணுங்க….அப்புறம் இன்னைக்குள்ள இன்ஸ்டலேசன் சரியா இருக்கா, டேட்டா எல்லாம் கரக்டா இருக்கான்னு செக்பண்ணா இன்ஸ்பெக்சன் டீமில இருந்து ஆபீசர் வருவாங்க வீட்ட மூடிட்டு எங்கயும் போயிடாதிங்க அது அபென்ஸ்! உங்களுக்கு தெரியுமில்ல?” என்று கேள்விக்குறியுடன் எங்களைப் பார்த்தார் டாக்டர்.
“சார்..அதொல்லா தெரியும். ஆனா… இந்த ஃபாம்ல…சைன் பண்ண தான்… அப்பா இல்ல…வெளியில ஒரு வேலையா… போய்ட்டு வந்துட்றேன்னு போனவரு… இன்னும் வரல…“ என்று தயங்கித் தயங்கி இழுத்தான் தினேஷ்.
“அப்ப பையனுக்கு நீங்க என்ன வேணும்” என்றார் டாக்டர்.
“நான் பையனுக்கு தாய்மாமன்” என்றான் இன்னும் அழுது கொண்டிருந்த சின்ன்டுவை அன்பாய் அருகில் இழுத்து அணைத்தபடி.
“அப்ப ஒன்னும் பிரச்சனை இல்ல, நீங்க கூட போடலாம் வெரிபிகேஷனுக்கு உங்க டாக்குமென்ட் எல்லாங் குடுங்க” என்றார் டாக்டர். அவருக்கான அனைத்தையும் மொபைலில் இருந்து அனுப்பிவிட்டு டோமனிக் மாமாவைப்பற்றிய நினைவில் ஆழ்ந்தான்.
ஒருவேலை தண்ணிய போட்டு மட்டயா ஆயிட்டாரோ, அவரு அப்படி எல்லாம் குடிக்க மாட்டாரே, அந்த வேலையில நாத்தம் தெரியாம இருக்க அளவாதான் சாப்புடுவாரு. வேலை இல்லனா அந்த பக்கமே போவ மாட்டாரு. ஆறு மணிக்கெல்லா வந்துருவேன்னு போனவரு மணி எட்டாவுது உன்னும் காணமே என்ற சிந்தனையுடன் அக்காவைப் பார்த்தான்; அவளும் அதே சிந்தனையில் தான் இருக்கிறாள் என்பது அவளின் கோபம்கலந்த குழப்பமான முகத்தில் தெரிந்தது.
இருவரும் கையொப்பம் இட்டு டாக்டரை வழியனுப்பிய பின்; “நா.. வேண்ணா போயி மாமாவை ஒரு எட்டு பாத்துட்டு வந்துடவாக்கா… அந்த எடம் எங்க இருக்குது” என்றான் தினேஷ்
“நீ யொல்லாம் போனா உங்க மாமாவை தனியா கூட்டியார முடியாது. போதையில அவரு ரெண்டு ஆளா இருந்தாலும் இருப்பாரு. இரு நானும் வரே..” என்று அவனுடன் பைக்கில் ஏறினாள்.
“மயிருக்கு தர்ர பண கூட அந்த கக்கூஸ் அள்ற வேலைக்கி தர்ரதில்ல, அந்த வேலை வேணயான்ன கேக்காம எதுக்கு போவனும்” என்றபடி பைக்கில் அமர்ந்தாள் பிரேமா.
அக்காவின் சம்பளம் வீட்டுச் செலவிற்க்கே பத்துவதில்லை. சின்ன்டுவின் பள்ளிப் படிப்பிற்க்கு மாமாவின் இந்த வருமானம் மற்றும் இவன் வீட்டில் மனைவிக்குத் தெரியாமல் தந்து கொண்டிருந்த பணத்தை வைத்துதான் சமாளித்துக் கொண்டிருந்தாள். மாமாவின் மீதான இவளின் கோபமெல்லாம் சும்மாதான் என்று மனதுக்குள் சிரித்தபடி பைக்கை ஸ்டார்ட் செய்தான்.
அவளை சமாதானம் படுத்தும் விதமாய்; “அக்கா..எதுக்கு மாமாவை கோச்சிக்கிற; மாமா இஷ்டப்பட்டா இந்த வேலைய ஏத்துக்கிட்டாரு நமக்கு பொறக்கும் போதே இந்த வேலதான்னு நம்ப முதுகுல குத்தி வெச்சிருக்கானுங்க; நாம மட்டும் இல்லக்கா இந்த நாத்தம் புடிச்ச வேலைய செய்ற எல்லாரும் இதை விரும்பி சந்தோஷமாவ செய்றாங்க, நம்மல பாக்கும் போதே அருவருப்பாதான் பாக்குறானுங்க; அப்புறம் அவனுங்க அருவருக்குற வேலையதான் நம்மல செய்ய சொல்லுவானுங்க. நமக்கு வேற வேலை யாரும் தர்ரது இல்லக்கா… நான் படிச்சி இருக்கரதால பேண்ட், சட்டை, சூ போட்டுகிட்டு கம்பேனியில கக்கூஸ் கழுவுறேன்; மாமா படிக்கல அதனால லுங்கி கட்டிகினு செப்டிக் டேங்க் அள்றாரு. இங்க நூறாவது சுதந்திரம் இல்லக்கா, ஆயிரமாவது சுதந்திரம் வந்தாலும் நாம சுதந்திரமா கக்கூஸ் தான் அள்ளமுடியும். ஆனா என்ன நம்ப பாட்டன் பூட்டன் மாதிரி பீய பகிடில அள்ளிகினு தெரு தெருவா தூக்கினு அலையல அவ்வளதான்” என்றான்.
“ஏன்டா! மனுசங்களுக்கு சிப் வைக்கிற அளவுக்கு விஞ்சாணம் வளந்து இருக்குது; ஆன இத்தனை காலம் ஆயும் இந்த பீ அள்றதுக்கு ஒரு மிசினை எவனுமே கண்டுபுடிக்க மாட்றானேடா!” என்றாள் ஆற்றாமையுடன் பிரேமா.
“அக்கா…நம்பளை யாரும் மனுசனாவே மதிக்கிறதில்ல அப்புறம் தானே நம்பள பத்தி யோசிக்கிறதுக்கு. நிலாவுக்குள்ள இறக்கி இங்க இருந்தே ஆப்ரேட் பண்ண முடியிறப்போ; செப்டிக் டேங்குல மிசின இறக்கி ஆப்ரேட் பண்ண முடியாத என்ன? மிசினெல்லா கண்டுபுடிக்க, அதை வாங்க பல லட்சம் ஆவுங்கா; ஆயிரம் ரெண்டாயிரத்துல அள்றதுக்குத்தா நாம இருக்குறோமே. அப்புடியே மிசினை கண்டுபுடிச்சாலும் யாரு பீயில போயி ஆப்ரேட் பண்ணுவா! திரும்பவும் நம்பள தான் ஆப்ரேட்டரா போடனும்; நம்மலை எல்லாம் மேல ஏத்திவுட ஒப்புமாக்கா”.
அவன் பேச்சில் மூழ்கி இருந்தவள் திடீர் என்று நினைவு திரும்பியவள் போல்; “ஏய்….இங்கதா..இங்கதா..நிறுத்து! நிறுத்து!” என்று அவன் பைக் அந்த அப்பார்ட்மெண்ட் கேட்டை சில அடிகள் கடந்து விட்டபின் அலறினாள்.
அந்த அப்பார்ட்மெண்ட் புதுப்பொலிவுடன் தான் இருந்தது ஒன்றிரண்டு வருடங்கள்தான் ஆகிஇருக்கும்; ஆனால் அதற்க்குள் எப்படி செப்டிக்டேங்க் நிறம்பி இருக்கும் என்று யோசித்தபடி வண்டியை ஸ்டேண்டு போட்டுவிட்டு; கேட்டில் பதட்டத்துடன் நின்றிருந்த வாட்சுமேனை நெருங்கினார்கள்.
நேரங்கெட்ட நேரத்தில் வந்தவர்களைப் பார்ப்பதுபோல் ஏரிச்சலன முகத்துடனே “எந்த பிளாக்குப்பா, யார பாக்கணும் என்று அவசரகதியில் பறபறத்துக் கொண்டே வருகை பதிவேட்டை தினேசிடம் நீட்டி இதுல எழுது” என்றார் வாட்சுமேன்.
நேரம் காலை 8.20 தான் என்பதால் நோட்டில் பதிவுகள் அதிகம் இல்லை; முதல் ஆளாக மாமாதான் இன் டைம் 5.15 என்றும் பர்பஸ் காலத்தில் செப்டிக் டேங்க் கிளினிங் என்று அவரின் கிறுக்கள் கையெழுத்தில் தமிழில் ஏழுதி இருந்தார். அவுட் டைம் எதுவும் பதியாமல் காலியாக இருந்ததை பார்த்தவன் “அக்கா..! மாமா உள்ள தங்கா இருக்காரு; உன்னு வெளிய எங்கயும் போவல” என்றபடி சிரித்துக்கொண்டே முதலில் இருந்த அந்த பதிவை வாட்சுமேனிடம் காட்டி இவரதான் பாக்கனும் என்றான்.
வாட்சுமேன் பேயை பார்த்தவர் போல் வியர்க்க விறுவிறுக்க கை நடுக்கத்துடன் “நீங்க யாரு” என்றார்.
“நான் அவர் மச்சான், இது என் அக்கா; அவர் வொய்ப் ” என்றான் தினேஷ் அவரின் நடுங்கும் கை விரல்களை பதற்றத்துடன் பார்த்தபடி.
அவசரமாய் போனை எடுத்த வாட்சுமேன் சில தப்படிகள் விலகிச் சென்று யருக்கோ போன் செய்தார். அடிக்கடி இவர்களைப் பார்த்து போனில் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார். பின் “சரிங்க சார்…சரிங்க சார்..”.என்ற படி அவர்களை நெருங்கி “அந்த டி பிளாகுக்கு பின்னாடி போங்க” என்றவர் வேறு எதுவும் பேசாமல் முகத்தை இருக்கமாக வைத்துக்கொண்டு வேறு வேலையை பார்ப்பது பேல் பாவனை செய்யத் தொடங்கினார்.
டி பிளாக் கேட்டில் இருந்து ஒரு இருநூறு அடி தொலைவில் இருந்தது; அது கேட்டுக்கு நேர் எதிராக இருந்ததால் அதன் பின் புறம் இவர்களுக்கு மறைவாக இருந்தது.
செப்டிக் டேங்க் மறைவாதானே இருக்கனும்; முன்னாடியே இருந்தா யாரு வீடு வாங்க வருவாங்க என்று பேசியபடியே டி பிளாக்கின் பக்க வாட்டை இருவரும் நெருங்கி இருந்தார்கள்.
அங்கிருந்து பார்ப்பதற்க்கு கட்டிடத்தின் பின் பகுதி கெஞ்சமாகத்தான் தெரிந்தது. அங்கு சில ஆட்கள் நின்று கொண்டு இருப்பதும் ஒரு தீயணைப்பு வாகனத்தின் பாதியும்தான் மரங்களின் நிழலின் ஊடே மங்கிய ஒளியில் தெரிந்தது. பரபரப்பு தொற்றிக் கொண்ட இருவரும் நடையை ஓட்டம் ஆக்கினர்.
கூட்டம் விலகி வழிவிட மலமும் சகதியும் தோய்ந்த டோமனிக்கின் உடல் செப்டிக் டேங்க் அருகில் கிடத்தப்பட்டு இருப்பதை கண்ட மாத்திரத்தில் “ஐய்யய்யோ…! போய்டியா.. மாமா…!” என ஆற்றல் முழூவதும் ஒன்று திரட்டியதுபோல் கத்தியவள் மயங்கி பிணத்தின் காலடியில் விழுந்தாள்.