Haiku Poems | ஹைக்கூ கவிதைகள்

1

பற்றிஎரியும் காடு
மூச்சு திணறித் தவிக்கின்றது
மூங்கில் தோப்பு…!

 

2

நாட்டின் அவலங்கள்
நயமாக எடுத்துச் சொல்கின்றன
நாடக நிகழ்ச்சிகள்…!

 

3

அடர்ந்த பனிப்படலம்
வளைந்து நெளிந்து நகர்கிறது
முழுநிலவு வெளிச்சம்…!

 

4

கூதக் காற்று
சிறகுகளில் கதகதப்பு தேடுகின்றன
கரிச்சான்குருவிக் குஞ்சுகள்…!

 

5

சுடும் தனிமை
நாற்காலிக்குப் பேச்சுத் துணையாகிறது
சாலையோர மின்கம்பம்…!

 

6

பௌர்ணமி நிலவு
கண்ணாமூச்சி விளையாடி மகிழ்கின்றது
விண்மீன் கூட்டம்…!

 

7

உடைந்த பொம்மை
கண்ணீருடன் கலங்கி நிற்கும்
வேலைக்கார சிறுமி…!

 

8

வானுயர்ந்த கோபுரம்
நிழலில் வசதியாக நகர்கிறது
ஏழைகளின் வாழ்க்கை…!

 

9

களைத்த தேனீக்கள்
பூங்காதோறும் பூத்துக் குலுங்குகின்றன
காகிதப் பூக்கள்…!

 

10

வற்றிய ஊருணி
சுயபிம்பம் தேடி அலைகிறது
பௌர்ணமி முழுநிலவு…!

 

11

வற்றிய வயல்வெளிகள்
வருத்தத்துடன் கடந்து செல்கின்றது
வெள்ளாங் குருகுக்கூட்டம்…!

 

12

கானல் கனவுகள்
நினைவுகள் மட்டுமே துணையாகின்றன
முதுமைப் பருவம்…!

 

13

மழைக்கால வானம்
நித்தம்பல ஓவியங்கள் வரைகின்றன
கார் மேகக்கூட்டங்கள்…!

 

14

குடிசை வீடு
நட்சத்திரக் கோலமிட்டு நிரப்புகிறது
பால்நிலா வெளிச்சம்…!

 

15

கருவாட்டு வாசம்
உறங்காமல் சுற்றிச்சுற்றி வருகிறது
கிழட்டுக் கடுவன்பூனை…!

 

16

இளம்மாலை வெயில்
மஞ்சள் பூசிக் கொள்கின்றன
கடற்கரை நண்டுகள்…!

 

17

தப்பியோடும் மான்கள்
அச்சத்தால் சிதறித் தெறிக்கின்றன
வெட்டுக் கிளிகள்…!

 

18

காலைப் பனி
காலாற நடைபயின்று களிக்கின்றன
காக்கைக் குஞ்சுகள்…!

 

19

பாழடைந்த மாளிகை
அத்துமீறி நுழைந்து வெளியேறுகிறது
தென்றல் காற்று…!

 

20

அழகிய நெல்வயல்கள்
தென்றலில் அசைந்தாடி மகிழ்கின்றன
முற்றிய நெற்கதிர்கள்…!

 

21

ஏகாந்தக் கடற்கரைகள்
தடம் பதித்தபடி செல்கின்றன
காதலர் சுவடுகள்…!

 

22

மழைக்கால மாலை/
அரையிருட்டு மூலையிருந்து வெளியாகின்றன/
இரட்டைத் தவளைகள்…!

 

எழுதியவர்

எம்கே.

(எம்கேவின் ஹைக்கூ தொகுப்பிலிருந்து)

 
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *