முனைவர் என். மாதவன் இடப்புறத்தில் இடம்பெற்றுள்ள, ஆசிரியர்–கூகுள் ஒப்பீட்டை பிரதிபலிக்கும் வண்ண பென்சில் ஓவியத்துடன் கூடிய "குருவா? கூகுலா?" கட்டுரையின் முகப்பு.

குருவா ?  கூகுலா? – முனைவர் என்.மாதவன்

குருவா ?  கூகுலா?

முனைவர் என்.மாதவன்

டெட் முன்கதைச்சுருக்கம்

கல்வி உரிமைச் சட்டம் 2009  ஆசிரியர்களின் கற்றல் கற்பித்தலை மேம்படுத்தும் வண்ணம் ஆசிரியர் தகுதி தேர்வினை (இனி டெட் தேர்வு என அழைப்போம்) வலியுறுத்தியது.  இதனடிப்படையில்  அனைத்து  மாநிலங்களும்   டெட் தேர்வு   நடத்தி ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்கத் தொடங்கின. தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் 2012 மற்றும் 2014 இரண்டு ஆண்டுகளில் டெட் தேர்வை மட்டும் அடிப்படையாக வைத்து ஆசிரியர் பணி அளித்தன. இதற்குப் பின்னர் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக போட்டித் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கத் துவங்கினர். தேர்விற்கு விண்ணப்பிப்போர் உரிய கல்வித்தகுதிகளுடன் டெட் தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும் என்பது கட்டாயமாகியுள்ளது.

பணியிலிருப்போர்க்கும் டெட் ஏன் குறுக்கிட்டது 

டெட் தேர்வு மூலம் தேர்ச்சி பெற்றோர் தலைமை ஆசிரியர் பதவி போன்ற பதவி உயர்வு தங்களுக்கே வழங்கப்படவேண்டும் என சிலர் நீதிமன்றங்களை படிப்படியாக நாடினர். இறுதியாக இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு சென்றபோது செப்டம்பர் 1, 2025 அன்று  உச்ச நீதிமன்றம் 5 ஆண்டுகளுக்கு மேல் பணிக்காலம் உடையோர் அனைவரும் பணியில் நீடிக்கவே அடுத்த இரண்டாண்டுகளுக்குள்ளாக  டெட் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் என தீர்ப்பு வழங்கியது. அவ்வாறு தேர்ச்சி பெறுவோர்க்கு மட்டுமே அடுத்த கட்ட பதவியுயர்வு எனவும் வரையறுத்துள்ளது. இதன் காரணமாக மாநிலம் முழுவதுமே எவ்வித பதவியுயர்வும் யாருக்கும் வழங்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன்  பின்னர் மேல் முறையீட்டிற்காக வழங்கப்பட்ட தீர்ப்பில்  2026 மே 29 அன்று   மேலும் ஓராண்டு நீட்டிப்பு வழங்கியுள்ளது. இதன்படி 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களும் 2028 ஆகஸ்ட் மாதத்திற்குள் டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

எவ்வளவு நபர்களுக்கு பாதிப்பு

இந்தியா முழுவதும் பணியிலுள்ள சுமார் 20 முதல் 30 லட்சம் ஆசிரியர்கள் டெட் தேர்வினை  எழுதித் தேர்ச்சி பெறவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் பணியாற்றி வருகின்ற சுமார் 4.49 லட்சம்  ஆசிரியர்களில் 3.9 லட்சம் இந்த தேர்வினை எழுதியாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் 2011க்கு முன்பாக பணியில் சேர்ந்த  சுமார்  2,5 லட்சம் ஆசிரியர்களும் கேரளா மாநிலத்தில் சுமார்  50,000 ஆசிரியர்களும் இவ்வாறான தேர்வினை எழுதித் தேர்ச்சி பெறவேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுபோலவே மற்ற மாநிலங்களிலும் நிலைமை உள்ளன.

யார் இவர்கள்?

  • ஏற்கனவே 20 முதல் 25 ஆண்டுகள் அர்ப்பணிப்பாக  பணியாற்றிவருபவர்கள்.
  • ஏற்கனவே பல முன்னணி மாணவர்களை உருவாக்கியுள்ள பெருமிதமானவர்கள்
  • பெரும்பாலும் பணிப்பகிர்வில்லா ஆணாதிக்க சமூகத்தில் வலம் வரும்  பெண்  ஆசிரியர்கள்.
  • தாம் கற்பிக்கும் பாடங்கள்  தொடர்புடை அறிவும் பட்டறிவும் பெற்றுள்ளவர்கள்.
  • வயதுக்கேற்ற நினைவாற்றலும், உடல் நலக்கோளாறுகளும் உடையவர்கள்.

சிக்கலில் இருக்குது தேசம்

நீதிமன்றத்தின் ஆணைப்படி  அந்தந்த மாநில அரசுகளால் நடத்தப்படும் இந்த கடினமான டெட் தேர்வில்   ஒருவேளை 2028 க்குள் இந்தியாவில் உள்ள சுமார் 30 லட்சம் ஆசிரியர்களில் பெரும்பாலானோர்   தேர்ச்சி பெறவில்லை என்று சொன்னால் அவ்வாறு உண்டாகும் பல லட்சக்கணக்கிலான ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப இப்படிப்பட்ட பணி அனுபவம் உள்ள ஆசிரியர்கள் எவ்வாறு கிடைப்பார்கள்.

இதற்கு முன்னான முன் உதாரணம் ஏதுமுள்ளதா? 

1980 களுக்கு முன்னர் தமிழ்நாட்டின்  பல்வேறு ஆரம்பப் பள்ளிகளிலும் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றோர் இளநிலை ஆசிரியர்களாகப் (ஹையர் கிரேடு) பணியாற்றிவந்தனர். அரசின் கொள்கைமுடிவின்படி அனைத்து ஆசிரியர்களும் இடைநிலை ஆசிரியர்களாகவே நியமனம் செய்யவேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. அப்படிப்பட்ட  இளநிலைஆசிரியர்கள் அனைவருக்கும் அப்போதைய எஸ்சிஆர்டி மூலம் சிறப்பு கையேடுகள் தயாரித்து  அளிக்கப்பட்டு,அதனடிப்படையில்  தேர்வுகளை நடத்தி தேர்ச்சி பெற்றவர்களை    இடைநிலை ஆசிரியர்களாக மாற்றினர்.

அதுபோலவே தற்போது நீதிமன்ற தலையீட்டால் பாதிக்கப்பட்டுள்ள   ஆசிரியர்களுக்கும் குறிப்பிட்ட  கல்விப்பொருட்களை வரையறை செய்து அதில் பயிற்சி அளித்து,   அந்த பயிற்சியின் இறுதியாக தேர்வினை  வைத்து மதிப்பீடு செய்து அவர்களுக்கு தங்களுக்கான சுயமரியாதையை காப்பாற்றிக்கொள்ள வாய்ப்பளிக்கவேண்டும்

மாறாக இளையோரின் நினைவாற்றலோடு போட்டியிடக்கூடிய நிலையிலிள்ளாதோரின் சுயமரியாதையினை குலைக்கும் செயல்கள் எவ்விதத்திலும் நல்ல விளைவுகளைத் தராது. அனைத்து ஆசிரியர் சங்கங்களும் இதுபோன்ற ஆரோக்கியமான மாற்றுத்திட்டங்களை முன்மொழிய முன்வரவேண்டும்.இது மாநில அரசின் கொள்கை முடிவாக அங்கீகரிக்கப்பட அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைக்கவேண்டும்.

இன்றைய நிலையில்  ஒவ்வொரு குழந்தையின்  பெற்றோர் செய்ய வேண்டிய பணிகளையும் கூட பள்ளியின் தலைமை ஆசிரியர்களும், ஆசிரியர்களும் பொறுப்புணர்வோடு செய்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இது போன்ற நிர்ப்பந்தங்கள் ஆசிரியர்கள் தங்கள் சொந்த விடுப்பை எடுத்துக்கொண்டு தேர்வுக்கு தயாராக வேண்டிய இக்கட்டான நிலைக்கு தள்ளும்.  அவ்வாறான நிலை  இன்றைய சூழலில்  ஒட்டுமொத்தக் கல்வி நலனுக்கும் மாணவர் நலனுக்கும் உகந்ததாக இருக்காது.   இது ஏதோ பள்ளி,கல்வித்துறையின்  பிரச்சனை என்று  வாளாயிராமல்  சமூகத்தில் உள்ள அனைத்து தரப்பினரும் குரல் கொடுக்க வேண்டியது அவசர அவசியம். மாறாக என்றைக்கோ வழக்கிலிருந்த கல்விக்கொள்கைகளையும் கல்வியாளர்களையும் நினைவில் நிறுத்தும் கூகுலாக, நினைவாற்றலை சோதிப்பதாக டெட் தேர்வுகள் அமைவதால்  இன்று பள்ளியிலிருக்கும் குழந்தைகளுக்கு என்ன லாபம்? மேலும் தகவல்களை கூகுல் போன்ற செயலிகளால் தந்துவிட முடியும். ஆனால் மாணவர்களை நெறிப்படுத்தும் பணியை ஆசிரியர்களால் மட்டும்தான் செய்ய இயலும். அதிலும் அனுபவமுள்ள ஆசிரியர்களின் சேவையை இழப்பது குறித்து ஆழ்ந்து சிந்திக்கவேண்டும்.

எழுதியவர்:-

முனைவர் என்.மாதவன்
கல்வியாளர் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்,
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *