சென்சில்லாத போர்ட் 80 க்கும் மேற்பட்ட காட்சிகளை வெட்டித் தூக்கியெறிந்த பிறகு ஒரு திரைப்படத்தில் என்னதான் இருக்கும்? அந்தப் படத்தைப் பார்க்க முடியுமா?. காதல் காட்சிகள்கூட கோர்வையாக வருமா? துண்டு துணுக்குகளாக பிரிந்து கிடக்காதா? என்றெல்லாம் ஆருடம் சொன்னார்கள். ஆனால் அவர்களின் அருள்வாக்கையும் மீறி, போலீஸ் சித்தரவதைகளை, மனித உரிமை மீறல்களை, மத வன்முறைகளின் கொடூரங்களை, அதைத் திட்டமிட்டு அரங்கேற்றுபவர்களின் அடையாளங்களை, அரசியலை, நுண்மைகளை, அந்த வன்முறையில் பயன்படுத்தப்பட்ட அடியாட்களின், பலிகளின், சிதைக்கப்பட்டவர்களின், பாதிக்கப்பட்டவர்களின் முகங்களை, வலிகளை, மதங்களைத் தாண்டி உயிர்ப்போடு வாழும் மனிதத்தை, காதலை, அமைதியின் தேவையை ஆழமாக, தீவிரமாக, நேர்மையாக, அக்கறையோடு பேசுகிற ஆகச்சிறந்த படமாக உருவெடுத்துள்ளது ஜிப்ஸி.

அழுகிப்போன அரசதிகாரத்தின் மீது மூத்திரம் பெய்யும் ஜிப்ஸி..

மூத்திரம் பெய்யனுமாம்!. கொஞ்சம் தண்ணி கொடு !. மூத்திரம் வருவதாகச் சொன்னக் கைதியை அதற்கு அனுமதிக்காமல், நக்கலாக குடிக்கத் தண்ணிர் கொடுக்கிறது சிறுநீரகம் கெட்டுப்போன போலீஸ் !. ஒர் குப்பி அல்ல, குப்பி குப்பிகளாகக் குடிக்கத் தண்ணீர் கொடுத்துக்கொண்டே இருக்கிறது. துளைத்து வெளியேறத் துடிக்கும் மூத்திரத்தை தொடைகளை இருக்கிக் கட்டுப்படுத்தி அவஸ்தையால் துடிக்கிறான். காவல்துறை கையாளும் சித்திரவதைகளில் இது ஒரு மிக நுண்ணிய வடிவம். சமூக அமைதிக்காக பொதுயிடங்களில் பாட்டிசைத்த தெருப்பாடகன் கோவனை நினைவுபடுத்தும் ஜிப்ஸிதான் அந்தக் கைதி. பல மணி நேரமாக மூத்திரத்தை அடக்கி வைக்கிற அவஸ்தையை ஜீவா தன் முகத்தில் உயிரோட்டமாக வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த நுண்ணிய சித்திரவதையை இயக்குனர் ராஜு முருகன் மிகச் சரியாக காட்சிப்படுத்தியுள்ளார். இந்தக் காட்சித்தொடரின் முடிவில்தான் ராஜு முருகன் மக்கள் இயக்குனராக உயர்ந்து நிற்கிறார். ஆம், இடதுசாரி தோழர்களின் தலையீட்டில் காவல் நிலையத்திலிருந்து விடுவிக்கப்படும் ஜிப்ஸி, மூடிகிட்டு வெறுமனே காவல் நிலையத்திலிருந்து வெளியே வரவில்லை. வெளி வருவதற்கு முன் போலிஸ் இன்ஸ்பெக்டரிம் ஒரு நிமிடம் என்று சொல்லிவிட்டு, தன் பேண்ட் ஜிப்பை கழற்றி. . . அந்தக் காவல் நிலையத்தின் ஒரு மூலையில் தான் அடக்கி வைத்திருந்த மூத்திரத்தையெல்லாம் பெய்கிறான். பிறகு அதே போலீசிடம் குடிக்கத் தண்ணி கொடுங்க என்கிறான். இது காவல் நிலையத்தில் மூத்திரம் பெய்வதானக் காட்சி மட்டுமல்ல. அழுகிப்போன அரசதிகாரத்தின் மீது பெய்கிற மூத்திரம். கணையம், இதயம், நுரையீரல், சிறுநீரகம் என எல்லாம் அழுகிப்போன காவல்துறையின் கோர முகத்தின் மீது பெய்கிற மூத்திரம். காவல்துறை சித்திரவதைகள் தொடர்பான திரைக்காட்சிகளில் இந்தக் காட்சிக்கு நான் உயர்ந்த இடம் அளிக்கிறேன். தினம் தினம் நிகழும் லாக்கப் மரணங்களுக்கு இந்தக் காட்சியை நான் சமர்பிக்கிறேன்.

உத்திரப்பிரதேசத்தில் இந்துத்துவா வெறியர்கள் நடத்தும் வன்முறையில் பாதிக்கப்பட்ட இஸ்லாமிய இளைஞர்களையே கைது செய்து லாக்கப்பில் வைத்து அடித்துத் துவைத்து எவ்வித விசாரணையும் இல்லாமல் ஒரு வருடமாக லாக்கப்பிலேயே அடைத்திருப்பதுதான் காவி சீருடையணிந்த போலீஸின் முகம். “என் பொண்டாட்டியக் காணோம், சே குதிரையை எரிச்சுக் கொன்னுட்டாங்க” என்று கதறுகிற ஜிப்ஸியிடம் “ நீதான் கலவரத்தை தூண்டினியா? வெப்பன்ஸ் சப்ளை செய்தியா? உன் பேர் என்ன என்று ஒரு போலீஸ் அதிகாரி கேட்பான். ஜிப்ஸி என்பான். ஜிப்ஸின்னா இந்துவா ? முஸ்லீமா?” என்று போலீஸ் கேட்பான். அதற்கு ‘இந்துவும் இல்லை. முஸ்லீமும் இல்லை, மனுசன்” என்று சொல்கிற ஜிப்ஸியின் மீது விழுகிற அடிகளை சிறைக்கொட்டடிகளில் வாடும் லட்சக்கணக்கான அப்பாவிச் சிறைவாசிகளுக்குச் சமர்ப்பிக்கிறேன். நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படும் போது “போலீஸ் உங்களை அடிச்சுதா ? என்று கேட்கும் நீதிபதியின் முன்பு தன் சட்டையைக் கழற்றிக்காட்டும் ஜிப்ஸியின் உடலிலும், முஸ்லீம் கைதிகளின் உடலிலும் தெரிகிற இரத்த வரிகள் நமது அரசியலமைப்புச் சட்டத்தில் எழுதப்பட்ட அடிப்படை உரிமைகள் குறித்த வரிகளைப் பார்த்துச் சிரிக்கிறது.

Image result for ஜிப்ஸி

மத வன்முறை அரசியலை அடையாளம் காட்டும் முதல் இந்தியச் சினிமா

மதக்கலவரம், இரு தரப்பினர் மோதல் என்றெல்லாம் அரசுகளால் ஊடகங்களால் பித்தலாட்டமாகச் சித்தரிக்கப்படுகிற நிகழ்வுகள் உண்மையில் பெரும்பான்மை மத அடிப்படைவாதிகள் அரசியல் லாபத்திற்காக சிறுபான்மை அப்பாவி மக்கள் மீது நிகழ்த்துகிற வன்முறை வெறியாட்டம்தான் என்ற நிஜத்தைப் பேசுகிறது ஜிப்ஸி. மதகலவரத்தைக் காட்டுகிறேன் பேர்வழி, நட்ட நடுநிலைமையோடு படம் எடுத்துள்ளேன் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு மணிரத்தினத்தின் பம்பாய் திரைப்படம் போல் இரு தரப்பு மத வெறியர்களும் எதிர்தரப்பைத் தாக்குவதும் இறுதியில் அரவிந்தசாமி வந்து உருக்கமாகப்பேசி இரு தரப்பையும் அமைதிப்படுத்துவது போன்ற அபத்தம் அல்ல ஜிப்ஸி..

மத வன்முறையை யார் தூண்டுகிறார்கள்?, எதற்காகத் தூண்டுகிறார்கள்?, யாரைத் தூண்டுகிறார்கள்?, அதனால் அவர்கள் அடையும் அரசியல் லாபம் என்ன?, எப்படித் திட்டம் வகுக்கிறார்கள்?, என்னென்ன முன்னேற்பாடுகள்?, அதற்கு அரசுத் துறைகள், காவல்துறை எப்படியெல்லாம் ஒத்துழைக்கிறது?, எப்படியெல்லாம் வன்முறை அரங்கேற்றப்படுகிறது?, எந்த மக்கள், எப்படிப் பலியாகிறார்கள், பாதிக்கப்படுகிறார்கள், வாழ்வாதாரங்களை எப்படிச் சூறையாடுகிறார்கள்?, குடும்பங்கள் எப்படிச் சிதறுகிறது?, வன்முறைக்குள் வன்முறையாக பெண்களின் உடல்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறைகள், பாதிக்கப்பட்டவர்களையே காவல்துறை எப்படிக் குற்றவாளிகளாகச் சிறை பிடிக்கிறது?, சித்திரவதை செய்கிறது?, நீதிமன்றத்தில்கூட ஆஜர் படுத்தாமல் அடைத்துவைக்கிறது என ஒரு வன்முறை வெறியாட்டத்தின் அனைத்து நுண்மைகளையும் அரசியலையும் உறக்கப்பேசுகிறது ஜிப்ஸி. நடு மய்யம் கமலஹாசனின் “ஹே ராம்” போல் திக்கித் திண்றி, மென்று முழுங்கி, வழ வழா கொழ கொழான்னு பேசாமல் தெள்ளத் தெளிவாக, அழுத்தம் திருத்தமாக, வலுவாக, உறுதியாகப் பேசுகிறது. இத்தோடு நின்றிருந்தால் இந்தப்படத்தை ஒரு சாதாரணமாகக் கடந்து போயிருப்பேன். ஆனால் ஜிப்ஸி அதையும் தாண்டி இந்துத்துவா மதவாத அரசியல் தலைவர்களின் வெறிப்பேச்சால் வன்முறையை தன் கையிலெடுத்த ஒரு அடிமட்டத் தொண்டன் அதே அரசியல் தலைவர்களால் தீண்டத்தகாத சாதியைச் சேர்ந்தவர் என தூக்கியெறியப்படுவதும் சிதைக்கப்படுவதும், அதனால் அவனுக்கும் அவனுடைய குடும்பத்திற்கும் ஏற்படும் பரிதாப நிலையைத் தத்ருபமாகக் காட்டுகிறது. அவன் தவறை உணர்ந்து பாதிக்கப்பட்ட பெண்ணிடம் மன்னிப்புக் கோருவதும் அமைதியை வேண்டுவதும் உச்சம்.

இந்துத்துவா தீவிரவாதத்தைப் பேசும் முதல் உலகச் சினிமா :

2002 இல் குஜராத்தில் இந்துத்துவா வெறியர்கள் நிகழ்த்திய வன்முறை வெறியாட்டத்தின் போது அதிர்ச்சியும், நடுக்கமும். உயிர் பயமும், இரத்தக் கண்ணீரும் முட்டி நிற்கிற கண்களுடன் கைகளைக் கூப்பி இரைஞ்சுகிற குத்புதீன் அன்சாரியின் படமும் கையில் வாளோடு கொலைவெறியுடன் கூச்சலிடுகிற அஷோக் பார்மர் என்ற இந்துத்துவா வன்முறையாளனின் படமும் வெளியாகி உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவை “குஜராத் வன்முறையின் முகம்” என்று பேசப்பட்டது. பத்தாண்டுகள் கழித்து அன்சாரியும் அந்தப் படத்தை எடுத்து அவர் தப்பிக்க உதவிய புகைப்படக் கலைஞர் ஆர்கோ தத்தாவும் சந்தித்து தங்கள் துயர நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட நிகழ்வும், அந்த வன்முறையாளன் அஷோக் பார்மர் தன் தவறை உணர்ந்து குத்புதீன் அன்சாரியை சந்தித்து மன்னிப்பு கோரிய நிகழ்வும் முக்கியச் செய்தியாக உலவியது. இந்த உண்மை நிகழ்வுகளின் அனைத்துக் குறுக்கு வெட்டுப் பாதைகளில் வடக்கும் தெற்குமாகப் பயணிக்கிற நாடோடிப் பாடகன் ஜிப்ஸி அந்த நிகழ்வுகளின் இரத்தக்கறைகளில் உறைந்துகிடக்கிற இந்துத்துவா மதவெறி வாக்கு வங்கி அரசியலை மேடையேற்றுகிறான். “மனிதம் தாண்டி புனிதம் இல்லை வா” என மதங்களின் பிடியில் சிக்குண்டு கிடக்கும் நமது சமூகத்தை அழைக்கிறான்.

தீவிரவாதம் என்றாலே தலையில் டர்பன், நீண்ட தாடி, துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் சகிதம் இஸ்லாமியர்களையே காட்டுகிற இந்திய, உலகச் சினிமாக்களின் ஊடாக உண்மையில் இந்தியாவை அச்சுறுத்துகிற இந்துத்துவா தீவரவாதத்தை காட்சிப்படுத்திய முதல் உலக சினிமாவான ஜிப்ஸியை, நான் சார்வர்க்கருக்கு பிறந்தநாள் பரிசாக அளிக்க விரும்புகிறேன். இஸ்லாம் தீவிரவாதத்தை ஏன் ஜிப்ஸி பேசவில்லை என சில வலதுசாரிகள் கேட்கிறார்கள். அதான் அர்ஜூன், கேப்டன் விஜயகாந்த் தொடங்கி கமலஹாசனின் விஸ்பரூபம், விஜய்யின் துப்பாக்கி என ஏராளமான படங்கள் முஸ்லீம் தீவிரவாதத்தை பேசிவிட்டதே. அப்போது அந்தப்படங்களைப் பார்த்து ஏன் இந்துத்துவா தீவிரவாதத்தைப் பேசவில்லை எனக் கேள்வி கேட்காத உங்கள் மூளை, இப்போது மட்டும் ஏன் இவ்வளவு சுறுசுறுப்பாக வேளை செய்கிறது?

Image result for ஜிப்ஸி

பலிகளின் முகங்களைப் பேசும் இந்தியச் சினிமா :

மதக்கலவரம், இனக்கலவரம், பாசிச அடக்குமுறை, போர் என எவ்வித வன்முறைகளிலும் கருவியாகப் பயன்படுத்தப்படுகிற அடியாட்கள், பலியாபவர்கள், பாதிக்கப்படுபவர்கள், சிதைக்கப்படுபவர்கள் பெரும்பாலும் பெண்களும், குழந்தைகளும், சாதாரண மக்களும்தான். இந்தச் சர்வதேச உண்மையை ஜிப்ஸியில் இயக்குனர் பார்வையாளர்களிடம் வலுவாகக் கடத்துகிறார். இந்தப் புள்ளியில் அவர் உயர்ந்து நிற்கிறார். நிஜ குத்புதீன் அன்சாரி கதாப்பாத்திரத்திற்குப் பதிலாக படத்தில் வருகிற இஸ்லாமிய இளம் பெண் வஹிதாவின் மூலம் வன்முறைகளில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் உடல், வாழ்க்கை, மனநிலை ஆகியவை சிதைக்கப்படுகிற கொடூரங்களைப் பாரதமாதாவின் முகத்தில் விட்டெறிகிறார். இந்துத்துவா கும்பலால் நடுவீதியில் ஒரு இஸ்லாமியப் பெண் ஆடைகள் உருவப்பட்டு கூட்டு பாலியில் வன்புணர்வு செய்யப்படுவது, பிறப்புறுப்பு தெரிய இறந்துகிடக்கும் தாயை அவள் பெண் குழந்தை அம்மா… அம்மா என எழுப்புவது, முஸ்லீம் இளைஞர்களும் ஜிப்ஸியின் சே குதிரையும் உயிரோடு தீயிட்டுக் கொளுத்தப்படுவது, காய்கறிகளை வெட்டுவதுபோல் மனித உயிர்களை வெட்டிச்சாய்ப்பது, கடைகள், வீடுகளை சூறையாடுவது, தீயிட்டு எரிப்பது என இந்துத்துவா வெறியர்களின் கலவரத்தை நேரடி ஒளிபரப்பு செய்ததுபோல் இருந்தது. கலவரக் காட்சிகள் பார்வையாளர்களை நிலைகுலையச் செய்கிறது. பதற்றத்தின் உச்சத்திற்கே கொண்டு செல்கிறது. அதிர்ச்சியில் உறைய வைக்கிறது. நிறைமாத கர்ப்பிணியான வஹிதாவை வெறியர்களின் கும்பல் சூழ்ந்துகொண்டு கொலை செய்ய முயற்சிக்கும் போது சே குதிரை அவர்களைத் தாக்கி வஹிதாவை காப்பாற்றுகிற காட்சி மனதுக்குள் பெரும் உணர்வலைகளை ஏற்படுத்துகிறது.

அதற்குமுன் கைகளில் உயர்த்திய வாள்களுடன் தன்னைச் சுற்றி நிற்கும் வெறியர்களிடம் வஹிதா உயிர் பயத்துடன் கைகளைக் கூப்பி தன்னை விட்டுவிடும்படி வேண்டுகிறாள். இதை ஒரு பெண் புகைப்படக் கலைஞர் மறைந்திருந்து புகைப்படம் எடுக்க, அந்தப்படம் உலகம் முழுவதும் பேசுபொருளானது. இப்படித்தான் குஜராத் வன்முறையில் குத்புதீன் அன்சாரியின் படமும் வெளியானது. வஹிதாவைக் காப்பாற்றி, பிரசவத்திற்கு உதவுகிற இந்து ஆட்டோ ஒட்டுனர் போல் மதம் கடந்து மக்களை காப்பாற்றுகிற மனிதர்களால் தான் இன்னும் மனிதம் உயிர்ப்போடு வாழ்கிறது. சமீபத்திய டெல்லி கலவரத்தில் எரிந்துகொண்டிருக்கும் பக்கத்து வீட்டில் புகுந்து ஆறு இஸ்லாமிய உயிர்களைக் காப்பாற்றி தீக்கயங்களுடன் தன்னுயிரை தியாகம் செய்த இந்து இளைஞர் பிரேம்காந்த் பாகலின் இதயத்தின் மீது இந்தக் காட்சியை சமர்ப்பிக்கிறேன்.

காதல் இணையர்கள் ஜிப்ஸி – வஹிதா சிதறிடிப்பு மூலம் உறவுகளை, குடும்பங்களை, வாழ்வாதாரங்களைச் சிதைப்பதுதான் மதவெறியர்கள் அரங்கேற்றும் வன்முறையின் அரசியல் என்பதைச் சொல்கிறது. நிறைமாத கர்ப்பிணி வஹிதா ஓடி, ஓடி தப்பித்து இறுதியில் விவேகானந்தர் சிலை முன்பு நிர்க்கதியாகக் காத்திருப்பது ஆகச் சிறந்த குறியீடு. கலவரங்களில் தப்பி உயிர் பிழைத்தவர்களும் மன உளைச்சல், மனப் பிறவுகளிலிருந்து தப்ப முடியாது என்பதை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார். அப்படியாகத் தப்பி உயிர் பிழைத்த வஹிதாவின் கண்களில் வடியும் மனப்பிறழ்வையும் மனதில் தேங்கிக்கிடக்கும் கலவரக்காட்சிகளின் அழுத்ததையும் மூளையில் உறைந்து கிடக்கும் பயத்தையும் நடஷா சிங்கின் முகம் தத்ரூபமாக வெளிப்படுத்துகிறது.

Image result for ஜிப்ஸி

தன் தொண்டர்களையே சிதைக்கும் இந்துத்துவாவின் முகத்தைப் பதிவிடும் முதல் இந்தியச் சினிமா;

பிஜேபி, ஆர்.எஸ்.எஸ். சங் பரிவார் முன்னெடுத்த எந்தக் கலவரத்திலும் இதுவரை அதன் தேசிய, மாநில, மாவட்ட, ஏன் வட்டத் தலைவர்கள் ஒருவர்கூட கைதாகி சிறை சென்றதில்லை. 1998 மற்றும் 2016 கோவை மத வன்முறைகள், கேரளா சபரிமலை வன்முறை, தற்போது டெல்லி வன்முறை அனைத்திலும் மாதக்கணக்கில் ஆண்டுக்கணக்கில் சிறையில் அடைக்கப்பட்டு வாழ்க்கையை இழந்தவர்களெல்லாம் அடிமட்டத் தொண்டர்களான சாதாரண மக்களே. குறிப்பாக தலித் இளைஞர்கள். அவர்களை ஜாமீனில் எடுப்பதற்குக்கூட வசதியில்லாமல் அவர்கள் பெற்றோர்கள் அலைவதை கோவை நீதிமன்ற வளாகத்தில் நான் பார்த்துள்ளேன். 2016 கோவை வன்முறையில் கைது செய்யப்பட்டவர்களை ஜாமீன் எடுக்க ஜட்ஜய்யாவுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று அவர்களின் பெற்றோர்களிடம் பிஜேபியினர் இருபதினாயிரம் ரூபாய் கேட்டது எனக்குத் தெரியவந்தது. அதை முகநூலில் எழுதினேன்.

ஜிப்ஸி படத்தில் வன்முறையின் போது தன் இரண்டு கைகளாலும் வாள்களை உயர்த்திக் கொலை வெறிக்கூச்சலிட்டு பல உயிர்களை வெட்டி வீசிய சோனுகுமார், தன்னைத் தூண்டிய இந்துத்துவா அரசியல் தலைவர்களாலேயே இரண்டு கைகளும் வெட்டப்பட்டு, வாழ்வாதாரத்தை இழந்து, மனைவி குழந்தைகளுடன் ஒரு தகர டப்பா குடுசையில் அனாதரவாகத் தள்ளப்பட்டத் துயரத்தின் மூலம் சங் பரிவாரக் கும்பல்களின் பின்னால் கண்மூடித்தனமாகச் செல்லும் தலித் மற்றும் பிற விளிம்புநிலை மக்களுக்கும் இளைஞர்களுக்கும் கனமான எச்சரிக்கையைக் கடத்துகிறார். “இந்து, இந்துன்னு சொல்லி என்ன பயன்படுத்தியவங்களே கடைசியில நீ தீண்டத்தகாத சாதின்னு தூக்கி எறிஞ்சிட்டாங்க… என்னையவே கொலை செய்யப் பார்த்தாங்க… உயிருக்குப் பயந்து ஓடும் போது நாம இந்துவா முஸ்லீமான்னு எல்லாம் தோனாது… இந்து, முஸ்லீம்ன்னு சொல்லறதெல்லாம் சும்மா” என்று சோனுகுமார் பேசுவது மத வெறியர்களின் பின்னால் செல்லும் ஒவ்வொருவர் காதுகளுக்கும் சென்று சேர வேண்டிய வசனம். அந்தச் சோனுகுமார், ஜிப்ஸி மூலம் பொது மேடையில் தன் குற்றங்களை ஒப்புகொள்ளச் செல்கிறார் என்பதை அறிந்த இந்துத்துவா கும்பல் அவரை கொலை செய்ய முயற்சிப்பதும் மக்கள் திரண்டு அவரைக் காப்பாற்றுவதும் உலகம் அறிய வேண்டிய உண்மை. சுடுவதற்காகக் குறி பார்த்து நிற்கிற இந்துத்துவா குண்டன் மீது மக்கள் கூட்டத்திலிருந்து ஒருவர் செங்கலெடுத்து எறிந்து தாக்குவார். இந்தச் செங்கல் ஒரு குறியீடு. நாட்டின் அமைதியைக் குலைப்பதற்கு ரத யாத்திரை நடத்தி செங்கல் சேகரித்த மக்கள் விரோதிகள் மீது மக்கள் எறிகிற செங்கல் பதிலடிதான் அது.

இஸ்லாமிய அடிப்படைவாதத்தை சற்றேனும் பேசும் முதல் தமிழ்ச் சினிமா:

குத்புதீன் அன்சாரி கதாப்பாத்திரத்தில் நாகூரில் வாழ்கிற ஒரு இஸ்லாமிய இளம் பெண் வஹிதாவைப் பொருத்துகிறார் இயக்குனர். அதைக் கச்சிதமாகப் பயன்படுத்தி அவருடைய அப்பாவை பள்ளிவாசல் முத்தவல்லியாகவும் இஸ்லாமிய மத அடிப்படைவாதியாகவும் சித்தரித்து அதன் மூலம் இஸ்லாமியக் குடும்பங்களில் நிலவுகிற மிகவும் இறுக்கமான சூழலையும் பெண்ணடிமைத்தனத்தின் கூறுகளையும் மத அடிப்படைவாதத்தையும் மத நடைமுறைகளையும் கதைக்களத்தின் ஒரு பகுதியாக மாற்றுகிறார். அதன் நோக்கத்தில் வெற்றியும் பெறுகிறார். வீடு வாசல், உறவுகள் என எதுவுமில்லாமல் ஊர் ஊராகச் சுற்றும் நாடோடித் தெருப் பாடகனை வஹிதா காதலிப்பதற்கான உளவியலே வஹிதாவின் ஒரு துளிச் சுதந்திரக் காற்றையும் சுவாசிக்க முடியாத இறுக்கமான குடும்பச் சூழல்தான். விவாகரத்து தொடர்பான இஸ்லாமிய தலாக் நடைமுறைகள் படத்தின் பிற்பகுதியில் பெரும்பங்காற்றுகின்றன. அதனை இயக்குனர் கதையோட்டத்தில் அறிவுப்பூர்வமாகப் பயன்படுத்திக்கொள்கிறார். ஆம் வஹிதாவின் மனப்பிறழ்வைப் பயன்படுத்தி அவருடைய அப்பா வஹிதாவை துலா கொடுக்க வைக்கிறார்.

துலா கொடுத்தால் உடனே விவாகரத்து ஆகிவிடும். எனவே ஜிப்ஸி “துலா கொடுக்க வேண்டாம் அன்பே! நானே தலாக் கொடுக்கிறேன்” என்கிறார். தலாக் நடைமுறை நிறைவு பெற மூன்று மாதங்களாகும். மூன்றாவது முறை தலாக் சொன்ன பிறகுதான் விவாகரத்து ஆகும். இந்த நடைமுறையை ஜிப்ஸி காலதாமதப்படுத்தும் உத்தியாகப் பயன்படுத்திக்கொள்கிறான். தேர்வு செய்த கதைக்களத்தின் வாழ்வியல் கூறுகளை எப்படியெல்லாம் திரைக்கதையைக் கட்டமைக்கப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்கான சிறந்த நுட்பம் இது. இதற்காகவும் ராஜு முருகனை கொண்டாடத்தான் வேண்டும். தலாக் சொல்லும் போது ஜிப்ஸி சொல்லும் வசனமும் அதி அற்புதமானது. “குரானில் இறைவனால் அதிகமாக வெறுக்கப்பட்ட வார்த்தை என்று சொல்லப்பட்ட தலாக்கை நான் அதிகமாக நேசிக்கிற என் மனைவிக்குச் சொல்கிறேன்”. ஆகா என்ன அற்புதமான கவித்துவமான வரிகள். இப்படி குரானிலிருந்து பல வரிகளை இடம்பார்த்து புகுத்தியுள்ளார். முஸ்லீம் அடிப்படைவாதத்தை சற்றேனும் பேசுகிற முதல் தமிழ்த் திரைப்படம் ஜிப்ஸி எனலாம்.

Image result for ஜிப்ஸி

ஜிப்ஸியெனும் அசத்தலான கதாபாத்திரம்:

ஜிப்ஸி என்ற கதாப்பாத்திர வடிவமைப்பே அசத்தலானது. என்னவொரு கேரக்டர்!. தலைமுடி, தாடி, கிட்டார், நடனமாடும் கம்பீரமான வெண்புரவி, அதற்கு சே என்ற குறியீட்டுப் பெயர், சதுரங்களும் வட்டங்களும் வரைந்து கொள்ளாமல் இந்தியாவின் அனைத்துவித நிலப்பரப்புகளின் மீதும் தனது பாடல்களின் வண்ணங்களை விதைத்துச் செல்லும் நாடோடித் தெருப்பாடகனின் வாழ்வியல், போகிற போக்கில் சமகால அரசியல் அவலங்களை நக்கலடித்துச் செல்லும் பேச்சு, கஷ்மீரில் முஸ்லீம் தீவிரவாதிகளின் குண்டுடெறிக்கு பெற்றோரைப் பறிகொடுத்து ஒரு முதியவரால் வளர்க்கப்பட்டவன் என ஜிப்ஸி கதாப்பாத்திரம் அற்புதமாகச் செதுக்கப்பட்டுள்ளது. இசை பாராட்டும்படியாக இருந்தாலும் முதல் காதல் பாடலைத் தவிர பிற பாடல்கள் மனதிற்கு நெருக்கமாக இல்லை. தனித் திறமை பெற்ற ஒரு நாடோடித் தெருப்பாடகனின் பாடல்கள் வித்தியாசமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் வழமையாக, சராசரியாக இருந்தது பெரும் குறையாக நினைக்கிறேன். வெரி வெரி பேட் பாடல், சென்சாரால் துண்டிக்கப்படாமல் இருந்திருந்தால் இக்குறை தெரிந்திருக்காது. கேரளாவில் எழுத்தாளர் எஸ்.கே.பொற்றேகாட் சிலை முன்பும் பாடுகிற பாடலும் உலக அமைதிக்கான இறுதிப் பாடலும் உணர்ச்சிப் பெருக்கோடு மனக்கிளர்ச்சியை ஏற்படுத்துவதாக இருந்திருக்க வேண்டும்.

காதல் செல்லுலாய்ட் சித்திரம் ;

ஜிப்ஸி – வஹிதா காதல் கதை ஒரு செல்லுலாய்ட் அழகுச் சித்திரமாக கவிதை பேசுகிறது. ராஜு முருகனின் “குக்கூ”, “ஜோக்கர்” படங்களைப் போல் இதிலும் காதல், ஒரு பூவின் இதழ்கள் விரிவதைப் போல் இயல்பாக விரிகிறது. முழுநீளக் காதல் படமாக நீளக்கூடாதா என எண்ணுமளவிற்கு அவ்வளவு வசீகரமாக இருந்தது. வஹிதா தன் வீட்டிலிருந்து வெளியேறும் முறை இதுவரை எந்த சினிமாவிலும் இடம்பெறாத புதுவகை. இந்தக்காதல் கதையெனும் மையச்சரடின் மூலமே பல முக்கிய அரசியல் சரடுகள் விரிகிறது.

படத்தின் பிற்பகுதியை கேரளாவிற்கு நகர்த்தி இடதுசாரி தோழர்களை ஜிப்ஸியுடன் ஏன் கைகோர்க்க வைக்கிறார் இயக்குனார் என்று யோசித்தேன். ஜிப்ஸி தன் மனைவியை மீட்பதற்காக நடத்தும் போராட்டத்திற்கு உதவுவதற்காக மட்டுமா? இல்லை. அந்த இடதுசாரி தலைவரின் போதனையில் காரல்மார்க்சின் வரிகளிலிருந்து அரசியல் தெளிவு பெற்ற ஜிப்ஸி, தன் மனைவியை மீட்கும் போராட்டதை வன்முறையாளர்களையும் மதவெறி அரசியலையும் அடையாளம் கண்டு வெளியுலகத்திற்கு தெரியப்படுத்தும் போராட்டமாக மாற்றுகிறான். இதற்கு ஜிப்ஸிக்கு ஒரு சரியான அரசியல் போதனை தேவைப்பட்டது. அதற்காகவே கம்யூனிஸ்டுகளை இயக்குனர் சரியாகக் களமிறக்கியுள்ளார். ஆதிக்கச் சாதியினருக்கு எதிராகப் போராடி தன் கைகளையும் ஒரு காலையும் பறிகொடுத்த பஞ்சாபின் தலித் புரட்சிப் பாடகர் பாந்த் சிங், தமிழக சூழலியல் போராளி பியூஸ் மனுஷ் என பல முக்கியப் போராளிகளை ஜிப்ஸியில் அறிமுகப்படுத்திய ராஜு முருகனுக்கு முத்தங்கள். சென்சில்லாத போர்டின் 80 க்கும் மேற்பட்ட வெட்டுகளையும் தாண்டி இவ்வளவு அரசியலையும் தெளிவுபடப் பேசுவதுதான் ஜிப்ஸியின் உண்மையான வெற்றி.

உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய ஒரு சமகால மத வன்முறை அழித்தொழிப்பை, திரைப்படமாக்கி அதன் அரசியலைப் பேசிய இயக்குனர் ராஜு முருகனுக்கும் தயாரிப்பாளர் அம்பேத்குமாருக்கும் படக்குழுவினர் அனைவருக்கும் ஆயிரம் சே வெண்புரவிகளை அள்ளித்தருகிறேன்.

– மு.ஆனந்தன்.
94430 49987 
[email protected]



One thought on “மத வன்முறை அரசியலைப் பேசும் முதல் இந்தியச் சினிமா. . – மு.ஆனந்தன்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *