1
கைகளை விரி
அணைத்துக் கொள்ளத் துடிக்கிறது
பச்சை கூமாச்சி மலை மேகம்
2
மேகம் தரையிறங்கி விட்டது.
மனது பறக்கிறது
பச்சை கூமாச்சி மலையில்
3
வானமெல்லாம் நட்சத்திரங்கள்
ஞாபகத்திற்கு வந்து விடுகிறது
உதிரும் காட்சி
4
வாக்குகள் விற்பனை
பட்டுவாடாவாகிக் கொண்டிருக்கிறது.
சனநாயகம்
5
விளக்கை அணைத்தேன்
தழுவிக் கொண்டது
இருள்
6
நிலவை காணவில்லை
நட்சத்திரங்கள் இருக்கின்றனவே
ரசிப்பதற்கு
7
மலைச்சாலையில் பனித்திரை
மறுபுறம் மலர்கிறது
வனவாசியின் புன்னகை
8
நிசப்தமான இரவு
சுவற்றோடு சரசம் புரிகின்றன
புங்கைமர இலை நிழல்கள்
9
சாதிய வாக்குகள்
சிதறிக் கொண்டிருக்கின்றன
பணப்பட்டுவாடா
10
உணரமுடிகிறது
பார்க்க முடியவில்லை
எங்களின் கடவுள் பசி
11
அசைவற்ற இரவு
வனத்தின் வடிவெடுக்கிறது
வாசல் வேப்பமரம்
12
செம்பருத்திப் பூவில் முயல்குட்டி
படுத்துறங்குகிறது
காலைப் பனி
13
உதிர்ந்த சருகு
எழுந்து பறக்கிறது
மஞ்சள் வண்ணத்துப் பூச்சி
14
அசைவற்ற இரவு
வனத்தின் வடிவெடுக்கிறது
வாசல் வேப்பமரம்
15
மின்சாரம் இழையறுந்த இரவு
அழகோவியமாகி விடுகின்றன
விண்மீன்கள் நிறைந்த வானம்
16
காட்டுத்தீ உச்சியில்
சாம்பலாகி கொண்டிருக்கின்றன
பறவையின் சிறகுகள்
17
காலை தேநீர்
சுவையோடு பரவுகிறது
தொழிலாளர்களின் குருதி வாசம்
18
தேயிலைக்காடு
அட்டைக்கும் கொஞ்சம் குருதி வார்க்கிறார்கள்
தொழிலாளர்கள்
19
காலி வீடு
முற்றிலும் நிரம்பியிருக்கிறது
ஞாபகங்களால்
20
கடைசியாக குழந்தை பொம்மை
லாரியில் ஏற்றப்படுகிறது
காலியாகும் வீட்டில்
தங்கேஸ்
தமுஎகச
தேனி மாவட்டம்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

